+

டெக் உதவியுடன் மனிதம் தழைக்க வைக்கும் மகத்துவமான 4 தமிழக ஸ்டார்ட்அப்கள்!

இந்த நான்கு நிறுவனங்க தமிழ்நாட்டில் உருவாகும் தொழில்நுட்பம் உலக அளவில் வெற்றிபெறும் என்பதற்கு நேரடிச் சான்றாக இருக்கின்றன.

தமிழ்நாட்டின் டிஜிட்டல் வளர்ச்சி என்பது இனி சாப்ட்வேரை சார்ந்து மட்டும் இருக்காது. மனித திறன்களைப் பாதுகாக்கும், மேம்படுத்தும், மற்றும் விரிவாக்கும் அமைப்புகளைப் பற்றியதாக மாறிவருகிறது. கிளவுட் முதல் விண்வெளி வரை, புதிய தலைமுறை நிறுவனர்கள் டிஜிட்டல் மாற்றத்தின் பொருளை மாற்றி எழுதி வருகிறார். அவர்கள் தொழில்நுட்பப் புதுமைகளை சமூக நோக்கத்துடன் இணைத்து புதுமை படைத்து வருகிறார்கள்.

தமிழ்நாட்டின் ஸ்டார்ட்அப் வளர்ச்சி, ஏஐ பாதுகாப்பு, கல்வி, விண்வெளி போன்ற பல துறைகளில் புதுமைகளைப் படைத்து, உலகளாவிய தரத்தை நோக்கி நகர்கிறது.

இந்த முன்னேற்றத்தின் ஒரு பகுதியாக, SecneurX Technologies, Zeekers Technology Solutions, Arputha Advanced Systems ஆகிய நான்கு நிறுவனங்கள், தமிழ்நாட்டில் உருவாகும் தொழில்நுட்பம் உலக அளவில் வெற்றிபெறும் என்பதற்கு நேரடிச் சான்றாக இருக்கின்றன.

tech

சைபர் தாக்குதலை வருமுன் காக்கும் SecneurX Technologies

தற்போதுள்ள பாதுகாப்புகளை விட சைபர் தாக்குதல்கள் மிக வேகமாக மாறிக்கொண்டிருக்கும் இந்த காலத்தில், ’செக்னூர்எக்ஸ் டெக்னாலஜிஸ்’ நிறுவனம் ஒருபடி முன்னால் இருக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்படுகிறது. மதுரையை மையமாகக் கொண்ட இந்த நிறுவனத்தை, கார்த்திகேயன் மனோகரன் மற்றும் பாலா மனோகரன் ஆகியோர் இணைந்து நிறுவியுள்ளனர். இந்நிறுவனம் AI சைபர் பாதுகாப்பு தளம் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, தாக்குதல்கள் நடக்கும் முன்பே அவற்றைக் கண்டுபிடித்து தடுக்கக்கூடிய ஒரு பாதுகாப்புக் கருவியை உருவாக்கியுள்ளது.

இவர்களின் 'முன்னெச்சரிக்கை டிஜிட்டல் பாதுகாப்பு' முறை, நவீன ஏஐ தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துகிறது. இது, ஒரு கம்ப்யூட்டருக்குள் நுழையும் முன், அதன் சந்தேகத்திற்குரிய நடத்தையை ஆய்வு செய்து, எந்தவொரு புதிய வைரஸையும் கூட கண்டுபிடித்து, தனியாகப் பிரித்து, அழித்துவிடுகிறது.

"தாக்குதல் நடக்கும்வரை காத்திருக்காமல், ஏஐ மூலம் அச்சுறுத்தல்களை முன்கூட்டியே கணித்து, அவற்றைத் தடுப்பதே எங்கள் இலக்கு," என்கிறார் செக்னூர்எக்ஸ் நிறுவனர் மனோகரன்.

செக்னூர்எக்ஸ் நிறுவனம் தனது தொழில் நுட்பத்தை அரசு மற்றும் பெரிய நிறுவனங்களில் செயல்படுத்தி, அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்கிறது. அதோடு, உள்ளூர் இளைஞர்களுக்கு டீப்டெக் எனப்படும் தொழில்நுட்பப் பயிற்சியையும் அளித்து வருகிறது.

பாதுகாப்பு மற்றும் சைபர் பாதுகாப்புக்கான தேசியத் திட்டங்களில் செக்னூர்எக்ஸ் அங்கீகரிக்கப்பட்டுள்ளதால், உலக சைபர் பாதுகாப்பில் தமிழ்நாடு ஒரு முக்கியமான இடத்தைப் பிடித்துள்ளது.

தொழில்துறைக்கு அறிவார்ந்த கருவிகள் அளிக்கும் Zeekers

கோயம்புத்தூரைச் சேர்ந்த இரண்டு பேராசிரியர்கள் டாக்டர் பசுபதி, டாக்டர் இராம்குமார் இணைந்து உருவாக்கிய ஜீக்கர்ஸ் நிறுவனம், தொழில்துறைக்கான புதுமைகளை, அனைவருக்கும் சென்றடையும் வகையில் மாற்றுகிறது. அதாவது, AI மற்றும் IoT சொல்யூஷன்களை உருவாக்குவதன் மூலம், உற்பத்தி மற்றும் பாதுகாப்புத் துறைகளில் உள்ள பயன்பாடுகளுக்கு உற்பத்தித்திறன், பாதுகாப்பு மற்றும் எளிதில் அணுகும் தன்மை ஆகியவற்றை அதிகரிக்கிறது.

ஜீக்கர்ஸ் உருவாக்கிய ஒரு சிறப்பான கருவி, ஏஐ கொண்ட வெல்டிங் ஹெல்மெட் ஆகும். இது, வெல்டிங் ஒளியைத் தடுத்து, துல்லியமாக வேலை செய்ய உதவுகிறது. இதே தொழில்நுட்பம், சுரங்கத் தொழிலில் உள்ள ஆபத்துகளை இரவுப் பார்வை மற்றும் AI உதவியுடன் உடனடியாகக் கண்டறியவும் பயன்படுகிறது.

அதிநவீன தொழில்நுட்பம் மலிவாக இருக்க முடியும் என்பதற்கு ஜீக்கர்ஸ் ஒரு எடுத்துக்காட்டு. முதலீடு இல்லாமல் தொடங்கிய இந்த நிறுவனம், இப்போது 10,000-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்குப் பயிற்சி அளித்து, கல்விக்கும் தொழில்துறைக்கும் இடையே உள்ள இடைவெளியைக் குறைக்கிறது.

"பணம் அல்ல, எங்கள் நோக்கம்தான் முக்கியம். புதுமைகளைக் கண்டுபிடிப்பதற்கு மனம்தான் அடிப்படை," என்று ஜீக்கர்ஸ் நிறுவனர் பசுபதி கூறுகிறார்.

காப்புரிமை மற்றும் முக்கிய அங்கீகாரங்களைப் பெற்றுள்ள ஜீக்கர்ஸ் நிறுவனம், தமிழ்நாட்டின் புதிய கண்டுபிடிப்புகள் வெறும் பணத்தை மட்டும் நம்பாமல், சொந்தத் திறமையின் மூலம் வளர்கின்றன என்பதைக் காட்டுகிறது.

ராணுவ வாகன பாதுகாப்பில் Arputha Advanced Systems

நாகராஜ் களஞ்சியம் கோயம்புத்தூரில் தொடங்கிய 'அர்புதா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ்' நிறுவனம், இந்திய ராணுவத்தின் டாங்கிகள் போன்ற பாதுகாப்பு வாகனங்களுக்கான நவீன விளக்கு அமைப்புகளைத் தயாரிக்கிறது.

இதில் இருந்த சவால் வெறும் வெளிச்சம் கொடுப்பது மட்டுமல்ல. கடுமையான சூழல் ஏற்படும் போர்க்களத்தில் வீரர்களுக்கு தெளிவான பார்வையை கொடுக்கும் வகையில் வெளிச்சம், பாதுகாப்பு மற்றும் திறனை மேம்படுத்துவதே இவர்களின் நோக்கம். இறக்குமதி செய்யப்பட்ட வெளிச்ச அமைப்புகளுக்குப் பதிலாக, நம் நாட்டிலேயே துல்லியமாக வடிவமைக்கப்பட்ட இவர்களின் தொழில்நுட்பம் இப்போது வீரர்களுக்குப் பெரிய உதவியாக இருக்கிறது.

"இந்தியாவுக்காக இந்தியாவிலேயே பாதுகாப்புத் தொழில்நுட்பங்களை உருவாக்குவதில் நாங்கள் பெருமை கொள்கிறோம்," என்கிறார் இதன் நிறுவனர் களஞ்சியம்.

பாதுகாப்புத் துறைக்கான போட்டியில் வெற்றி பெற்ற அற்புதா நிறுவனம், தமிழ்நாட்டின் தொழிற்சாலைத் திறமை இப்போது விண்வெளி மற்றும் ராணுவத் துறையிலும் எப்படிப் பரவுகிறது என்பதைக் குறிக்கிறது.

மொழி, எழுத்தறிவு மற்றும் உள்ளடக்கம் SignSetu

புதுமை என்பது வாழ்க்கையை மேம்படுத்துவது மட்டுமல்ல, சமப்படுத்துவதும்தான் என்று ’சைன்சேது’ நிறுவனம் நிரூபிக்கிறது. சென்னையைச் சேர்ந்த தொழில்முனைவோர் ஷ்ரத்தா அகர்வால் தொடங்கிய இந்த நிறுவனம், இந்தியாவில் உள்ள 6.3 கோடி காது கேளாதவர்களுக்குப் பயன்படும் வகையில், இந்திய சைகை மொழி (ISL) உதவியுடன் ஆங்கிலம் கற்பிக்கும் செயலியை உருவாக்கியுள்ளது.

சைன்சேது செயலி, சைகை மொழி மற்றும் படங்களைப் பயன்படுத்தி, காதுகேளாத குழந்தைகளுக்கு ஆங்கிலம் கற்றுக்கொடுக்கிறது. இது விளையாட்டு, கதை, சைகை மொழி வீடியோ அகராதி மற்றும் முன்னேற்றத்தைக் கண்காணிக்கும் வசதி என அனைத்தையும் கொண்டு, அவர்களுக்கு எளிதாகப் புரியும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

"ஒரே ஒரு சொல், ஒரு சைகை, ஒரு தொடர்பு போதும் ஒரு வாழ்க்கையை மாற்ற. சைன்சேது மூலம், காதுகேளாத அனைவரின் குரலும் கேட்கப்படும், அவர்கள் புரிந்துகொள்ளப்படுவார்கள், அதிகாரம் பெறுவார்கள்," என்கிறார் அதன் நிறுவனர் அகர்வால்.

சைன்சேது, சென்னை மற்றும் ஹைதராபாத்தில் சோதனை செய்யப்பட்டு, காதுகேளாத மாணவர்களின் கற்றல் திறனை அதிகரித்துள்ளது. சமூக நலனுடன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியதற்காக, ஐ.நா. மற்றும் TANSEED போன்ற முக்கிய அமைப்புகளால் இந்த நிறுவனம் பாராட்டப்பட்டுள்ளது.

StartupTN:

சைபர் பாதுகாப்பு, ஏஐ, கல்வி மற்றும் ராணுவ தொழில்நுட்பங்கள் எனப் பல துறைகளில் தமிழ்நாட்டின் கண்டுபிடிப்பாளர்கள், எதிர்கால உலகிற்குத் தேவையான நம்பிக்கை, பலம், மற்றும் சமத்துவத்தை தொழில்நுட்பம் மூலம் கட்டமைக்கிறார்கள்.

மேலே குறிப்பிட்ட இந்த நான்கு ஸ்டார்ட்-அப் நிறுவனங்களின் மாறுபட்ட வெற்றிக் கதைகளை இணைக்கும் பொதுவான அம்சம் என்னவென்றால், தமிழக அரசின் 'ஸ்டார்ட்அப் தமிழ்நாடு'-இன் (StartupTN) 'டான்சீட்' (TANSEED) திட்டம்தான். டான்சீட் திட்டம் என்பது ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் முயற்சிகளுக்கு மானிய அடிப்படையில் நிதியுதவி அளிக்கும் தமிழ்நாடு அரசின் திட்டம் ஆகும். பணமில்லை என்ற காரணத்தால் தொழில்முனைவோர் மனப்பான்மை முடங்கிவிடக் கூடாது என்பதற்காக புதுமைகளை கொண்டு வர அரசாங்கம் தரும் ஒரு ஆதரவு இது.

StartupTN-ன் டான்சீட் திட்டம் மூலம் ஒவ்வொரு நிறுவனமும் ரூ.10 லட்சம் நிதியுதவியைப் பெறுகின்றன. அதே நேரத்தில், பெண்கள் தலைமை வகிக்கும் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் மற்றும் கிராமப்புற, வேளாண் தொழில்நுட்பம் மற்றும் பசுமை தொழில்நுட்பத் துறைகளை சார்ந்த ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் ரூ.15 லட்சம் வரை நிதியுதவியைப் பெற முடியும். இந்த நிதி ஃபார்ச்சூன் 500 நிறுவனங்களின் கூட்டணி, சர்வதேச சந்தைகள் மற்றும் தொடர்ச்சியான முதலீடுகளுக்கு அணுகலை பெற உதவுகின்றன.

தமிழ்நாட்டின் ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் கதை, அதன் வளர்ச்சி வேகத்தில் மட்டும் இல்லை; மாறாக அதன் நோக்கத்தில் தான் உள்ளது. புதிய கண்டுபிடிப்புகளையும், அனைவரையும் உள்ளடக்கும் தன்மையையும்; தொழில்நுட்பத்தையும், மாற்றத்தையும் எப்படிச் சமநிலைப்படுத்துகிறது என்பதில்தான் அதன் பலம் இருக்கிறது. ஸ்டார்ட்அப் நிறுவனர்கள் அனைவரும் இணைந்து, எதிர்காலத்தை வடிவமைக்கிறார்கள். அங்கே, வளர்ச்சி என்பது வெறும் டிஜிட்டலாக மட்டும் இருக்காது. அது ஆழமான மனிதநேயத்துடன் இருக்கும். மேலும், தாக்குப் பிடிக்கும் திறன், அனைவரையும் சென்றடையும் தன்மை மற்றும் உண்மையான மாற்றத்திற்காக உருவாக்கப்பட்ட ஒரு புதிய சகாப்தமாக இது இருக்கும்.


Edited by Induja Raghunathan

More News :
facebook twitter