‘ஒருமுறையாவது விமானத்தில் பறந்துவிட வேண்டும்...' நடுத்தர மற்றும் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களின் கனவுகளில் தவிர்க்க முடியாத இதுவும் ஒன்று. ஆனால் இந்தக் கனவு எல்லோருக்கும் சாத்தியப்பட்டு விடுகிறதா என்றால் நிச்சயம் இல்லை.
தன்னிடம் பயிலும் மாணவர்களும் இதேபோல், கனவு கண்டு ஏமாந்துவிடக் கூடாது என, அவர்களது மாணவப் பருவத்திலேயே அவர்களது விமானக் கனவை நினைவாக்கி இருக்கிறார் தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர் ஒருவர்.
விமானத்தில் பறக்க ஆசை
தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் ஒன்றியத்தில் உள்ள கொண்டலூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 107 மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்தப் பள்ளியின் தலைமையாசிரியராக மைக்கேல்ராஜ் என்பவர் பணி புரிந்து வருகிறார்.
இவர் கடந்தாண்டு, ரைட் சகோதரர்கள் குறித்து பாடம் எடுத்தபோது, விமானத்தில் பறக்க ஆசைப்பட்ட தனது பள்ளி மாணவர்கள் சிலரை சென்னைக்கு விமானத்தில் அழைத்து வந்தார். இந்தாண்டும் அதேபோல் தங்களையும் அழைத்துச் செல்ல வேண்டும் என அப்பள்ளியில் பயிலும் ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் மைக்கேல்ராஜிடம் ஆசையாகக் கேட்டுள்ளனர்.
பரிசோ, அன்பளிப்போ சுலபமாகக் கிடைத்து விட்டால், அதன் அருமை மாணவர்களுக்கு தெரியாமலேயே போய்விடும், என நினைத்த அவர், 16ம் வாய்ப்பாட்டைச் சரியாக ஒப்பிக்க வேண்டும் என்ற சிறிய கணிதப் போட்டியை வைத்துள்ளார்.
இதில் ஆர்வமுடன் கலந்து கொண்ட 21 மாணவர்கள், பிழையின்றி 16ம் வாய்ப்பாட்டைச் சொல்லி வெற்றி பெற்றனர். வெற்றிப் பெற்றவர்களுக்கு பரிசாக, அவர்களது நீண்ட நாள் கனவான விமானப் பயணத்தை நிறைவேற்ற முடிவு செய்தார் மைக்கேல் ராஜா. அவரது இந்த முயற்சிக்கு டி எஸ் குழும உரிமையாளர் ஜெயசிங் உதவி செய்ய முன்வந்தார்.
அதன்படி, மாணவர்கள் விமானத்தில் சென்னை வர தேவையான பயணச் செலவை அவர் ஏற்றுக் கொண்டார். அதேபோல் மற்ற செலவுகளுக்கான தொகையையும் தலைமையாசிரியருடன் சேர்ந்து மேலும் பல நல்ல உள்ளங்கள் பகிர்ந்து கொண்டன.
கையிலே ஆகாசம்.. மகிழ்ச்சியில் பறந்த மாணவர்கள்
சரியான திட்டமிடலுக்குப் பின், அப்பள்ளியில் பயிலும் 21 ஐந்தாம் வகுப்பு மாணவர்கள், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் மற்றும் ஆசிரியர்கள் என 7 பேருடன், கடந்த சனிக்கிழமை (மார்ச் 7ம் தேதி) காலை தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு விமானத்தில் பயணம் செய்தனர்.
இதுவரை ஆகாயத்தில் அண்ணாந்து மட்டுமே மேகங்களைப் பார்த்த அந்த மாணவர்களுக்கு, முதன்முறையாக மேகங்களைக் கிழித்துக் கொண்டு ஆகாயத்தில் பறந்த அனுபவம் மகிழ்ச்சியில் திளைக்க வைத்தது. தங்களது மகிழ்ச்சியை ஆவணம் செய்து கொள்ளும் வகையில், விமானியுடனும், விமானத்திலும் விதவிதமான புகைப்படங்களையும் அவர்கள் எடுத்துக் கொண்டனர்.
சென்னை வந்திறங்கிய மாணவர்கள், சனி மற்றும் ஞாயிறு என இரண்டு நாட்கள் இங்குள்ள பிர்லா கோளரங்கம், தமிழக முன்னாள் முதல்வர்கள் அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, எம் ஜி ஆர்,ஜெயலலிதா போன்றோரின் நினைவிடங்கள், அறிஞர் அண்ணா நூற்றாண்டு நூலகம், சென்னை இந்திய தொழில்நுட்பக் கழகம் ( ஐ.ஐ.டி), கலங்கரை விளக்கம், தலைமைச் செயலகம், சென்னை அருங்காட்சியகம், சென்னை உயர்நீதிமன்றம், ரயில் சட்டமன்றம், கோட்டை அருங்காட்சியகம், வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா என வரலாற்று சிறப்புமிக்க பல இடங்களைச் சுற்றிப் பார்த்து விட்டு, மகிழ்ச்சியோடு மீண்டும் தென்காசி திரும்பினர்.