ஏஐ தரவு மையங்கள் முதலீடு குமிழாக மாறுமா? - ஸ்ரீதர் வேம்பு கருத்து

06:45 PM Jun 23, 2026 | cyber simman

ஜோஹோ நிறுவனர் மற்றும் முதன்மை விஞ்ஞானி ஸ்ரீதர் வேம்பு, தரவு மையங்கள் குமிழ் தொடர்பான விவாதத்தில் எக்ஸ் தள பதிவு மூலம் தனது கருத்தை தெரிவித்துள்ளார். தரவு மையங்களில் செய்யப்படும் முதலீடுகளுக்கான லாபம் பற்றி ஐபிஎம் சி.இ.ஒ.அரவிந்த் கிருஷ்ணா எழுப்பிய கேள்வியை சுட்டிக்காட்டி அவர் பதில் அளித்துள்ளார்.

ஜோஹோ நிறுவனம், மிகவும் கவனமாக செயல்பட்டு வருவதாகவும், முதலீடு குமிழ்களை நிறுவனம் துரத்திச் செல்வதில்லை என்றும் கூறியுள்ளார்.

“ஐபிஎம் சி.இ.ஓ. அரவிந்த் கிருஷ்ணா, பல கோடி டாலர் முதலீடு தேவைப்படும் தரவு மையங்களை அமைப்பது ஒரு குமிழ் என்று கூறியுள்ளார். நாங்கள், தரவுகளை தேர்வு செய்து சேகரிப்பது, மறு உறுதி கற்றல், மிகவும் முக்கியமாக ஏஐ அளிக்கும் தகவல்கள் சரி பார்க்கப்படுவதற்கு தேவையான உள்கட்டமைப்பில் கவனம் செலுத்தி வருகிறோம். முதலீடு குமிழ்களை துரத்திச்செல்வதில்லை,” என ஸ்ரீதர் வேம்பு கூறியுள்ளார்.

இது வழக்கமான அறிவு என்று அவர் கூறியுள்ளார். ஒரு சிலருக்கு இது எதிர்மறையாக தோன்றலாம், ஆனால் ஐந்து ஆண்டுகள் கழித்து இது பற்றி பேசுவோம் என்றும் கூறியுள்ளார்.

ஓபன் ஏஐ, மைக்ரோசாப்ட் மற்றும் கூகுள், மெட்டா உள்ளிட்ட சர்வதேச நிறுவனங்கள் ஜென் ஏஐ மாதிரிகளை இயக்கும் பிரத்யேக சிப்கள், தரவு மையங்களில் கோடிக்கணக்கான டாலர்களை முதலீடு செய்து வரும் நிலையில் இந்த விவாதம் எழுந்துள்ளது. தரவு மையங்களில் செய்யப்படும் அதிக அளவிலான முதலீடு இதற்கான பலன் தொடர்பான கேள்விகளையும் எழுப்பியுள்ளது.

ஏஐ உள்கட்டமைப்பு போட்டியில் செய்யப்படும் பெரும் முதலீடு தொடர்பாக அரவிந்த் கிருஷ்ணா சந்தேகம் எழுப்பியிருந்தார். ஏஐ தேவைக்காக உருவாக்கப்படும் தரவு மையங்கள் மீதான முதலீட்டில் லாபம் பெறுவது கடினம் என்றும் கூறியிருந்தார்.

செய்தி –பிடிஐ


Edited by Induja Raghunathan