
தமிழ்நாட்டில் உள்ள சுமார் 5.73 கோடி வாக்காளர்களில், 2.93 கோடி பேர் பெண்கள் ஆவர். இவர்களில், 443 பேர் நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில், பல்வேறு கட்சிகளின் சார்பாக போட்டியிட்டனர். திமுக கூட்டணி சார்பாக 26 பெண் வேட்பாளர்களும், அதிமுக சார்பாக 29 பெண் வேட்பாளர்களும், தவெக சார்பாக 23 பெண் வேட்பாளர்களும், அதிகபட்சமாக நாம் தமிழர் கட்சி சார்பாக 117 பெண் வேட்பாளர்களும் களமிறக்கப்பட்டனர்.
இந்த 443 பெண் வேட்பாளர்களில், 23 பேர் தங்களுக்கு எதிராக போட்டியிட்டவர்களைவிட அதிக வாக்குகளைப் பெற்று வெற்றி வாகை சூடியுள்ளனர். குறிப்பாக தவெக சார்பாக போட்டியிட்ட 23 பேரில், 13 பேர் வெற்றி பெற்றுள்ளனர். இந்த 13 பேரில் ஒருவரான சிவகாசியைச் சேர்ந்த கீர்த்தனா, நேற்று நடைபெற்ற பதவியேற்பு விழாவில் அமைச்சராகப் பதவியேற்றுள்ளார்.

ஜோதிடர் தொடங்கி தொழில்முனைவோர் வரை
புதிதாக அமைந்துள்ள சட்டசபையில், இரண்டாவது பெரிய கட்சியாக, எதிர்க்கட்சி அந்தஸ்தைப் பெற்றுள்ள திமுகவில் இருந்து இம்முறை ஒரு பெண் எம் எல் ஏக்கூட தேர்வாகவில்லை. ஆனால், அதிமுகவின் 47 எம்எல்ஏக்களில் 6 பேர் பெண்கள் ஆவர்.
இதேபோல், காங்கிரஸ், பாமக, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தேமுதிக உள்ளிட்ட கட்சிகளில் தலா ஒரு பெண் எம்எல்ஏ.க்கள் உள்ளனர்.
ஜோதிடர் தொடங்கி ஆசிரியர், வழக்கறிஞர், தொழில்முனைவோர் என பல்வேறு துறைகளைச் சேர்ந்த பெண்கள் இம்முறை சட்டசபைக்கு தேர்வாகியுள்ளனர். இதோ அவர்களின் விபரம் பின்வருமாறு...
- எம்.ஆர்.பல்லவி (த.வெ.க., திரு.வி.க.நகர்)
- காமாட்சி (த.வெ.க., பல்லாவரம்),
- மரகதம் குமரவேல் (அ.தி.மு.க., மதுராந்தகம்)
- லீமாரோஸ் (அ.தி.மு.க., லால்குடி),
- எல்.ஜெயசுதா (அ.தி.மு.க., ஆரணி),
- பிரேமலதா விஜயகாந்த் (தே.மு.தி.க., விருத்தாசலம்),
- உஷாராணி (அ.தி.மு.க., ஏற்காடு),
- சவுமியா அன்புமணி (பா.ம.க., தர்மபுரி),
- மரகதம் வெற்றிவேல் (அ.தி.மு.க., பாப்பிரெட்டிப்பட்டி),
- விஜயலட்சுமி (த.வெ.க., குமாரபாளையம்).
- தமிழ்செல்வி (த.வெ.க., பவானிசாகர்),
- சத்தியபாமா (த.வெ.க., திருப்பூர் வடக்கு),
- கமலி (த.வெ.க., அவினாசி),
- சத்தியபாமா (அ.தி.மு.க., தாராபுரம்),
- கனிமொழி சந்தோஷ் (த.வெ.க., கவுண்டம்பாளையம்),
- சிந்து (த.வெ.க., குடியாத்தம்),
- சத்யா (த.வெ.க., கிருஷ்ணராயபுரம்),
- லதா (மா.கம்யூ, கீழ்வேளூர்),
- குழந்தை ராணி நாச்சியார் (த.வெ.க., சிவகங்கை),
- கீர்த்தனா (த.வெ.க., சிவகாசி),
- ஜெகதீஸ்வரி (த.வெ.க., ராஜபாளையம்),
- தாரகை கத்பர்ட் (காங்கிரஸ், குளச்சல்)
- தாஹிரா (ராணிப்பேட்டை)

முதல் வெற்றியிலேயே அமைச்சரான கீர்த்தனா
தவெக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ள 13 பெண் எம் எல் ஏக்களில், சிவகாசியைச் சேர்ந்த கீர்த்தனா, நேற்று நடைபெற்ற பதவியேற்பு விழாவில் அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளார்.
விருதுநகர் மாவட்டம் சத்திரரெட்டியாபட்டியை சேர்ந்தவரான கீர்த்தனாவின் தந்தை பெயர் சம்பத். 29 வயதான கீர்த்தனா, மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் இளங்கலை கணிதமும், அதனைத் தொடர்ந்து புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் முதுகலை புள்ளியியலும் படித்தவர்.
திருமணம் ஆகாதவரான கீர்த்தனா, தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் எனப் பன்மொழி வித்தகர். நேரடி அரசியலுக்கு வருவதற்கு முன்னதாக, பிரசாந்த் கிஷோரின் நிறுவனத்தில் அரசியல் ஆலோசகராகப் பணியாற்றியவர். திமுக, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட பல அரசியல் கட்சிகளின் தேர்தல் வியூகங்களுக்கு பின்னணியில் இருந்து செயல்பட்ட இவர், இம்முறை தவெக சார்பில் சிவகாசியில் நேரடியாக அரசியலில் களமிறங்கினார்.
முதல் தேர்தலிலேயே, காங்கிரஸ் வேட்பாளர் அசோகனைவிட 11,670 வாக்குகள் அதிகம் பெற்று, வெற்றி வாகை சூடினார். நேற்று அமைச்சராக பதவியேற்றதன் மூலம், தவெக-வின் முதல் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள ஒரே பெண் மற்றும் மிக இளவயது அமைச்சர் என்ற பெருமையையும் கீர்த்தனா பெற்றுள்ளார்.

3வது அதிக பெண் எம் எல் ஏக்கள் கொண்ட அவை
அதிக பெண் எம் எல் ஏக்களைக் கொண்ட மூன்றாவது சட்டசபை இது ஆகும். கடந்த சட்டசபையில் 12 பெண் எம் எல் ஏக்கள் இடம் பெற்றிருந்தனர். சட்டசபை வரலாற்றிலேயே, கடந்த 1991ம் ஆண்டு, 32 பெண் எம் எல் ஏக்கள் அவையை அலங்கரித்தனர். இதுவே இதுவரை நடைபெற்ற சட்டசபைகளில் அதிக பெண் எம் எல் ஏக்களைக் கொண்ட அவையாக உள்ளது.
அதன் தொடர்ச்சியாக, கடந்த 2016ம் ஆண்டு அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவையும் சேர்த்து, அவையில் 21 பெண் எம் எல் ஏக்கள் இடம் பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தது.