தமிழ்நாட்டில் புதிதாக நிறுவப்படவுள்ள மற்றும் விரிவாக்கம் மேற்கொள்ளப்படவுள்ள 46 முக்கிய முதலீட்டு திட்டங்களுக்கு ஊக்கச்சலுகைகள் வழங்க மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மொத்தம் ரூ.31,592.39 கோடி முதலீடு மேற்கொள்ள உறுதியளிக்கப்பட்டுள்ள இத்திட்டங்கள் மூலம் 61,521 பேருக்கு நேரடி வேலைவாய்ப்புகள் உருவாகும், என்று அரசு தெரிவித்துள்ளது.
இந்த முதலீட்டு திட்டங்கள் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, நாமக்கல், பெரம்பலூர், தேனி, திண்டுக்கல், கரூர், திருப்பூர், சேலம், கோயம்புத்தூர், தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் பரவலாக அமைய உள்ளன. இதன் மூலம் மாநிலம் முழுவதும் தொழில் வளர்ச்சி சமநிலையாக ஏற்படும், என எதிர்பார்க்கப்படுகிறது.
முக்கிய முதலீடுகளில் Sakthi Aircraft Industry நிறுவனத்தின் பயிற்சி விமான உதிரி பாகங்கள் இணைத்தல் மற்றும் பராமரிப்பு திட்டம், NMB-Minebea நிறுவனத்தின் பல்துறை பயன்பாட்டுக்கான செமிகண்டக்டர் உற்பத்தி, Yield Engineering Systems நிறுவனத்தின் செமிகண்டக்டர் உற்பத்தி சாதனங்கள் தயாரிப்பு ஆகியவை குறிப்பிடத்தக்கவை.
மேலும், டிக்சன் டெக்னாலஜீஸ் குழுமத்தின் மின்னணு சாதனங்கள் உற்பத்தி, SFO Technologies நிறுவனத்தின் மின்னணு உபகரணங்கள் தயாரிப்பு, Vikram Solar நிறுவனத்தின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மின்கலன் சேமிப்பு அமைப்பு (BESS) தொகுத்தல், Minerva Special Purpose Vehicles நிறுவனத்தின் கவச வாகன உற்பத்தி திட்டங்களும் அடங்கும்.
அத்துடன் HiKOKI Power Tools நிறுவனத்தின் மின்ஆற்றல் கருவிகள் உற்பத்தி, Festo நிறுவனத்தின் தொழில்துறை தானியக்க சாதனங்கள் தயாரிப்பு, Aequs குழுமத்தின் விமான எந்திரம் மற்றும் கியர்பாக்ஸ் உதிரி பாகங்கள் உற்பத்தி, Schneider Electric குழுமத்தின் குளிரூட்டும் சாதனங்கள் உற்பத்தி முதலீடுகளும் இடம்பெற்றுள்ளன.
மேலும், Bharat Biotech குழுமத்தின் உயிர் அறிவியல் தயாரிப்புகளுக்கான பூங்கா, Caterpillar Inc. குழுமத்தின் கட்டுமான எந்திரங்கள் மற்றும் சாதனங்கள் உற்பத்தி, Boeing நிறுவனத்தின் மேம்பட்ட வான்வெளி ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம், Saint-Gobain நிறுவனத்தின் கண்ணாடி தயாரிப்பு முதலீடுகளும் இந்தத் திட்டங்களில் அடங்குகின்றன.
இந்த முதலீடுகள் உற்பத்தி, வான்வெளி, மின்னணு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, உயிரியல் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் முன்னணி மாநிலமாக தமிழ்நாட்டை மேலும் வலுப்படுத்தும், என அரசு தரப்புகள் தெரிவித்துள்ளன.