+

Nalam AI: அரசு மருத்துவமனைகளில் இனி க்யூவில் நிற்கவேண்டாம் - வாட்ஸ்-அப் மூலம் முன்பதிவு செய்வது எப்படி?

அரசு மருத்துவமனைகளில் நோயாளிகள் வரிசையில் நிற்கும் சிரமத்தைக் குறைக்கும் வகையில், ‘நலம் ஏஐ’ என்ற வாட்ஸப் சாட்போட் மருத்துவ சேவையை இன்று தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் தொடங்கி வைத்துள்ளார். இதன்மூலம் இனி எளிதாக வாட்ஸ் அப் வாயிலாகவே ஓபி (OP) சீட்டைப் பெற இயலும்.

அரசு மருத்துவமனைகளை தொழில்நுட்பத்தின் உதவியோடு நவீனமாக்கும் முயற்சிகளில் ஒன்றாக, ‘நலம் ஏஐ’ என்ற வாட்ஸப் சாட்பாட் (Nalam AI-Whatsapp chatbot) வசதியை தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. அரசு பொது மருத்துவமனைகளில் முதன்முறையாக தொடங்கப்பட்டுள்ள இந்த திட்டத்தை தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் தொடங்கி வைத்தார்.

தனியார் மருத்துவமனைகளுக்கு இணையாக அரசு மருத்துவமனைகளிலும் தரமான மற்றும் உயர்தர சிகிச்சைகள் வழங்கப்பட்டு வந்தாலும், உள்கட்டமைப்பு வசதிகள் சற்று குறைவாக உள்ளதாகவே நீண்டகாலமாக குற்றம்சாட்டப்பட்டு வருகிறது. அதிலும், குறிப்பாக அரசு மருத்துவமனைகளில் நோயாளிகள் தங்கள் பெயரை பதிவு செய்து கொள்வதற்கான ஓபி (புறநோயாளிகள் பதிவு) அட்டையைப் பெறுவதற்காக அதிக நேரம் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.

இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில், அரசு மருத்துவமனைகளை தொழில்நுட்ப உதவியுடன் நவீனமாக்கும் முயற்சிகளில் தமிழ்நாடு அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. அதன் ஒரு கட்டமாக, நோயாளிகள் வரிசையில் நிற்பதைத் தடுக்கும் வகையில் ஸ்மார்ட் போனிலேயே ஓபி சீட்டைப் பெறும் வகையில், நலம் ஏஐ என்ற வாட்ஸப் சாட்போட் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த நலம் ஏஐ- ஐ திட்டத்தை சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் இன்று அமைச்சர் அருண்ராஜ் தொடங்கி வைத்தார். இந்த வசதி தற்போது தமிழ்நாட்டில் உள்ள 22 அரசு பொது மருத்துவமனைகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

Nalam AI

கியூ ஆர் கோட் முறையில் முன்பதிவு

அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வரும் நோயாளிகள் முதலில் வரிசையில் நின்று ஓபி சீட்டைப் பெற வேண்டும். அந்த சீட்டைப் பெற்ற பிறகுதான் சம்பந்தப்பட்ட மருத்துவரை சந்திக்க முடியும். இதற்கென மருத்துவமனைகளில் பல கவுண்டர்கள் இருந்தபோதிலும், மக்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டியுள்ளது. அதற்குக் காரணம் வெளியூர், புறநகர் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து சிகிச்சைப் பெற வருவோர் கூட்டம் அதிகம் என்பதேயாகும்.

தினமும் காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை இந்த ஓபி சீட்டு வழங்கப்படுகிறது என்றாலும், தாமதமாக மருத்துவரைச் சந்திக்க நேரும் நோயாளிகள், அவர்கள் எழுதித் தரும் சோதனைகளை மேற்கொள்ள அடுத்த நாளும் மருத்துவமனைக்கு செல்ல வேண்டி இருக்கிறது.

ஏற்கனவே உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வருபவர்கள், சிகிச்சைக்காக மேலும் அலைவதைத் தடுக்கும் வகையில், அவர்களது சிரமத்தைக் குறைக்க பல்வேறு நடவடிக்கைகளை தமிழ்நாடு மேற்கொண்டு வருகிறது.

அதன் ஒருகட்டமாக கடந்த மாதம், கியூ ஆர் கோட் முறையில் ஓபி சீட்டு பதிவு செய்யும் நடைமுறை சோதனை முறையில் அறிமுகப்படுத்தப்பட்டது. மருத்துவமனை வளாகத்தில் ஒட்டப்பட்டிருக்கும் கியூ ஆர் கோடை தங்கள் மொபைல் போனில் மக்கள் நேரடியாக ஸ்கேன் செய்வதன் மூலம், வரிசையில் நிற்க வேண்டிய அவசியம் இல்லாமல் ஓபி சீட்டு பெற முடியும்.

இத்திட்டத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், இந்த கியூ ஆர் கோடை மருத்துவமனைக்கு வந்து ஸ்கேன் செய்வது போன்ற அலைச்சலைக் குறைக்கும் வகையில், இந்த 'நலம் ஏஐ' அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

queue

நலம் ஏஐ - முன்பதிவு செய்வது எப்படி?

’நலம் ஏஐ’ மூலம் நாம் வீட்டிலோ அல்லது வெளியூரிலோ இருந்துகூட சம்பந்தப்பட்ட மருத்துவமனையில் முன்பதிவு செய்ய முடியும். இதற்கென 96192 22999 என்ற வாட்ஸப் எண் பிரத்யேகமாக ஒதுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் 22 மாவட்ட அரசு பொது மருத்துவமனைகளில் இந்த வசதி இன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சென்னையில் சோதனை முயற்சியாக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் நெஞ்சக புறநோயாளிகள் பிரிவில் இந்த செயலி தொடங்கப்பட்டுள்ளது. விரைவில் இது மற்ற பிரிவுகளுக்கு விரிவாக்கம் செய்யப்படும்.

இந்த நலம் ஏஐ வாட்ஸப் சாட்போட்டைப் பின்வருமாறு பயன்படுத்தலாம்...

  • சம்பந்தப்பட்ட நோயாளிகள் தங்களது மொபைல் போனில் 96192 22999 என்ற எண்ணை பதிவு செய்து வைத்துக் கொள்ள வேண்டும். ஒருவேளை அவர்களிடம் ஸ்மார்ட்போன் வசதி இல்லாவிட்டால், அவர்களது உறவினர்கள் அல்லது நண்பர்களின் போன் மூலமாகக் கூட இந்த வசதியைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

  • மொபைலில் இந்த எண்ணைப் பதிவு செய்து வைத்துக் கொண்டபிறகு, அந்த எண்ணிற்கு ’ஹாய்’ (Hi) என ஒரு மெசேஜ் அனுப்ப வேண்டும். அப்போது எந்தெந்த மருத்துவமனைகளில் இந்த வசதி உள்ளதோ அந்த அரசு மருத்துவமனைகளில் பட்டியல் குறுஞ்செய்தியாக வரும்.

  • அந்தப் பட்டியலில் சம்பந்தப்பட்டவர்கள் தங்களுக்கு அருகில் உள்ள மருத்துவமனையைத் தேர்ந்தெடுத்து, அதில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

Nalam Ai

கழிவறை கண்காணிப்பு கியூ. ஆர். கோட் அறிமுகம்

நலம் ஏஐ வாட்ஸப் சேவையைப் போலவே அரசு மருத்துவமனைகளில் கழிவறை சுத்தத்தை கண்காணிக்கும் வகையில் கியூ.ஆர். கோட் என்ற புதிய அம்சத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளனர்.

அரசு மருத்துவமனைகளில் உள்ள கழிவறைகளின் வெளியே ஒரு கியூ.ஆர். கோட் ஒட்டப்பட்டிருக்கும். கழிவறையைப் பயன்படுத்திய பின் மக்கள், தங்கள் மொபைல் போனில் அந்த கியூ. ஆர். கோட்-ஐ ஸ்கேன் செய்ய வேண்டும். அதில், கழிவறை சுத்தமாக இருந்ததா இல்லையா என்ற வினா எழுப்படும். அதில் பயனாளர்கள் தங்கள் கருத்தைப் பதிவு செய்யலாம்.

ஒருவேளை கழிவறை தூய்மையாக இல்லை, என அவர்கள் புகார் செய்தால், உடனடியாக இந்தச் செய்தி அந்த தள பொறுப்பாளருக்கு சென்றடையும். அவர் உடனடியாக துப்புரவு பணியாளரை நியமித்து, கழிவறையை சுத்தம் செய்ய வைப்பார். 30 நிமிடங்களுக்குள் அந்தக் கழிவறை சுத்தம் செய்யப்படாத பட்சத்தில் இந்தப் புகார் அடுத்தடுத்த கட்டங்களாக மேல் அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வசதியும் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அரசு மருத்துவமனை என்றாலே மக்கள் முகம் சுளிக்கும் விசயங்களில் இந்த தூய்மையில்லாத கழிவறைகளும் முக்கியமானது. தற்போது இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் இந்த திட்டத்தை அரசு அறிமுகப் படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Rajiv gandhi hospital

வீட்டிலிருந்தே ஓபி சீட் வாங்கலாம்!

நலம் ஏஐ மற்றும் கழிவறை கண்காணிப்பு கியூ.ஆர்.கோட் என்ற இந்த இரண்டு திட்டங்களை தொடங்கி வைத்தபின், சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ், செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர்,

“தனியார் மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்குச் செல்பவர்கள் முன்கூட்டியே பதிவு செய்து கொண்டு செல்கின்றனர். அதேபோல், அரசு மருத்துவமனைகளிலும் இணையவழி முன்பதிவு வசதியைக் கொண்டு வர வேண்டும் என்பது முதலமைச்சரின் எண்ணமாகும்."

தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நலம் ஏஐ மூலம் புறநோயாளிகள் முன்பதிவு செய்யும் முறை எளிதாக்கப்பட்டுள்ளது. நீண்டநேரம் வரிசையில் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லாமல், வாட்ஸப் மூலமாகவே முன்பதிவு செய்து கொள்ளலாம், எனத் தெரிவித்துள்ளார்.  

facebook twitter