+

யுபிஎஸ்சி தேர்வில் தேசிய அளவில் 2-ம் இடம்: மதுரை ராஜேஸ்வரி சாதித்தது எப்படி?

2025-ம் ஆண்டுக்கான சிவில் சர்வீஸ் தேர்வின் இறுதி முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், அதில் தமிழகத்தைச் சேர்ந்த ராஜேஸ்வரி தேசிய அளவில் இரண்டாம் இடம் பெற்றுள்ளார்.

ஐஏஎஸ், ஐஎஃப்எஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட பல உயர் பணியிடங்களுக்கு, ஆண்டுதோறும் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் சிவில் சர்வீஸ் தேர்வுகளை நடத்தி வருகிறது. முதல்நிலை, முதன்மை, நேர்முகத் தேர்வு என மூன்று நிலைகளைக் கொண்ட இந்தத் தேர்வில் ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்று, தேர்வுகளை எதிர்கொள்கின்றனர்.

அதன்படி, 2025-ம் ஆண்டுக்கான சிவில் சர்வீஸ் தேர்வின் எழுத்து தேர்வுகள் கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக இந்தாண்டு (2026) பிப்ரவரியில் நேர்முகத் தேர்வும் நடைபெற்றது.

இந்தத் தேர்வுகளின் இறுதி முடிவுகள் இப்போது upsc.gov.in இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. நேர்முகத் தேர்வு மற்றும் முதன்மைத் தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் இந்த முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

ராஜேஸ்வரி 2-வது இடம்

2025-ம் ஆண்டுக்கான சிவில் சர்வீஸ் தேர்வு முடிகளின்படி, அனுஜ் அக்னிஹோத்ரி என்ற மாணவர் தேசிய அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். இரண்டாம் இடத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ராஜேஸ்வரி உள்ளார். இவர் பெண்களுக்கான தரவரிசைப் பட்டியலில் முதலிடத்தைப் பெற்றுள்ளார்.

இந்தப் பட்டியலில், மூன்றாம் இடத்தை ஆகாஷ் துல் என்ற மாணவர் பிடித்துள்ளார். தமிழ்நாட்டைச் சேர்ந்த ராஜா மொகைதீன் 7-ம் இடத்தைப் பிடித்துள்ளனர்.

கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் டாப் 10 இடங்களுக்குள் வரவில்லை. கடைசியாக 2015ம் ஆண்டு சரண்டா அரி தேசிய அளவில் 7-வது இடம் பிடித்திருந்தார். அதன் பிறகு தற்போதுதான் டாப் 10-க்குள் தமிழக மாணவர்கள் இடம்பெற்றுள்ளனர்.

2026-ம் ஆண்டு சிவில் சர்வீஸ் நேர்முகத் தேர்வு மற்றும் முதன்மைத் தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் மேற்கூறியவர்களைச் சேர்த்து, மொத்தம் 958 பேர் பல்வேறு உயரிய பதவிகளுக்குப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு பல்வேறு துறைகளில் உள்ள காலியிடங்களின் அடிப்படையில் பின்வருமாறு பிரிக்கப்பட்டுள்ளன:

  • இந்திய ஆட்சிப் பணி (IAS) - மொத்தம் 180 இடங்கள். இதில் பொது - 74, ஓபிசி - 47, எஸ்சி - 28, இடபிள்யூஎஸ் - 18, எஸ்டி - 13

  • இந்திய வெளியுறவுப் பணி (IFS) - மொத்தம் 55 இடங்கள்.

  • பிற பணிகளான இந்தியக் காவல் பணி (IPS) மற்றும் குரூப் ஏ, குரூப் பி பணிகளுக்கு மீதமுள்ளவர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

UPSC

யார் இந்த ராஜேஸ்வரி?

சிவில் சர்வீஸ் தேர்வில் தேசிய அளவில் இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ள ராஜேஸ்வரி மதுரை மாவட்டம் வாடிப்பட்டியைச் சேர்ந்தவர்.

 

ராஜேஸ்வரியின் தந்தை இன்ஸுரன்ஸ் ஏஜெண்ட் பணியோடு, கூடுதலாக இருசக்கர வாகன உதிரி பாகங்கள் கடையும் நடத்தி வருகிறார். தாயார் மதுரை கல்லூரியில் பேராசிரியராக வேலை பார்த்து வருகிறார்.

மதுரையில் பள்ளிப் படிப்பை முடித்த ராஜேஸ்வரி, 2018-ம் ஆண்டு சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மின் பொறியியலை முடித்துள்ளார். அப்போதிருந்தே சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்காக ஆயத்தமாகத் தொடங்கிய அவர், முதலில் தானே புத்தகங்களை வாங்கிப் படித்து முயற்சித்துள்ளார். பின்னர் பயிற்சி மையம் ஒன்றில் சேர்ந்து தேர்வுக்காக ஆயத்தமாகி இருக்கிறார்.

மூன்று ஆண்டுகள் கடும் உழைப்பிற்குப் பின், கடந்த 2024-ம் ஆண்டு டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வில் முதல் மாணவியாக வெற்றி பெற்று, திண்டுக்கல் மாவட்ட துணை ஆட்சியராக பதவியில் அமர்ந்தார்.

Rajeshwari

ஆனாலும் தனது இலக்கில் தெளிவாக இருந்த ராஜேஸ்வரி, தொடர்ந்து தேர்வுக்குப் படித்து வந்தார். அதன்பலனாக, தற்போது மீண்டும் சிவில் சர்வீஸ் தேர்வு எழுதி, அதில் அகில இந்திய அளவில் இரண்டாம் பிடித்துள்ளார்.

கை கொடுத்த ‘நான் முதல்வன்’ திட்டம்

தனது யுபிஎஸ்சி முதன்மை தேர்வுக்கான தேர்வுப் பாடமாக, ராஜேஸ்வரி சமூகவியல் பாடத்தை தேர்வு செய்துள்ளார். சமூக ஏற்றத்தாழ்வு, நிர்வாகம் போன்றவற்றை வெறும் புத்தகக் கல்வியாக மட்டும் பெறாமல், துணை ஆட்சியராக பணிபுரிந்து, அதில் நடைமுறை அனுபவங்களையும் பெற்றுள்ளார் அவர். இதுவும் அவரது வெற்றிக்கு முக்கிய கருவியாகப் பார்க்கப்படுகிறது.

இது மட்டுமின்றி, தமிழ்நாடு அரசின் ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் ராஜேஸ்வரி பயிற்சி பெற்றுள்ளார். இவரைப் போலவே 7-ம் இடத்தைப் பெற்றுள்ள ராஜா முகைதீனும் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்றவர் எனக் கூறப்படுகிறது.

தனது வெற்றி ராஜேஸ்வரி கூறும்போது, “நான் முதல்வன் திட்டம் எனக்கு பெரும் உதவியாக இருந்தது” என்றார்.

இதேபோல், முன்னர் அளித்த பேட்டி ஒன்றில், சிவில் சர்வீஸ் தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோருக்கு பின்வருமாறு ராஜேஸ்வரி கூறியுள்ளார்.

“தேர்வு எழுதும் மாணவர்கள் இந்த ஆண்டு வெற்றி பெறவில்லை என்றால், அவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு கொடுங்கள். அவர்களை மன அழுத்தத்திற்கு ஆளாக்காதீர்கள். அதேபோல், தேர்வுக்கு தயாராகுபவர்கள் நம்பிக்கையோடு தயாராகுங்கள். நிச்சயம் வெற்றி பெற இயலும்.”

இந்த ஆண்டு அவரது நேர்காணலில், திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்து அவரிடம் கேள்விகள் எழுப்பப் பட்டுள்ளன. பொதுவாக நேர்காணலுக்கு வரும் மாணவர்களிடம் அவர்களது சொந்த மாவட்டம் தொடர்பாக கேள்விகள் அதிகம் கேட்கப்படும். அந்தவகையில் ராஜேஸ்வரியிடம் திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்து கேட்கப்பட்டுள்ளது. அதற்கு அவர் அளித்த பதில்கள் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளன.


Edited by Induja Raghunathan

facebook twitter