
தமிழ்நாட்டின் வளர்ந்து வரும் தொழில் சூழலில் ஒரு தெளிவான போக்கு இப்போது உருவாகி வருகிறது. அதாவது, நிறுவனர்கள் வெறும் யோசனைகளை மட்டும் வைத்துக் கொண்டு தொடங்காமல், தாங்கள் நேரடியாக அனுபவித்த சில முக்கியமான பிரச்சினைகளிலிருந்து தங்கள் தொழிலைத் தொடங்குகிறார்கள்.
அவர்கள் சந்தித்த பிரச்சினைகளில் வனவிலங்கு வாழ்விடங்களுக்கு அச்சுறுத்தல் அளிக்கும் ஆக்கிரமிப்புத் தாவரங்கள், உலோகமற்றப் பொருட்களுக்கான பயனற்ற தொழில்துறை ஆய்வு முறைகள், நம்பகத்தன்மையற்ற மின்சார வாகன சார்ஜிங் உள்கட்டமைப்பு, உயிர் அறிவியல் பட்டதாரிகள் பயோ டெக் துறையில் வேலைக்குத் தயாராக இல்லாத நிலை, மின் இணைப்பு இல்லாத கிராமங்களுக்கு நம்பகமான மின்சாரம் கிடைக்காதது ஆகியவை பிரதானம்.
இவை அனைத்தும் முதலீட்டாளர்களைக் கவருவதற்காக உருவாக்கப்பட்ட வெறும் பேச்சுத் திட்டங்கள் அல்ல. மாறாக, இவை பிரச்சனைக்கு மிக அருகில் இருந்து பிறந்த தீர்வுகளாகும். முற்றிலும் மாறுபட்ட துறைகளில் இயங்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த 5 புதிய ஸ்டார்ட்அப் நிறுவனங்கள், தாங்கள் கண்ட தொழில்நுட்பத் திறனை எப்படி சமூகங்கள், தொழில்கள் மற்றும் இயற்கைச் சூழல்களை நேரடியாகப் பாதிக்கும் சவால்களைத் தீர்க்கும் வகையில் வணிகங்களாக மாற்றியுள்ளன என்பதை நிரூபிக்கின்றன.

ஆக்கிரமிப்பு தாவரத்தையே வாழ்வாதாரமாக மாற்றிய TAMS
சத்தியமங்கலம் காடுகளில், பல ஆண்டுகளாக ஒரு ஆக்கிரமிப்புத் தாவரம் வளர்ந்து வருகிறது. அதன் பெயர் 'லேண்டனா காமரா'. இது வேகமாகப் பரவி, உள்ளூர் தாவர வகைகளை அழிப்பதுடன், வனவிலங்குகளின் வாழ்விடங்களை அழித்து வருகிறது. இந்தச் செடி வேகமாகப் பரவி, மண்ணின் பாரம்பரிய இனங்களை வெளியேற்றி, காட்டுத் தீ ஏற்படுவதற்கான அபாயத்தையும் உருவாக்குகிறது. இந்தக் காரணங்களால், வனத் துறை அதிகாரிகளால் இதை முழுமையாகக் கட்டுப்படுத்த முடியவில்லை. அதேசமயம், இந்த வனப்பகுதிகளிலும் அதைச் சுற்றியும் வாழும் பழங்குடியினச் சமூகத்தினர் தங்கள் வாழ்வாதாரத்திற்கு மிகவும் குறைந்த வாய்ப்புகளையே எதிர்கொள்கின்றனர்.
'TAMS ட்ரைபல் கிரீன் ஃபியூயல்ஸ்' (TAMS Tribal Green Fuels) என்ற ஸ்டார்ட்-அப் நிறுவனம், ஜே.வடிவேல், எம்.பாலன், கஜ்ஜி ஐயாசாமி, மணியன் மாதேவி, பாக்கியராஜ் பார்வதி, சிவராஜ் சாந்தமணி, மற்றும் ராமநாதன் சிவராஜா உட்பட பழங்குடியினத் தொழில்முனைவோர் குழுவால் நிறுவப்பட்டது. மற்றவர்கள் பிரச்சினையாக மட்டுமே பார்த்த இடத்தில், இவர்கள் ஒரு வாய்ப்பைக் கண்டனர். இந்த நிறுவனம் லண்டானா கேமரா செடிகளை, விறகுக்குப் பதிலாகப் பயன்படுத்தக்கூடிய உருண்டைகளாக மாற்றுகிறது. இதன் மூலம், வன நிலங்களில் இருந்து அந்தத் தீங்கிழைக்கும் செடியைத் திட்டமிட்டு அகற்றுவதோடு, அதே நேரத்தில் ஒரு மாற்று எரிபொருள் மூலத்தையும் வழங்குகிறது.
ஓராண்டுக்குள், TAMS நிறுவனம் 550 டன் லண்டானா எரிபொருள் கட்டிகளை உற்பத்தி செய்துள்ளது. இதன் மூலம், 350 பழங்குடியின மக்களுக்கு வாழ்வாதாரத்தை வழங்கியுள்ளது. மேலும், யானைகள் மற்றும் புலிகளின் வாழ்விடமாகச் செயல்படும் 30 ஹெக்டேர் வனப்பகுதியை இந்த ஆக்கிரமிப்புத் தாவரத்திலிருந்து சுத்தம் செய்துள்ளது. இவர்களுடைய செயல்பாட்டு மாதிரி மிகவும் நேர்த்தியானது: சுற்றுச்சூழலை மீட்டெடுப்பதற்கான நிதி பழங்குடியின மக்களின் வேலைவாய்ப்புக்கு உதவுகிறது; அந்த வேலைவாய்ப்பு மீண்டும் காடுகளின் ஆரோக்கியத்தை நிலைநிறுத்துகிறது.
“காட்டில் வாழும் பழங்குடி சமூகங்களின் தீவிர பங்களிப்புடன் மட்டுமே, வனப்பகுதியை ஆக்கிரமிப்புத் தாவரங்களில் இருந்து காப்பாற்ற முடியும்,” என்கிறார் இதன் நிறுவனர் பாலன்.
இன்னொரு நிறுவனர் வடிவேல் மேலும் கூறுகையில்,
“இந்தியாவில் பழங்குடியினர் நடத்தும் நிறுவனங்கள் மிகக் குறைவு. ஒரு பழங்குடி இனமாக நாங்களும் ஒரு தனியார் நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்தி, சுற்றுச்சூழல் பாதுகாப்புக்குப் பங்களிக்க முடியும் என்பதை நிரூபிக்க விரும்புகிறோம்,” என்கிறார்.
ஸ்டார்ட்அப் தமிழ்நாடு, இந்திய வனவிலங்கு நிதி மற்றும் வனத்துறை ஆகியவற்றின் ஆதரவுடன், TAMS நிறுவனம் தங்கள் செயல்பாடுகளை, லண்டானா கேமரா செடிகள் அதிகம் ஆக்கிரமித்துள்ள மற்ற பகுதிகளுக்கும் விரிவுபடுத்தி வருகிறது. இந்த நிறுவனம், இயற்கை பாதுகாப்பு மற்றும் சமூக நலன் இரண்டும் ஒன்றையொன்று வலுப்படுத்தும் ஒரு செயல்பாட்டு மாதிரியை உருவாக்கி வருகிறது. இந்நிறுவனம், சமூகத் தொழில்முனைவு, சுற்றுச்சூழல் சீரமைப்பு மற்றும் பழங்குடி தொழில்முனைவு ஆகிய அரிய துறைகள் ஒரு வணிக ரீதியாக லாபகரமான முயற்சியாகக் கைகோர்க்க முடியும் என்பதை நிரூபிக்கிறது.
டெராஹெர்ட்ஸ் தொழில்நுட்பத்தில் புரட்சி செய்யும் TeraLumen
தொழில் துறையில் ஆய்வு என்பது நீண்ட காலமாக, உலோகத்தால் ஆன கட்டமைப்புகளுக்கு ஏற்ற முறைகளையே சார்ந்து இருந்தது. ஆனால், தொழில் துறைகள் இப்போது கூட்டுப் பொருட்கள், மின்காப்புப் பொருட்கள் மற்றும் செராமிக்ஸ் போன்ற பொருட்களை நோக்கி மாறுவதால், பாரம்பரியமாகப் பயன்படுத்தப்படும் பொருள் சேதமில்லா சோதனை முறைகள் பயன்படாமல் போகின்றன. இந்தச் சிக்கலைத் தீர்க்கும் விதமாக, சென்னையைச் சேர்ந்த ’டெராலூமன் சொல்யூஷன்ஸ்’ (TeraLumen Solutions) என்ற நிறுவனம் செயல்பட்டு வருகிறது. 2019-ம் ஆண்டில் ஜோதிர்மயீ தாஷ் என்பவரால் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம், ’டெராஹெர்ட்ஸ்’ தொழில்நுட்பத்தை, செயற்கை நுண்ணறிவு சார்ந்த பகுப்பாய்வுடன் இணைத்து தீர்வை வழங்குகிறது.
டெராஹெர்ட்ஸ் அலைகள் மின்காந்த அலை வரிசையில் ஒரு தனித்துவமான நிலையில் உள்ளன. இவை எந்தப் பொருளுக்கும் சேதம் விளைவிக்காமல், அதன் மேற்பரப்பிற்கு அடியில் உள்ள பகுதியைப் படம் பிடிக்க அனுமதிக்கின்றன. டெராலூமனின் இந்தக் கருவி, டெராஹெர்ட்ஸ் இமேஜிங், மெஷின் லேர்னிங் மற்றும் ரியல் டைம் சோதனைகள் ஆகியவற்றை ஒருங்கிணைக்கிறது. இது விண்வெளி, வாகன உற்பத்தி, எரிசக்தி மற்றும் பாதுகாப்புத் துறைகளில் பயன்படுத்தப்படும் பொருட்களில் உள்ள குறைபாடுகளைக் கண்டறியவும், பூச்சுகளின் தடிமனை மைக்ரான் அளவில் மிகத் துல்லியமாக அளவிடவும் உதவுகிறது.
“ஆராய்ச்சியில் இருந்து, நிஜ உலக நம்பகத்தன்மை வரை, டீப் டெக் தொழில்நுட்பத்தை மக்களுக்குக் கொண்டு சேர்க்கும் கடைசி மைல் இடைவெளியை நாங்கள் இணைக்கிறோம்,” என்கிறார் அதன் நிறுவர் ஜோதிர்மயி.
டெராலூமன் நிறுவனம் விண்வெளி, பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களுக்காக டெராஹெர்ட்ஸ் தொழில்நுட்பத்தை வணிக ரீதியில் பயன்படுத்தும் இந்தியாவின் முதல் மற்றும் ஒரே நிறுவனம் ஆகும். இதற்காக அவர்களுக்கு ISO 13485/9001 தரச் சான்றிதழ்களும் கிடைத்துள்ளன. தொழில் துறை பயன்பாடுகளைத் தாண்டி, இந்த நிறுவனம் 'டெராமார்ஜின்' என்ற ஒரு கருவியை உருவாக்கி வருகிறது. மார்பக மற்றும் வாய் புற்றுநோய் அறுவை சிகிச்சைகளின்போது, புற்றுநோய் விளிம்புகளைத் துல்லியமாகக் கண்டறிவதற்காக இந்தக் கருவி தற்போது மருத்துவச் சோதனையில் உள்ளது.
BIRAC, Pfizer-இன் 'இண்டோவேஷன் கிராண்ட்' மற்றும் குவால்காம் டிசைன் இந்தியா சேலஞ்சில் சிறந்த 12 இடங்களுக்குள் தெரிவு செய்யப்பட்டது போன்ற அங்கீகாரங்கள், இந்நிறுவனத்தின் தொழில்நுட்ப அணுகுமுறையின் தரத்தை உறுதிப்படுத்துகின்றன. ஸ்டார்ட்அப் தமிழ்நாட்டின் மூலம் கிடைத்த ரூ.10 லட்சம் மானிய நிதி உதவியுடனும் டெராலூமன் நிறுவனம் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு சிலரால் மட்டுமே புரிந்துகொள்ளப்பட்ட ஒரு தொழில்நுட்பத்தை இப்போது வணிக ரீதியான உண்மையாக மாற்றியமைக்கிறது. இது தொழில்துறையின் பாதுகாப்பிலும், மருத்துவ நோய் கண்டறிதலிலும் உள்ள முக்கியமான இடைவெளிகளை நிரப்புகிறது.
மின்சார வாகன சார்ஜிங்கில் பாய்ச்சல் காட்டும் Plugzmart
இந்தியாவின் மின்சார வாகன சார்ஜிங் உள்கட்டமைப்பு இன்னமும் பிளவுபட்டு, நம்பகத்தன்மையற்றதாகவே உள்ளது. இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களே ஆதிக்கம் செலுத்துகின்றன. சேவை மையங்கள் போதிய அளவில் இல்லை. ஓட்டுநர்களுக்கு மிகவும் தேவைப்படும் நேரத்தில் சார்ஜிங் நிலையங்கள் செயலிழப்பதும் அடிக்கடி நடக்கிறது. இந்த சிக்கலை தீர்க்க சென்னையைச் சேர்ந்த பிளக்ஸ்மார்ட் நிறுவனம், 2019-ம் ஆண்டில் விவேக் சாமிநாதன் மற்றும் ராகவேந்திர ரவிச்சந்திரன் ஆகியோரால் தொடங்கப்பட்டது. இந்நிறுவனம், உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட மின்சார வாகன சார்ஜிங் தீர்வுகளை உருவாக்கி வருகிறது. இவை நிகழ்நேரக் கட்டுப்பாடு, தரவுப் பகுப்பாய்வு மற்றும் தொலைதூர மேலாண்மை ஆகியவற்றுக்கான ஒருங்கிணைந்த மென்பொருளைக் கொண்டுள்ளன.

பிளக்ஸ்மார்ட்டின் சார்ஜர்கள், ஸ்மார்ட் லோடு மேனேஜ்மென்ட், முன்கூட்டியே பிரச்சனைகளைக் கண்டறியும் சோதனை மற்றும் நிறுவனத்தின் சொந்த எனர்ஜி ஓஎஸ் சாஃப்ட்வேருடன் ஒருங்கிணைப்பு ஆகிய சிறப்பம்சங்களைக் கொண்டுள்ளன. இது திறமையான ஆற்றல் விநியோகத்தையும், சார்ஜிங் நேரம் வீணாவதைக் குறைப்பதையும் உறுதி செய்கிறது. இந்த நிறுவனத்தை வேறுபடுத்திக் காட்டுவது, அதன் ஏ.ஆர்.ஏ.ஐ. (ARAI) சான்றளிக்கப்பட்ட கண்ட்ரோல் டெக் தொழில்நுட்பம் ஆகும். இது முற்றிலுமாக இந்தியாவிலேயே உருவாக்கப்பட்டுத் தயாரிக்கப்படுகிறது. இதன் மூலம், பிளக்ஸ்மார்ட் ஒரு உண்மையான "மேக்-இன்-இந்தியா" தீர்வாக விளங்குகிறது.
“பிளக்ஸ்மார்ட் நிறுவனத்தில், ஆற்றல் திறன் மற்றும் மின்சார வாகனங்களின் பயன்பாடு ஆகியவை கைகோர்த்துச் செல்கின்றன என்று நாங்கள் நம்புகிறோம். எங்களுடைய இலக்கு, ஒரு கட்டமைப்பை உருவாக்குவதே ஆகும். அதில் ஸ்மாட் டெக்னலாஜி ஒவ்வொரு வீட்டிற்கும், ஒவ்வொரு வாகனத்திற்கும் நீடித்த நிலைத்தன்மையை கொண்டு சேர்க்கும்,” என்று நம்பிக்கை தெரிவிக்கிறார் இதன் நிறுவனர் சாமிநாதன்.
இந்த நிறுவனம் 50-க்கும் மேற்பட்ட இன்ஜினியர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கி உள்ளதுடன், தமிழ்நாடு முழுவதும் உள்ள 100-க்கும் மேற்பட்ட விற்பனையாளர்களுக்கும் ஆதரவளிக்கிறது. பானாசோனிக், ஜியோ பிபி மற்றும் இஸ்ரோ போன்ற நிறுவனங்களுடனான ஹார்டுவேர் மற்றும் சாஃப்ட்வேர் கூட்டணி, இவர்களின் வணிக ரீதியிலான வளர்ச்சியை நிரூபிக்கிறது.
இதுவரை ரூ.11.6 கோடி நிதியைப் பெற்றுள்ள பிளக்ஸ்மார்ட், 2026-ஆம் ஆண்டுக்குள் மாதத்திற்கு 1,000 சார்ஜர்களை உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளது. அத்துடன், ஸ்மார்ட் மின்கட்டமைப்பு மேலாண்மை மற்றும் மெய்நிகர் மின் உற்பத்தி நிலையங்களை ஒருங்கிணைப்பதற்காக, தங்கள் எனர்ஜி ஓஎஸ் அமைப்பை விரிவுபடுத்தவும் திட்டமிட்டுள்ளது.
ஸ்டார்ட்அப் தமிழ்நாட்டின் நிதி உதவி, வழிகாட்டுதல் மற்றும் சந்தை அணுகல் திட்டங்களின் ஆதரவுடன், பிளக்ஸ்மார்ட் நிறுவனம் தமிழ்நாட்டை உள்நாட்டு மின்சார வாகன உள்கட்டமைப்பு தொழில்நுட்பத்தின் மையமாக நிலைநிறுத்தி வருகிறது. இது, இந்தியாவிலேயே மின்சார வாகனங்களுக்கான தலைநகரமாக மாறுவதற்கான தமிழ்நாட்டின் இலக்கை அடைய மிகவும் இன்றியமையாததாகும்.
கடினமான நிலப்பரப்புகளிலும் காற்றாலைக்கு வழிவகுக்கும் Bhaskara
இந்தியா முழுவதும் உள்ள மின் இணைப்பு இல்லாத மற்றும் தொலைதூரப் பகுதிகள் மின்சார பிரச்சனைகளை எதிர்கொள்கின்றன. கிராமப்புறங்களில் பெரும்பாலும் காற்றின் வேகம் குறைவாகவும் சீரற்றதாகவும் இருக்கும். இதனால், வழக்கமான சிறிய காற்றாலைகள் சரியாகச் செயல்படுவதில்லை. மேலும், கடினமான நிலப்பரப்புகளில் இவற்றைப் பொருத்துவதும் கடினம். இந்த நிலைமைகளுக்காகவே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட உறுதியான சிறிய காற்றாலைகளை, சென்னையைச் சேர்ந்த 'பாஸ்கரா இன்ஜினியரிங் சர்வீசஸ்' நிறுவனம் உற்பத்தி செய்கிறது. இதனை இந்துமதி பாஸ்கர் மற்றும் ராஜு கோவிந்தராஜன் ஆகியோர் இணைந்து நிறுவியுள்ளனர்.
இந்நிறுவனத்தின் நேரான கத்தி வடிவம் கொண்ட மற்றும் சுழல் வடிவமைப்புள்ள காற்றாலைகள், பல திசைகளிலிருந்தும் வரும் சீரற்ற காற்றையும் பிடித்து ஆற்றலை உற்பத்தி செய்கின்றன. இதனால் குறைந்த அதிர்வுடனும் சத்தத்துடனும் இயங்குகின்றன. இந்த நிறுவனம், கடினமான நிலப்பரப்புகளுக்கு ஏற்றவாறு, காற்றாலையை நிறுவுவதற்கான ஏற்பாடுகள் மற்றும் தளவாட உதவிகளை வழங்குகிறது.
மேலும், தளத்திலேயே எளிதாக நிறுவுதல், மற்றும் உள்ளூர் விற்பனைக்குப் பிந்தைய சேவைகளை அளிக்கிறது. வழக்கமான ஆயத்தப் பொருட்களை ஒப்பிடும்போது, இவை அதிக ஆற்றலை உற்பத்தி செய்வதுடன், அதன் மொத்த இயக்கச் செலவையும் குறைக்கின்றன.
“மலை உச்சிகள் முதல் தீவுகள் வரை, எங்கள் காற்றாலைகள் இயற்கை காற்றை வாய்ப்பாக மாற்றுகின்றன,” என்று இந்துமதி கூறுகிறார்.
இந்த நிறுவனம், களத்தில் பயன்படுத்தத் தயாராக உள்ள காற்றாலைகளை உற்பத்தி செய்துள்ளது. ஐ.ஐ.டி. மெட்ராஸின் இன்குபேஷன் உதவியுடன் அதன் முன்மாதிரிச் சோதனைகளை வெற்றிகரமாக முடித்துள்ளது. மேலும், TNGSS கண்காட்சிகள் மற்றும் NIOT போன்ற நிறுவனங்களுடனான தொழில்நுட்ப ஆய்வுகள் மூலம் வணிக ரீதியிலான தொடர்புகளை உருவாக்கியுள்ளது.
பயோடெக் பட்டதாரிகள் வாழ்வில் வழிகாட்டும் Bversity
உயிரியல் அறிவியல் எனப்படும் லைஃப் சயின்ஸ் பட்டதாரிகள், பல்கலைக்கழகங்களில் இருந்து பயிற்சி பெற்றாலும், நவீன பயோ டெக் பணிகளுக்கு நடைமுறையில் தயாராகாமல் வெளியே வருகிறார்கள். இதனால், நிறுவனங்கள் புதிய ஊழியர்களுக்குப் பயிற்சி அளிக்க மாதக்கணக்கில் செலவிடுகின்றன. அதேசமயம், பட்டதாரிகள் தங்கள் திறமைக்கேற்ற பயனுள்ள வேலைகளைத் தேடச் சிரமப்படுகின்றனர். இந்த இடைவெளியைச் சரிசெய்ய, சென்னையைச் சேர்ந்த பிவர்சிட்டி என்ற நிறுவனம் செயல்படுகிறது. சுதர்சன் வரதராஜன், ராகுல் ஜகநாதன், சாய் கணேஷ் மற்றும் காட்வின் இம்மானுவேல் ஆகியோரால் 2021-ல் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம், தொழில்துறையுடன் இணைந்த ஹைபிரிட் கல்வி முறையை வழங்கி இந்தக் குறையை நிவர்த்தி செய்கிறது.
பிவர்சிட்டி-இன் பயிற்சித் திட்டங்கள் ஆன்லைன் கல்வியை நேரடி ஆய்வகப் பயிற்சி, வொர்க்சாப் மற்றும் தொழில்துறையுடன் இணைந்து செயல்படும் திட்டங்கள் ஆகியவற்றுடன் இணைக்கின்றன. இந்த நிறுவனத்தின் நியூரான் ஏஐ பிளாட்ஃபார்ம் என்பது, இந்தியாவில் உயிரியல் அறிவியலுக்காக உருவாக்கப்பட்ட, முதல் ஜெனெரேட்டிவ் செயற்கை நுண்ணறிவு கொண்ட தனிப்பட்ட கற்றல் தளமாகும். இது ஒவ்வொருவரின் தனிப்பட்ட திறமைகள், கற்கும் வேகம், மற்றும் தொழில் சார்ந்த இலக்குகளின் அடிப்படையில் கற்பதற்கான வழிகளை வடிவமைத்து வழங்குகிறது.
“எங்கள் இலக்கு மிகவும் எளிமையானது: அடுத்த தலைமுறையினருக்குத் தேவைப்படும் திறன்களைக் கொடுப்பது; வாழ்க்கையை மாற்றும் வாய்ப்புகளை உருவாக்குவது; மற்றும் உள்ளூரிலும், உலக அளவிலும் வளரக்கூடிய ஒரு தொழில் சூழலை உருவாக்குவது,” என்று உறுதியாக கூறுகிறார் இதன் நிறுவனர் சுதர்சன் வரதராஜன்.
இன்று பிவர்சிட்டி நிறுவனத்தில் மரபணுவியல், உயிரி தகவலியல் மற்றும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த உயிரி தொழில்நுட்பம் போன்ற துறைகளில் 200-க்கும் அதிகமான மாணவர்கள் மற்றும் தொழில் வல்லுநர்கள் தொழில்முறைப் பட்டயப் படிப்புகளை முடித்து வெளியேறுகின்றனர். 15-க்கும் மேற்பட்ட உயிர் அறிவியல் உலகளாவிய திறன் மையங்கள் மற்றும் உயிரி மருந்தியல் நிறுவனங்களுடனான கூட்டாண்மைகள், இவர்களின் படிப்புகள் உடனடியாக வேலைக்குத் தயாராக இருப்பதை உறுதி செய்கின்றன. '2024-ஆம் ஆண்டின் நம்பிக்கைக்குரிய ஸ்டார்ட்அப்' மற்றும் '2025-ஆம் ஆண்டின் சிறந்த உயர்கல்வி தளம்' போன்ற அங்கீகாரங்கள், சந்தையில் இவர்களுக்கான தேவையைக் காட்டுகிறது.
இந்நிறுவனம் 2027-ஆம் ஆண்டிற்குள் ஆசியா முழுவதும் 10,000-க்கும் மேற்பட்ட கற்பவர்களைச் சென்றடையும் நோக்குடன், அதன் நியூரான் AI மற்றும் ஹைபிரிட் கற்றல் திட்டங்களை விரிவாக்கி வருகிறது. இதோடு மட்டுமல்லாமல், நேரடி ஆராய்ச்சி மற்றும் தொழில் நிறுவனங்களுடனான கூட்டுப் பணிகளுக்காக, பிராந்திய அளவில் உயிர் அறிவியல் புத்தாக்க மையங்களையும் இந்நிறுவனம் தொடங்க உள்ளது.
StartupTN
TAMS, டெராலூமன், பிளக்ஸ்மார்ட், பாஸ்கரா மற்றும் பிவர்சிட்டி ஆகிய ஐந்து நிறுவனங்களுக்கும், ஸ்டார்ட்அப் தமிழ்நாட்டின் (StartupTN) நிதி உதவி, வழிகாட்டுதல் மற்றும் சந்தை வாய்ப்புகளுக்கான ஆதரவு ஆகியவை மிகவும் முக்கியமானவையாக இருந்துள்ளன. இந்த நிறுவனங்கள் பொறுமையாக முதலீடு தேவைப்படும் துறைகளைக் குறிக்கின்றன. இங்குதான் தொழில்நுட்ப வழிகாட்டுதல் மற்றும் சூழலமைப்புத் தொடர்புகள் போன்றவை அத்தியாவசியமானவையாக இருக்கும் துறைகளைப் பிரதிபலிக்கின்றன. அவை: சுற்றுச்சூழல் சீரமைப்பு (TAMS), உயர் தொழில்நுட்பத்தை வணிகமயமாக்குதல் (TeraLumen), உள்நாட்டு உற்பத்தி (Plugzmart), புதுப்பிக்கத்தக்க ஆற்றல் (Bhaskara), கல்விப் புத்தாக்கம் (Bversity) ஆகியவை ஆகும்.
தமிழ்நாடு அரசின் டான்சீட் திட்டம் என்பது ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் முயற்சிகளுக்கு மானிய அடிப்படையில் நிதியுதவி அளிக்கும் தமிழ்நாடு அரசின் திட்டம் ஆகும். பணமில்லை என்ற காரணத்தால் தொழில்முனைவோர் மனப்பான்மை முடங்கிவிடக் கூடாது என்பதற்காக புதுமைகளை கொண்டு வர அரசாங்கம் தரும் ஒரு ஆதரவு இது.
StartupTN-ன் டான்சீட் திட்டம் மூலம் ஒவ்வொரு நிறுவனமும் ரூ.10 லட்சம் நிதியுதவியைப் பெறுகின்றன. அதே நேரத்தில், பெண்கள் தலைமை வகிக்கும் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் மற்றும் கிராமப்புற, வேளாண் தொழில்நுட்பம் மற்றும் பசுமை தொழில்நுட்பத் துறைகளை சார்ந்த ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் ரூ.15 லட்சம் வரை நிதியுதவியைப் பெற முடியும். இந்த நிதி ஃபார்ச்சூன் 500 நிறுவனங்களின் கூட்டணி, சர்வதேச சந்தைகள் மற்றும் தொடர்ச்சியான முதலீடுகளுக்கு அணுகலை பெற உதவுகின்றன.
தேவை எதுவோ, அதை உருவாக்குதல்
இந்த ஐந்து ஸ்டார்ட்அப் நிறுவனங்களும் ஸ்டார்ட்அப் கதைகளில் அடிக்கடி மறைக்கப்படும் ஒரு உண்மையை நிரூபிக்கின்றன. அது நீண்ட காலம் நிலைத்து நிற்கும் வணிகங்கள் என்பவை, மக்கள், சமூகங்கள் மற்றும் தொழில்துறைகள் தினசரி எதிர்கொள்ளும் பிரச்சனைகளைத் தீர்ப்பதன் மூலமே உருவாகின்றன என்பதே.
பழங்குடியினர் தலைமையிலான வனச் சீரமைப்பு (TAMS) முதல், டெராஹெர்ட்ஸ் புற்றுநோய்க் கண்டறிதல் (TeraLumen), உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட மின்சார வாகனத்திற்கான சார்ஜர்கள் (Plugzmart), தொலைதூரப் பகுதிகளுக்கான சிறிய காற்றாலைகள் (Bhaskara) மற்றும் தொழில்துறைக்குப் பொருத்தமான உயிரித் தொழில்நுட்பக் கல்வி (Bversity) வரை தமிழ்நாட்டின் நிறுவனர்கள், தாக்கத்தை ஏற்படுத்துவதும், வளர்ச்சி அடையச் செய்வதும் ஒன்றிற்கொன்று எதிரான விசைகள் அல்ல என்பதை நிரூபிக்கிறார்கள். புதிய கண்டுபிடிப்பானது, சமூகங்கள், இயற்கைச் சூழல்கள் மற்றும் தொழில்களுக்கு உண்மையில் என்ன தேவை என்பதைப் புரிந்துகொள்வதில் இருந்து தொடங்கும்போது, தாக்கமும், வளர்ச்சியும் ஒன்றுக்கொன்று வலுப்படுத்தும் வியூகங்களாக மாறுகின்றன.
வாழ்வாதாரத்துக்கு துணையாக தற்சார்புக்கு வித்திடும் 4 தமிழக ஸ்டார்ட்-அப்கள்!
Edited by Induja Raghunathan