டிவிஎஸ் சப்ளை செயின்ஸ் சொல்யுஷன்ஸ் நிறுவனம் 2026-27 நிதியாண்டின் முதல் காலாண்டில் (Q1 FY27) வலுவான செயல்பாட்டை பதிவு செய்துள்ளது. நிறுவனத்தின் ஒருங்கிணைந்த வருவாய், கடந்த நிதியாண்டின் இதே காலாண்டுடன் ஒப்பிடுகையில், 28.7 சதவீதம் அதிகரித்துள்ளது.
மேலும், காலாண்டு அடிப்படையில் இதுவரை இல்லாத அளவுக்கு ரூ.543 கோடி மதிப்பிலான புதிய வர்த்தக ஒப்பந்தங்களை நிறுவனம் பெற்றுள்ளது. ரூ.7,500 கோடிக்கும் அதிகமான ஆர்டர் கையிருப்பு இருப்பதால், எதிர்கால வளர்ச்சிக்கு வலுவான வாய்ப்பு உள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
2026 ஜூன் 30ம் தேதியுடன் முடிவடைந்த முதல் காலாண்டில், TVS Supply Chain Solutions-ன் வருவாய் ரூ.3,335.2 கோடியாக உயர்ந்துள்ளது. 2025-26 நிதியாண்டின் இதே காலாண்டில் இது ரூ.2,592.3 கோடியாக இருந்தது.
நிறுவனத்தின் சரிசெய்யப்பட்ட EBITDA ரூ.173.3 கோடியிலிருந்து ரூ.232.2 கோடியாக உயர்ந்துள்ளது. இது 34 சதவீத வளர்ச்சியாகும். சரிசெய்யப்பட்ட PBT எனப்படும் வரிக்கு முந்தைய லாபம் ரூ.18.8 கோடியிலிருந்து ரூ.32.1 கோடியாக அதிகரித்து, 71 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.
இந்திய சந்தையில் நிறுவனத்தின் வருவாய் 43.9 சதவீதம் அதிகரித்து, ரூ.693.6 கோடியிலிருந்து ரூ.997.7 கோடியாக உயர்ந்துள்ளது. நிறுவனத்தின் ஒருங்கிணைந்த சப்ளை செயின்ஸ் சொல்யூஷன்ஸ் (Integrated Supply Chain Solutions-ISCS) பிரிவின் வருவாய் 21.9 சதவீதமும், குளோபல் ஃபார்வர்டிங் சொல்யூஷன்ஸ் (Global Forwarding Solutions-GFS) பிரிவின் வருவாய் அதிக சரக்கு அளவுகளின் காரணமாக 50.6 சதவீதமும் உயர்ந்துள்ளன.
Q1 FY27-ல் ரூ.543 கோடி மதிப்பிலான புதிய வர்த்தக வாய்ப்புகளை பெற்றிருப்பது நிறுவனத்தின் காலாண்டு சாதனையாகும். இதனுடன், ரூ.7,500 கோடிக்கும் அதிகமான ஆர்டர் கையிருப்பு இருப்பது எதிர்கால வளர்ச்சிக்கு வலுவான அடித்தளமாக அமைந்துள்ளதாக நிறுவனம் கூறியுள்ளது.
நிறுவனத்தின் அறிக்கையின்படி, இந்த காலாண்டில் பதிவான நிகர லாபம் (PAT) ₹22.5 கோடியாகும். கடந்த ஆண்டு இதே காலாண்டில் PAT ரூ.71.1 கோடியாக இருந்தது. எனினும், Q1 FY26-ல் ஒருமுறை கிடைத்த InVIT ஆதாயம் இதில் இடம்பெற்றிருந்தது. அந்த ஒரு முறை ஆதாயத்தை நீக்கிப் பார்த்தால், கடந்த ஆண்டு செயல்பாட்டு PAT ரூ.8.8 கோடியாக இருந்தது. இதனுடன் ஒப்பிடும்போது Q1 FY27-ல் செயல்பாட்டு PAT சுமார் 156 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது.
நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் விகாஸ் சத்தா கூறுகையில்,
"2026ல் உருவான வளர்ச்சி வேகத்தை தொடர்ந்து 2027-ஐ வலுவாக தொடங்கியுள்ளதாக தெரிவித்தார். ISCS பிரிவில் தொடரும் வளர்ச்சி, GFS பிரிவில் அதிகரித்த சரக்கு அளவுகள் மற்றும் மேம்பட்ட லாபத்தன்மை ஆகியவை காலாண்டு செயல்பாட்டுக்கு முக்கிய காரணிகளாக இருந்ததாக," அவர் கூறினார்.
ரூ.543 கோடி மதிப்பிலான சாதனை அளவிலான புதிய வர்த்தக ஒப்பந்தங்களும், ரூ.7,500 கோடிக்கும் அதிகமான ஆர்டர் கையிருப்பும் எதிர்கால வளர்ச்சிக்கு நல்ல வாய்ப்பை வழங்குவதாகவும், 2027-ல் நடுத்தர பதின்ம இலக்க வளர்ச்சியை (mid-teen growth) எட்டும் திறன் நிறுவனத்துக்கு இருப்பதாகவும், அவர் தெரிவித்தார்.
நிறுவனத்தின் உலகளாவிய தலைமை நிதி அதிகாரி ஆர். வைத்தியநாதன் கூறுகையில்,
"முதலாம் காலாண்டு செயல்பாடு வருவாயின் தரம் தொடர்ந்து மேம்பட்டு வருவதை வெளிப்படுத்துகிறது, என்றார். ISCS பிரிவு ஆரோக்கியமான லாப வரம்பை தொடர்ந்து பராமரித்த நிலையில், GFS பிரிவின் EBITDA லாப வரம்பு 2.1 சதவீதத்திலிருந்து 4.1 சதவீதமாக உயர்ந்துள்ளதாக தெரிவித்தார். செலவுக் கட்டுப்பாடு மற்றும் செயல்பாட்டு திறன் மேம்பாடு மூலம் லாப வரம்பை மேலும் அதிகரித்து, லாபகரமான வளர்ச்சியை தொடர நிறுவனம் கவனம் செலுத்தும்," என்றும் அவர் கூறினார்.
இதனிடையே, இந்திய தரநிலை நிறுவனம் டிவிஎஸ் சப்ளை செயின் சொல்யூஷன் நிறுவனத்தின் கடன் மதிப்பீட்டு கண்ணோட்டத்தை ‘Ind AA/Stable’ என்பதிலிருந்து ‘Ind AA/Positive’ என மாற்றியுள்ளது. நிறுவனத்தின் நிதி நிலை தொடர்ந்து மேம்பட்டு வருவதை இந்த மாற்றம் பிரதிபலிப்பதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
முக்கிய அம்சங்கள்
- Q1 FY27 ஒருங்கிணைந்த வருவாய்: ₹3,335.2 கோடி
- கடந்த ஆண்டு Q1 வருவாய்: ₹2,592.3 கோடி
- வருவாய் வளர்ச்சி: 28.7%
- சரிசெய்யப்பட்ட EBITDA: ₹232.2 கோடி
- சரிசெய்யப்பட்ட PBT: ₹32.1 கோடி
- இந்தியா வருவாய் வளர்ச்சி: 43.9%
- சாதனை புதிய வர்த்தக ஒப்பந்தங்கள்: ₹543 கோடி
- ஆர்டர் கையிருப்பு: ₹7,500 கோடிக்கு மேல்
- ISCS வருவாய் வளர்ச்சி: 21.9%
- GFS வருவாய் வளர்ச்சி: 50.6%
- சரிசெய்யப்பட்ட அடிப்படையில் செயல்பாட்டு PAT வளர்ச்சி: சுமார் 156%
- GFS EBITDA மார்ஜின்: 2.1%-ல் இருந்து 4.1% ஆக உயர்வு
- India Ratings கடன் கண்ணோட்டம்: Ind AA/Stable → Ind AA/Positive