2026-2027ம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டை, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நேற்று மக்களவையில் தாக்கல் செய்தார். சலுகைகள், முதலீடுகள் என கலவையாக தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த பட்ஜெட்டின் எதிரொலியாக, சில பொருட்கள் விலை உயர்வையும், மற்றும் சில வகைப் பொருட்கள் விலைக் குறைப்பையும் சந்திக்க உள்ளன.
தனிநபர் வருமான வரி விலக்கில் எந்தவித மாற்றமும் இந்தாண்டு பட்ஜெட்டில் இல்லையென்ற போதும், இந்த விலையேற்றம் மற்றும் விலைக் குறைப்பு, மக்களின் பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
இதோ அப்படியாக பட்ஜெட் 2026 மூலம் விலையேற்றம் மற்றும் விலைக் குறைப்பைச் சந்திக்கவுள்ள பொருட்களின் விபரம் பின்வருமாறு...
விலை குறையவுள்ள பொருட்கள் :
நீரிழிவு மற்றும் புற்றுநோய் உட்பட 17 வகையான மருந்துகள்
- இந்த மருந்துகளுக்கான அடிப்படைச் சுங்க வரியை அரசு நீக்கியுள்ளதன் மூலம், இந்திய சந்தையில் இந்த மருந்துகள் விலை மலிவாகும்.
- இது தவிர, 7 அரிய வகை நோய்களுக்கு சிகிச்சை அளிக்க, வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் மருந்துகள் மற்றும் சிறப்பு உணவுகள் மீதான வரியையும் அரசு நீக்கியுள்ளது.
கடல் உணவுகள்
- கடல் உணவு ஏற்றுமதிக்கான, வரி இல்லாத உள்ளீட்டு வரம்பானது 1%ல் இருந்து 3%மாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் கடல் உணவுகளின் விலை மலிவாகும்.
தோல் பொருட்கள்
- தோல், செயற்கை காலணிகள் மற்றும் ஜவுளி ஏற்றுமதியிலும் வரி இல்லாத உள்ளீடுகள் மற்றும் கால வரம்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. எனவே, இவற்றின் விலையும் சந்தையில் மலிவாக மாறும்.
மின்வாகன பேட்டரிகள்
- சோலார் பேனல்கள் தயாரிக்கப் பயன்படும் சோலார் கிளாஸிற்கான, மூலப்பொருள் சோடியம் ஆன்டிமோனேட் மீதான வரி நீக்கப்பட்டுள்ளது.
சூரிய ஒளி மின்கலன்கள்
- மின்சார வாகனங்கள், சோலார் பேனல்கள் மற்றும் பசுமை ஆற்றல் உற்பத்தியுடன் தொடர்புடைய சில உபகரணங்கள் மீதான வரியையும் அரசு குறைத்துள்ளது. இதனால் மேற்கூறிய துறைகளில் உற்பத்தி செலவு குறையக்கூடும். ஆனால், இதன் பலன்கள் முழுமையாக நுகர்வோரைச் சென்றடையுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
மைக்ரோவேவ் ஓவன்
- மைக்ரோவேவ் ஓவன்களின் சில முக்கியமான பாகங்கள் மீதான சுங்க வரி குறைக்கப்பட்டுள்ளதால், அதன் விலையும் குறையும்.
தனிப்பட்ட பயன்பாடுகளுக்காக இறக்குமதி செய்யப்படும் நுகர்வோர் மின்சாதன பொருட்கள்
- தனிப்பட்ட பயன்பாட்டிற்காக வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீதான சுங்க வரி 20%ல் இருந்து 10%மாகக் குறைக்கப்பட்டுள்ளது. இதனால் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மின்னணு பொருட்கள் மற்றும் பரிசுப் பொருட்களின் விலை முன்பைவிட மலிவாகும்.
லித்தியம்-அயன் பேட்டரி சேமிப்பு அமைப்புகளுக்கு சுங்கவரி விலக்கு
- 2035ம் ஆண்டு வரை அணுமின் திட்டங்களுக்காக இறக்குமதி செய்யப்படும் உபகரணங்களுக்கு சுங்க வரி விதிக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், லித்தியம்-அயன் பேட்டரி சேமிப்பு அமைப்புகளுடன் தொடர்புடைய பல உள்ளீடுகளுக்கும் சுங்க வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், ஸ்மார்ட் போன்கள், டேப்லெட்டுகள் மற்றும் விளையாட்டு உபகரணங்களின் விலையும் இனி வரும் நாட்களில் பெருமளவு குறையும்.
வெளிநாட்டு சுற்றுலா மற்றும் வெளிநாட்டுச் செலவுகளில் சலுகை
வெளிநாட்டுச் சுற்றுலாவிற்கான வரி 5%ல் இருந்து 2%மாக குறைக்கப்பட்டுல்ளது. அதேபோல், வெளிநாட்டில் படிப்போர் மற்றும் சிகிச்சை பெறுவோர்க்காக அனுப்பப்படும் பணத்திற்கான வரியும் 5%ல் இருந்து, 2%மாக குறைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் மக்களுக்கு செலவு குறையும்.
இந்த சலுகைகள் மற்றும் விலைக் குறைப்பு மூலம் சாதாரண நுகர்வோர், நோயாளிகள், முதலீட்டாளர்கள் மற்றும் தொழில்துறையினர் பெரும்பலன் அடைவார்கள்.
Image source: Shutterstock
விலை உயரும் பொருட்கள்
- சொகுசு மற்றும் ஆடம்பரப் பொருட்கள் இறக்குமதி மீதான சுங்கவரி அதிகரிக்கப்பட்டுள்ளதால், வெளிநாட்டு கைக்கடிகாரங்கள், சிகரெட், பான் மசாலா, மதுபானங்கள், நிலக்கரி, இரும்பு பொருட்கள், குறிப்பிட்ட மின்னணு பொருட்கள் மற்றும் இறக்குமதி செய்யப்படும் கார்களின் விலை கடுமையாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உயர்தர கைக்கடிகாரங்கள்
- வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் உயர்ந்த விலை கொண்ட பிரீமியம் பிராண்ட் கைக்கடிகாரங்களுக்கு விதிக்கப்படும் சுங்கவரி மற்றும் பிற வரிகள் அதிகரிக்கப்பட்டுள்ளதால், அவற்றிம் விலையும் உயர்ந்து விடும்.
வெளிநாட்டு மதுபானங்கள்
- வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஆல்கஹால் சார்ந்த பொருட்கள் மீது வரி அதிகரிக்கப்பட்டுள்ளதால், அவற்றின் விலை நேரடியாகவும், பார்களிலும் அதிகரிக்கக்கூடும்.
இறக்குமதி செய்யப்படும் காபி மெஷின்கள் மற்றும் மின்னணு பொருட்கள்
- வெளிநாட்டு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தயாரிக்கப்படும் காபி தயாரிக்கும் மெஷின்கள் மற்றும் சமையலறை மின்னணு பொருட்கள் மீதான இறக்குமதி வரி விதிப்புகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் அவற்றின் விலை உயரக்கூடும்.
குறிப்பாக உணவகங்களில் பயன்படுத்தப்படும் மேற்கூறிய பொருட்களின் விலை உயரும் என்பதால், உணவு பதார்த்தங்களின் விலையிலும் அது தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். இதேபோல், வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட அல்லது வெளிநாட்டு உதிரி பாகங்கள் இறக்குமதி செய்யப்பட்டு தயாரிக்கப்பட்ட டிவிகளின் விலையும் அதிகரிக்கலாம்.
இந்த விலை அதிகரிப்பு நுகர்வோரை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பொருளாதார ரீதியாக பாதிக்கக்கூடும்.
பங்குசந்தையையும் விட்டு வைக்காத பட்ஜெட்
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த இந்த பட்ஜெட்டானது பங்குசந்தையையும் விட்டு வைக்கவில்லை. பட்ஜெட் தாக்கலால் கடந்த சில நாட்களாகவே பங்குசந்தை பெரும் சரிவைச் சந்தித்து வருகிறது. இந்த சூழ்நிலையில், பட்ஜெட் எதிரொலியால், இனி பங்குச் சந்தையில் வர்த்தகம் செய்வது, முன்பை விடச் சற்று விலை உயர்ந்ததாக மாறும் எனக் கூறப்படுகிறது.
ஏனென்றால், வருங்கால (ஃபியூச்சர்ஸ்) வர்த்தகத்தில் செக்யூரிட்டி டிரான்சாக்ஷன் வரி (STT) 0.02%லிருந்து 0.05மாக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல், ஆப்ஷன்ஸ் பிரீமியம் மீதான STT 0.1%லிருந்து 0.15மாகவும், ஆப்ஷன் எக்சர்சைஸ் மீதான வரி 0.125%லிருந்து 0.15%மாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் ஃபியூச்சர்ஸ் மற்றும் ஆப்ஷன்ஸ் பிரிவில் வர்த்தகம் செய்வது இனி செலவு அதிகமானதாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதோடு, ஷேர் பைபேக் (Share Buyback) எனப்படும் நிறுவனங்களின் பங்குகளை திரும்ப பெறுவதில், ப்ரொமோட்டர்ஸ் (Promoters) வரி விதிப்பு முன்பைவிட கடுமையாக்கப்பட்டுள்ளது. இதனால், இனி அவர்கள் கேப்பிடல் கெயின்ஸ் வரியுடன் கூடுதலாக வரி செலுத்த வேண்டியதாக இருக்கும். இது அவர்களது லாபத்தை குறைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.