+

கவலை வேண்டாம் - இலவச யுபிஐ சேவை பயனர்களுக்கு தொடரும்: மத்திய அரசு

பொதுமக்கள் மற்றும் சிறு வணிகர்கள் தொடர்ந்து இலவசமாக யுபிஐ (UPI) சேவையைப் பயன்படுத்தலாம் என்று மத்திய அரசு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. பணப் பரிவர்த்தனை மற்றும் தீர்வு அமைப்புகள் சட்டம், 2007-ல் திருத்தம் செய்வதற்கான மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு க

பொதுமக்கள் மற்றும் சிறு வணிகர்கள் தொடர்ந்து இலவசமாக யுபிஐ (UPI) சேவையைப் பயன்படுத்தலாம் என்று மத்திய அரசு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. பணப் பரிவர்த்தனை மற்றும் தீர்வு அமைப்புகள் சட்டம், 2007-ல் திருத்தம் செய்வதற்கான மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் விதிக்கப்படுமா என்ற அச்சம் எழுந்த நிலையில் மத்திய அரசு இந்த விளக்கத்தை அளித்துள்ளது.

எனினும், எதிர்காலத்தில் கட்டணம் அறிமுகப்படுத்தப்பட்டால், குறிப்பிட்ட சில வணிகப் பரிவர்த்தனைகளுக்கு மட்டும் மிகக் குறைந்த அளவில் ‘மெர்ச்சன்ட் டிஸ்கவுண்ட் ரேட்’ (MDR) கட்டணம் விதிக்கப்படும் என்று நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

“குறிப்பிட்ட வரம்பைத் தாண்டும் குறைந்த எண்ணிக்கையிலான வணிகப் பரிவர்த்தனைகளுக்கு மட்டுமே இந்தக் கட்டணம் பொருந்தும். அதுவும் பெயரளவிலான கட்டணமாகவும், டெபிட் அல்லது கிரெடிட் கார்டுகளுக்கான MDR கட்டணத்தைவிட மிகவும் குறைவாகவும் இருக்கும்,” என்று நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கடந்த வியாழக்கிழமை மக்களவையில் பணப் பரிவர்த்தனை மற்றும் தீர்வு அமைப்புகள் சட்டம், 2007-ஐ திருத்துவதற்கான மசோதா நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம் யுபிஐ உள்ளிட்ட அறிவிக்கப்படும் மின்னணு பணப் பரிவர்த்தனை முறைகளுக்கு வங்கிகள் மற்றும் பிற சேவை வழங்குநர்கள் கட்டணம் வசூலிக்க மத்திய அரசால் அனுமதி வழங்க முடியும்.

"Taxation and Other Laws (Amendment) Bill, 2026' நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, பணப் பரிவர்த்தனை மற்றும் தீர்வு அமைப்புகள் சட்டத்தின் 10A பிரிவு திருத்தப்பட்ட பின்னர், MDR கட்டணம் விதிக்கப்பட வேண்டுமா என்பது குறித்து NPCI தலைமையிலான ‘UPI and Services Steering Committee’ முடிவு செய்யும்,” என்று நிதி அமைச்சகம் கூறியுள்ளது.

பணப் பரிவர்த்தனை மற்றும் தீர்வு அமைப்புகள் சட்டத்தில் செய்யப்பட்டுள்ள இந்தத் திருத்தம் குறித்து பல்வேறு விவாதங்கள் எழுந்துள்ளன. சாதாரண யுபிஐ பயனர்களிடம் கட்டணம் வசூலிப்பதற்கான நடவடிக்கையாக இந்தத் திருத்தம் தவறாகப் புரிந்துகொள்ளப் பட்டுள்ளதாகவும் அரசு தெரிவித்துள்ளது.

UPI

உண்மையில், யுபிஐ அமைப்பின் நீண்டகால நிலைத்தன்மை, தொழில்நுட்ப மேம்பாடு மற்றும் எதிர்கால அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் திறனை உறுதி செய்வதற்கான ஒரு வழிவகை மட்டுமே இந்தத் திருத்தம், என்று அரசு விளக்கியுள்ளது.

யுபிஐ பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை மிக வேகமாக அதிகரித்து வருவதால், இணையப் பாதுகாப்பு, மோசடி தடுப்பு மற்றும் தொழில்நுட்ப உள்கட்டமைப்பு ஆகியவற்றில் தொடர்ந்து கணிசமான முதலீடுகளும் மேம்பாடுகளும் தேவைப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மேலும், யுபிஐயின் சந்தை விரிவாக்கத்துக்கும் சுயநிதி அடிப்படையிலான செயல்பாட்டுக்கும் வருவாய் மாதிரி அவசியம் என்று அரசு கூறியுள்ளது. அதிக நிறுவனங்கள் இத்துறையில் விரிவடைவதற்கு போட்டியை அதிகரிக்கும் வகையில் நிலையான வருவாய் அமைப்பு தேவைப்படுவதாகவும், அடுத்தகட்ட வளர்ச்சிக்கு அரசு மானியங்களை மட்டுமே நம்பியிருப்பது சாத்தியமில்லை என்றும் தெரிவித்துள்ளது.

“யுபிஐ வலுவானதாகவும், அனைவரையும் உள்ளடக்கியதாகவும், எதிர்காலத் தேவைகளுக்கு ஏற்றதாகவும் இருப்பதை உறுதி செய்ய சமநிலையான கட்டமைப்பு அவசியம்,” என்று அரசு தெரிவித்துள்ளது.

யுபிஐ தொடர்பான கொள்கை மாற்றங்களுக்கு வெளிப்புற அழுத்தங்கள் காரணமாக இருக்கலாம் என்ற கருத்தையும் மத்திய அரசு நிராகரித்துள்ளது.

“வெளிப்புற அழுத்தம் காரணமாக கொள்கை மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படுவது ஆதாரமற்றது, முற்றிலும் தவறானது மற்றும் மக்களைத் தவறாக வழிநடத்துவதாகும்,” என்று நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

“வெளிப்புற அழுத்தம் காரணமாக இருந்திருந்தால், 2016-ல் யுபிஐயை அரசு அறிமுகப்படுத்தியிருக்காது. 2020 ஜனவரி முதல் பொதுமக்களுக்கும் வணிகர்களுக்கும் யுபிஐ சேவையை இலவசமாக வழங்கியிருக்காது. மேலும், உலகின் மிகப்பெரிய நிகழ்நேர பரஸ்பர இணக்கத்தன்மை கொண்ட பணப் பரிவர்த்தனை அமைப்பாக யுபிஐ வளர்வதற்கும் அரசு நடவடிக்கை எடுத்திருக்காது,” என்றும் அது கூறியுள்ளது.

இந்தத் திருத்தத்தை இந்தியாவின் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை உள்கட்டமைப்பை நீடித்த, போட்டித்தன்மை மிக்க, புதுமையான மற்றும் வேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் பொருளாதாரத்துக்கு ஏற்றதாக மாற்றும் அரசின் விரிவான நோக்கத்தின் ஒரு பகுதியாகவே பார்க்க வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

“யுபிஐ இந்தியாவின் சொந்த கண்டுபிடிப்பு. பொதுமக்களுக்கு யுபிஐ தொடர்ந்து இலவசமாக இருப்பதை உறுதி செய்வதுடன், பல ஆண்டுகளுக்கு அதன் நிலைத்தன்மையை உறுதி செய்வதில் அரசு தொடர்ந்து உறுதியாக உள்ளது,” என்று நிதி அமைச்சகம் கூறியுள்ளது.

இந்தியாவின் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை வளர்ச்சியின் அடுத்த கட்டத்தை எட்டும் நிலையில் இருப்பதாகவும் அரசு தெரிவித்துள்ளது. குறிப்பாக கிராமப்புறங்கள் மற்றும் நகர்ப்புறங்களுக்கு அருகிலுள்ள பகுதிகளில் யுபிஐ சேவையை மேலும் விரிவுபடுத்தவும், சர்வதேச அளவில் போட்டித்தன்மையைத் தக்கவைக்கவும், யுபிஐ அமைப்பு சுயநிலைத்தன்மையுடனும் அனைவருக்கும் ஏற்ற குறைந்த செலவிலும் செயல்பட வேண்டும் என்று கூறியுள்ளது.

யுபிஐ பாதுகாப்பான, மலிவான, அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட பணப் பரிவர்த்தனை அமைப்பாக தொடர்ந்து வளர்வதை உறுதி செய்யும் எதிர்கால நோக்குடைய நடவடிக்கையாக பணப் பரிவர்த்தனை மற்றும் தீர்வு அமைப்புகள் சட்டத் திருத்தம் பார்க்கப்பட வேண்டும் என்றும் அரசு தெரிவித்துள்ளது.

2016-17-ல் தொடங்கப்பட்ட யுபிஐ, இந்தியாவின் டிஜிட்டல் பொருளாதாரத்தை உலகின் மிகப்பெரிய மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை அமைப்புகளில் ஒன்றாக மாற்றியுள்ளது. நிகழ்நேர பணப் பரிவர்த்தனையில் மேற்கொள்ளப்பட்ட ஒரு புதிய முயற்சியாகத் தொடங்கிய யுபிஐ, தற்போது உலக நாடுகளுக்கு முன்னுதாரணமாக மாறியுள்ளது.

2026 ஜூலை மாதத்தில் மட்டும் யுபிஐ மூலம் 2,366 கோடி பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன் மொத்த மதிப்பு ரூ.29.9 லட்சம் கோடியாகும். தற்போது 11 வெளிநாடுகளிலும் யுபிஐ சேவை செயல்பாட்டில் உள்ளது. மேலும், பல நாடுகள் யுபிஐ சேவையைப் பயன்படுத்த ஆர்வம் தெரிவித்துள்ளன.

“யுபிஐ என்பது இந்தியர்களால், இந்தியர்களுக்காக உருவாக்கப்பட்ட தேசிய சாதனை. கடந்த பத்தாண்டுகளாக அரசு இதனை ஊக்குவித்து, நிதியளித்து, வளர்த்து வந்துள்ளது. இனியும் தொடர்ந்து அவ்வாறே செயல்படும்,” என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

யுபிஐ தொடர்பாக சமூக வலைதளங்களில் பரவும் உறுதிப்படுத்தப்படாத தகவல்களை நம்பவோ, பகிரவோ வேண்டாம் என்றும், மத்திய நிதி அமைச்சகம், இந்திய ரிசர்வ் வங்கி மற்றும் NPCI ஆகியவற்றின் அதிகாரப்பூர்வ தகவல்களை மட்டுமே பொதுமக்கள் நம்ப வேண்டும் என்றும் அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

facebook twitter