+

குடும்பச் சூழலால் அன்று மாடு மேய்த்தவர் இன்று மாவட்ட ஆட்சியர்: வன்மதி ஐஏஎஸ் வெற்றிக் கதை!

டிரைவரின் மகளாகப் பிறந்து, குடும்பச் சூழலால் ஆடு, மாடுகளை மேய்த்தவரான ஈரோட்டைச் சேர்ந்த வான்மதி இன்று மகாராஷ்டிர மாநிலத்தில் மாவட்ட ஆட்சியராக பணிபுரிந்து வருகிறார்.

பள்ளி - கல்லூரி பருவத்தில் என்னதான் பெண் பிள்ளைகளும் ஆண்களுக்கு இணையாக எதிர்காலத்தைப் பற்றிய கனவுகள் கண்டாலும், எல்லோருக்கும் அது சாத்தியப்பட்டு விடுவதில்லை. காரணம் திருமணம், குழந்தைப்பேறு என பெரும்பாலானவர்கள் தங்களது வட்டத்தை சுருக்கிக் கொள்கின்றனர்.

சமீபகாலமாக இந்த இலக்கணங்களை உடைத்து, புதிய சாதனைகளைப் படைத்து வருகின்றனர் பெண்கள்.

காதலர் தந்த ஊக்கத்தாலும், வழிகாட்டுதலாலும், தன்னம்பிக்கையுடன் படித்து, தனது நான்காவது முயற்சியில் யுபிஎஸ்சி தேர்வில் ஜெயித்துக் காட்டியுள்ளார் ஈரோட்டைச் சேர்ந்த வன்மதி.

ஈரோடு அருகேயுள்ள சத்தியமங்கலம் பகுதியில் டிரைவரின் மகளாக நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தவரான வன்மதி, ஓய்வு நேரங்களில் ஆடு, மாடுகளை மேய்த்துக்கொண்டே அரசு பள்ளியில் படித்து, இன்று அனைவரும் வியக்கும் வண்ணம் கலெக்டராக உயர்ந்திருக்கிறார்.

இவரது இந்த வெற்றிக்கு அவரது குடும்பத்தினர், குறிப்பாக அவரது கணவர் உறுதுணையாக இருந்ததுள்ளார். தனது லட்சியத்தில் இருந்து தடுமாறி விடாமல், விடாமுயற்சியுடன் படித்து, கடந்த 2015-ம் ஆண்டு யுபிஎஸ்சி தேர்வில் 152-ம் இடம் பிடித்துள்ளார் வன்மதி. தன்னால் சாதிக்க முடியாத ஐஏஎஸ் கனவை தன் மனைவி மூலம் சாதித்துக் காட்டியுள்ளார் அவரது கணவரான சந்திரமோகன்.

தற்போது மகாராஷ்டிரா மாநிலம் வார்தாவின் மாவட்ட ஆட்சியராக இருக்கும் இவரது கதை, பொருளாதார தடை, அரசு பள்ளியில் படிப்பு, திருமணம் என பல்வேறு காரணங்களால் ஐஏஎஸ் கனவு நனவாகுமா என்ற சந்தேகத்தில் இருப்பவர்களுக்கு நிச்சயம் உத்வேகத்தையும், தன்னம்பிக்கையையும் கொடுக்கும் என்பதில் சந்தேகமேயில்லை.

Vanmathi IAS

பள்ளியில் உருவான ஐஏஎஸ் கனவு

ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலத்தில் பிறந்தவர்தான் வன்மதி. அவரது தந்தை ஆட்டோ ஓட்டுநர் என்பதால் போதிய வருமானம் இல்லாமல் அவரது குடும்பம் பொருளாதார ரீதியாக பல்வேறு சவால்களைச் சந்தித்து வந்தது. இதனால் வன்மதி சிறுமியாக இருந்தபோதே, பல்வேறு குடும்பக் கடமைகளை சுமக்க வேண்டியதாயிற்று.

பள்ளி முடிந்து வந்து மற்ற குழந்தைகள் விளையாடச் சென்றபோது, வன்மதியோ வீட்டு வேலைகளை முடித்து விட்டு, எருமை மாடுகளை மேய்க்கச் சென்று விடுவாராம்.

கிராமங்களில் இருக்கும் முக்கிய அழுத்தங்களில் ஒன்று பெண் குழந்தைகளுக்கு விரைவாகத் திருமணம் செய்து வைத்து விடுவது. வன்மதியும், அவரது பெற்றோரும் இந்த நிர்பந்தத்தில் இருந்து தப்பவில்லை. ஆனால் அவர்களது பேச்சுகளை எல்லாம் புறந்தள்ளி விட்டு, வன்மதி அவரது குடும்பத்தாரின் உறுதுணையோடு மேற்படிப்பு படிக்கச் சென்றார். இளங்கலை முடித்து, கணினி முதுகலை இறுதியில் தனது சிவில் சர்வீஸ் தேர்வுக்கான பயணத்தை ஆரம்பித்துள்ளார் வன்மதி.

Vanmathi IAS

ஐஏஎஸ் கனவு வன்மதிக்குள் வந்த கதை சுவாரஸ்யமானது. வன்மதி சிறுமியாக இருந்தபோது, அவரது கிராமத்திற்கு ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் வந்துள்ளார். அப்போது அவரது மிடுக்கான பாவனைகளையும், அதிகாரப் பலத்தையும் பார்த்து வியந்துபோன வன்மதி, தானும் எதிர்காலத்தில் இதே போன்று கலெக்டராக வேண்டும் என முடிவெடுத்துள்ளார். அப்போது உதித்த எண்ணத்தைத்தான், உத்வேகமாகக் கொண்டு, விடாமுயற்சியுடன் படித்து இன்று நிஜமாக்கியிருக்கிறார் வன்மதி.

ஆனால் அவர் நினைத்தது போல் யுபிஎஸ்சி தேர்வுப் பயணம் அவ்வளவு எளிதாக இருக்கவில்லை.

காதல் தந்த ஊக்கம்

சிவில் சர்வீஸ் தேர்வுக்காக சென்னையில் சங்கர் ஐஏஎஸ் அகாடமியில் சேர்ந்துள்ளார் வன்மதி. அங்குதான் சந்திரமோகனை அவர் சந்தித்துள்ளார். ஏற்கெனவே ஐந்து முறை தேர்வெழுதி தோல்வி கண்ட அவருடன் உண்டான நட்பு, நாளடைவில் காதலாக மாறியுள்ளது. ஏழு முறை மட்டுமே சிவில் சர்வீஸ் எழுத முடியும் என அப்போதிருந்த விதிமுறைகளின்படி, சந்திரமோகன் முயற்சித்துப் பார்க்க அவரால் ஏழு முறையும் தேர்ச்சி பெற இயலவில்லை.

முதல் முயற்சியிலேயே நேர்முகத் தேர்வு வரை சென்றபோதும், வன்மதியாலும் அதில் தேர்ச்சி பெற இயலவில்லை.

இதற்கிடையே தன்னைப் பொருளாதார ரீதியாக தங்களை நிலைநிறுத்திக் கொள்ள, இருவரும் வேலைக்கு செல்ல வேண்டிய கட்டாயம். எனவே வங்கித் தேர்வு எழுதி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் அசிஸ்டென்ட் மேனேஜராக வேலை பார்த்துக் கொண்டே, தனது கலெக்டர் கனவுக்கான வேலைகளை அவர் பார்க்கத் தொடங்கினார் வன்மதி. சந்திரமோகனுக்கும் வங்கிப் பணி கிடைக்க, அவரும் பணியில் சேர்ந்தார்.

Vanmathi IAS

கணவர் சந்திரமோகன் மற்றும் மகனுடன் வன்மதி ஐஏஎஸ்

தேசிய அளவில் 152-ம் இடம்

வன்மதிக்கு அடுத்த இரண்டு முயற்சிகளும் தோல்வியிலேயே முடிய, மனம் தளராமல் மீண்டும் அடிமட்டத்தில் இருந்து தனது முயற்சிகளைத் தொடங்கினார். ஒரு வழியாக நான்காவது முயற்சியில், கடந்த 2015-ம் ஆண்டு அவர் யுபிஎஸ்சி தேர்வில் தேசிய அளவில் 152-ம் இடம் பெற்று தேர்வானார்.

தன்னால் சாதிக்க முடியாத உயரத்தை தன் காதலி அடைந்ததைப் பார்த்து, அதிக மகிழ்ச்சி அடைந்துள்ளார் சந்திரமோகன். இருவீட்டாரின் சம்மதத்துடன் ஒரு வருட போராட்டத்திற்குப் பிறகு, இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

வன்மதிக்கு மகாராஷ்டிரா கேடரில் பணி அமைய, தன் வங்கிப் பணியை அங்கே மாற்றிக் கொண்டு சந்திரமோகனும் அங்கே சென்றுள்ளார். பிறகு வங்கிப் பணியைவிட ஐஏஎஸ் அகாடமியில் வேலை பார்ப்பதே தனக்கு மனநிறைவைத் தரும் என்பதை உணர்ந்த அவர், தனது அரசுப் பணியை ராஜினாமா செய்துவிட்டு, சென்னைக்குத் திரும்பியுள்ளார். இந்தத் தம்பதிக்கு தற்போது ஆண் குழந்தை ஒன்று உள்ளது.

Vanmathi IAS

ஐஏஎஸ் அதிகாரியாக வன்மதியின் பணி

ஐஏஎஸ் பணியில் சேர்ந்ததில் இருந்து, மகாராஷ்டிராவின் நந்துர்பார், துலே, மும்பை மற்றும் வார்தா உள்ளிட்ட பல்வேறு இடங்களில், பல முக்கிய நிர்வாகப் பொறுப்புகளை வன்மதி வகித்துள்ளார். தற்போது மகாராஷ்டிரா மாநிலம் வர்தா (Wardhar)ல் மாவட்ட ஆட்சியராக சிறப்பான முறையில் பணியாற்றி வருகிறார்.

  • பழங்குடியினர் நலன்
  • ஊரக வளர்ச்சி
  • கல்வி
  • சுகாதாரம்
  • நீர் பாதுகாப்பு
  • டிஜிட்டல் நிர்வாகம்

தனது பணிக்காலங்களில், அவர் மேற்கூறிய துறைகளில் நிர்வாகத்தை மேம்படுத்துவதிலும் பொது நலனை உறுதி செய்வதிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

டைம்ஸ் ஆப் இந்தியா தகவலின்படி, அவரது டிஜிட்டல் திட்டக் கண்காணிப்பு அமைப்பு, வெளிப்படைத்தன்மையை மேம்படுத்தியதற்காகவும், வளர்ச்சிப் பணிகள் மீண்டும் ஒரே மாதிரியாக மேற்கொள்ளப்படுவதைத் தடுத்ததற்காகவும் மகாராஷ்டிர அரசால் பாராட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது.


Edited by Induja Raghunathan

facebook twitter