‘22 வயதில் இளம் பில்லியனர்’ - மார்க் ஜக்கர்பர்கின் Forbes சாதனையை முறியடித்த இந்திய வம்சாவளி இளைஞர்!

12:22 PM Mar 20, 2026 | muthu kumar

செயற்கை நுண்ணறிவு (AI) துறையின் வேகமான வளர்ச்சியின்போது, ஸ்டார்ட்அப் உலகில் புதிய வரலாறு உருவாகியுள்ளது. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 22 வயதான தொழில் முனைவோர் சூர்யா மிதா உலகின் இளைய ‘சுயமாக உருவான பில்லியனர்’ ஆக உருவெடுத்துள்ளார்.

Forbes பட்டியலில் சூர்யா

சர்வதேச வணிக இதழான Forbes வெளியிட்ட உலக பில்லியனர்கள் பட்டியலில் இடம்பிடித்ததன் மூலம், சூர்யா மிதா இந்த சாதனையை எட்டியுள்ளார். அவரது சொத்து மதிப்பு சுமார் $2.2 பில்லியன் (₹18,000 கோடி) என மதிப்பிடப்பட்டுள்ளது.

மார்க் ஜக்கர்பர்க் சாதனைக்கு முற்றுப்புள்ளி

முன்னதாக மெட்டாவின் மார்க் ஜக்கர்பர்க், 23 வயதில் பில்லியனராகி சாதனை படைத்திருந்தார். தற்போது 22 வயதிலேயே அந்த சாதனையை முறியடித்துள்ள சூரியா மிதா, உலகின் இளைய பில்லியனராக புதிய வரலாறு படைத்துள்ளார்.

Mercor: AI மூலம் வேலைவாய்ப்பு புரட்சி

சூரியா மிதா இணைந்து நிறுவிய Mercor என்பது AI அடிப்படையிலான வேலைவாய்ப்பு தளம் ஆகும். இந்த தளம் நிறுவனங்களுக்கு தகுதியான பணியாளர்களை தானியங்கி முறையில் தேர்வு செய்ய உதவுகிறது.

விண்ணப்பதாரர்களை AI அவதார் மூலம் நேர்காணல், திறன், அனுபவம் மற்றும் பதில்களை ஆய்வு செய்கிறது. மேலும், வேகமான மற்றும் துல்லியமான தேர்வு செயல்முறையும் சில Silicon Valley தொழில்நுட்ப நிறுவனங்களும் இந்த தளத்தை பயன்படுத்தி வருகின்றன, என்பதும் இதன் சிறப்பம்சங்களாகும்.

கடந்த ஆண்டே Mercor நிறுவனம் சுமார் $10 பில்லியன் (₹83,000 கோடி) மதிப்பீட்டை எட்டியது. AI துறையில் அதிகரிக்கும் தேவை காரணமாக, இந்த நிறுவனத்தின் வளர்ச்சி வேகம் அதிகரித்துள்ளது.

Mercor இணை நிறுவனர்களுடன் சூர்யா மிதா

சூரியா மிதா அமெரிக்காவின் சான் ஒசே நகரில் பிறந்தவர். அவரது பெற்றோர் டெல்லியைச் சேர்ந்தவர்கள். அவர் பள்ளிக் காலத்தில் தேசிய அளவிலான விவாத சாம்பியனாக இருந்தார். பின்னர், ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழகத்தில் வெளிநாட்டு கல்வியைத் தொடர்ந்தார். இந்த நிறுவனத்தை அவர் ப்ரெண்டென் ஃபுட்டி மற்றும் ஆதர்ஷ் ஹயர்மாத் ஆகியோருடன் இணைந்து தொடங்கினார்.

AI, டேட்டா சயின்ஸ் மற்றும் தானியக்க துறைகள் உலக தொழில்நுட்பத்தை மாற்றி அமைத்து வருகின்றன. இந்த துறைகளில் முதலீடு செய்து முன்னோக்கி செல்லும் இளைஞர்கள் விரைவில் பெரும் வெற்றிகளைப் பெறுகின்றனர்.

சூரியா மிதா-வின் வெற்றி, புதிய தலைமுறை தொழில் முனைவோரின் திறனை பிரதிபலிக்கிறது. புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி உலகளாவிய தாக்கத்தை உருவாக்கும் இளம் தலைமுறையின் எழுச்சிக்கு இது ஒரு முக்கிய எடுத்துக்காட்டு.