7,000 கார்கள்; தங்க விமானம்; சொத்து மதிப்பு 30 மில்லியன் டாலர் - உலகை வியக்கும் புருனே நாடும், அதன் சுல்தானும்!

06:33 PM May 05, 2025 | jayashree shree

600 ரோல்ஸ் ராய்ஸ் கார்கள் உட்பட 7,000 லக்சரி கார்கள், தகதகவென தங்க முலாம் பூசப்பட்ட விமானம், கின்னஸில் இடம்பெற்ற உலகின் மிகப்பெரிய அரண்மனை, ஹேர்கட்டிற்கு ரூ. 18 லட்சம் செலவு என புருனே நாட்டின் சுல்தானின் சொத்தும், லைஃப்ஸ்டைலும் கிருக்கிருவென தலைசுற்ற வைக்கினறன.

யாரிந்த சுல்தான்? எங்கே உள்ளது புருனே நாடு?

உண்மை என்னவெனில், ஆசிய கண்டத்தில் புருனே என்றொரு நாடு இருப்பதே பலருக்கு தெரியாது. வெறும், 4,63,000 மக்கள் வசிக்கும் ஒரு சிறிய நாடான புருனேவின் மொத்த பரப்பளவே 5,765 சதுர கிலோ மீட்டர் தான். சென்னையை விட சிறியது.

பெரும்பாலும் முஸ்லிம் மக்கள்தொகை கொண்ட இந்த நாடு, மதுபானம், நடனம், சூதாட்டம் ஆகியவற்றை தடை செய்துள்ளது. பெட்ரோல் மற்றும் இயற்கை எரிவாயு மூலம் நாட்டில் செல்வம் கொழித்து கிடக்கிறது. நாட்டின் தனிநபர் வருமானமே அதிகம்தான்.

அந்நாட்டு சுல்தானின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? 30 மில்லியன் டாலர்... மறைந்த இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்துக்குப் பிறகு இரண்டாவதாக நீண்ட காலம் ஆட்சி செய்யும் சுல்தானின் பெயர் ஹசனல் போல்கியா.

யார் இந்த ஹசனல் போல்கியா?

1946ம் ஆண்டு ஜூலை 15ம் தேதி ஹசனல் போல்கியா புருனேவில் பிறந்தார். கோலாலம்பூரில் உள்ள விக்டோரியா நிறுவனத்தில் உயர்நிலைப் பள்ளிக் கல்வியை முடித்த பிறகு, 1967ம் ஆண்டு இங்கிலாந்தில் உள்ள ராயல் மிலிட்டரி அகாடமி சாண்ட்ஹர்ஸ்டில் பட்டம் பெற்றார்.

1961ம் ஆண்டு அவருடைய 15 வயதில் பட்டத்து இளவரசராக நியமிக்கப்பட்டார். ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு அவரது தந்தை சுல்தான் ஹாஜி உமர் அலி சைஃபுதீன் பதவி விலகினார். அந்த நேரத்தில், புருனே நாடு பிரிட்டிஷர்களின் கட்டுபாட்டில் இருந்தது. 95 ஆண்டுகளாக புருனேயை கட்டுபாட்டில் வைத்திருந்த பிரிட்டிஷ், 1984ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதியன்று முறையாக அங்கிருந்து வெளியேறியது.

1968ம் ஆண்டு ஆகஸ்ட் 1ம் தேதி, புருனேவின் 29வது சுல்தானாக ஹாஜி ஹசனல் போல்கியா முடிசூடினார். அவர் பொறுப்பேற்ற பிறகு, நாட்டில் ஒரு பூர்வீக அதிகாரத்துவத்தை உருவாக்கத் தொடங்கினார், ஊழலை முறியடித்தார் மற்றும் குடிமக்களுடன் தொடர்புகொள்வதற்கும் தன்னை ஆட்சியாளராக உயர்த்துவதற்கும் நாடு முழுவதும் அடிக்கடி பயணங்களை மேற்கொண்டார்.

மேலும், அவர் ஆட்சி செய்ய தொடங்கிய பின், நாட்டை ASEAN மற்றும் UN இன் ஒரு பகுதியாக கொண்டு வந்து பல வளர்ச்சி மைல்கற்களை அடைந்தார். அவரது ஆட்சியின் கீழ், ​​புருனே அதன் பரந்த எண்ணெய் வளத்தின் அடிப்படையில் உலகின் பணக்கார நாடுகளில் ஒன்றாக அதன் அந்தஸ்தை உறுதிப்படுத்தியது. மன்னராட்சியின் கீழ் செயல்படும் புருனேவின் சுல்தானான இவரே அந்நாட்டின் பிரதமர், பாதுகாப்பு அமைச்சர், நிதி அமைச்சர் மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சர் என ஆல் இன் ஆல் ஆக வலம் வருகிறார்.

சுல்தானுக்கு மூன்று மனைவிகள். அவருடைய முதல் மனைவியின் பெயர் ராஜா இஸ்தேரி பெங்கிரான் அனக் ஹாஜா சலேஹா. அவருக்கு ஐந்து மகன்கள் மற்றும் ஏழு மகள்கள் உள்ளனர் என்று புருனே தாருஸ்ஸலாம் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இவையனைத்திற்கும் மேலாக, சுல்தான் அவரது பணக்கார வாழ்க்கை முறை மற்றும் மிகுந்த ஆடம்பரமான உடைமைகளுக்கு மிகவும் பிரபலமானவர்.

கின்னஸில் இடம்பெற்ற சுல்தானின் பேலஸ்!

சுல்தானின் லைஃப்ஸ்டைல் பல தசாப்தங்களாகக் கவர்ந்து வருகிறது. உலகிலேயே மிகப்பெரிய அரண்மனை என்று கின்னஸ் புத்தகத்திலே இடம்பெற்ற பேலஸில் தான் சுல்தான் வசித்து வருகிறார். இந்த அரண்மனையின் பெயர் இஸ்தானா நுாருல் இமான். 1984ம் ஆண்டு பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து நாடு சுதந்திரம் அடைந்ததை நினைவுகூரும் வகையில் கட்டப்பட்டது.

2 மில்லியன் சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 1,800 ரூம்கள், 5 நீச்சல் குளங்கள், 257 பாத்ரூம், 110 கேரேஜ், ஒரே நேரத்தில் 5,000பேர் அமரும் வசதி கொண்ட ஹால் என பேலஸில் உள்ள வசதிகள் வாயை பிளக்க வைக்கின்றன. இது தவிர, அரண்மனையின் மேல்புறத்திலுள்ள டோம் எனப்படும் குவிமாடம் 22 கேரட் தங்கத்தால் கோட்டிங் செய்யப்பட்டு ஜொலிக்கிறது. கூடுதலாக, ஏர் கண்டிஷனிங் உடன் கூடிய 200 குதிரை லாயங்கள் உள்ளன.

வசிப்பிடத்தை தாண்டி, அவர் பயணிப்பதற்காக சொந்தமாக ஏகப்பட்ட விமானங்களை வைத்துள்ளார். அதில் ரூ.4,300 கோடி மதிப்பிலான போயிங்-747 விமானத்தை பறக்கும் பேலஸ் என்றே அழைக்கின்றனர். தகதகவென தங்க முலாம் பூசி, இன்டீரியர் வொர்க் செய்யப்பட்ட விமானம் உலகின் ஆடம்பரமான விமானமாகும். சுவாரஸ்யமாக, 120 மில்லியன் டாலர் மதிப்புள்ள தங்க வாஷ்பேசினையும் அதில் அமைத்துள்ளார். தவிர, போயிங் 767-200 (V8-MHB), போயிங் 787-8 (V8-OAS), கம்ஃபேர்ட்காக வடிவமைக்கப்பட்ட நவீன மற்றும் விசாலமான ஜெட், சிகோர்ஸ்கி S70 மற்றும் S76 தவிர, குறுகிய பயணங்கள் மற்றும் உள்ளூர் பயணங்களுக்காக ஹெலிகாப்டர்கள் என அவரது விமானங்கள் வரிசைக்கட்டி நிற்கின்றன. இதில் மற்றொரு சிறப்பம்சம் சுல்தான் முறைப்படி பயிற்சி பெற்ற பைலட் ஆவார்.

சுல்தான் பயங்கர கார் லவ்வர். எந்த அளவுக்கு எனில், மார்க்கெட்டில் புதிதாக எந்த கார் லான்ச் ஆகினாலும், அது உடனே சுல்தானின் வீட்டு வாசலுக்கு வந்துவிடும். என்டிடிவி-ன் கூற்றுப்படி,

அவரது கார் கலெக்‌ஷனின் மொத்த மதிப்பு 5 மில்லியன் டாலராகும். பென்ட்லி டாமினேட்டர் எஸ்யூவி, ஹாரிசன் ப்ளூ பெயிண்ட் மற்றும் எக்ஸ் 88 பவர் பேக்கேஜ் கொண்ட போர்ஷே 911, மற்றும் 24 காரட் தங்க முலாம் பூசப்பட்ட ரோல்ஸ் ராய்ஸ் சில்வர் ஸ்பர் II. என 7000க்கும் மேற்பட்ட ஆடம்பர வாகனங்கள் உள்ளன. அவற்றில் 600 ரோல்ஸ் ராய்ஸ் கார்கள்.

ஓபன் ரூஃப் உடன் தங்கத்தால் ஆடம்பரமாக வடிவமைக்கப்பட்ட குடையுடன் கூடிய ரோல்ஸ் ராய்ஸும் அவரது கார் கலெக்ஷனில் ஒன்று. அதிக ரோல்ஸ் கார் கலெக்‌ஷனை கொண்டவர் என்ற கின்னஸ் உலக சாதனையையும் பெற்றுள்ளார்.

ஹேர்கட்டுக்கு ரூ.18 லட்சம், ப்ரைவேட் மிருகச்சாலை

சுல்தானின் ஆடம்பர வாழ்வினை பறைச்சாற்றும் விதமாக அவரது 50வது பிறந்தநாள் கொண்டாட்டம், உலகத்தாரை வியக்க செய்தது. 2 வாரங்களாக நடந்த பர்த்டே பார்டிக்கு பிரிட்டனின் அப்போதைய இளவரசர் சார்லஸ் உட்பட ஏக்கச்சக்க செலிபிரிட்டிகள் கலந்து கொண்டனர். பிறந்தநாள் விழாவில் 'கிங் ஆஃப் பாப்' ஆன மைக்கேல் ஜாக்சன் நிகழ்ச்சியை நடத்த அவருக்கு 17 மில்லியன் டாலர்கள் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதைவிட ஸ்பெஷல் விஷயம் ஒன்னு இருக்கு. அதாவது ஒருமுறை ஹேர்கட் செய்வதற்கு ரூ. 18 லட்சம் செலவு செய்கிறார். அடேங்கப்பா, அப்படின்னா ஹேர் ஸ்டைல்- ஆ இருக்கும்னு யோசிக்க வேண்டாம். சுல்தானின் பேவரைட் ஹேர் ஸ்டைலிஸ்ட் லண்டனின் டோர்செஸ்டர் ஹோட்டலில் பணிபுரிகிறார். ஹேர்கட் செய்ய அவரை லண்டன் டூ புருனேவுக்கு ஃபர்ஸ்ட் கிளாஸ் ப்ளைட்டில் வரவைத்து, 5 ஸ்டார் ஹோட்டலில் ரூம் போட்டு கொடுத்து, அத்துடன் காசு கொடுத்து முடி வெட்டுகிறார். இப்படியாக அவர், ஒரு முறை ஹேர்கட் செய்வதற்கு ரூ.18 லட்சம் செலவாகிறது.

78 வயதான அவர் ஒரு தனியார் மிருகக்காட்சிசாலையையும் வைத்திருக்கிறார். ஆம், அதில் 30 வங்காளப் புலிகள் மற்றும் ஃபால்கன்கள், ஃபிளமிங்கோக்கள் மற்றும் காகடூக்கள் போன்ற பல்வேறு வெளிநாட்டுப் பறவைகள் உள்ளன. அவற்றை எந்நேரமும் என்டர்டெயின் செய்வதற்காக அங்கு மினியேச்சர் சைக்கிள்கள், பந்துகள், பாடல் என ரகளையாக வைத்துள்ளனர்.

பட உதவி: GQ India

நாட்டின் சுல்தான் அவர்களது மக்களையும் ஹாப்பியாக வைத்துள்ளார். புருனேயின் குடிமக்கள் தனிநபர் வரி செலுத்துவதில்லை. அரசே மக்களுக்கு இலவச கல்வியையும், மருத்துவத்தையும் அளிக்கிறது. மானியத்துடன் கூடிய வீடுகளையும் வழங்குகிறது. புருனேயின் கடல்கடந்த எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தியிலிருந்து நிலையான வருவாய் கிடைப்பதால் இவை அனைத்தும் சாத்தியப்படுத்தியுள்ளது.