நுண்ணறிவு நாயகிகள் 2: இது செய்யறிவு ஆசிரியர் எலைன் ரிச்சின் வரலாறு!

06:36 PM Aug 14, 2026 | cyber simman

செயற்கை நுண்ணறிவு சார்ந்த சேவைகளை பயன்படுத்தும் போது, செயற்கை நுண்ணறிவு தொடர்பான அடிப்படை புரிதல் இருப்பது நல்லது. அந்த வகையில் எல்லோருக்கும் செய்யறிவு கற்றுத்தரும் ஆசிரியராக எலைன் ரிச் (Elaine Rich) கவனம் பெறுகிறார்.

எலைன் ரிச்சை ஏஐ ஆய்வாளர் என்றோ, பேராசிரியர் என்றோ சுருக்கி விட முடியாது. ஏஐ சார்ந்த பல பிரிவுகளில் அவரது ஆய்வு முக்கிய பங்கு வகிக்கிறது. செயற்கை நுண்ணறிவின் பாரம்பரிய துறைகளில் ஒன்றான எக்ஸ்பர்ட் சிஸ்டம் எனப்படும் வல்லுனர் அமைப்புகளிலும் அவர் ஆய்வு செய்திருக்கிறார்.

அதே நேரத்தில், நவீன ஏஐ சேவைகளில் முக்கிய அங்கமாக அமையும், என்.எல்.பி எனப்படும் இயற்கை மொழி செயலாக்கத்திலும் அவர் அடிப்படை ஆய்வுகளை மேற்கொண்டிருக்கிறார். இன்னும் பல பிரிவுகளிலும் அவரது தாக்கம் செலுத்துகிறார்.

இவைத் தவிர, செயற்கை நுண்ணறிவு தொடர்பான முதல் புத்தகங்களில் ஒன்றை எழுதியவர் என்றும் அறியப்படுகிறார். இந்த புத்தகமே செயற்கை நுண்ணறிவு ஆசிரியர் என அவரை போற்றி புகழ வைக்கிறது. கம்ப்யூட்டர் அறிவியல் படிப்பிற்கு மாற்று, என கருதக்கூடிய பத்து புத்தகங்களில் ஒன்றாகவும் இது அமைகிறது, என 2006 CACM இதழ் பாராட்டுகிறது.

செயற்கை நுண்ணறிவு என்பது பெரும்பாலும் ஆய்வாளர்களின் பரப்பாக இருந்த காலத்தில் 1983ல், அவர் செயற்கை நுண்ணறிவை புரிந்து கொள்ள வழி காட்டும் ஆர்டிபிசியல் இண்டலிஜென்ஸ்’ (Artificial Intelligence (McGraw-Hill, 1983; 2nd ed., with K. Knight,) புத்தகத்தை எழுதினார் என்பது குறிப்பிடத்தக்கது. (இந்த புத்தகம் ஜாப்பானிய மொழி உள்ளிட்ட பல மொழிகளில் மொழியெயர்க்கப்பட்டுள்ளது).

இதன் இரண்டாம் பதிப்பு என்பவரை கெவின் நைட் இணையாசிரியராக கொண்டு வெளியானது. தொடர்ந்து பதிப்புகளை கண்டுவரும் இந்த புத்தகம், செய்யறிவு மாணவர்களுக்கான பாடப்புத்தகமாக கருதப்படுகிறது.

வழிகாட்டி புத்தகம்

இவ்வளவு ஏன், செயற்கை நுண்ணறிவில் செயல்பட்டு வரும் பலருக்கு எலைன் ரிச்சின் இந்த புத்தகமே அடிப்படை வழிகாட்டியாகவும் இருந்திருக்கிறது என்கின்றனர். அதைவிட முக்கியமாக, செயற்கை நுண்ணறிவு தொடர்பான புரிதலை பரவலான வாசகர்களுக்கு கொண்டு வந்த சேர்த்த முதல் புத்தகங்களில் ஒன்றாகவும் கருதப்படுகிறது.

இன்னொரு விதத்திலும் இந்த புத்தகம் முக்கியமானது. பொதுவாக செயற்கை நுண்ணறிவின் வரலாறு மற்றும் அடிப்படைகளை அறிந்து கொள்வதற்கான பாடப்புத்தகம் போன்ற நூல், என வரும் போது ஸ்டூவர்ட் ரஸல் மற்றும் பீட்டர் நோர்விக் எழுதிய புத்தகமே அதிகம் முன் வைக்கப்படுகிறது. செயற்கை நுண்ணறிவை அறிந்து கொள்வதற்கான ஆகச்சிறந்த புத்தகங்களில் ஒன்று இது என்பதில் சந்தேகம் இல்லை என்றாலும், இந்த புத்தகம் பேசப்படும் அளவுக்கு எலைன் ரிச்சின் புத்தகம் குறிப்பிடப்படுவதில்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

செயற்கை நுண்ணறிவு செயல்பாட்டிலும் சரி, அதன் வரலாற்றிலும் சரி பெண்களுக்கு எதிராக விளங்கும் சார்பின் இன்னொரு உதாரணமாகவும் ரீச்சின் செய்யறிவு புத்தகம் அதிகம் முன்னிறுத்தப்படாததை கருதலாம். செய்யறிவை விளக்கி எழுதிய முன்னோடி எனும் வகையில் அவர் கொண்டாடப்பட வேண்டியவர் என்பதை கோடிட்டு காட்டுவதற்கான காரணமாகவும் இது அமைகிறது.

கணித மேதை வாரிசு

அமெரிக்காவின் டெக்சாஸ் பல்கலையில் பேராசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்ற எலைன் ரிச், கணிதவியலாளர் ராபர்ட் பீட்டர் ரிச்சின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது. தந்தையின் அடியொற்றி கணிதவியலில் பட்டம் பெற்றவர், மொழியியலிலும் பட்டம் பெற்றார். இந்த இரண்டும் இணைந்து செயற்கை நுண்ணறிவு ஆய்வில் அவருக்கு வழிகாட்டியது.

இடையே மைக்ரோ எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்ப்யூட்டர் கார்ப்பரேஷனில் ஆய்வாளராக பணியாற்றியவர், மாணவர்களுக்கான மின்னணு யுகத்திற்கான அறிவாற்றல் தொடர்பான நவீன புத்தகத்தையும் எழுதினார்.

செயற்கை நுண்ணறிவுக்கான எலைன் ரிச்சின் விளக்கத்தையும் இங்கு மனதில் கொள்வது பொருத்தமாக இருக்கும்.

“செயற்கை நுண்ணறிவு என்பது, மனிதர்கள் சிறந்து விளங்கும் விஷயங்களை செய்வதில் கம்ப்யூட்டர்களை மேம்பட்டதாக உருவாக்குவதற்கான ஆய்வாக அமைகிறது,” என்கிறார் எலைன் ரிச்.

பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பது, இயற்கை மொழி செயலாக்கம், உள்வாங்கி கொள்ளுதலை புரிந்து கொள்ளுதல் மற்றும் அறிவியல் செயலாக்கம் ஆகியவை இதில் அடங்கும் என்றும் சொல்கிறார். 

ஏஐ நுட்பம் ஏற்படுத்தி வரும் தாக்கத்தையும், பரபரப்பையும் மீறி, ஏஐ என்றால் என்ன எனும் கேள்விக்கான தெளிவான பதில் இல்லை என்கின்றனர். ஏஐ தொடர்பான வரையறைகளிலும் வல்லுனர்கள் வேறுபடுகின்றனர். ஏஐ தொடர்பான எந்த வரையறையிலும் ஏதேனும் போதாமை இருக்கவே செய்கிறது.

ஏஐ விளக்கம்

இந்த பின்னணியில், எலைன் ரிச்சின் ஏஐ விளக்கம், அதன் அடிப்படை அம்சங்களை புரிந்து கொள்ள உதவுகிறது. ஏஐ தொடர்பான மற்ற வரையறைகளில் உள்ள முக்கிய விடுபடல்களை இது கருத்தில் கொண்டிருப்பதோடு, அதன் அடிப்படை அம்சங்களையும் படம் பிடித்து காட்டுவதாக அமைகிறது.

ஏஐ துறைக்கும் மனித அறிவியலுக்கும் உள்ள தொடர்புகளை சுட்டிக்காட்டி எலைன் ரிச் எழுதிய ஆய்வுக்கட்டுரையில் இந்த விளக்கத்தை முன் வைக்கிறார். ஒரு கேள்வி பதில் இயந்திரம் எப்படி செயல்பட வேண்டும், அதற்கு என்ன தேவை என்றெல்லாம் இந்த கட்டுரையில் அவர் விளக்கியிருப்பதை படிக்கும் போது, நவீன ஏஐ சாட்பாட்களின் செயல்பாடு நமக்கு நினைவுக்கு வரலாம்.

கடினமான பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் திறன் கொண்ட புரோகிராம்களை உருவாக்குவதே செயற்கை நுண்ணறிவின் இலக்காக இருக்க வேண்டும், என கட்டுரை இறுதியில் அவர் குறிப்பிடுவது, ஏஐ எதிர்கால பயணத்திற்கான திசையை தீர்மானிக்க வழிகாட்டுகிறது.

”தீர்க்க விரும்பும் பிரச்சனை பரப்பில் இயன்ற அளவு அறிவை உருவாக்கி கொண்டு, சரியான இடத்தில் சரியான அறிவை பயன்படுத்துவது தான் இதற்கான ஒரே வழி,” என அவர் குறிப்பிடுவதும் பொருத்தமானது.

”ஏஐ புரோகிராம்களை வடிவமைப்பதில் உள்ள முக்கிய பிரச்சனைகளில் ஒன்று அந்த ப்ரோகிராம் எத்தகைய அறிவு கொண்டிருக்க வேண்டும் என்பது மட்டும் அல்ல, அந்த அறிவு எப்படி பிரதிநித்துவம் கொண்டிருக்க வேண்டும் என்பதும் முக்கியம்,” என்றும் குறிப்பிடுகிறார். 

30 ஆண்டுகளுக்கு முன் இந்த கட்டுரையை அவர் எழுதினார் எனும் போது செயற்கை நுண்ணறிவு தொடர்பான அவரது முன்னோடி சிந்தனையை புரிந்து கொள்ளலாம்.

மொழியியல் புரிதல்

இதே கட்டுரையில் மொழியியல் செயலாக்கம் குறித்தும் விரிவாக குறிப்பிடுகிறார். கேள்வி பதில் சேவை உருவாக்கத்தில் இதன் பங்கு குறிப்பிடத்தக்கது. கம்ப்யூட்டர்கள் மனித மொழியை புரிந்து கொள்ள உதவும் அல்கோரிதம் மற்றும் மாதிரிகளை உருவாக்குவது தொடர்பான இயற்கை மொழி செயலாக்கத்தில் விரிவான ஆய்வு மேற்கொண்டவர் என்று ஐபிஎம் இணையதளத்தில் இடம்பெறும், ஏஐ துறையில் முன்னணி பெண்கள் தொடர்பான பதிவு வர்ணிக்கிறது. அவரது ஆய்வு, பல்வேறு இயற்கை மொழி செயலாக்க கருவிகள், செயலிகளுக்கு வழி வகுத்திருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், மாணவர்கள் தனிப்பட்ட கற்றலுக்கு வழிகாட்டும் அறிவார்ந்த பயிற்றுவித்தல் அமைப்புகளையும் அவர் உருவாக்கியதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இன்று கல்வித்துறையில் பயன்படும் பல ஏஐ சேவைகளில் அவரது பங்களிப்பு இருக்கிறது.

இதே போலவே, வல்லுனர் அமைப்புகள் மற்றும் அறிவுசார் அமைப்புகள் (knowledge-based systems) தொடர்பாகவும் அவரது ஆய்வு முக்கியமாக அமைகிறது. மேலும், தானியங்கி கோட்பாடு தொடர்பாகவும் அவரது பங்களிப்பு முக்கியமானதாக கருதப்படுகிறது.

எலைன் ரிச் செயற்கை நுண்ணறிவு தவிர வேறு பல ஆய்வுகளிலும் ஈடுபட்டிருக்கிறார். ஆண்கள் மற்றும் பெண்கள் வண்ணங்களை அணுகும்விதம் தொடர்பான சிறிய ஆய்வை மேற்கொண்டவர், பொதுவாக பெண்கள், ஆண்களை விட அதிக அளவில் வண்ணங்கள் மூலமான உணர்வுகளை வெளிப்படுத்துவதாகவும் தெரிவிக்கிறார்.

எலைன் ரிச் இணையதளம்: https://www.cs.utexas.edu/~ear/

எலைன் ரிச் எழுதிய செயற்கை நுண்ணறிவு புத்தகம் தொடர்பான பரிந்துரை: https://www.cs.utexas.edu/~ear/ClassicCSBooks.html


Edited by Induja Raghunathan