இந்திய ஸ்டார்ட்-அப் எழுச்சியில் பெரும் பங்கு வகித்த Yourstory நிறுவனர் ஷ்ரத்தா சர்மாவிற்கு ‘தேவி விருது’ வழங்கப்பட்டது!

04:30 PM Dec 16, 2025 | Chitra Ramaraj

சமூக விதிமுறைகளை மீறி பல்வேறு துறைகளில் விலைமதிப்பற்ற பங்களிப்பு செய்த பெண்களைக் கௌரவிக்கும் விதமாக ஆண்டுதோறும் 'தேவி விருதுகள்' என்ற பெயரில் விருதுகளை வழங்கி வருகிறது தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம்.

36வது ஆண்டாக இந்தாண்டு டெல்லியில் நேற்று நடைபெற்ற விழாவில், நமது யுவர்ஸ்டோரி நிறுவனரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான ஷ்ரத்தா சர்மா உட்பட 12 பெண்கள் கௌரவிக்கப்பட்டனர்.

36வது தேவி விருதுகள்

டெல்லியில் உள்ள ஐடிசி மௌரியாவில், 36வது தேவி விருதுகள் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. விடாமுயற்சி, அறிவுத்திறன் மற்றும் உயரிய நோக்கம் மூலம் தங்கள் உலகங்களை, தாங்களே வடிவமைத்துக் கொண்ட பெண்களின் கொண்டாட்டமாக இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தலைமை விருந்தினராக கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில், டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா கௌரவ விருந்தினராகக் கலந்து கொண்டார். எக்ஸ்பிரஸ் பப்ளிகேஷன்ஸ் (மதுரை) பிரைவேட் லிமிடெட் தலைமை நிர்வாக அதிகாரி லட்சுமி மேனனின் வரவேற்பு உரையுடன் இந்நிகழ்ச்சி தொடங்கியது. EPMPL CMD மனோஜ் சொந்தாலியா குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைக்க, தலையங்க இயக்குநர்களான பிரபு சாவ்லா, மேனன் மற்றும் ஆசிரியர் சாந்த்வானா பட்டாச்சார்யா ஆகியோர் தலைமை விருந்தினர்களுடன் மேடையை அலங்கரித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர் நிதின் கட்காரி, ‘இந்தியாவின் வரலாற்றையும் சமூகத்தையும் வடிவமைப்பதில் பெண்கள் முக்கியமானது’ எனப் பாராட்டினார்.

யுவர்ஸ்டோரி நிறுவனருக்கு விருது

இந்தியாவில் வணிக இதழியலை மறுவரையறை செய்தது, ஸ்டார்ட்-அப் மற்றும் யூனிகார்ன் சுற்றுச்சூழல் அமைப்பின் எழுச்சியை ஆதரிப்பதது உள்ளிட்ட காரணங்களுக்காக, இந்த நிகழ்வில், நமது யுவர்ஸ்டோரியின் நிறுவனரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான ஷ்ரத்தா சர்மா, தேவி விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

அவருடன், ANIன் ஆசிரியர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ஸ்மிதா பிரகாஷ்; ஜப்பானில் 2024 பாரா சாம்பியன்ஷிப்பில் தங்கப் பதக்கம் வென்ற பாராலிம்பிக் நீச்சல் வீராங்கனை சிம்ரன் சர்மா மற்றும் குழந்தை ஊட்டச்சத்து குறைபாட்டை எதிர்த்துப் போராடியதற்காக குழந்தை மருத்துவரும் பொது சுகாதார நிபுணருமான டாக்டர் ராதிகா பத்ரா, மூலக்கூறு உயிரியலில் பங்களிப்பு செய்ததற்காக பேராசிரியரும் மரபியலாளருமான சுதா பட்டாச்சார்யா; கதக் மற்றும் சமகால நடனத்தில் தனது பணிக்காக நடனக் கலைஞரும் கல்வியாளருமான அதிதி மங்கல்தாஸ்; சட்ட விவகாரங்களில் பங்களிப்பு செய்ததற்காக உச்ச நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர் சோனியா மாத்தூர் ஆகியோரும் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

இந்த விருது பெற்றோர் பட்டியலில் தொழில்முனைவோரை ஊக்குவிப்பதற்காக ருகம் கேபிட்டலின் நிறுவனர் மற்றும் நிர்வாகப் பங்குதாரரான அர்ச்சனா ஜஹாகிர்தார்; எவரெஸ்ட் சிகரத்தை வென்றதற்காக மலையேறும் அனிதா குண்டு, இந்திய வரலாறு மற்றும் மதம் குறித்த தனது அறிவார்ந்த பணிக்காக நாடாளுமன்ற உறுப்பினரும் வரலாற்றாசிரியருமான மீனாட்சி ஜெயின்; ஃபேஷன் மீதான தனது புதிய யுக அணுகுமுறைக்காக ஃபேஷன் டிசைனர் மற்றும் தொழில்முனைவோரான ரினா டாக்கா; இளைஞர்களுக்கான தனது ஊக்கமளிக்கும் பணிக்காக பாரதிய யுவ சக்தி அறக்கட்டளையின் நிறுவனர் லட்சுமி வி வெங்கடேசன் ஆகியோரும் அடங்குவர்.