+

‘தாயகம் திரும்புங்கள்...’ - அமெரிக்க வாழ் இந்திய ஐடி ஊழியர்களுக்கு Zoho ஸ்ரீதர் வேம்பு கடிதம் மூலம் வேண்டுகோள்!

‘இந்தியர்களின் திறமை தாய்நாட்டிற்குத் தேவைப்படுவதால், உடனே நாடு திரும்புங்கள்’.. என வேண்டுகோள் விடுத்து, அமெரிக்க வாழ் இந்திய ஐடி ஊழியர்களுக்கு விரிவான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார் ஜோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு. இந்தக் கடிதத்தை அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இந்தியர்களின் தொழில்நுட்ப அறிவு தாய்நாட்டிற்கு தற்போது தேவைப்படுவதாகவும், எனவே உடனடியாக அவர்கள் தாயகம் திரும்ப வேண்டும் என்றும், அமெரிக்காவில் வாழும் இந்திய ஐடி ஊழியர்களுக்கு கடிதம் வாயிலாக அழைப்பு விடுத்துள்ளார் Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு.

அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு கடிதம்

இந்தியாவில் குறிப்பிடத்தக்க முன்னணி ஐடி சேவை நிறுவனங்களில் ஒன்றாக ஜோஹோ உள்ளது. சர்வதேச அளவில் போட்டி போடும் அளவிற்கு வளர்ந்து வரும் இந்நிறுவனத்தின் நிறுவனர் ஸ்ரீதர்வேம்பு, சமூகவலைதளப் பக்கங்களில் மிகவும் ஆக்டிவ்வாக இருப்பவர். ஐடி துறை சார்ந்த பதிவுகள் மட்டுமின்றி, அடிக்கடி அரசியல் மற்றும் பொருளாதார வளர்ச்சி சார்ந்த பதிவுகளையும் வெளியிட்டு, எப்போதும் ஊடக வெளிச்சத்திலேயே தன் பெயரையும், தன் நிறுவனத்தின் பெயரையும் வைத்திருப்பதில் வல்லவர் ஸ்ரீதர் வேம்பு.

 

அந்தவகையில், தற்போது அவர், தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள கடிதம் ஒன்று இணையத்தில் கவனம் ஈர்த்துள்ளது. அந்தக் கடிதத்தில் அவர், ‘அமெரிக்க வாழ் இந்திய ஐடி ஊழியர்கள் தாயகம் திரும்ப வேண்டும்’ என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Open letter to Indians in America.
--
Dear brothers and sisters from Bharat:

Like I did 37 years ago, you arrived in America with no money but with a good education and cultural heritage from Bharat. You achieved outstanding success. America was good to us. For that we must…

— Sridhar Vembu (@svembu) April 27, 2026 " data-type="tweet" align="center">

டிரம்ப் மீண்டும் அமெரிக்க அதிபராக பதவியேற்றதில் இருந்தே, அமெரிக்காவில் இந்திய ஐடி ஊழியர்கள் தொடர்ந்து பிரச்சினைகளைச் சந்தித்து வருகின்றனர். அமெரிக்கர்களின் வேலைகளை இந்தியர்கள் பறிப்பதாக குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டு வருகிறது.

இதனால், புதிதாக அமெரிக்கா செல்லும் கனவோடு இருக்கும் இந்தியர்களுக்கு ஒருபுறம் டிரம்பின் அதிரடி அறிவிப்புகள் கவலையை ஏற்படுத்தி வருகிறது என்றால், மற்றொருபுறம், ஏற்கனவே வேலை பெற்று அங்குச் சென்றவர்கள், விடுமுறைக்கு தாயகம் வந்தால்கூட, மீண்டும் அமெரிக்கா செல்ல முடியாது, என அஞ்சி அங்கேயே தங்கள் இருப்பை தக்க வைத்து வருகின்றனர்.  

இந்தச் சூழ்நிலையில்தான், அமெரிக்காவில் வசித்து வரும் இந்திய ஐடி ஊழியர்களுக்கு ஸ்ரீதர் வேம்பு விரிவான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

sridhar vembu

ஒரு கசப்பான உண்மை!

ஸ்ரீதர் வேம்பு தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள அந்தக் கடிதத்தில்,

“அமெரிக்காவில் வாழ்ந்து வரும் இந்தியர்களுக்கு ஒரு திறந்த மடல். பாரதத்தைச் சேர்ந்த என் அன்பு சகோதர, சகோதரிகளே, 37 ஆண்டுகளுக்கு முன் நான் எப்படி அங்கு சென்றேனோ, அதேபோல்தான், கையில் பணமில்லாமல், பாரதம் தந்த சிறந்த கல்வியையும், பாரம்பரியத்தையும் சுமந்து நீங்களும் அமெரிக்கா சென்றிருப்பீர்கள்.

அமெரிக்கா நமக்கு நல்ல வாழ்வையும், பல வெற்றிகளையும் தந்திருக்கிறது. நன்றி மறவாமை நமது பாரதப் பண்பாடு. எனவே, நாம் நன்றியுடன் இருக்க வேண்டும். ஆனால், அதே நேரத்தில் கசப்பான உண்மை ஒன்றையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

அமெரிக்கர்களின் வேலைவாய்ப்புகளை இந்தியர்கள் அபகரிப்பதாக கணிசமான அமெரிக்கர்கள் கருதுகின்றனர். நாம் அங்கு பெற்றுவரும் வெற்றிகள், நியாயமற்ற முறையில் கிடைத்தது என்றும் அவர்கள் நம்புகின்றனர். அடுத்த தேர்தல் இந்தச் சூழ்நிலையை மாற்றலாம் என நீங்கள் நினைக்கலாம். ஆனால் அது நிச்சயம் மாறப் போவதில்லை...” என இவ்வாறு அந்தக் கடிதத்தில் ஸ்ரீதர் வேம்பு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர்,

‘அமெரிக்காவில் இரண்டு வகையான மக்கள் வசிக்கின்றனர். அதில் ஒரு பிரிவினர் பாரத நாகரீகத்தை வெறுப்பவர்கள், மற்றொரு பிரிவினர் நாகரீகம் என்ற கட்டமைப்பையே வெறுப்பவர்கள். இது ஏறக்குறைய தீவிர வலதுசாரி மற்றும் அதிதீவிர இடதுசாரிக்கு இடையிலான போர். இதில் நீங்கள் வெறும் பார்வையாளர்களாக மட்டுமே இருக்க முடியும், என்று எழுதியுள்ளார்.

zoho

தொழில்நுட்ப வளர்ச்சி தரும் மரியாதை

உலக அரங்கில் இந்தியாவிற்கும், இந்தியர்களுக்கும் கிடைக்கும் மரியாதை, நமது நாட்டின் வளர்ச்சி மற்றும் வளத்தைச் சார்ந்தே அமையும். இந்தியா ஏழ்மையிலேயே நீடித்தால், இடதுசாரிகல் நீதி போதனையும், வலதுசாரிகள் வெறுப்புப் போதனையும் மட்டுமே செய்வார்கள். இந்த இரண்டையுமே நாம் மரியாதை எனக் குழப்பிக் கொள்ளக்கூடாது.

இன்றைய உலகில் மரியாதை, வளம் மற்றும் பாதுகாப்பு என இந்த மூன்றும் தொழில்நுட்பத் திறனில் இருந்துதான் பிறக்கின்றன. அந்த வெற்றியை அடைய தேவையான அறிவுத்திறன் நம் நாட்டில் அபரிமிதமாக உள்ளது. ஆனால் இங்கே வருத்தத்துடன் நாம் உணர வேண்டியது என்னவென்றால், அந்தத் திறமையை நாம் பெருமளவில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறோம் என்பதைத்தான். எப்போது நாம் நமது தொழில்நுட்ப வலிமையை நிலைப் படுத்துகிறோமோ அப்போதுதான் நமது நாகரீகத்தின் பலம் உலகிற்குத் தெரிய வரும்.

இது குறித்து சிந்திப்பதே உங்களில் பலருக்கு கடினமான ஒன்றாக இருக்கலாம். ஆனாலும், தயவுசெய்து தாயகத்திற்கு திரும்பி வாருங்கள். பாரத மாதாவிற்கு உங்கள் திறமை இப்போது தேவைப்படுகிறது. நம் நாட்டின் கோடிக்கணக்கான இளைஞர்களை வளமான பாதையில் வழிநடத்த, உங்களது தொழில்நுட்ப தலைமைப் பண்பு இப்போது தாயகத்திற்கு தேவை. இதை ஒரு புனித லட்சியமாக எடுத்துக்கொண்டு செயல்படுவோம்,” என இவ்வாறு அந்தக் கடிதத்தில் ஸ்ரீதர் வேம்பு தெரிவித்துள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர், இந்தியர்களை நரகக் குழிகள் என டிரம்ப் விமர்சித்திருந்த நிலையில், ஸ்ரீதர் வேம்புவின் இந்தக் கடிதம் சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

facebook twitter