
முன்னணி தொழில்நுட்ப நிறுவனம் ஜோஹோ கார்ப்பரேஷன் சொந்தமாக உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட 'நாது லா' (NathuLa) சர்வர் அமைப்பை அறிமுகம் செய்துள்ளது.
வன்பொருள் அடுக்கு முதல் மென்பொருள் வரை அனைத்தும் கொண்ட முழு தொழுல்நுட்ப திறன்களை உருவாக்கும் ஜோஹோ நிறுவன பயணத்தில் இந்த அறிமுகம் ஒரு மைல்கல்லாக அமைகிறது.
நாது லா சர்வர் அமைப்பின் மூலம் நிறுவனம் 12-18 சதவீத மின் நுகர்வு மற்றும் 20-30 சதவீத குறைந்த மொத்த உடைமைச் செலவுக்கு இணையான செயல்திறனை அடைதுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சேவைக்கான ஆய்வு மற்றும் மேம்பாட்டு பணிகள் நாக்பூர் அலுவலகத்தில் ஜோஹோவால் பணிக்கு அமர்த்தி பயிற்சி அளிக்கப்பட்ட உள்ளூர் திறமையாளர்களால் மேற்கொள்ளப்பட்டதாக இது தொடர்பான ஜோஹோ செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.
இண்டெல் ஜெனான் 6 செயலிகள் கொண்ட இந்த சர்வர் அமைப்பு, இண்டெல் நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் டிஜிட்டல் உள்கட்டமைப்பு வேகமாக விரிவடைந்து வரும் நிலையில், இதற்கு அடிப்படையான சர்வர் தொழில்நுட்பம் வெளிநாடுகளில் இருந்தே பெறப்பட்டு வருகிறது. இதற்காக இந்திய நிறுவனங்கள் கட்டணம் மற்றும் உரிமத்தொகை செலுத்தி வருகின்றன.
இந்நிலையில், இந்தியாவிலேயே அனைத்து அறிவுச்சொத்துரிமை கொண்ட சர்வர் நுட்பத்தை உருவாக்கிய மிகச்சில தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றாக ஜோஹோ விளங்குகிறது.
”இந்தியாவில் முழுவதும் வடிவமைக்கப்பட்ட சர்வர் அமைப்பை உருவாக்கி தொழில்நுட்ப இறையாண்மையை நோக்கி முன்னேறியுள்ளதில் பெருமை கொள்கிறோம்,” என ஜோஹோ கார்ப்பரேஷன் சி.இ.ஓ. சைலேஷ் தவே கூறியுள்ளார்.
நாது லா உருவாக்கம் சிறிய நகரங்கள் மற்றும் கிராமங்களில் உள்ள திறமையாளர்கள் கொண்டு சிக்கலான தொழில்நுட்பத்தை உருவாக்கும் எங்கள் ஈடுபாட்டை பிரிதிபலிக்கிறது, என்றும் அவர் கூறியுள்ளார்.
ஜோஹோ நிறுவனம் சர்வர் சேவை ஆய்விற்கான குழுவை நாக்பூரில் 2020ல் அமைத்தது. 2023ம் ஆண்டு சர்வர் உள்ளிட்ட கம்ப்யூட்டர் சாதனங்கள் மீதான இறக்குமதி வரி நாட்டிலேயே இந்த நுட்பத்தை உருவாக்கும் அவசியத்தை வலியுறுத்தியது, என ஜோஹோ தெரிவித்துள்ளது.

ஜோஹோ தனது சொந்த தொழில்நுட்பத் திறன்களை முழுமையாக உருவாக்குவதில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. இந்த திசையில் முக்கிய நிகழ்வாக இந்த சர்வர் அறிமுகம் அமைந்துள்ளது.
ஜோஹோ நிறுவனம் தனது செயலிகளை நாது லா சர்வர் அமைப்பில் இயக்க திட்டமிட்டுள்ளது. குறிப்பிட்ட பணிச்சுமைகளுக்கு ஏற்ப மென்பொருள்- வன்பொருள் அமைப்பை திட்டமிட்டு செலவுகளை குறைக்க உதவும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு பயன்பாட்டிற்கான அனுமான செலவுகளையும் குறைக்க இது உதவும்.
ஜோஹோ தனது நாக்பூர் அலுவலகத்தில் திறன் மேம்பாட்டிற்கான பயிற்சி மையத்தை கொண்டுள்ளது. இரண்டாம் அடுக்கு நகரங்களுக்கு ஏற்ற திறன் வாய்ந்த பொறியாளர்களை உருவாக்கி அளிக்கும் நோக்கம் கொண்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் பணி அமர்த்தப்பட்ட பணியாளர்கள் நாது லா உள்ளிட்ட ஆய்வு திட்டங்களில் செயல்பட்டு வருகின்றனர்.
Edited by Induja Raghunathan