+

'உலகளாவிய நிச்சயமற்ற சூழலிலும் வளர்ச்சிப் பாதையில் இந்தியா உறுதியாக முன்னேறுகிறது' - பிரதமர் மோடி

உலகளாவிய அளவில் நிச்சயமற்ற தன்மையும் நிலையற்ற சூழலும் நிலவி வருகிறது, ஆனால் இந்தியா நம்பிக்கையுடனும் உறுதியுடனும் தனது வளர்ச்சிப் பாதையில் தொடர்ந்து முன்னேறி வருவதாக பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கைத் தெரிவித்துள்ளார். நிதி ஆயோக் (NITI Aayog) ஆளும் குழுவின் 11-வது கூட்டத்திற்கு தலைமை தாங்கி உரையாற

உலகளாவிய அளவில் நிச்சயமற்ற தன்மையும் நிலையற்ற சூழலும் நிலவி வருகிறது, ஆனால் இந்தியா நம்பிக்கையுடனும் உறுதியுடனும் தனது வளர்ச்சிப் பாதையில் தொடர்ந்து முன்னேறி வருவதாக பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.

நிதி ஆயோக் (NITI Aayog) ஆளும் குழுவின் 11-வது கூட்டத்திற்கு தலைமை தாங்கி உரையாற்றிய அவர், வளர்ந்த இந்தியா (விக்சித் பாரத்) என்ற இலக்கை நோக்கி நாடு முன்னேறிக் கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில், அனைவரின் கூட்டுப் பொறுப்பும் மேலும் அதிகரித்துள்ளதாகக் கூறினார்.

“உலகம் தற்போது நிச்சயமற்ற தன்மை மற்றும் நிலையற்ற சூழலைக் கடந்து செல்கிறது. இருப்பினும், இந்தியா நம்பிக்கையுடனும் உறுதியுடனும் தனது வளர்ச்சிப் பாதையில் தொடர்ந்து முன்னேறி வருகிறது,” என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

இந்தியா பல நாடுகளுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டிருப்பதாகக் குறிப்பிட்ட அவர்,

“வளர்ச்சி மற்றும் ஏற்றுமதிக்கான புதிய வாய்ப்புகளை உருவாக்கும் வகையில் இந்தியா பல நாடுகளுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளது. இந்த ஒப்பந்தங்கள் நமது குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு (MSME) மிகப்பெரிய வாய்ப்பாக அமைகின்றன. சர்வதேச தரநிலைகளுக்கு ஏற்ப தங்களைத் தயார்படுத்திக் கொண்டு, போட்டித்திறனை மேம்படுத்துவதன் மூலம் உலகளாவிய சந்தைகளில் தங்களது இடத்தைப் பெற முடியும்,” என்றார்.

இந்தியாவின் மக்கள் தொகை சார்ந்த பலம் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க வாய்ப்பு எனக் குறிப்பிட்ட அவர்,

“இந்தியாவின் மக்கள்தொகை ஆதாயம் (Demographic Dividend) என்பது ஒரு வரலாற்று வாய்ப்பு. இதை நாம் இழக்க முடியாது. தரமான கல்வி, தேவைக்கேற்ப திறன் மேம்பாடு மற்றும் வேலைவாய்ப்பு வாய்ப்புகள் மூலம் இளைஞர்களுக்கான சரியான சூழலை உருவாக்குவது நமது முன்னுரிமையாக இருக்க வேண்டும். அதிகாரமளிக்கப்பட்ட இளைஞர்களே வளர்ந்த இந்தியாவை நோக்கிய நமது பயணத்தின் உந்து சக்தியாக இருப்பார்கள்,” என்று கூறினார்.

மாநிலங்களுக்கு இடையேயான உறவுகள் ஒத்துழைப்பும் உரையாடலும் அடிப்படையாக அமைய வேண்டும் என்று வலியுறுத்திய பிரதமர், மாநிலங்கள் தங்களது சிறந்த யோசனைகள் மற்றும் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளும் தளமாக நீதி ஆயோக் செயல்பட முடியும் என்றார்.

பெண்கள் தலைமையிலான வளர்ச்சியே வளர்ந்த இந்தியா என்ற கனவின் முக்கிய அடித்தளமாக இருப்பதாகக் கூறிய அவர்,

“விவசாயம், தொடக்க நிறுவனங்கள், அறிவியல் மற்றும் புதுமை உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் நாரி சக்தி குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கி வருகிறது. பெண்களின் முழுமையான திறனை வெளிக்கொணரவும், இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தை மேலும் வேகப்படுத்தவும், மாநிலங்கள் பெண்களின் கல்வி, திறன் மேம்பாடு, பாதுகாப்பு மற்றும் அதிகாரமளிப்புக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்,” என்றார்.

மேலும், “கூட்டுறவு கூட்டாட்சியின் உணர்வால் வழிநடத்தப்பட்டு, இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தை வேகப்படுத்த நாம் ஒன்றிணைந்து செயல்பட்டு வருகிறோம். வளர்ந்த இந்தியா என்ற நமது பொதுவான இலக்கை அடைவதில் மத்திய மற்றும் மாநில அரசுகளின் கூட்டு முயற்சிகள் முக்கிய பங்கு வகிக்கும்,” என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

facebook twitter