+

ஐபிஓ செல்லும் Zepto - 23 வயதில் வரலாறு படைக்க உள்ளார் இளம் சிஇஒ ஆதித் பலிச்சா!

ஆதித் பலிச்சா 23 வயதிலேயே இந்தியாவில் பட்டியலிடப்பட்ட நிறுவனத்தின் இளம் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரி (CEO) என்ற பெருமையைப் பெற உள்ளார். இந்தியாவின் அதிவேக மளிகைப் பொருள் விநியோக (Quick Commerce) துறையில் முன்னணி நிறுவனமாக வளர்ந்துள்ள ஜெப்டோ நிறுவனத்தின் இணை நிறுவனர்களான ஆதித் பலிச

ஆதித் பலிச்சா 23 வயதிலேயே இந்தியாவில் பட்டியலிடப்பட்ட நிறுவனத்தின் இளம் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரி (CEO) என்ற பெருமையைப் பெற உள்ளார்.

இந்தியாவின் அதிவேக மளிகைப் பொருள் விநியோக (Quick Commerce) துறையில் முன்னணி நிறுவனமாக வளர்ந்துள்ள Zepto நிறுவனத்தின் இணை நிறுவனர்களான ஆதித் பலிச்சா மற்றும் கைவல்ய வோரா ஆகியோர், வெறும் 23 வயதிலேயே இந்திய பங்குச் சந்தையில் பட்டியலிடப்படும் மிகப்பெரிய நுகர்வோர் இணைய நிறுவனத்தை பொதுமக்கள் முன் கொண்டு வரும் இளம் தொழில்முனைவோர்களாக புதிய சாதனை படைக்க உள்ளனர்.

ஜெப்டோ நிறுவனம் தனது ஆரம்ப பொதுப் பங்கு வெளியீட்டிற்கு (IPO) தீவிரமாக தயாராகி வருகிறது. இதற்காக இந்திய பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபியிடம் புதுப்பிக்கப்பட்ட ஆவணங்களை தாக்கல் செய்துள்ளது. இதில் ரூ.8,010 கோடி மதிப்பிலான புதிய பங்குகள் வெளியிடப்பட உள்ளன. விற்பனைக்கான பங்குகளையும் சேர்த்து, மொத்த பங்குகள் அளவு ரூ.9,000 கோடி முதல் ரூ.10,000 கோடி வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

aadit palicha kaivalya vohra

இந்த ஐபிஓ-வின் முக்கிய அம்சமாக, ஆதித் பலிச்சாவும் கைவல்யா வோராவும் தங்களது பங்குகளை விற்பனை செய்யவில்லை. மாறாக, தற்போதைய முதலீட்டாளர்களான நெக்சஸ்ச் வென்ச்சர்ஸ் பார்ட்னர்ஸ், மற்றும் காண்ட்ராரி கேப்பிடல் உள்ளிட்ட நிறுவனங்களே தங்களது பங்குகளை விற்பனை செய்கின்றன. இதன் மூலம், நிறுவனத்தின் எதிர்கால வளர்ச்சியில் நிறுவனர்கள் தொடர்ந்து நம்பிக்கை வைத்திருப்பது வெளிப்படுகிறது.

கடந்த சில ஆண்டுகளில் ஜெப்டோ அதிவேக வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. 2026 நிதியாண்டின் இறுதியில், நிறுவனத்தின் டார்க் ஸ்டோர் எண்ணிக்கை 66 நகரங்களில் 1,139 ஆக உயர்ந்துள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இது வெறும் 337 ஆக மட்டுமே இருந்தது. அதேபோல், நிறுவனத்தின் செயல்பாட்டு வருவாய் ஆண்டுக்கு ஆண்டு இரட்டிப்பாக உயர்ந்து ரூ.22,624 கோடியை எட்டியுள்ளது.

வாடிக்கையாளர் பயன்பாடும் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளது. மார்ச் காலாண்டில் மட்டும் 21 கோடி ஆர்டர்களை நிறுவனம் செயல்படுத்தியுள்ளது. தினசரி சராசரியாக 23.3 லட்சம் ஆர்டர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஒவ்வொரு டார்க் ஸ்டோரும் நாளொன்றுக்கு சராசரியாக 2,140 ஆர்டர்களை நிறைவேற்றியுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

கொரோனா பெருந்தொற்று காலத்தில், ஸ்டான்ஃபோர்ட் பல்கலையில் படிப்பை முடித்து இந்தியா திரும்பிய ஆதித் பலிச்சா மற்றும் கைவல்யா வோரா முதலில் ‘கிரானாகார்ட்’ என்ற நிறுவனத்தை தொடங்கினர். பின்னர், அதை 2021-ல் ஜெப்டோ-வாக மாற்றி, 10 நிமிட மளிகைப் பொருள் விநியோக சேவையில் கவனம் செலுத்தினர். இன்று அந்தத் துறை இந்திய இணைய பொருளாதாரத்தின் வேகமாக வளர்ந்து வரும் பிரிவுகளில் ஒன்றாக மாறியுள்ளது.

தற்போது ஜெப்டோ, பிளிங்கிட், ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட், ஃபிளிப்கார்ட் மினிட்ஸ், அமேசானின் அமேசான் நவ் மற்றும் பிக் பாஸ்கட் போன்ற நிறுவனங்களுடன் கடுமையான போட்டியில் ஈடுபட்டு வருகிறது.

வருவாய் வளர்ச்சி வலுவாக இருந்தபோதிலும், நிறுவனம் இன்னும் லாபம் ஈட்டவில்லை. FY26 நிதியாண்டில் செப்டோ ரூ.5,905 கோடி நிகர இழப்பை பதிவு செய்துள்ளது. இருப்பினும், செயல்திறன் மற்றும் வணிக விரிவாக்கத்தில் பல முன்னேற்றங்களை நிறுவனம் அடைந்துள்ளது.

நிறுவனர்களின் ஊதியமும் ஒப்பீட்டளவில் குறைவாகவே உள்ளது. 2026-ல் ஆதித் பலிச்சா ரூ.2.74 கோடியும், கைவல்யா வோரா ரூ.2.61 கோடியும் ஊதியமாக பெற்றுள்ளனர்.

ஜெப்டோ பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டவுடன், ஆதித் பலிச்சா 23 வயதிலேயே இந்தியாவில் பட்டியலிடப்பட்ட நிறுவனத்தின் இளம் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரி (CEO) என்ற பெருமையைப் பெற உள்ளார். இதன் மூலம், வெறும் ஐந்து ஆண்டுகளில் ஸ்டார்ட்அப் நிறுவனர்களிலிருந்து பொதுச் சந்தை நிறுவனத் தலைவர்களாக உயர்ந்த இருவரின் பயணம் இந்திய தொழில்முனைவு உலகில் குறிப்பிடத்தக்க சாதனையாகப் பார்க்கப்படுகிறது.

facebook twitter