+

‘23 வயதில் 100 மில்லியன் டாலர் மதிப்பு ஸ்டார்ட்-அப்’ - வீட்டு வேலைத் துறையில் அஞ்சலி செய்த அசாத்திய புரட்சி!

அமெரிக்காவில் உயர் கல்வி முடித்த அவர் இன்று இந்தியாவில் வீட்டு வேலை ஆட்களைப் பெற்றுத் தரும் ‘புரான்டோ’ (Pronto) என்ற 100 மில்லியன் டாலர் மதிப்பிலான ஸ்டார்ட்அப் நிறுவனத்தின் நிறுவனராக வெற்றி நடைபோடுகிறார்.

தன்னம்பிக்கையும் விடாமுயற்சியும் இருந்தால் மிகச் சிறிய வயதிலேயே பெரிய உயரங்களை எட்ட முடியும் என்பதற்கு அஞ்சலி சர்தானா ஒரு சிறந்த உதாரணமாகத் திகழ்கிறார்.

அமெரிக்காவில் உயர் கல்வி முடித்த அவர் இன்று இந்தியாவில் வீட்டு வேலை ஆட்களைப் பெற்றுத் தரும் ‘ப்ரான்டோ’ (Pronto) என்ற 100 மில்லியன் டாலர் மதிப்பிலான ஸ்டார்ட்அப் நிறுவனத்தின் நிறுவனராக வெற்றி நடைபோடுகிறார்.

அமெரிக்காவின் புகழ்பெற்ற ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழகத்தில் உயிரியல் பிரிவில் பி.எஸ் பட்டம் பெற்ற அஞ்சலி, கல்வியில் மிகச் சிறந்த மாணவராகத் திகழ்ந்தார்.

பட்டப்படிப்பை முடித்தவுடன், அவருக்குப் பிரபலமான முதலீட்டு நிறுவனங்களான பெயின் கேபிடல்  மற்றும் 8VC ஆகியவற்றில் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. அங்கு அவர் நிதி மேலாண்மை, முதலீட்டு நுணுக்கங்கள் மற்றும் ஒரு நிறுவனத்தை எப்படித் தரைமட்டத்திலிருந்து கட்டமைக்க வேண்டும் என்பதைக் கற்றுக்கொண்டார்.

Anjali

‘ப்ரான்டோ’ உருவான கதை...

அமெரிக்காவில் ஒரு வெற்றிகரமான எதிர்காலம் காத்துக் கொண்டிருந்த போதிலும், இந்தியாவுக்கு திரும்பி தனது தாய்நாட்டுக்கு ஏதேனும் செய்ய வேண்டும் என்ற எண்ணம் அவர் மனதில் ஆழமாக பதிந்தது.

குறிப்பாக, இந்தியாவில் இன்றும் முறைப்படுத்தப்படாத ஒரு துறையாக இருக்கும் வீட்டு வேலை சேவைத் துறையில் நிலவும் சிக்கல்களைத் தீர்க்க அவர் முடிவு செய்தார்.

இந்தியா திரும்பிய அஞ்சலி, நகர்ப்புறங்களில் வசிக்கும் குடும்பங்கள் எதிர்கொள்ளும் மிகப் பெரிய சவாலான நம்பகமான வீட்டு வேலை ஆட்களைக் கண்டறிவது என்பதில் கவனம் செலுத்தினார்.

2025 ஆம் ஆண்டு ‘ப்ரான்டோ’ (Pronto) என்ற தனது கனவு செயலியை தொடங்கினார். இது வீட்டு வேலை செய்பவர்களுக்கும் அவர்களைத் தேடும் வாடிக்கையாளர்களுக்கும் இடையே ஒரு பாலமாகச் செயல்படும் ஒரு நவீனத் தளம் ஆகும்.

சவாலே சமாளி!

குருகிராமில் ஒரு சிறிய வாடகை அறையில் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம், ஆரம்பத்தில் பல சவால்களைச் சந்தித்தது.

23 வயதான ஒரு பெண், இந்தச் சிக்கலான துறையில் எப்படிச் சாதிக்க முடியும் என்ற கேள்விகள் எழுந்தன. ஆனால், அஞ்சலி எதற்கும் அஞ்சவில்லை. தனது நிறுவனத்தின் ஊழியர்களுக்கு முறையான பயிற்சியையும், வாடிக்கையாளர்களுக்கு 10 நிமிடங்களில் சேவையையும் உறுதி செய்வதையே தனது முதல் இலக்காகக் கொண்டார்.

தொடக்கக் காலத்தில் நிறுவனத்தின் செயல்பாடுகள் சீராக அமைய, அஞ்சலியும் அவரது குழுவினரும் பல நாட்கள் இரவு பகலாக உழைத்துள்ளனர். குருகிராமில் உள்ள அலுவலகத்தின் தரையிலேயே படுத்து உறங்கியபடி, வாடிக்கையாளர் புகார்களைத் தீர்த்து வைப்பது மற்றும் பணியாளர்களை ஒருங்கிணைப்பது என அனைத்துப் பணிகளையும் அவர் முன்னின்று செய்தார்.

anjali

அந்தத் தீவிர உழைப்பின் பயனாக, ப்ரான்டோ இன்று இந்தியாவின் 10-க்கும் மேற்பட்ட முக்கிய நகரங்களுக்குத் தனது சேவையை விரிவுபடுத்தியுள்ளது.

தொடக்கத்தில் நாள் ஒன்றுக்கு 170 ஆக இருந்த முன்பதிவுகள் தற்போது நாள் ஒன்றுக்கு 18,000-க்கும் அதிகமாக வளர்ந்திருப்பது இந்நிறுவனத்தின் அசுர வளர்ச்சியை காட்டுகிறது.

டெல்லி, மும்பை, பெங்களூரு, சென்னை, ஹைதராபாத் போன்ற நகரங்களுக்கும் இந்த நிறுவனம் விரிவாக்கம் செய்யப்பட்டது.

அபார வளர்ச்சி

ஒரு ஸ்டார்ட்அப் நிறுவனத்துக்கு நிதி என்பது மிக முக்கியம். அஞ்சலியின் தெளிவான திட்டங்களையும், ப்ரான்டோ நிறுவனத்தின் அபரிமிதமான வளர்ச்சியையும் கண்ட முதலீட்டாளர்கள் தாமே முன்வந்து முதலீடு செய்தனர்.

ஆரம்பக் கட்டத்தில் 11 மில்லியன் டாலர்களைத் திரட்டிய இந்நிறுவனம், அண்மையில் எபிக் கேபிடல் தலைமையிலான நிதிச் சுற்றில் 25 மில்லியன் டாலர்களை ஈட்டியுள்ளது. இதன் மூலம் நிறுவனத்தின் சந்தை மதிப்பு 100 மில்லியன் டாலரை (இந்திய மதிப்பில் சுமார் ரூ.830 கோடி) தொட்டுள்ளது.

அஞ்சலி சர்தானாவின் இந்தத் திட்டத்தில் மிகவும் பாராட்டப்பட வேண்டிய அம்சம் யாதெனில், வீட்டு வேலை செய்பவர்களுக்கு அவர் அளிக்கும் முக்கியத்துவம் ஆகும்.

இந்தியாவில் வீட்டு வேலை செய்பவர்கள் பெரும்பாலும் குறைந்த ஊதியத்திற்காகவும், பாதுகாப்பு இல்லாமலும் பணியாற்றி வருகின்றனர். ஆனால், ப்ரான்டோ மூலம் பணியாற்றும் பணியாளர்களுக்கு முறையான தொழில்முறை பயிற்சி அளிக்கப்படுகிறது. பணியிடத்தில் பாதுகாப்பு மற்றும் மரியாதை உறுதி செய்யப்படுகிறது.

அவசரக் காலங்களில் உதவும் வகையில் செயலியில் SOS வசதி செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்குத் தேவையான சட்ட மற்றும் மருத்துவ உதவிகளையும் இந்நிறுவனம் கவனித்துக்கொள்கிறது.

இதன் மூலம், இந்தத் துறையில் பணியாற்றும் ஆயிரக்கணக்கான பெண்கள் மற்றும் ஆண்களுக்கு ஒரு கண்ணியமான வேலைவாய்ப்பை அஞ்சலி பெற்றுத் தந்துள்ளார்.

anjali

அஞ்சலியின் இலக்கு இதோடு நின்றுவிடவில்லை. வரும் ஆண்டுகளில் இந்தியாவின் இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களுக்கும் தனது சேவையை விரிவுபடுத்த அவர் திட்டமிட்டுள்ளார். இந்தியத் தொழில்நுட்பத் துறையில் 25 வயதிற்குட்பட்ட ஒரு பெண், இவ்வளவு பெரிய மதிப்பிலான நிறுவனத்தை உருவாக்கியிருப்பது உலக அளவில் கவனம் ஈர்த்துள்ளது. ஃபோர்ப்ஸ் மற்றும் ஃபார்ச்சூன் போன்ற இதழ்கள் அஞ்சலியைப் பாராட்டியுள்ளன.

“வாய்ப்புகள் எப்போதும் நமக்கு முன்னால் இருக்கும், அதைத் துணிச்சலாக எதிர்கொள்வதே வெற்றி,” என்று கூறும் அஞ்சலி சார்தனா, இன்றைய இந்திய இளம்பெண்களுக்கு ஒரு உத்வேகமாகத் திகழ்கிறார்.

அமெரிக்கப் பட்டப்படிப்பு, கைநிறைய ஊதியம் என அனைத்தையும் ஒதுக்கிவிட்டு, தனது சொந்த மண்ணின் பிரச்சினையைத் தீர்க்க முன்வந்த அவரது செயல், உண்மையான நாட்டுப்பற்று மற்றும் தொழில்முனைவோர் பண்பிற்குச் சிறந்த எடுத்துக்காட்டாகும்.

100 மில்லியன் டாலர் என்பது ஒரு தொடக்கம் மட்டுமே. அஞ்சலி சார்தனா போன்ற இளம்பெண்கள் இந்தியாவின் எதிர்காலப் பொருளாதாரத்தை மாற்றி அமைப்பார்கள் என்பதில் ஐயமில்லை.


Edited by Induja Raghunathan

facebook twitter