"சிறப்புஈனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு
ஆக்கம் எவனோ உயிர்க்கு."
விளக்கம்: அறத்தின்பால் ஈடுபாடு கொண்டு அதன்படி செயல்படுபவர்களுக்குத் தான் சிறப்புகளும், செல்வமும் வந்து சேரும்.
நம் வாழ்வில் சந்திக்கும் சில மனிதர்கள் பெரும் நல்மாற்றத்தை ஏற்படுத்துவார்கள், ஒரு நல்ல புத்தகத்தை போல... இன்னும் சொல்லப் போனால் புத்தகத்தை விட தெளிவாகவும், விரைவாகவும், கற்பித்து கடந்துச் செல்வர். அப்படியொரு தியாகச்சுடரைப் பற்றி தான் இக்கட்டுரையில் நாம் பார்க்கப் போகிறோம்.
கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன்
ஏழை மக்களுக்காக வாழ்வை தியாகம் செய்த கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன்
கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் - நிலமில்லா ஏழை எளிய மக்களுக்காக வாழ்நாள் முழுக்கப் போராடி, பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை வழங்கிக்கொண்டிருக்கும் சுதந்திரப் போராட்ட வீரர். கணவர் சங்கரலிங்கம் ஜெகந்நாதனுடன் இணைந்து, சமூக ஒடுக்குமுறைகளுக்கு எதிராக காந்திய வழியில் போராடியவர். இந்தியாவில் இவர் பாதங்கள் படாத இடங்களை எண்ணிச் சொல்லிவிடலாம். எளிய மக்களுக்கான போராட்டக் களங்கள் இவரை எல்லா திசைகளிலும் இழுத்துச் சென்றிருக்கிறது.
1926-ல் பிறந்தார் கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன், 100 வயதின் உடல் நடுக்கம், தளர்வுகள் இருந்தாலும், பேச்சில் உறுதியும் போராட்டக் குணமும் கொஞ்சமும் குறையவில்லை. திண்டுக்கல்லில் இயங்கிவரும் காந்திகிராமம் கிராமிய பல்கலைகழகத்தில் மகளுடன் வசித்துக்கொண்டிருக்கும் கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதனை 78-வது சுதந்திர தினத்தையொட்டி யுவர்ஸ்டோரி தமிழ் குழுவினர் சந்தித்தோம்.
நூறு ஆண்டுகள்… அவரின் முகத்தில் காணப்படும் ஒவ்வொரு சுருக்கமும் ஒரு கதையைச் சொல்கிறது. எளிய மக்களுக்காக தனது வாழ்வையே அர்ப்பணித்த சுதந்திரப் போராட்டத் தியாகி கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் எங்களுடன் பகிர்ந்த வாழ்க்கை அனுபவங்கள் இதோ:
சுதந்திர போராட்ட தியாகி கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன்
ஆரம்பக் கல்விக்கான போராட்டம்:
“என்னோட சொந்த ஊரு திண்டுக்கல் மாவட்டத்துக்குள்ள இருக்குற அய்யங்கோட்டைங்குற ஒரு சின்ன கிராமம். அப்பா ராமசாமி, அம்மா நாகம்மாளள். எங்க வீட்டுல மொத்தம் 12 பிள்ளைங்க. நான் 5-வது பிள்ளை. எங்க அண்ணனுங்கல்லாம் படிச்சாங்க. பொம்பளப்புள்ளைன்னு என்னைப் படிக்க வைக்கல. சின்ன வயசிலேயே கல்யாணம் பண்ணி வைக்கச் சொல்லி அப்பாகிட்ட என் மாமா சண்டையே போட்டாரு. ஆனா, என் எண்ணமெல்லாம் படிப்புமேல மட்டும்தான் இருந்தது. எங்க அண்ணன் முனியாண்டி மதுரையில படிச்சுக்கிட்டிருந்தார். அவர்கிட்ட, ‘நீ மட்டும் படிக்கிற, நான் படிக்கக்கூடாதா'ன்னு கேட்டேன். என்னைப் புரிஞ்சுக்கிட்ட அண்ணன், வீட்டுல யார்கிட்டேயும் சொல்லாம என்னை மதுரைக்குக் கூட்டிக்கிட்டுப் போயி ஸ்கூலில் சேர்த்து விட்டுட்டாரு.
”அப்போதான், சமூக சேவை செய்துகொண்டிருந்த செளந்திரம்மா அறிமுகமானாங்க. அவங்க இல்லத்துல தங்கிதான் படிச்சேன். என்னை மாதிரி எத்தனையோ பெண்களுக்கு ஆதரவுக் கரம் நீட்டி, கல்வி, உணவு கொடுத்து முன்னேற்றினாங்க. அவங்களோட ஆதரவால்தான் கல்வியையும், சேவை மனப்பான்மையையும் கத்துக்கிட்டேன்,” என, தனக்கே உரித்தான உடல் நடுக்கத்துடன், தனது ஆரம்பக் கால பயணத்தை மெல்லிய குரலில் பொறுமையாக கூறினார் கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன்.
கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன்
காந்திய சிந்தனையால் வழிநடத்தப்பட்ட வாழ்க்கை:
1942-ல் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோது, காந்தியை நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்தச் சந்திப்பே வாழ்நாள் முழுதும் இவரை காந்திய சிந்தனைக்குள் இழுக்க தூண்டுக்கோலாக அமைந்தது.
பிறகு 1948-ல் உருவான காந்தி கிராம ஆசிரமத்தின் செயலாளர் ஆனார் கிருஷ்ணம்மாள். காந்தி கிராம ஆசிரமத்தில் இணைந்த பெண்களுக்குப் பயிற்சி அளிக்கும் பொறுப்பை ஏற்றார்.
1950 முதல் சர்வோதயா இயக்கத்தினருடன் இணைந்து சமூகப்பணிகளை மேற்கொண்டார். அதன்பிறகுதான், வினோபா பாவேவுடன் இணைந்து, பூதான இயக்கத்தில் கலந்து கொண்டு இந்தியா முழுவதும் பயணம் செய்தார். நிலமில்லாதவர்களுக்கு நிலம் கிடைக்கச் செய்யும் போராட்டமே இவரின் வாழ்நாள் பணியாக மாறியது.
வார்தா ஆசிரமத்தில் சந்தித்த சங்கரலிங்கம் ஜெகந்நாதனை காந்தியின் ஆணைப்படி ஜே.சி. குமரப்பாவின் தலைமையில் இந்திய விடுதலைக்குப்பின் 6, ஜூலை 1950-ல் திருமணம் செய்து கொண்டனர்.
கிருஷ்ணம்மாள் & கணவர் சங்கரலிங்கம் ஜெகந்நாதன்
1950-1952 ஆண்டுகளில் வினோபா பாவே ஆரம்பித்த அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க பூதான இயக்கம் மூலம், நிலமில்லாத ஏழை மக்களுக்கு சுமார் நான்கு மில்லியன் ஏக்கர் நிலங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டன. அந்தப் போராட்டத்தில் முன்னணியில் நின்றவர் கிருஷ்ணம்மாள்.
மறக்க முடியாத போராட்டம் – கீழ்வெண்மணி
கீழ்வெண்மணி படுகொலைக்காக நியாயம் கேட்டு எழுந்த போராட்டம் இவரது வாழ்க்கையின் திருப்புமுனை ஆனது. டிசம்பர் 25, 1968-ல் நாகை மாவட்டம் கீழ்வெண்மணியில் நாற்பத்தியிரண்டு விவசாயிகள் கொளுத்தப்பட்ட சம்பவத்திற்குப் பிறகு சர்வோதயா அமைப்பிலிருந்து கருத்து வேறுபாடு காரணமாக வெளியேறிய கிருஷ்ணம்மாள், கீழ்வெண்மணியில் மக்களுக்கு ஆதரவாகப் போராடி சிறைசென்றார்
பிறகு "உழுபவனின் நில உரிமை இயக்கம்"(லாப்டி) (LAFTI: Land for Tillers’ Freedom) என்னும் அமைப்பை 1981-ல் தொடங்கிய கிருஷ்ணம்மாள். கீழ்வெண்மணியில் பாதிக்கப்பட்ட எழுபத்து நான்கு குடும்பங்களுக்கு எழுபத்து நான்கு ஏக்கர் நிலத்தை அரசின் மூலம் அளிக்கும் வரை தொடர்ந்து போராடினார்.
கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன்
அதுமட்டுமின்றி, தனக்கு தானமாகக் கிடைத்த பத்தாயிரம் ஏக்கர் நிலத்தையும் ஏழை எளிய மக்களுக்கே பிரித்துக் கொடுத்ததோடு, கணவர் ஜெகநாதனுடன் இணைந்து பீஹாரில் நிலக்கிழார்களுடன் போராடி கிட்டத்தட்ட 23,000 ஏக்கர் நிலத்தை மீட்டு ஏழை எளிய மக்களுக்கு பகிர்ந்தளித்தார் கிருஷ்ணம்மாள். இவர் பெற்றுத் தந்த அனைத்து நிலங்களையும், அந்தந்த குடும்பத்தின் பெண்களின் பெயரில் பதிவு செய்தார். ஏனெனில், பெண்களுக்கும் சொத்துரிமை அவசியம் வேண்டும் என்பதே இவரது முக்கியக் கொள்கையாக இருந்தது.
இவருடைய இரண்டாம் காலகட்டத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, தாக்குப்பிடிக்கும் பொருளியல் ஆகியவற்றுக்காக காந்திய வழியில் போராடினார். 1986-ல் கீழத்தஞ்சை கடலோரத்தில் சூழ்நிலை சீர்கேட்டை ஏற்படுத்தும் இறால் பண்ணைகள் அமைக்கப்பட்டபோது அவற்றை மூடுவதற்கான மக்கள் போராட்டங்களை முன்னெடுத்தார் கிருஷ்ணம்மாள். சட்டத்தின் உதவியுடனும், மக்கள் அமைப்புகளின் பின்புலத்துடனும் அவற்றை மூடுவதில் வெற்றிபெற்றார்.
இவருடைய போராட்டங்கள் அனைத்தும் மக்களை ஒருங்கிணைத்து வன்முறையற்ற நீடித்த போராட்டங்களை நிகழ்த்துவதும், அதற்கு முடிந்தவரை சட்டத்தைத் துணைகொள்வதும் இவரது வழிகள். பெரும்பாலான போராட்டங்களில் நீண்டகால அளவில் வெற்றியை அடைந்தவர் கிருஷ்ணம்மாள் பாட்டி.
இவரது தன்னலமற்ற சேவையை பாராட்டி 1989-ம் ஆண்டு இந்திய அரசின் உயரிய விருதான பத்மஸ்ரீ விருதும் 2020-ம் ஆண்டு பத்மபூஷண் விருதும் இவருக்கு வழங்கப்பட்டது.
கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன்
இறுதியாக இந்தியா சுதந்திரம் அடைந்து 79 வருடங்கள் ஆகிவிட்டது. இந்தியாவின் வளர்ச்சி எப்படி இருப்பதாக நினைக்கிறீர்கள் என்று வினவியபோது...?
“79 வருடங்கள் ஆகிவிட்டது சுதந்திரம் பெற்று… ஆனா, இன்னும் பல பேருக்கு சோறு, வீடு, நிலம் கிடைக்கல. உழைக்கிற மக்கள்கிட்டதான் நிலம் இருக்கணும், உழைக்காதவர்களிடம் இருக்கக்கூடாது – இதுதான் காந்தியும் வினோபாவும் சொன்னது. ஆனா இன்னும் அந்த நிலை மாறல. இது உண்மையான சுதந்திரமா?” என கேள்வி எழுப்புகிறார் கிருஷ்ணம்மாள்.
இப்போ உடம்பு சோர்வாக இருந்தாலும், எனக்கு இன்னும் ஆற்றல் இருக்கிறது. என்னோட வாழ்க்கை மக்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட வாழ்க்கை. இந்தப் போராட்டக் களத்தில் எனக்கு எப்போதுமே சலிப்பு ஏற்பட்டதில்ல. ஏழைகள் வெற்றியடையவேண்டும் என்பது மட்டும்தான் எனது நோக்கமாக இருந்தது, இப்போதும் இருக்கிறது,” என உறுதியுடன் கூறினார் கிருஷ்ணம்மாள்.
கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன்
இவரின் வாழ்க்கை நமக்கு நினைவூட்டுவது யாதெனில்!
“சுதந்திரம் என்பது வெறும் போராட்டத்தின் முடிவு அல்ல, அது ஒவ்வொரு தலைமுறையிலும் தொடர வேண்டிய பொறுப்பு. இன்றைய தலைமுறை கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதனை ஒரு வரலாறு என்று பார்ப்பதற்குப் பதிலாக, வாழ்க்கை, அன்பு, மற்றும் சேவையின் வழிகாட்டியாகக் எடுத்துக்கொள்ளவேண்டும்...”