பலரின் கனவு வேலை என்று கருதப்படும் கார்ப்பரேட் வங்கி துறையில், 24 வயதான சிராக் மதான் என்பவரது அனுபவம் முற்றிலும் மாறுபட்டதாக இருந்தது. அதனால் அவர் என்ன செய்தார் என்ற கதைதான் இது.
ஐஐடி டெல்லி பட்டதாரியான மதான், ஆண்டுக்கு ரூ.17 லட்சம் என்னும் கனவுச் சம்பள வேலையை உதறிவிட்டு மன ஆரோக்கியமே முக்கியம் என்கிறார். இது வலைத்தளங்களில் பெரும் விவாதங்களைக் கிளப்பியுள்ளது.
முதலில் 9 முதல் 5 வரை என கூறப்பட்ட வேலை நேரம், விரைவில் காலை 9 மணி முதல் மாலை 7 மணி வரை நீளும் கடுமையான பணிச்சுமையாக மாறியது. ஐந்து நாள் வேலை வாரம், ஆறு நாள் வேலைக்கு மாறி, ஓய்வு நேரம் என்றதே இல்லாத நிலை உருவானது.
“வேலை விட்டு வெளியேறியது ஒரு திடீர் முடிவு அல்ல; அதிகரித்த வேலை அழுத்தம் மற்றும் வேலைக்கும் ஓய்வுக்குமான சமநிலையற்ற வாழ்க்கைதான் காரணம். வேலை சூழல் எவ்வளவு கடுமையாக இருந்தது என்றால், உணவு இடைவேளையும் 10–15 நிமிடங்களுக்குள் முடிக்க அழுத்தம் கொடுக்கப்பட்டது. மேலும், உடல்நலக் காரணங்களுக்குக் கூட விடுப்பு எடுப்பது சுலபமில்லை; ஒவ்வொரு ‘சிக்’ லீவுக்கும் விளக்கம் அளிக்க வேண்டிய கட்டாயம் இருந்தது,” என்கிறார்.
இது மட்டும் அல்ல, ஊழியர்கள் மீது மிகுந்த விற்பனை இலக்குகள் சுமத்தப்பட்டிருந்தன. ரூ.10 கோடி மதிப்பிலான டீல்களை முடிக்க வேண்டிய அழுத்தம் தொடர்ந்து இருந்தது. இலக்கை எட்ட முடியாதபோது, மேலதிக அழுத்தமும், கடுமையான செயல்திறன் மதிப்பாய்வுகளும் தொடர்ந்தன, என்கிறார் மதான்.
சிராக் மதான்
எது வாழ்க்கை? உயர்ந்த சம்பளம்- ஆடம்பர வாழ்க்கையா? அல்லது மன ஆரோக்கியத்துடன் கூடிய வாழ்க்கையா? எது சிறந்தது என்பதில் மதான் மன ஆரோக்கியத்தைத் தேர்வு செய்தார். வேலையை உதறினார்.
சமூக வலைதளங்களில் பலரும் அவருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளனர். சிலர் தங்களது அனுபவங்களையும் பகிர்ந்துள்ளனர்.
“நானும் 23 வயதில் Axis Bank வேலை விட்டேன்; இப்போது SBI Card-ல் வேலை செய்கிறேன். சூழல் இன்னும் சிரமமாக இருந்தாலும், குறைந்தபட்சம் தவறான விற்பனை செய்ய வேண்டிய நிலை இல்லை,” என்று ஒருவர் கூறினார்.
மற்றொருவர், “வங்கித் துறையில் தவறான விற்பனை அதிகமாகிறது; வாடிக்கையாளர்களுக்கு முழு தகவல் இல்லாமல் பொருட்கள் விற்கப்படுகின்றன,” என்று குறிப்பிட்டார்.
மதானின் கதை இன்றைய இளம் தலைமுறைக்கு ஒரு முக்கியமான உண்மையை வெளிப்படுத்துகிறது — உயர்ந்த சம்பளம் மட்டுமல்ல, மன ஆரோக்கியமும் சம முக்கியத்துவம் வாய்ந்தது என்ற உண்மைதான் அது.