
தினமும் நூற்றுக்கணக்கான விமானங்கள் ரத்து, பயணத்திற்கு திட்டமிட்டிருந்த பல்லாயிரக்கணக்கான பயணிகள் தவிப்பு... என கடந்த ஒரு வாரமாக ஊடகங்களில் அதிகமாக பேசப்பட்டு வரும் வார்த்தை ‘Indigo’.
கல்வி, பணி நிமித்தம், மருத்துவத் தேவைகளுக்காக, சுற்றுலா, என விமான சேவையை நம்பி வெளி இடங்களுக்குச் சென்றிருந்தவர்கள் மற்றும் செல்லத் திட்டமிட்டிருந்தவர்கள், இந்தத் திடீர் விமானச் சேவை பாதிப்பால், என்ன செய்வதென்றே தெரியாமல் திணறிப் போனார்கள்.
நம்மைச் சுற்றி என்னதான் நடக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ளவே அவர்களுக்கு சிறிது நேரம் பிடித்தது. இன்னமும் இந்த விவகாரத்தில் என்னதான் நடக்கிறது எனக் குழம்பிப் போய் இருப்பவர்களும் ஏராளம்.
தற்போது கொஞ்சம் கொஞ்சமாக இண்டிகோ விமான சேவைகள் இயல்புநிலைக்குத் திரும்பி வருவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ள நிலையில், கடந்த ஒரு வாரமாக விமான சேவையில் என்னதான் நடக்கிறது? ஏன் இந்த அதிரடி விமான ரத்துக்கள்? இண்டிகோவின் கவனக்குறைவால்தான் லட்சக்கணக்கான பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனரா? முறைப்படி அவர்களுக்கு டிக்கெட் ரத்து செய்யப்பட்டிருப்பதற்கான கட்டணங்கள் வழங்கப்பட்டு விட்டதா? ஏன் இது தேசிய நெருக்கடியாக மாறியது? என இப்படி ஒவ்வொருவர் மனதிலும் எழும் முக்கியக் கேள்விகளுக்குப் பதிலாக இதோ ஒரு விரிவானத் தொகுப்பு.

Indigo - இந்திய வான்சேவையின் ராஜா
1,840 உள்நாட்டு சேவைகள் மற்றும் 460 சர்வதேச சேவைகள் என நாளொன்றுக்கு சுமார் 2,300 விமான சேவைகளை வழங்கி, இந்திய விமானப் போக்குவரத்தில் தவிர்க்க முடியாத முக்கியப் பங்காற்றி வரும் இண்டிகோ நிறுவனம், கடந்த 2005ம் ஆண்டு ராகுல் பாட்டியா மற்றும் ராகேஷ் கங்வால் என இரண்டு விமானப் போக்குவரத்து நிபுணர்களால் ஆரம்பிக்கப்பட்டது.
குறைவான கட்டணங்கள், நேரம் தவறாமை, எளிமையான அணுகுமுறை போன்ற காரணங்களால், 2010ம் ஆண்டு இந்தியாவின் 3வது மிகப்பெரிய விமான நிறுவனமாக உயர்ந்த இண்டிகோ நிறுவனம், 2012ம் ஆண்டு நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. . இந்தியாவின் மொத்த உள்நாட்டு விமான சேவையில், 2013ல் சுமார் 32 சதவீதமாக இருந்த இண்டிகோவின் சந்தைப் பங்கு இப்போது 65 சதவீதமாக உயர்ந்துள்ளது.
அதிரடியாக அதன் விமானச் சேவைகளின் எண்ணிக்கையும், அதில் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கையும் ஆண்டுதோறும் உயர்ந்து வருகிறது. குறுகிய காலத்திலேயே இந்திய வான்சேவையின் ராஜா என அழைக்கப்படும் அளவிற்கு அதன் வளர்ச்சி அமைந்தது.
இப்படி வெளிப்படையாக தொழில்ரீதியாக இண்டிகோவின் வளர்ச்சி கொண்டாடப்பட்டாலும், அதன் ஊழியர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதில் அந்நிறுவனம் அதிக ஆர்வத்தைக் காட்டவில்லை. அந்த அலட்சியம்தான் இன்று லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு, விமானச் சேவைகள் பாதிக்கப்பட்டு, தேசிய நெருக்கடியாக பன்னாட்டு ஊடகங்களின் பேசுபொருள் ஆகும் அளவிற்கு கொண்டு வந்து விட்டுவிட்டது. இதுவரை கண்டிராத அளவுக்கு விமான போக்குவரத்தில் மிகப்பெரிய பிரச்சனையையும் அது ஏற்படுத்தி விட்டது.

இண்டிகோ சறுக்கியது எங்கே?
சமீபகாலமாக அதிகரித்து விமான விபத்துக்கள் மற்றும் வேலைப்பளு குறித்த விமானிகளின் கோரிக்கைகளைக் கருத்தில் கொண்டு, விமானிகளுக்கான பணி நேர வரம்பு (FDTL) விதிகளை உருவாக்கியது டிஜிசிஏ. விமானிகளுக்கான வாராந்திர ஓய்வு நேரத்தை 36 மணி நேரத்தில் இருந்து 48 மணி நேரமாக உயர்த்துவது உள்ளிட்ட பல முக்கிய அம்சங்கள் அதில் இடம் பெற்றிருந்தன.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே இது குறித்து அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்தபோதும், விமான நிறுவனங்கள் தங்கள் விமானப் பணியாளர்களின் பணிகளை திட்டமிடுவதற்காக, அதன் அமலாக்கத்தை ஒரு வருடம் தள்ளிப் போட்டது. ஆனால், அப்போதே இதை முழுமையாக அமல்படுத்தும்போது, பெருமளவு விமான சேவைகள் ரத்து செய்யப்படலாம், என விமான நிறுவனங்கள் எச்சரித்தன.
இருந்தபோதும், இந்தாண்டு ஏப்ரலில் டெல்லி உயர்நீதிமன்றத்தை அணுகி, இந்த அமலாக்கத்தை செயல்படுத்த அனுமதி பெற்றன விமானிகளின் சங்கங்கள். டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவின்படி, இந்த அமலாக்கமானது இரண்டு கட்டங்களாக செயல்படுத்தப்பட முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, கடந்த ஜூலை 1ம் தேதி முதல், வாராந்திர ஓய்வு நேரத்தை 36 மணி நேரத்திலிருந்து 48 மணி நேரமாக அதிகரிப்பது உள்ளிட்ட பல விதிகள் அமல்படுத்தப்பட்டன. இரண்டாம் கட்டமாக, விமானிகளுக்கு இரவு நேரப் பணி வழங்குவது தொடர்பான நடைமுறைகள் நவம்பர் 1 முதல் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டன.
ஏற்கனவே விமானிகளின் பற்றாக்குறையால் போராடி வந்த இண்டிகோ, இந்த அமல்முறைகளால் பெரிதும் பாதிக்கப்பட்டது. விமானிகளை தங்கள் விடுமுறைகளை ரத்து செய்து விட்டு, மீண்டும் பணிக்குத் திரும்பும்படி கேட்டுக் கொள்ளப்பட்டது. ஆனால், அதற்கு அவர்கள் ஒத்துழைக்காததால், விமானங்களை இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டது.

விமானங்கள் ரத்து
கடந்த வாரம் இந்தப் பிரச்சினை பூதாகரமாக வெடித்தது. அட்டவணையிடப்பட்ட விமானங்களை இயக்க, போதுமான விமானிகள் மற்றும் பிற பணியாளர்கள் இல்லாததால், வேறு வழியின்றி அதிக விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் கிட்டத்தட்ட 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால், உள்நாட்டு விமான சேவையோடு, பன்னாட்டு விமானங்களும் பாதிக்கப்பட்டன.
இதனால் பெரும் சிரமத்திற்கு ஆளான பாதிக்கப்பட்ட லட்சக்கணக்கான பயணிகள் தங்கள் பயணச்சீட்டை ரத்து செய்யத் தொடங்கினர். பலரது லக்கேஜுகளும் இண்டிகோ நிறுவனத்திடம் சிக்கிக் கொள்ள, அதனையும் திரும்பப் பெறும் முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றனர். இதனால் விமான நிலையங்களில் பயணிகளின் கூட்டம் அலைமோதியது.
மக்களின் இந்த அசௌகரியத்தை தங்களுக்கு ஏற்ற வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்ட மற்ற விமான நிறுவனங்களும், தனியார் பேருந்துகளும் தங்கள் கட்டணங்களை அதிரடியாக உயர்த்தின. ஏற்கனவே இண்டிகோ விமானத்தில் பதிவு செய்த டிக்கெட் கட்டணம் திரும்பக் கிடைக்காத நிலையில், இந்த அதிரடிக் கட்டணங்களால் மக்கள் மேலும் சிரமத்திற்கு ஆளாகினர்.
மக்களின் இந்த அவதியைக் குறைக்கும் விதமாக, ரயில்களில் பெட்டிகளின் அளவை அதிகப்படுத்தியது ரயில்வே. விமானக் கட்டணங்கள் எவ்வாறு இருக்க வேண்டும் என்பது தொடர்பான நிர்ணயமும் அறிவிக்கப்பட்டது. அதோடு, பாதுகாப்பு விதிகளில் இருந்து அடுத்தாண்டு பிப்ரவரி 10ம் தேதி வரை தளர்வும் அறிவிக்கப்பட்டது. இதனால், மெல்ல மெல்ல இண்டிகோ விமான சேவைகள் மீண்டும் இயல்புநிலைக்குத் திரும்பத் தொடங்கியுள்ளன.
இது ஒருபுறம் இருக்க, இந்த குழப்பம் தொடர்பாக விசாரணைக் குழு அமைத்த விமான போக்குவரத்து இயக்குநரகம், உரிய விளக்கம் அளிக்கக் கோரி இண்டிகோவிற்கு நோட்டீஸ் அனுப்பியது. அந்த நோட்டீஸிற்கு பதில் அளிக்கும் விதமாக, சில தகவல்களை வெளியிட்டுள்ளது இண்டிகோ.

பயணிகளுக்கு ரூ.827 கோடியை திருப்பித் தந்த இண்டிகோ
இண்டிகோ நிறுவனம் தனது எக்ஸ் பக்கத்தில், இது தொடர்பாக வெளியிட்டுள்ள பதிவில் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது:
- விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு, டிக்கெட் கட்டணமான 827 கோடியை திருப்பித் தந்துள்ளது. (இது நவம்பர் 21ம் தேதி முதல் டிசம்பர் 15ம் தேதி வரை ரத்து செய்தவர்களுக்கானத் தொகை ஆகும்)
- நேற்று முன் தினம் 1,650 விமானங்கள் இயக்கப்பட்ட நிலையில், நேற்று இது 1800ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
- மொத்தமுள்ள 138 இடங்களில் ஒரு சில இடங்களைத் தவிர, பிற பகுதிகளுக்கு சேவைகள் தொடங்கப்பட்டுள்ளன. 75 சதவீத விமானங்கள் குறித்த நேரத்தில் இயக்கப்பட்டன.
- கடந்த சில தினங்களுக்கு முன் 71%ஆக இருந்த எங்களது உரிய நேர சேவை, தற்போது 91%ஆக உயர்ந்துள்ளது.
- விமான ரத்துகள் தொடர்பாக முன்கூட்டியே பயணிகளுக்குத் தெரிவிக்கப்பட்டு விட்டது.
- கடந்த ஒரு வாரத்தில் (டிசம்பர் 1ம் தேதி முதல் 7ம் தேதி வரை) 9,500க்கும் மேற்பட்ட தங்குமிட அறைகள் ஏற்பாடு செய்யப்பட்டன.
- பயணிகளின் அலைச்சலைத் தவிர்க்க, 10 ஆயிரம் பேருந்துகள் மற்றும் வாடகைக் கார்கள் பயன்படுத்தப்பட்டன.
- இதுவரை மொத்தமுள்ள ஒன்பதாயிரம் உடைமைகளில், 4 ஆயிரத்து ஐநூறுக்கும் மேற்பட்ட உடைமைகள் உரியவர்களிடம் சேர்க்கப்பட்டு விட்டன. மீதமுள்ளவற்றையும் 36 மணி நேரத்தில் (நேற்றைய நேரக்கணக்குப்படி) உரியவர்களிடம் சேர்க்க இருக்கிறோம்.
- எல்லா தடங்கள் வாயிலாகவும், தினமும் இரண்டு லட்சத்திற்கும் அதிகமான வாடிக்கையாளர்களுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறோம்.
இண்டிகோ விமான சேவையைப் பாதித்த 5 காரணங்கள்
கடந்த 2ம் தேதி தொடங்கி தற்போது வரை சந்தித்து வரும் பிரச்சினைகளுக்கு முக்கியக் காரணங்களாக, ஐந்து காரணங்களைத் தெரிவித்துள்ளது இண்டிகோ நிறுவனம்.
அதில் முதலாவதாக விமானிகளுக்கான பணி நேர வரம்பு (FDTL) விதிகளை காரணமாகத் தெரிவித்துள்ளது. அதற்கு அடுத்த இடங்களில் முறையே, குளிர்கால திட்டமிடல் மாற்றங்கள், வானிலை, சிறிய தொழில்நுட்பக் கோளாறுகள் மற்றும் போதிய விமானிகள் மற்றும் விமானப் பயணிகள் பற்றாக்குறை எனக் குறிப்பிட்டுள்ளது.
அதோடு, விமானிகளின் பணி அட்டவணையைத் திருத்த, தொடர்ந்து வேலை பார்த்துக் கொண்டிருப்பதாக தெரிவித்துள்ள இண்டிகோ, இன்னும் சில தினங்களில் சிக்கல் முழுமையாக தீர்க்கப்பட்டு விடும் என்றும் தெரிவித்துள்ளது.
கூடுதலாக, பயணிகள் தங்களது டிக்கெட் கட்டணத்தைத் திரும்பப் பெறும் வசதிக்காக, தானியங்கி முறையை (immediate auto refund facility) விரைவில் தொடங்க இருப்பதாகவும் இண்டிகோ கூறியுள்ளது.
இது ஒருபுறம் இருக்க, விமான சேவைகள் பாதிப்பால் பயணிகள் மட்டுமின்றி, 'இண்டிகோவின்' தாய் நிறுவனமான, 'இன்டர்குளோப் ஏவியேஷனின்' பங்குகளும் கடும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளன. கடந்த ஆறு வர்த்தக தினங்களில், அந்நிறுவனம் சுமார் 36 ஆயிரம் கோடியை இழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.