+

ரூ,30,000 கோடி சர்வதேச தங்க நகை பிராண்டாக ஜாய் ஆலுக்காஸ் உருவான கதை!

ஜாய் ஆலுக்காஸ் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் ஆலுக்காஸ் வர்கீஸ் ஜாய், தங்க நகை தொழிலின் வெற்றிகரமான பிராண்ட் உருவான விதம், அதன் விரிவாக்கம் மற்றும் எதிர்கால திட்டங்கள் பற்றி பகிர்ந்து கொள்கிறார்.

எழுபது ஆண்டுகளுக்கு முன், கேரள மாநிலத்தின் கலாச்சார மையம் என கருதப்படும் திருச்சூரில் ஆலுக்கா ஜோசப் வர்கீஸ்; உற்பத்தி, விநியோகம், பேக்கேஜிங் என பல்வேறு பிரிவுகளில் வர்த்தக வாய்ப்புகளை ஆய்வு செய்து கொண்டிருந்தவர், பொன்னான வாய்ப்பை கண்டறிந்தார்.

1956ல் அவர் தெளிவான நோக்கத்துடன் நகை தொழிலில் இறங்கினார். அழகிய நேர்த்தியான உயர்தர ஆபரனங்களை எல்லோரும் வாங்கக் கூடிய வகையில் ஒரு கடையை அமைக்க விரும்பினார். திருச்சூர் இடமும் பொருத்தமான தேர்வாக இருந்தது. அதிக தங்க வர்த்தகம் மற்றும் அதிக தங்க நகை உற்பத்திக்காக இந்தியாவின் தங்க நகரம் என கருதப்பட்டது.

உள்ளூர் பொற்கொல்லர்களுடன் இணைந்து செயல்பட்டு, தென்னிந்திய நகை வேலைப்பாடுகளில் கவனம் செலுத்திய ஜோசப் வர்கீஸ், 200 சதுர அடி கடையை, ஜாய் ஆலுகாஸ் ஜுவல்லரிக்கான அடித்தளமாக வளர்த்தெடுத்தார். இன்று இது ரூ.30,018 கோடி மதிப்பு மிக்க நகை பிராண்டாக உருவாகியுள்ளது.

”என் தந்தைக்கு, நகை என்பது ஆபரணம் மட்டும் அல்ல, உணர்வு, கொண்டாட்டம், பாரம்பரியத்தின் அடையாளம்,” என அவரது மகன் ஆலுக்காஸ் வர்கீஸ் நெகிழ்ச்சியோடு நினைவு கூர்கிறார்.
joy aluukaas

தூய்மை, நம்பிக்கை மற்றும் கைவேலைத்திறனில் ஜோசப் வர்கீஸ் கொண்டிருந்த ஈடுபாடு இன்னமும் ஜாய் ஆலுக்காஸ் குழுமத்திற்கு அடிப்படையாக அமைந்துள்ளது. ஜாய் ஆலுக்காஸ் என பிரபலமாக அழைக்கப்படும் ஆலுக்காஸ் வர்கீஸ் ஜாய், தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனராக வழிநடத்த இந்த நிறுவனம் பல நாடுகளிலும், புதிய தொழில்களிலும் விரிவாக்கம் செய்து வருகிறது.

சர்வதேச கனவு

ஆலுக்காஸ் வர்த்தகத்தில் நுழைந்த போது, இந்த பிராண்ட் கேரளாவில் நன்கறியப்பட்டதாக இருந்தது. ஆனால் அவர், தனது தந்தையின் கனவை சர்வதேச அளவில் கொண்டு செல்ல விரும்பினார்.

1988ல், அவர் கேரளாவுக்கு வெளியே அபுதாபியில் முதல் ஷோரூமை துவக்கினார். நிறுவன தொழில் பயணத்தில் முக்கிய மைல்கல்லாக அமைந்தது. அதே ஆண்டு தீபாவளியின் போது துபாயில் இன்னொரு ஷோரூமை துவக்கினார்.

“மத்திய கிழக்கு இயல்பான தேர்வாக இருந்தது. இந்திய வம்சாவளியினர் இந்திய கலாச்சாரம் மற்றும் தங்கத்துடன் ஆழமான பிணைப்பு கொண்டிருந்தது, எங்களது கேரள வர்த்தக வேருடன் இணைந்திருந்தது,” என்கிறார் ஆலுக்காஸ் வர்கீஸ். 

எனினும், இது எளிதாக இருக்கவில்லை.

”மிகச்சில இந்திய நகை கடைகளே இந்த பிராந்தியத்தில் நுழைந்திருந்தன. எந்த வரைபடமும் இல்லை, வர்த்தக ஆலோசகர்கள் இல்லை, புதிய கலாச்சாரத்திற்கு ஏற்ப மாறுவது உண்மையான சவாலாக இருந்தது,” என்கிறார்.

எனினும், துவக்கம் முதல் நிறுவனத்தை வழிநடத்திய, நம்பிக்கை, விடாமுயற்சி, சிறந்த தரம் ஆகியவை ஆரம்ப தடைகளை எதிர்கொண்டு, வாடிக்கையாளர் விசுவாசத்தை பெற உதவியது, என்கிறார்.

gold


பாரம்பரியம்

சமகால ரசனைக்கு ஏற்ப எங்கள் வடிவமைப்பு அமைந்திருக்கும் அதே நேரத்தில் இந்தியாவின் கலை செழுமையின் அடையாளமாக திகழும் பாரம்பரிய கைத்திறனை காப்பதில் பெருமை கொள்கிறோம், என்கிறார் ஆலுக்க்காஸ்.

”நிறுவனத்தின் வடிவமைப்புக்குழு பொற்கொல்லர்கள் மற்றும் சர்வதேச வல்லுனர்களுடன் இணைந்து, கலாச்சார வேர்களை கொண்டாடும் மற்றும் இன்றைய வாழ்வியலுக்கு பொருத்தமாக அமையும் நகைகளை உருவாக்கிறது,” என்கிறார்.

திருமண கலெக்‌ஷன், பிளாட்டினம் நகைகள், ஆண்களுக்கான நகைகள், குழந்தைகள் நகைகள், வெள்ளி அணிகலன்கள், நங்க நாணயங்கள், கட்டிகள் மற்றும் டிஜிட்டல் பரிசு கார்டுகள் உள்ளிட்டவற்றை இந்த பிராண்ட் வழங்குகிறது.

இளம் வாடிக்கையாளர்கள், பதின் பருவத்தினரை மனதில் கொண்டு, யுவா மற்றும் ஜாய் 18 நகைகள் மூலம், இலேசு ரக நகைப்பிரிவிலும் நிறுவனம் நுழைந்துள்ளது. ஒவ்வொரு நகையும் எங்கு தயாரானாலும், எங்கு விற்பனையானாலும், பல அடுக்கு தரக்கட்டுப்பாடு செயல்முறைக்கு உள்ளாவதாக, ஆலுக்காஸ் கூறுகிறார்.  

“எங்களிடம் மையமாக்கப்பட்ட வடிவமைப்பு, கொள்முதல் குழுக்கள், அதிநவீன உற்பத்தி வசதிகள், ஒவ்வொரு நிலையிலும் தீவிர தூய்மை மற்றும் கைத்திறன் கட்டுப்பாடுகள் உள்ளன,” என்கிறார்.

வடிவமைப்பு மற்றும் அபிவிருத்தி தவிர, தொழில்நுட்பம் மற்றும் சான்றிதழாக்காமும் பிராண்டின் செயல்முறை துல்லியத்தை வலுவாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

“பிஐஎஸ்-ன் ஹால்மார்கிங் முத்திரை, சர்வதேச சான்றிதழ் அமைபுகளை ஆகியவற்றை ஏற்றுக்கொண்ட ஆரம்ப கால நிறுவனங்களில் ஒன்றாக ஜாய் ஆலுக்காஸ் இருக்கிறது,” என்கிறார்.

தரவுகள், தேவை

தரவு, தேவை மற்றும் இந்திய வம்சாவளியினர் தான் நிறுவன முடிவுகளை தீர்மானிக்கும் அம்சங்களாகின்றன. நிறுவன குழு வாடிக்கையாளர் பழக்கங்கள், மக்கள் போக்கு மற்றும் பிராந்திய வாய்ப்புகளை புதிய சந்தையில் நுழையும் முன் ஆய்வு செய்கிறது.

ஒவ்வொரு முடிவும் உள்ளூர் கூட்டு, ஆய்வு, வாடிக்கையாளர்கள் புரிதலை அடிப்படையாகக் கொண்டவை, என்கிறார்.

இப்போது நிறுவனம், 190க்கும் மேலான ஷோரூம்களை கொண்டுள்ளது. எல்லாமே நிறுவனத்திற்கு சொந்தமானவை, இந்தியா, சிங்கப்பூர், மலேசியா, சவுதி அரேபியா, ஓமான், அமெரிக்கா, அமீரகம் உள்ளிட்ட 12 நாடுகளில் அமைந்துள்ளன.

இந்தியா நிறுவனத்தின் மிகப்பெரிய சந்தையாக அமைகிறது. 109 கடைகளுடன், 2025 நிதியாண்டில் ரூ.20,213 கோடி விற்பனை கொண்டுள்ளது. சர்வதேச வர்த்தகம் மூலம் ரூ.9,805 கோடி பெற்றுள்ளது. விற்பனை மற்றும் வருவாயில் அமீரகம் முன்னிலை வகிக்கிறது.

நிறுவனம் நுழையும் ஒவ்வொரு சந்தையிலும் உள்ளூர் தன்மைக்கு ஏற்ப தனது வடிவமைப்புகள், மார்க்கெட்டிங் மற்றும் விளம்பர உத்திகளை அமைத்துக்கொள்கிறது. அனைத்து சேனல் இருப்பை மேம்படுத்துவதிலும் கவனம் செலுத்தி வருகிறது.

“எங்கள் இ-காமர்ஸ் மேடை மற்றும் மொபைல் செயலி வேகமாக வளர்ந்து வருகின்றன. இது எங்கள் வீச்சை அதிகமாக்கி, இளம் மற்றும் தொழில்நுட்ப ஆர்வம் கொண்ட வாடிக்கையாளர்களை சென்றடைய உதவுகிறது,” என்று கூறும் ஆலுக்காஸ், கடைகளுக்கு மாறாக அல்லாமல் ஆன்லைன் வழியை அனைத்து சேனல்களிலும் சீராக இணைப்பதே நோக்கம், என்கிறார்.

தங்கம் விற்பனையில் அதிக பங்கு வகித்தாலும், இளம் வாடிக்கையாளர்கள் வைர நகைகளையும் விரும்புகின்றனர்.  

“நவீன அழகு மற்றும் தினசரி ஆடம்பரமாக பார்க்கும் இளம் வாடிக்கையாளர்களால் வைரை நகைகளுக்கான தேவை அதிகரிப்பதை காண்பதாக,” கூறுகிறார்.
gold

நகைகளை கடந்து..

இந்திய நகைகள் மற்றும் ரத்தின கற்கள் சந்தை இந்த ஆண்டு 85 பில்லியன் டாலர் மதிப்பு கொண்டது என்றும், 2030ல், 130 பில்லியன் டாலர் கொண்டிருக்கும் என்றும் தெரிவிக்கிறது. இந்த பிரிவில் நிறுவனம் தனிஷ்க், கல்யாண் ஜுவல்லர்ஸ், மலபார் கோல்ட் அண்டு டைமண்ட்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களுடன் போட்டியிருகிறது. இவைத்தவிர, புதிய நிறுவனங்களும் போட்டியில் உள்ளன. அண்மையில் புகழ்பெற்ற வடிவமைப்பாளர் சபயாசாச்சி, Tata CLiQ Luxury உடன் இணைந்து, டிஜிட்டல் நகைக்கடை மையத்தை துவக்கியுள்ளார்.

ஜாய் ஆலுக்காஸ் நிறுவனம், காலப்போக்கில் பேஷன் (ஜாய் அண்டு சில்க் மால்), நிதிச்சேவைகள், (ஜாய் ஆலுக்காஸ் எக்ஸேஞ்ச்), ரியல் எஸ்டேட் (ஜாய் ஆலுக்காஸ் லைப்ஸ்டைல் டவலப்பர்ஸ்) உள்ளிட்டவற்றில் விரிவாக்கம் செய்துள்ளது. ஒவ்வொரு வர்த்தகமும் சுயேட்சையாக செயல்படுகின்றன.

“விரிவாக்கம், குழுமத்தின் நிதி செயல்பாடுகளின் ஆழம் மற்றும் உறுதிக்கு உதவியுள்ளது. இந்த ஒருங்கிணைந்த தொகுப்பு சீரான வளர்ச்சிக்கு உதவி, ஒற்றைத்துறையை சார்ந்திருப்பதை தவிர்த்து, பல்வேறு துறைகளில் மதிப்பை உருவாக்க வழிசெய்கிறது,” என்கிறார் ஆலுக்காஸ்.

எதிர்கால திட்டம்

விரிவடைந்த வர்த்தகங்கள் மற்றும் வலுவான இந்தியா இருப்பை கொண்டுள்ள நிறுவனத்திற்கு பொது பங்கு வெளியீடு திட்டம் என்பது அடுத்த கட்டத்திற்கு பொருத்தமானது. கடந்த காலங்களில் இதற்கு மூன்று முறை முயன்று விலகியிருக்கிறது.

2011ல் முயற்சித்த பிறகு, 2022ல் செபியிடம் DRHP தாக்கல் செய்தது. எனினும், 2023 பிப்ரவரியில் பொருத்தமில்லை சந்தை சூழலால் விண்ணப்பத்தை விலக்கிக் கொண்டது.

“எங்களைப்பொருத்தவரை ஐபிஓ என்பது வேகமாக நிறைவேற்ற வேண்டிய மைல்கல் அல்ல, இந்த முடிவு எங்கள் நீண்ட கால தன்மை மற்றும் பங்குதாரர் மதிப்புடன் இணைந்திருக்க வேண்டும்,” என்கிறார்.

இருப்பினும், சந்தை நிலை சாதகமாகும் போது மற்றும் நிறுவன வளர்ச்சி பாதைக்கு ஏற்ப அமையும் போது பொது பங்கு வெளியீடு திட்டத்தை பரிசீலிப்போம், என்கிறார்.

நகைகளில் புதுமையாக்கம், சர்வதேச அளவில் பிராண்ட் இருப்பு வலுவாக்கம் மற்றும் கனடா, நியூசிலாந்து ஆகிய சந்தைகளில் விரிவாக்கம் செய்வது ஆகியவற்றை அடுத்த நிதியாண்டிற்கான திட்டமாக கொண்டுள்ளது. வாடிக்கையாளர் அனுபவத்தை மேம்படுத்த தொழில்நுட்ப திறனை பயன்படுத்திக்கொள்ளவும் திட்டமிட்டுள்ளது.

“நிறுவனத்தை ரூ.60,000 கோடி விற்றுமுதல் கொண்டதாக மாற்றுவது தான் அடுத்த ஐந்தாண்டுகளுக்கான எனது இலக்கு,” என்கிறார் ஆலுக்காஸ்.

ஆங்கிலத்தில்: டெபோலினா பிஸ்வாஸ், தமிழில்: சைபர் சிம்மன்


Edited by Induja Raghunathan

facebook twitter