‘ஏஐ யுகத்தில் ஐடி சட்டம் போதாது, புதிய சட்டம் தேவை’ - அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ்

02:49 PM Jun 10, 2026 | muthu kumar

தற்போதுள்ள தகவல் தொழில்நுட்ப (IT) சட்டம் உருவாக்கப்பட்ட காலத்துடன் ஒப்பிடும்போது, செயற்கை நுண்ணறிவு (AI) உலகம் முற்றிலும் மாறுபட்டதாக உள்ளது என்றும், அதனை ஒழுங்குபடுத்த புதிய சட்டம் தேவைப்படலாம் என்றும் மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

PTI செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது,

"இது மிகவும் சிக்கலான விஷயம். சில நடவடிக்கைகள் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் கட்டமைப்பின் கீழ் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆனால், 2000-ஆம் ஆண்டு தகவல் தொழில்நுட்பச் சட்டம் இயற்றப்பட்ட காலத்தின் உலகத்திலிருந்து செயற்கை நுண்ணறிவு உலகம் மிகவும் வேறுபட்டதாக இருப்பதால், புதிய சட்டம் தேவைப்படுகிறது என்று நான் நம்புகிறேன்."

AI-க்கு தனியான சட்டம் கொண்டு வரப்படுமா அல்லது ஐடி சட்டத்தில் திருத்தங்கள் மூலம் தொடர்ந்து ஒழுங்குபடுத்தப்படுமா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், அரசு இதுகுறித்து தொழில்துறையினருடன் ஆலோசனைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

"நாங்கள் தொழில்துறையினருடன் ஆலோசித்து வருகிறோம். எப்போதும் போல, எங்களின் நோக்கமும் அணுகுமுறையும் புதுமைக்கும் ஒழுங்குமுறைக்கும் இடையே சமநிலையை ஏற்படுத்துவதாக இருக்கும். புதுமைகள் தொடர்ந்து வளர வேண்டும்; அதே நேரத்தில் நமது குடிமக்கள் பாதுகாப்பாகவும் இருக்க வேண்டும்," என்றார்.

உலகம் முழுவதும் கொள்கை வகுப்பாளர்கள், உருவாக்கும் செயற்கை நுண்ணறிவு (Generative AI) தொழில்நுட்பத்தால் உருவாகும் டீப் ஃபேக் (Deepfake), தவறான தகவல் பரவல் மற்றும் இணையவழி பாதிப்புகள் போன்ற சவால்களை எதிர்கொள்ளும் வழிமுறைகள் குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகின்றனர்.

இந்த நிலையில், AI டீப் ஃபேக் உள்ளடக்கங்களை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்திய அரசு தகவல் தொழில்நுட்ப விதிமுறைகளை மேலும் கடுமையாக்கி வருகிறது.

இந்த ஆண்டின் பிப்ரவரி மாதத்தில், AI மூலம் உருவாக்கப்பட்ட அல்லது மாற்றியமைக்கப்பட்ட உள்ளடக்கங்களை கையாள்வதில் இணைய தளங்களுக்கு கடுமையான பொறுப்புகளை விதிக்கும் வகையில் புதிய விதிமுறைகள் கொண்டு வரப்பட்டன. அதன்படி,

X, Instagram உள்ளிட்ட தளங்கள், தகுதியான அதிகார அமைப்பு அல்லது நீதிமன்றம் சுட்டிக்காட்டும் டீப் ஃபேக் அல்லது செயற்கையாக உருவாக்கப்பட்ட உள்ளடக்கங்களை மூன்று மணி நேரத்திற்குள் நீக்க வேண்டும், என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், தகவல் தொழில்நுட்ப (இடைத்தரகர்கள் வழிகாட்டுதல்கள் மற்றும் டிஜிட்டல் ஊடக நெறிமுறைகள்) விதிகள், 2021-இல் செய்யப்பட்ட திருத்தங்கள் மூலம் AI உருவாக்கிய மற்றும் செயற்கையாக உருவாக்கப்பட்ட தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ வரையறைகள் வழங்கப்பட்டுள்ளன.

அந்த வரையறைகளின்படி, உண்மையானதாக அல்லது நம்பகமானதாக தோன்றும் வகையில் AI மூலம் உருவாக்கப்பட்ட அல்லது மாற்றியமைக்கப்பட்ட ஒலி, காட்சி மற்றும் ஒலி-காட்சி தகவல்கள் “செயற்கையாக உருவாக்கப்பட்ட தகவல்” என்ற பிரிவில் அடங்கும். அதேவேளை, சாதாரண திருத்தங்கள், அணுகல்திறன் மேம்பாடுகள் மற்றும் கல்வி அல்லது வடிவமைப்பு நோக்கத்திற்காக நல்லெண்ணத்துடன் செய்யப்படும் பணிகள் இந்த வரையறையிலிருந்து விலக்கு பெறுகின்றன.

மேலும், AI மூலம் உருவாக்கப்பட்ட உள்ளடக்கங்களுக்கு கட்டாய அடையாளக் குறியீடுகளை அறிமுகப்படுத்தும் திட்டத்தையும் மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. இதன்படி, செயற்கையாக உருவாக்கப்பட்ட தகவல் என்பதை தெளிவாகவும் தொடர்ந்து காணக்கூடிய வகையிலும், அந்த காட்சி முழுவதும் வெளிப்படுத்தும் லேபிள்கள் இடம்பெற வேண்டும் என்ற புதிய விதிமுறைகள் முன்மொழியப்பட்டுள்ளன.