
இந்தியாவில் தனது செயல்பாடுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், அமேசான் இந்தியா 2026ஆம் ஆண்டில் ரூ.2,800 கோடிக்கும் அதிகமாக முதலீடு செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. இந்த முதலீடு தொழிலாளர்களின் பாதுகாப்பு, ஆரோக்கியம் மற்றும் நிதி நலனை மேம்படுத்துவதோடு, நாட்டிலுள்ள அதன் லாஜிஸ்டிக்ஸ் வலையமைப்பையும் விரிவாக்கும் முயற்சியின் ஒரு அங்கமாக விளங்கும்.
இந்தத் திட்டம், 2030-க்குள் இந்தியாவில் $35 பில்லியன் முதலீடு செய்யும் நிறுவனத்தின் விரிவான உறுதியின் தொடர்ச்சியாகும். இதில் செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான டிஜிட்டல்மயமாக்கல், ஏற்றுமதி வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கம் ஆகியவை முக்கிய கவனமாக உள்ளன.

Amazon india
இந்த புதிய முதலீட்டின் ஒரு பகுதி ‘ப்ராஜெக்ட் ஆஷ்ரய்’ போன்ற தொழிலாளர் நல திட்டங்களுக்கு ஒதுக்கப்படும். இந்த திட்டம் டெலிவரி பணியாளர்களுக்கு ஓய்வு வசதிகளை வழங்குகிறது. மேலும், நாடு முழுவதும் மருத்துவ முகாம்கள் மூலம் சுகாதார சேவைகளையும் விரிவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. விபத்து மற்றும் மருத்துவ காப்பீடு பாதுகாப்பும் மேம்படுத்தப்படுவதோடு, அரசு ஆதரவு சமூக பாதுகாப்பு திட்டங்களின் பயன்களை தொழிலாளர்களுக்கும் அவர்களது சமூகத்தினருக்கும் விரிவுபடுத்தும் முயற்சியும் மேற்கொள்ளப்படுகிறது.
“எங்களின் செயல்பாட்டு வலையமைப்பின் மையத்தில் மக்கள் இருக்கிறார்கள். இந்த முதலீடு பாதுகாப்பு, ஆரோக்கியம் மற்றும் நிதி நலனில் புதிய தரத்தை உருவாக்க உதவும், அதேசமயம் வேகமான மற்றும் நம்பகமான டெலிவரி வலையமைப்பை மேலும் விரிவாக்கும்,” என்று அமேசான் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவின் செயல்பாட்டு துணைத் தலைவர் அபினவ் சிங் தெரிவித்துள்ளார்.
இந்த நடவடிக்கை, 2025ஆம் ஆண்டில் செய்யப்பட்ட ரூ.2,000 கோடி முதலீட்டின் தொடர்ச்சியாகும். அந்த முதலீட்டின் மூலம் 17 பூர்த்தி மையங்கள், 6 வரிசைப்படுத்தும் மையங்கள் மற்றும் 75 கடைசி கட்ட டெலிவரி நிலையங்கள் தொடங்கப்பட்டன. மேலும், ‘Amazon Now’ எனப்படும் விரைவு வணிக சேவையும் அறிமுகப்படுத்தப்பட்டது, இது தற்போது முக்கிய நகரங்களில் 300க்கும் மேற்பட்ட மைக்ரோ-பூர்த்தி மையங்களுக்கு விரிவடைந்துள்ளது.
2026ஆம் ஆண்டில், இந்த விரைவு வணிக சேவையை மேலும் விரிவாக்கி, சில நிமிடங்களில் இருந்து சில நாட்களுக்குள் டெலிவரி செய்யும் திறனை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதன் கீழ், ‘Amazon Now’ சேவையின் பரப்பளவை இரட்டிப்பாக்கவும் புதிய நகரங்களுக்கு கொண்டு செல்லவும் நிறுவனம் நோக்கமிட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து, செயற்கை நுண்ணறிவு மற்றும் மெஷின் லெர்னிங் தொழில்நுட்பங்களில் முதலீடு அதிகரிக்கப்பட உள்ளது. இதன் மூலம் டிரைவர்களின் ஓட்டுநர் பழக்கங்களை கண்காணித்தல், டெலிவரி பாதைகளை மேம்படுத்துதல் மற்றும் வேலைபளுவை சமமாகப் பகிர்வு செய்வது போன்ற செயல்திறன் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேம்படுத்தப்படும்.
மேலும், ஆயுஷ்மான் பாரத் மற்றும் பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா போன்ற தேசிய திட்டங்களுடன் இணைந்து, ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கும் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட சமூக உறுப்பினர்களுக்கும் சுகாதாரம் மற்றும் நிதி சேவைகளை வழங்கும் முயற்சிகளும் மேற்கொள்ளப்படுகின்றன.
அதோடு, நீண்ட தூர லாரி டிரைவர்களுக்கான ‘Sushruta’ திட்டமும், தொழிலாளர்களின் குழந்தைகளுக்கான கல்வி உதவித்தொகை வழங்கும் ‘Pratidhi’ திட்டமும் மேலும் விரிவாக்கப்பட உள்ளன.