இந்தியாவில் விரைவான டெலிவரி சேவைகளில் தனது பங்கை அதிகரிக்கும் முயற்சியாக Amazon நிறுவனம் ‘Amazon Now’ சேவையை 100 நகரங்களுக்கு விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது. இதற்காக ரூ.2,800 கோடி (சுமார் $300 மில்லியன்) முதலீடு செய்யப்படவுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த திட்டத்தின் கீழ், 1,000-க்கும் மேற்பட்ட மைக்ரோ - புல்பில்மெண்ட் மையங்கள் உருவாக்கப்படவுள்ளன. இதன் மூலம் காய்கறிகள், உணவுப் பொருட்கள், தனிப்பட்ட பராமரிப்பு பொருட்கள், அழகு சாதனங்கள், சிறிய வீட்டு உபயோகப் பொருட்கள் போன்ற ஆயிரக்கணக்கான பொருட்கள் சில நிமிடங்களில் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும்.
இந்த சேவை புனே, ஹைதராபாத், சென்னை, கொல்கத்தா, ஜெய்பூர், லக்னோ, கொச்சி, அமிர்தசரஸ் மங்களூரு, விசாகப்பட்டணம், உள்ளிட்ட நகரங்களில் அறிமுகமாகிறது. மேலும், மும்பை, டெல்லி என்.சி.ஆர்.மற்றும் பெங்களூரு போன்ற நகரங்களில் சேவை மேலும் விரிவடைகிறது.
இந்த முதலீட்டின் மூலம் லாஜிஸ்டிக்ஸ் வலையமைப்பை மேம்படுத்துவதோடு, பணியாளர்களின் பாதுகாப்பு, ஆரோக்கியம் மற்றும் நிதி நலன்களும் மேம்படுத்தப்படவுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
நிறுவனத்தின் Everyday Essentials பிரிவின் துணைத் தலைவர் ஹர்ஷ் கோயல், வாடிக்கையாளர்கள் இந்த சேவையின் வேகம் மற்றும் தேர்வுகளை பாராட்டுவதாகவும், அதனால் சேவை விரிவாக்கம் வேகப்படுத்தப்படுவதாகவும் கூறினார்.
மேலும், 16,000-க்கும் மேற்பட்ட விவசாயிகளை நேரடியாக சப்ளை செயின்-இல் இணைத்து, அவர்கள் தங்கள் உற்பத்திகளை நேரடியாக விற்பனை செய்யும் வாய்ப்பையும் நிறுவனம் உருவாக்குகிறது.
விரைவான வர்த்தக நுழைவில் தாமதமானாலும் வலுவான உந்துதல்!
வேகம் மற்றும் வசதி குறித்த நுகர்வோரின் மாறிவரும் எதிர்பார்ப்புகளால், இந்தியாவின் விரைவு வர்த்தகத் துறை சூடுபிடித்து வரும் வேளையில் அமேசானின் இந்த விரிவாக்கம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிறுவனம் பாரம்பரியமாக அதே நாளில் மற்றும் அடுத்த நாளில் விநியோகம் என்பதில் கவனம் செலுத்தி வந்தாலும், 'நிமிடங்கள்' பிரிவில் போட்டியிடுவதற்கான ஓர் உத்தி ரீதியான மாற்றத்தை 'அமேசான் நவ்' எதிர்நோக்குகிறது.
உள்ளூர் வலையமைப்புகள், கிடங்குகள் மற்றும் இறுதிநிலை செயல்திறன் ஆகியவை மிக முக்கியமானதாக இருக்கும் ஒரு பிரிவில் பின்தங்கிய நிலையை ஈடுசெய்ய, அமேசான் கணிசமான மூலதனத்தையும் உள்கட்டமைப்பையும் பயன்படுத்தத் தயாராக உள்ளது
ஆயிரக்கணக்கான அத்தியாவசியப் பொருட்களை நிமிடங்களுக்குள் விநியோகம் செய்வதற்குத் தனது விரிவான தளவாடக் கட்டமைப்பு தொடர்ந்து ஆதரவளிக்கும் என்று அந்நிறுவனம் கூறியது.
ஒரு மில்லியனுக்கும் அதிகமான பொருட்கள் அதே நாள் விநியோகத்திற்குக் கிடைக்கின்றன என்றும், அதன் சந்தையில் 4 மில்லியனுக்கும் அதிகமான பொருட்கள் அடுத்த நாள் விநியோகிக்கப்படக்கூடியவை என்றும் அமேசான் கூறியுள்ளது.
Edited by Induja Raghunathan