அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனமான அமேசான், 2026 முதல் 2030 வரை இந்தியாவில் செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் கிளவுட் (Cloud) கட்டமைப்பை விரிவுபடுத்த கூடுதலாக 13 பில்லியன் அமெரிக்க டாலர் முதலீடு செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. இதன் மூலம், இந்தியாவில் நிறுவனத்தின் மொத்த முதலீட்டு உறுதி 48 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. இதற்கு முன்பு, 2025 டிசம்பர் வரை 35 பில்லியன் டாலர் முதலீடு செய்ய நிறுவனம் உறுதியளித்திருந்தது.
இந்த அறிவிப்பு, அமேசான் தலைமை நிர்வாக அதிகாரி ஆண்டி ஜாஸி மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் புதுதில்லியில் சந்தித்ததைத் தொடர்ந்து வெளியிடப்பட்டது.
அமேசான் வெளியிட்ட வலைப்பதிவு பதிவின்படி, இந்த 13 பில்லியன் டாலர் முதலீடு 2030-க்குள் இந்தியாவில் AI மற்றும் கிளவுட் உள்கட்டமைப்பை விரிவுபடுத்த பயன்படுத்தப்படும். இதன் மூலம், இந்தத் துறையில் அமேசான் மேற்கொண்டுள்ள மொத்த முதலீடு 21 பில்லியன் டாலரை தாண்டும்.
இந்த முதலீட்டின் மூலம், மும்பை மற்றும் ஹைதராபாத் நகரங்களில் உள்ள AWS தரவு மையங்களின் (Data Centres) திறன் விரிவுபடுத்தப்படும். இதனால், ஸ்டார்ட்அப் நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள் மற்றும் அரசு அமைப்புகள் தனிப்பயன் AI சிப்கள், நிர்வகிக்கப்பட்ட செயற்கை நுண்ணறிவுச் சேவைகள், பாதுகாப்பான மற்றும் நம்பகமான கிளவுட் தொழில்நுட்பங்கள், டெவலப்பர் கருவிகள் ஆகியவற்றை எளிதாகப் பயன்படுத்த முடியும்.
மேலும், AWS-ன் மும்பை மற்றும் ஹைதராபாத் பிராந்தியங்கள் இந்திய வாடிக்கையாளர்கள் தங்களது தரவுகளை நாட்டுக்குள்ளேயே பாதுகாப்பாக சேமித்துக்கொண்டு, மேம்பட்ட AI மற்றும் கிளவுட் சேவைகளைப் பயன்படுத்தும் வசதியை வழங்கும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.
தற்போது, இந்தியாவில் உள்ள இலட்சக்கணக்கான நிறுவனங்கள், ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் மற்றும் அரசு அமைப்புகள் AI பயன்பாடுகளை உருவாக்கவும், பயிற்சி அளிக்கவும், பெரிய அளவில் செயல்படுத்தவும் AWS சேவைகளைப் பயன்படுத்தி வருகின்றன. இதில் தேசிய சுகாதார ஆணையம், கவர்மெண்ட் இ-மார்க்கெட் பிளேஸ் (GeM), அப்பல்லோ டயர்ஸ், டெலிவரி பிசிக்ஸ்வாலா, ஆக்சிஸ் பேங்க் மற்றும் ஹெச்.டி.எஃப்.சி. பேங்க் உள்ளிட்ட பல நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன.
இந்த புதிய முதலீட்டின் மூலம், 2010 முதல் 2030 வரையிலான காலகட்டத்தில் இந்தியாவில் அமேசானின் மொத்த முதலீடு 88 பில்லியன் டாலரை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமேசான் தலைமை நிர்வாக அதிகாரி ஆண்டி ஜாஸி கூறுகையில்,
“ஒரு தசாப்தத்திற்கும் மேலாக முன்பு இந்தியாவுக்கு வந்தோம். அதன் பின்னர், எங்களது பல்வேறு வணிகங்கள் மூலம் வாடிக்கையாளர்கள், விற்பனையாளர்கள், டெவலப்பர்கள், ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் மற்றும் தொழில் நிறுவனங்களுக்கு சேவையாற்றி வருகிறோம். குறிப்பாக இ-காமர்ஸ், AI மற்றும் கிளவுட் வணிகங்களில் வலுவான வளர்ச்சியுடன் மிகச் சிறந்த வரவேற்பைப் பெற்றுள்ளோம்,” என்றார்.
மேலும், தனது இ-காமர்ஸ் மற்றும் துரித வணிக (Quick Commerce) சேவைகளை ஆதரிக்கும் செயல்பாட்டு வலையமைப்பிலும் நிறுவனம் தொடர்ந்து முதலீடு செய்யும் என்றும், இந்த ஆண்டுக்குள் 20-க்கும் மேற்பட்ட புதிய நிறைவேற்ற மையங்கள் (Fulfillment Centres) மற்றும் 100-க்கும் அதிகமான கடைசி கட்ட விநியோக நிலையங்களை (Last-mile Delivery Stations) தொடங்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஆண்டி ஜாஸி மேலும் கூறுகையில்,
“இந்தியாவில் அமேசானின் வளர்ச்சியுடன், AI தொழில்நுட்பத்தை அனைவருக்கும் எளிதாகக் கிடைக்கச் செய்வது, சிறு தொழில்களை டிஜிட்டல் மயமாக்குவது, வேலைவாய்ப்புகளை உருவாக்குவது மற்றும் ஏற்றுமதியை அதிகரிப்பது போன்ற இந்தியாவின் முன்னுரிமைகளுடன் எங்களது வணிக இலக்குகளும் தொடர்ந்து இணைந்தே இருக்கும்,” என்றார்.
அமேசான் தற்போது இந்தியாவில் இ-காமர்ஸ், AI, கிளவுட், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் செயல்பட்டு வருகிறது. நிறுவனம் இந்தியாவில் செயல்படத் தொடங்கியதிலிருந்து 1.2 கோடி சிறு தொழில்களை டிஜிட்டல் மயமாக்கியுள்ளது, 20 பில்லியன் டாலருக்கும் அதிகமான இ-காமர்ஸ் ஏற்றுமதிக்கு உதவியுள்ளது, 28 லட்சம் வேலைவாய்ப்புகளை ஆதரித்துள்ளது. மேலும், 1 கோடிக்கும் அதிகமான இந்தியர்களுக்கு கிளவுட் திறன் பயிற்சி வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளது.
எதிர்கால இலக்குகளாக, 38 லட்சம் வேலைவாய்ப்புகளை ஆதரிப்பது, 80 பில்லியன் டாலர் மதிப்பிலான மொத்த ஏற்றுமதியை உருவாக்க உதவுவது, 1.5 கோடி சிறு தொழில்களுக்கு AI தொழில்நுட்பத்தின் பயன்களை கொண்டு சேர்ப்பது, மற்றும் 40 லட்சம் அரசு பள்ளி மாணவர்களுக்கு AI கல்வி வழங்குவது ஆகியவற்றை அமேசான் உறுதியளித்துள்ளது.