
இந்திய குடியரசு தினத்தை கொண்டாடும் முக்கிய நிகழ்ச்சியின் போது, தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் தமிழக வீரர்களின் தன்னார்வமான சேவைக்கு 'அண்ணா பதக்கம்' (Anna Medal for Gallantry) வழங்கினார்.
அண்ணா பதக்கம் என்பது தமிழ்நாடு அரசால் அரச ஊழியர்கள் மற்றும் பொதுமக்களின் மிக உயர்ந்த துணிச்சலுக்காக வழங்கப்படும் விருது ஆகும். இது உயிர், சொத்து போன்றவற்றை காப்பாற்ற தன்னார்வமாக செயல்பட்டவர்களுக்கு வழங்கப்படுகிறது. விருதிற்கு பதக்கம், சான்றிதழ் மற்றும் ரூ.1,00,000 பரிசு இவை வழங்கப்படும்.

2026-க்கான அண்ணா பதக்கம்
இதில், கன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோடு வட்டம், குழித்துறை தாமிரபரணி ஆறு தடுப்பணையில் தவறி விழுந்த இருவரை காப்பாற்றி நீரில் மூழ்கி உயிரிழந்த பீட்டர் ஜான்சனுக்கு இந்த ஆண்டிற்கான ‘அண்ணா பதக்கம்’ அறிவிக்கப்பட்டது. அவர் உயிரிழந்தை அடுத்து, அவரின் குடும்பத்தினருக்கு முதல்வர் ஸடாலின் இந்த விருதினையும், பரிசுத்தொகையையும் குடியரசு தினத்தன்று நடைபெற்ற விழாவில் வழங்கியுள்ளார்
6 ஜூன் 2025 அன்று தாமிரபரணி நதியில் மூழ்கிய மனோ (வயது 17) மற்றும் அகிலேஸ் (வயது 12) ஆகிய சிறுவர்களைக் காப்பாற்றினார் பீட்டர் ஜான்சன். ஆனால், எதிர்பாராவிதமாக இவர் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார். இவரது அளப்பரிய உயிர்த்தியாகத்தைப் பாராட்டி அவருக்கு அண்ணா பதக்கம் மற்றும் விருது அறிவிக்கப்பட்டது. பீட்டர் ஜான்சனின் தன்னலம் பாரா அளப்பரிய உயிர்த்தியாகத்திற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்கெனவே இவரது குடும்பத்தாருக்கு முதல்வர் நிவாரண நிதியிலிருந்து ரூ.10 லட்சம் நிவாரணத் தொகை அறிவித்திருந்தார். இவருக்கான அண்ணா பதக்கத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் பீட்டர் ஜான்சனின் மனைவி ஏ.ஜெசியிடம் வழங்கினார்.
மேலும், நீலகிரி தீயணைப்பு வீரர்கள் சங்கர், சுரேஷ், ரமேஷ்குமார் ஆகியோருக்கும் அண்ணா பதக்கம் மற்றும் விருதுகள் அளிக்கப்பட்டன. இதில் வி.சங்கர், நீலகிரி தீயணைப்பு மற்றும் மீட்புச் சேவையில் வாகன ஓட்டுநராகப் பணியாற்றி வருகிறார். கடந்த 2025ம் ஆண்டு மே 25ம் தேதி கேரளாவைச் சேர்ந்த மூன்று பேர் குன்னூருக்கு சுற்றுலா வந்தனர் பாண்டியாற்றின் துணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சாலையில் வெள்ள நீர் பாய்ந்து ஓடிய போது நள்ளிரவில் அவர்கள் சென்ற கார் வெள்ள நீரில் சிக்கியது.
இந்தத் தகவல் கிடைத்ததும் சங்கர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சுரேஷ், மற்றும் ராம் குமார் ஆகியோர் தீயணைப்பு வாகனத்தில் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். நீரின் வேகம் மற்றும் சுழலைப் பொருட்படுத்தாது மூவரும் தண்ணீரில் குதித்து காரில் வெள்ள நீரில் தத்தளித்துக் கொண்டிருந்த மூன்று கேரள நபர்களையும் காப்பாற்றினர். இந்த வீரதீர மனிதநேயச் செயலுக்காக அவர்களுக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.