நொடிப்பொழுதில் ரத்தப்போக்கை கட்டுப்படுத்தி ராணுவ வீரர்களின் உயிர்களைக் காக்கும் ஸ்டார்ட்-அப்!

02:25 PM Jun 23, 2025 | jayashree shree

பெங்களூருவில் உள்ள ஒரு சாதாரண ஆய்வகத்தில் IISc மாணவர்களின் இன்டஸ்டீரியல் புரோஜெக்டாக தொடங்கியது, இன்று இந்தியப் பாதுகாப்புப் படைகளுக்கான ஒரு முக்கியமான உயிர்நாடியாக மாறியுள்ளது.

ஆம், இந்திய அறிவியல் நிறுவனத்துடன் (IISc) ஃபைப்ரோஹீல் ஊண்ட்கேர் பிரைவேட் லிமிடெட் (Fibroheal Woundcare Pvt Ltd) எனும் ஸ்டார்ட்அப் நிறுவனம் இணைந்து, சில நொடிகளிலிலே கடுமையான ரத்தப்போக்கை கட்டுப்படுத்தும் FIBROPLUG எனும் ஹீமோஸ்டேடிக் ஸ்பான்ஜை உருவாக்கியுள்ளது. இது மருத்துவ உலகில் குறிப்பிடத்தக்க முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது.

எல்லைவீரர்களின் உயிர்காக்கும் 'ஃபைப்ரோபிளக்'

ஹீமோஸ்டேடிக் ஸ்பான்ஜ் என்பது அறுவை சிகிச்சையின் போது அல்லது காயத்திற்குப் பிறகு ஏற்படும் அதீத இரத்தப்போக்கை நிறுத்தப் பயன்படுத்தப்படும் ஒரு மருத்துவ சாதனமாகும். இந்த ஸ்பான்ஜ் ஆனது இரத்தத்தை உறிஞ்சி, உடலில் உடனடி உறைவை துாண்டுகிறது. சமீபத்தில், நாட்டில் நிலவிய போர்க்கள சூழ்நிலைகளில் உயிருக்கு ஆபத்தான இரத்தப்போக்கைக் கட்டுப்படுத்த ஃபைப்ரோபிளக், இந்திய பாதுகாப்புப் படைகளால் பயன்படுத்தப்பட்டது.

காப்புரிமைப் பெற்ற ஃபைப்ரோபிளக் என்று பெயரிடப்பட்ட இந்த மருத்துவ தயாரிப்பு, லேப் கண்டிஷனில் 30 வினாடிகளுக்குள்ளும், நிஜ உலக பயன்பாடுகளில் இரண்டு நிமிடங்களுக்கும் குறைவான நேரத்தில் இரத்தப்போக்கை நிறுத்துகிறது. ஹைபோவோலெமிக் அதிர்ச்சி அல்லது அதிகப்படியான இரத்த இழப்பு காரணமாக ஏற்படும் இறப்புகளைத் தடுப்பதில் இது ஒரு முக்கியமான மருத்துவ உலக முன்னேற்றமாகும். சந்தையில் அறிமுகப்படுத்துவதற்கு முன்னதாகவே, ராணுவப் படைகளின் சொத்தாக மாறியுள்ளது. குறிப்பாக சமீபத்திய எல்லை பதட்டங்களின் போது, ​​ராணுவப்படைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வதை நோக்கமாக கொண்டு தயாரிக்கப்பட்டு வருவதால், தற்போது ஃபைப்ரோபிளக் வணிக ரீதியாக கிடைக்கவில்லை.

ஃபைப்ரோபிளக் ஆனது பட்டுப்புழு பட்டிலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட ஒரு புரதமான ஃபைப்ரோயின், மட்டி மீன்களின் வெளிப்புற எலும்புக்கூட்டிலிருந்து வரும் ஒரு சர்க்கரையான சிட்டோசன் மற்றும் சிலிக்கா துகள்கள் ஆகியவற்றின் தனித்துவமான உயிரி கலவையிலிருந்து தயாரிக்கப்படுகிறது. இது இரத்தப்போக்கு ஏற்படுவதைத் தடுத்து, இயற்கையான இரத்த உறைவு உருவாவதை ஆதரிக்கும் எளிதாக பயன்படுத்தக்கூடிய டிரஸ்ஸிங் ஆகும். ஃபைப்ரோபிளக்கின் பட்டு அடுக்கானது, காயம் ஏற்பட்ட இடத்தைத் தொந்தரவு செய்யாமல் எளிதாக இரத்தத்தை அகற்றுகிறது.

ஸ்டூடென்ட் ப்ரோஜெக்ட் டு ஸ்டார்ட்அப்!

2017ம் ஆண்டு விவேக் மிஸ்ரா மற்றும் பாரத் டாண்டனும் இணைந்து பெங்களூரை தலைமையிடமாகக் கொண்டு `ஃபைப்ரோஹீல் ஊண்ட்கேர்` எனும் ஸ்டார்ட்அப் நிறுவனத்தை தொடங்கினர். 2018 ஆம் ஆண்டு பெங்களூருவில் உள்ள கமாண்ட் மருத்துவமனையில் நடந்த மருத்துவர்கள் மாநாட்டின் போதே திருப்புமுனை ஏற்பட்டதாக மிஸ்ரா நினைவு கூர்ந்தார்.

"ஃபைப்ரோஹீல் என்றால் 'ஃபைப்ரோயின் மூலம் குணப்படுத்துதல்' என்று பொருள். மேலும், பட்டுவின் பண்புகள் மற்றும் காயப் பராமரிப்பில் அதன் ஆற்றலால் நாங்கள் ஈர்க்கப்பட்டோம். மருத்துவர்கள் மாநாட்டின் போது தான் பல போர்க்கள மரணங்கள் துப்பாக்கிச் சூடுகளால் மட்டும் நிகழவில்லை. மாறாக இரத்தப்போக்கை நிறுத்த இயலாமையால் நிகழ்கின்றன என்று மருத்துவர்கள் சொல்வதை முதன்முதலில் கேட்டேன்," என்றார் மிஸ்ரா.

சிறிது நேரத்திற்குப் பிறகு, ஸ்டார்ட்அப் இந்தியா- சிஆர்பிஎஃப் (மத்திய ரிசர்வ் போலீஸ் படை) கிராண்ட் சேலஞ்ச் நிகழ்வின் போது, ​​களத்தில் நிஜ வாழ்க்கை அதிர்ச்சி நிலைமைகள் குறித்து பாதுகாப்புப் பணியாளர்களிடமிருந்து ஸ்டார்டஅப் நிறுவனர்கள் முக்கியமான நுண்ணறிவுகளைப் பெற்றனர். அப்போது தான், இரத்தப்போக்கை கட்டுப்படுத்தும் ஒரு மருத்துவத் தயாரிப்பை தயாரிப்பதற்கான உந்துதலை பெற்றுள்ளனர். அதே ஆண்டு, ஃபைப்ரோஹீல் IISc-இன் பேராசிரியர் கௌஷிக் சாட்டர்ஜியுடன் இணைந்து ஃபைப்ரோபிளக்-ஐ உருவாக்கும் முனைப்பில் தீவிரமாக இறங்கினர்.

2018-19 ஆம் ஆண்டில், பிரதமரின் ஆராய்ச்சி கூட்டாளிகள் (PMRF) திட்டத்திற்காக உருவாக்கப்பட்ட ஒரு மாணவத் திட்டம், FIBROPLUG-க்கான அடித்தளமாக அமைந்தது. அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு, கடுமையான ஆராய்ச்சி மற்றும் மருத்துவ பரிசோதனை தொடர்ந்தது. 2020ம் ஆண்டு வாக்கில், ஃபைப்ரோபிளக்கின் முதல் முன்மாதிரியை உருவாக்கினர். இன்று ஃபைப்ரோபிளக்கிற்கான காப்புரிமையை IISc மற்றும் ஃபைப்ரோஹீல் இணைந்து வைத்திருக்கின்றன. இது கல்வி-தொழில் கூட்டாண்மையின் வெற்றியை எடுத்துக்காட்டுகிறது.

COVID-19 தொற்றுநோய் பெரும்பாலான ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு பெரும் சவால்களை ஏற்படுத்திய போதிலும், ஃபைப்ரோஹீல் தொடர்ந்து செயல்பாட்டில் இருந்தது. ஏனெனில், காயம் பராமரிப்பு அத்தியாவசிய மருத்துவ சேவையாக வகைப்படுத்தப்பட்டதால், லாக்டவுனின் போதும், ஆய்வகப் பணிகள் மற்றும் தயாரிப்பு மேம்பாட்டைத் தொடர அனுமதிக்கப்பட்டது. 2022ம் ஆண்டு, பெங்களூருவில் உள்ள தொட்டபல்லாப்பூர் தொழிற்சாலையில் ஃபைப்ரோபிளக்கிற்கான ஒரு பிரத்யேக உற்பத்திப் பிரிவு நிறுவப்பட்டது.

நொடிகளில் இரத்தப்போக்கை கட்டுப்படுத்தும் ஸ்பான்ஜ்

"நாங்கள் லாக்டவுன் சமயத்தை ஃபைப்ரோபிளக்கை மேம்படுத்துவதற்கான சந்தர்ப்பமாக பயன்படுத்தினோம். இந்தியாவில் கர்நாடகா மிகப்பெரிய பட்டு உற்பத்தியாளராக இருப்பதால், இந்த இடம் மூலோபாய ரீதியாக உதவியது. தற்போது ஒரு மாதத்திற்கு சுமார் 5,000 யூனிட்களை உற்பத்தி செய்கிறோம். பாதுகாப்பு நிறுவனங்களுக்கு தேவை அதிகரிக்கும் போது உற்பத்தியின் அளவை அதிகரிக்க திட்டமிட்டுள்ளோம்."

ஃபைப்ரோபிளக் 25% அதிக செயல்திறன் கொண்டது மற்றும் சந்தையில் இருக்கும் ரத்தக்கசிவு எதிர்ப்பு டிரஸ்ஸிங்கின் விலையில் நான்கில் ஒரு பங்கே இதன்விலையாகும். Fibroplug-ன் விலை ரூ.200 முதல் ரூ.800 வரை நிர்ணயித்துள்ளோம். அதே நேரத்தில், ரத்தப்போக்கை கட்டுப்படுத்தும் மற்ற மாற்று தீர்வு தயாரிப்புகளின் விலை ரூ.5000-ல் இருந்துதான் தொடங்குகிறது, என்று விரிவாக கூறினார் மிஸ்ரா.

ஃபைப்ரோஹீலின் 75 பேர் கொண்ட குழு, வரும் மாதங்களில் 100 ஆக வளர இலக்கு வைத்துள்ளது. மருத்துவ சாதனங்களின் உற்பத்தி மூலதனத்தை சார்ந்தது. அந்த வகையில், BIRAC (பயோடெக்னாலஜி இண்டஸ்ட்ரி ரிசர்ச் அசிஸ்டன்ஸ் கவுன்சில்), கர்நாடக அரசு மற்றும் தனியார் பங்கு முதலீட்டாளர்களிடமிருந்து ஆதரவைப் பெற்றது எங்களது அதிர்ஷ்டம் என்று குறிப்பிட்டார் மிஸ்ரா. அரசின் ஆத்மநிர்பர் பாரத் முயற்சியை ஆதரிப்பதில் உறுதியாக உள்ள இந்த ஸ்டார்ட்அப், இறக்குமதி செய்யப்பட்ட மருத்துவ தொழில்நுட்பங்களைச் சார்ந்திருப்பதைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

"ஃபைப்ரோபிளக் தற்போது பாதுகாப்பு பயன்பாட்டிற்கு பயன்படுத்தப்பட்டாலும், அதன் பயன்பாடுகள் பரந்து விரிந்தது. எதிர்காலத்தில் ஆம்புலன்ஸ்கள் மற்றும் விபத்து தளங்கள் முதல் பள்ளி விளையாட்டு மைதானங்கள் மற்றும் மருத்துவமனை அவசர அறைகள் வரை, இந்தியா முழுவதும் அவசர சிகிச்சையில் ஃபைப்ரோபிளக்கின் இருப்பு இன்றியமையாததாகும்," என்று கூறி முடித்தார் அவர்.

ஆங்கிலத்தில்: அனன்யா, தமிழில்: ஜெயஸ்ரீ