இந்தியா கடந்த 10 ஆண்டுகளில் நல்ல ஸ்டார்ட்-அப் சுற்றுச்சூழலை உருவாக்கியுள்ளது. அடுத்த பத்தாண்டுகள் இதே போன்ற ஒன்றை வடிவமைப்பவர்களின் பார்வையில் இன்னும் கடினமானதும் இன்னும் விளைவுத் தாக்கப்பூர்வமானதாகவும் இருக்கும்.
Bharat Innovates என்ற முயற்சி, கல்வி அமைச்சகத்தின் தலைமையில், இந்தியாவின் சிறந்த 100–120 டீப்-டெக் ஸ்டார்ட்அப்'களை ஜூன் 14 முதல் 16 வரை பிரான்சுக்கு அழைத்துச் செல்ல உள்ளது. G7 உச்சி மாநாட்டுக்கு ஒரு நாள் முன்னதாக இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது. பிரதமர் மோடி இந்த நிகழ்ச்சியை தொடங்கி வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சி, நைஸ் நகரில் நடைபெறுகிறது, இது ஐரோப்பாவின் முதல் இனோவேஷன் மையமான Sophia Antipolis அருகில் அமைந்துள்ளது.
யுவர்ஸ்டோரியின் ஸ்ரத்தா ஷர்மா தொகுத்து வழங்கிய ஒரு குழு உரையாடலில், கல்வி அமைச்சகத்தின் உயர்கல்வித் துறையின் இணைச் செயலாளர் ஆம்ஸ்ட்ராங் பாமே, அவானா கேபிட்டலின் நிறுவனப் பங்குதாரரும் பாரத் இன்னோவேட்ஸ் அமைப்பின் முக்கியக் குழு உறுப்பினருமான அஞ்சலி பன்சால், மற்றும் அக்னிகுல் காஸ்மோஸின் இணை நிறுவனரும் தலைமைச் செயல் அதிகாரியுமான ஸ்ரீநாத் ரவிச்சந்திரன் ஆகியோர், இந்தத் தளம் என்றால் என்ன, அது இப்போது ஏன் முக்கியத்துவம் பெறுகிறது என்பதை விளக்கினர்.
நுகர்வோரிலிருந்து உருவாக்குநர்களாக முன்னேற்றம்:
“நீண்டகாலமாக நாம் சிலபல தயாரிப்புகள் மற்றும் தொழில்நுட்பங்களின் நுகர்வோராக அல்லது வாடிக்கையாளர்களாகவே பார்க்கப்பட்டு வருகிறோம். நம்மை ஒருபோதும் புதுமை உருவாக்குநர்களாகப் பார்க்கவில்லை. இந்த ஸ்டார்ட்அப் சூழலமைப்பில், குறிப்பாக உயர்கல்வி நிறுவனங்களிலிருந்து வெளிவரும் ஸ்டார்ட்அப்'களில், அரசாங்கம் என்ன செய்து வருகிறது என்பதை வெளிக்காட்டுவதே 'பாரத் இன்னோவேட்ஸ்' முன்னெடுக்க விரும்பும் நோக்கமாகும்,” என்று கல்வி அமைச்சகத்தின் உயர்கல்வித் துறையின் இணைச் செயலாளர் ஆம்ஸ்ட்ராங் பாமே கூறினார்.
இந்த முயற்சிக்கு 1,800க்கும் மேற்பட்ட ஸ்டார்ட்அப்புகள் விண்ணப்பித்தன. அதில், 1,182 இறுதி கட்டத்திற்கு தேர்வு செய்யப்பட்டன. 13 துறைகள்—AI, செமிகண்டக்டர், கிரீன் எனர்ஜி, மருத்துவத் தொழில்நுட்பம், விண்வெளி, பாதுகாப்பு உள்ளிட்ட பல துறைகள் இதில் அடங்கும். பாமே மேலும் கூறுகையில், இந்த முயற்சியின் நேரம் மிக முக்கியமானது. பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மக்ரோன் பிப்ரவரி 17ம் தேதி மும்பையில் இருந்தபோது இதை அறிவித்தார்.
நமது மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இதைத் தொடங்கி வைப்பார். மிகச்சிறந்த புத்தாக்கம் இந்தியாவிலிருந்துதான் வெளிவருகிறது என்பதை உலகிற்கு எடுத்துரைக்க, இது சாத்தியமான மிகப்பெரிய மேடைகளில் ஒன்றாகும், என்றார்.
மந்திர மும்மணிக் கொள்கை:
அஞ்சலி பன்சால் இந்திய டீப்-டெக் வளர்ச்சிக்கு மூன்று முக்கிய அம்சங்கள் ஒன்றாக இணைந்துள்ளன என கூறினார்:
“இப்போது ஒரு ‘மாஜிக் ட்ரைஃபெக்டா’ உருவாகியுள்ளது — ஆதரவான கொள்கைகள், அதிகரிக்கும் முதலீடு, மற்றும் திறமையான மனிதவளம். உலகில் எங்கும் இல்லாத அளவுக்கு ஸ்டார்ட்அப்களுக்கு ஆதரவான கொள்கைகள் இந்தியாவில் உள்ளது.”
ANRF, செமிகண்டக்டர் திட்டம், செயற்கை நுண்ணறிவுத் திட்டம், இந்தியா சமீபத்தில் நடத்திய உலகளாவிய செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாடு மற்றும் ஆராய்ச்சி, மேம்பாட்டு நிதி உள்ளிட்ட குறிப்பிட்ட கொள்கை நகர்வுகள், கொள்கை உறுதிப்பாடு உண்மையானது என்பதற்கான சமிக்ஞைகளாகும். ஒரு லட்சம் கோடி என்பது நமது நாட்டிற்கு ஒரு பெரிய மூலதனம். அது, ஒருவேளை அதற்கும் அதிகமாக இல்லாவிட்டாலும், குறைந்தபட்சம் 1:5 என்ற பெருக்க விளைவை உருவாக்கும்.
ஆனால், இன்னும் சரிசெய்யப்பட வேண்டியவை குறித்தும் அவர் வெளிப்படையாகப் பேசினார். ஆரம்பகட்ட முதலீட்டுச் சுற்றுகளுக்கும் வணிக ரீதியான அளவுக்கும் இடையிலான நிதி இடைவெளியைக் குறிப்பிட்டு, "ஆழ் தொழில்நுட்பத்தில் இன்னும் ஒரு மரணப் பள்ளத்தாக்கு உள்ளது," என்று அஞ்சலி கூறினார்.
"அந்த மூலதனம் இன்னும் கவனிக்கப்பட வேண்டும். மூலதனத்தைத் தாண்டி, கொள்முதலும் கவனிக்கப்பட வேண்டும். ஒரு ஸ்டார்ட்அப் நிறுவனத்திற்கு மூலதனத்தின் சிறந்த வடிவம் வருவாய்தான். நாம் சமைத்ததை நாமே உண்ணத் தொடங்க வேண்டும்; நமது உள்ளூர் தொழில்நுட்பத்தை பெருநிறுவன மதிப்புச் சங்கிலிகளில் கொண்டு சேர்க்க வேண்டும்," என்றார்.
உண்மையில் என்ன தேவைப்படுகிறது?
அந்தக் கேள்விக்கான பதிலை ஸ்ரீநாத் ரவிச்சந்திரன் வாழ்ந்து காட்டியுள்ளார். அக்னிகுல், உலகின் முதல் 3D-அச்சிடப்பட்ட, ஒற்றைத் துண்டு, பகுதி-குளிரூட்டப்பட்ட ராக்கெட் எஞ்சினை உருவாக்கியது. அக்குழு அதை பிரதமரிடம் சமர்ப்பித்தபோது, விளக்கத்தைக் கேட்ட பிறகு அவர் கேட்ட முதல் கேள்வி எளிமையானது: "நீங்கள் இதற்குக் காப்புரிமை பெற்றுள்ளீர்களா?" என்றே.
அவர் மேலும் கூறும்போது,
“நாங்கள் ராக்கெட்டுகளை உருவாக்குகிறோம் என்பதை மக்களிடம் எப்படி எடுத்துச் செல்வது? ஏனெனில் இதைச் சொன்னால் இவர் என்ன ஏதாவது ஜோக் அடிக்கிறாரா என்றுதான் நினைப்பார்கள் என்றே கருதினோம். எப்படிச் சென்று சொல்வது என்று எனக்குத் தெரியவில்லை. இந்த நிலை இப்போது இல்லை, மாறியுள்ளது. அதற்கான ஏற்பு இருக்கிறது. விண்வெளியில் உற்பத்தி செய்வது பற்றிப் பேசும் பல விண்வெளி தொழில்நுட்ப ஸ்டார்ட்அப் நிறுவனங்களை நான் பார்க்கிறேன். நாங்கள் ராக்கெட்டுகளை உருவாக்கினாலும், இது எனக்கு இன்னும் ஒரு அறிவியல் புனைகதையாகவே இருக்கிறது. ஆனால் அது இப்போது இயல்பாகி வருகிறது,” என்றார்.
ராக்கெட்டுகளை உருவாக்குவதிலிருந்து ஒரு ராக்கெட் நிறுவனத்தை உருவாக்குவது என்பது ஒரு பெரிய மாற்றம். நாம் இதை இன்னும் அதிகமாக ஊக்குவிக்கத் தொடங்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன், என்றார்.
இறுதியாக, பல்கலைக்கழகங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன
பாரத் இன்னோவேட்ஸ் நிகழ்வின் அதிகம் பேசப்படாத அம்சங்களில் ஒன்று, அது இந்தியப் பல்கலைக்கழகங்களுக்கு என்ன செய்கிறது என்பதுதான். ஐஐடி-க்கள், ஐஐஎம்-கள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட தனியார் பல்கலைக்கழகங்கள் உட்பட 15-20 கல்வி நிறுவனங்கள் நைஸ் நகரில் காட்சிப்படுத்தப்படும் என்றும், இந்நிகழ்வின் போது உலகளாவிய பல்கலைக்கழகங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்றும் பாமே உறுதிப்படுத்தினார்.
"எங்கேயோ, நமது பல்கலைக்கழகங்கள் பின்னணியில் இருக்கின்றன, நாம் ஸ்டான்ஃபோர்டைப் பற்றிப் பேசுகிறோம்," என்று ஷ்ரத்தா குறிப்பிட்டார். முதல் முறையாக, இந்தியப் பல்கலைக்கழகங்களும் முக்கியத்துவம் பெறும் வாய்ப்பைப் பெறுகின்றன."
உயர்கல்வியில் 46 மில்லியன் மாணவர்கள் மற்றும் உலகின் மிகப்பெரிய ஆங்கிலம் பேசும் மாணவர் சமூகம் என இந்தியாவின் கல்வி அடித்தளத்தின் அளவை, ஒரு வாதமாகவும் ஒரு வாய்ப்பாகவும் பாமே சுட்டிக்காட்டினார்.
"நம்மிடம் இன்னும் மிகச்சிறந்த உள்கட்டமைப்பு இல்லாமல் இருக்கலாம், ஆனால் நம்மிடம் மிகச்சிறந்த மனித வளம் உள்ளது."
இது உணர்த்துவது என்ன?
இந்த நிகழ்வு உலகளாவிய முதலீட்டாளர்கள் மற்றும் அரசாங்கங்களுடன் உரையாடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆனால், வீட்டிலிருந்து இதைக் கவனிக்கும் இந்தியாவின் நிறுவனர்களுக்கு, இந்த சமிக்ஞை அதே அளவு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கலாம்.
"புத்தாக்கம் என்பது பூஜ்ஜியத்திலிருந்து ஒன்று வரை," என்றார் ரவிச்சந்திரன். ஒரு அரசாங்கம் இந்த அளவில் 'புத்தாக்கம்' என்ற வார்த்தையை வெளிப்படையாகக் கூறுவது, இந்தியா அடிமட்ட அளவில் புத்தாக்கத்தை ஆதரிக்கிறது என்பதை உலகிற்கு உணர்த்துவதாகும். நாடு இதை சாதாரணமாக எடுத்துக்கொள்ளவில்லை.
தகவல் தொழில்நுட்ப சேவைகள், நுகர்வோர் இணையம், நிதி தொழில்நுட்பம், சாஸ் (SaaS), செயற்கை நுண்ணறிவு, ஆழ் தொழில்நுட்பம் என இந்திய ஸ்டார்ட்அப் முதலீட்டின் பல சுழற்சிகளைக் கண்காணித்துள்ள அஞ்சலி, இதுவரையிலான அலைகளிலேயே இது மிகவும் அர்த்தமுள்ளது என்று கருதுகிறார்.
"நாம் நீண்ட தூரம் பயணித்துவிட்டோம், இன்னும் பயணிக்க வேண்டிய தூரம் அதிகம் உள்ளது. இனி வரும் காலங்களில் நிறைய மகிழ்ச்சி காத்திருக்கிறது."
இந்த ஜூன் மாதம் நைஸ் நகருக்குச் செல்லும் நிறுவனர்கள், ஒரு நம்பிக்கைக்குரிய வளர்ந்து வரும் சந்தையின் பிரதிநிதிகளாகச் செல்லவில்லை. அவர்கள் ஏற்கனவே கட்டமைக்கப்பட்ட ஒன்றிற்கான சான்றாகச் செல்கிறார்கள்.