+

‘தாயின் மரண தாக்கம்’: நோயாளிகளுக்கு VR மூலம் தெரபி சிகிச்சை தரும் Rewin health தொடங்கிய விஜய் கருணாகரன்!

தாயின் மரணம் தந்த திருப்புமுனையால் விர்ச்சுவல் ரியாலிட்டி முறையில் நோயாளிகளுக்கு பயிற்சி அளிக்கும் ரீவின் ஹெல்த் நிறுவனத்தை ஆரம்பித்துள்ளார் சென்னையை சேர்ந்த விஜய் கருணாகரன். தற்போது ஆண்டிற்கு ரூ.5 கோடி டர்ன் ஓவர் செய்து வரும் இந்நிறுவனம், இன்னும் 3 ஆண்டுகளில் ரூ. 250 கோடி இலக்கை நிர்ணயித்துள்ளது.

ஏஐ மூலம் விர்ச்சுவல் ரியாலிட்டி முறையில் நோயாளிகளுக்கு பிசியோதெரபி பயிற்சிகள் அளிக்கும் சேவையை அளித்து வருகிறது சென்னையைத் தலைமையிடமாகக் கொண்ட ’ரீவின் ஹெல்த்’ (Rewin health) நிறுவனம்.

இதுவரை சுமார் 1 லட்சத்து இருபதாயிரத்திற்கும் மேற்பட்ட VR சிகிச்சை அமர்வுகள் மூலம், 12,000க்கும் மேற்பட்ட நோயாளிகள் பயனடைந்துள்ள இந்த ரீவின் ஹெல்த் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியும், நிறுவனருமான விஜய் கருணாகரன் சென்னையைச் சேர்ந்தவர்.

தன் அம்மாவிற்கு ஏற்பட்ட ஸ்ட்ரோக் மற்றும் அதன் தொடர்ச்சியாக அவரது மரணம் என தன் சொந்த வாழ்க்கையில் தான் அனுபவித்த வேதனைகளால், தன்னைப் போல் மற்றவர்களும் பாதிக்கப்படக்கூடாது என்ற உயரிய எண்ணத்தில் இந்த நிறுவனத்தை உருவாக்கியுள்ளார் விஜய் கருணாகரன்.

“எங்கள் ரீவின் ஹெல்த் சேவை மூலம் ஒவ்வொரு நோயாளி குணமாகும்போதும், என் அம்மாவுக்கே சரியானது போல் மனநிறைவு அடைகிறேன்,” என நெகிழ்ச்சியுடன் கூறுகிறார்.
Rewin health நிறுவனர் விஜய் கருணாகரன்

" align="center">rewin vijay

Rewin health நிறுவனர் விஜய் கருணாகரன்

விர்ச்சுவல் ரியாலிட்டி மூலம் சிகிச்சை

சுமார் 85% இந்திய நோயாளிகள் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய பிறகு, மறுவாழ்வு இல்லாமல் வீட்டிலேயே முடங்கி விடுவதாக ஆய்வுகள் கூறுகின்றன. இதனால் அவர்கள் புரொடக்டிவிட்டி பாதிக்கப்பட்டு, ஆண்டிற்கு ரூ.50 ஆயிரம் கோடி நஷ்டம் ஏற்படுகிறதாம். பிசியோதெரபி மூலம் பயிற்சிகள் எடுத்துக் கொள்வதுதான் இதற்குத் தீர்வு என்றாலும், அதற்குப் போதிய எண்ணிக்கையில் பிசியோதெரபிஸ்டுகள் நம் நாட்டில் இல்லை.

இந்தப் பிரச்சினைக்குத் தீர்வாகத்தான், ஏஐ மூலம் விர்ச்சுவல் ரியாலிட்டி முறையில் நோயாளிகளுக்கு பயிற்சிகள் அளிக்கும் சேவையை அளித்து வருகிறது ரீவின் ஹெல்த் நிறுவனம்.

சென்னையை தலைமையாகக் கொண்டு இயங்கி வரும் இந்நிறுவனம், ஏஐ தொழில்நுட்பத்தின் உதவியுடன், நரம்பியல், தசைக்கூட்டு, இருதய-நுரையீரல், குழந்தைகள் மற்றும் முதியோர் பராமரிப்புக்கான மறுவாழ்வைத் தரும் சேவையை அளித்து வருகிறது.

இதற்கென உருவாக்கப்பட்ட இந்தியாவின் முதல் டிஜிட்டல் சிகிச்சை தளம் என்ற பெருமைக்குரிய இந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியும் நிறுவனருமான விஜய் கருணாகரன், பிறந்து வளர்ந்ததெல்லாம் சென்னையில்தான் என்றாலும். படிப்பிற்காக கொல்கத்தா தொடங்கி அமெரிக்கா உள்பட பல மேலைநாடுகளுக்குச் சென்று வந்துள்ளார். அமெரிக்காவில் எம்பிஏ முடித்தவுடன் அங்கேயே கைநிறையச் சம்பளத்துடன் வேலை கிடைக்க, அங்கேயே 18 வருடங்கள் முன்னணி நிறுவனங்களில் வேலை பார்த்துள்ளார்.

திருப்புமுனை தந்த மனஅழுத்தம்

நன்றாக சென்று கொண்டிருந்த விஜய் கருணாகரனின் வாழ்க்கையில் பேரிடியாக அமைந்தது அவரது அம்மாவிற்கு ஏற்பட்ட ஸ்ட்ரோக்கும், அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட உடல்நலக் கோளாறுகளும்.

“பெரம்பூர் ஐசிஎப்-ல் வேலை பார்த்த என் அப்பா, நான் 11ம் வகுப்பு படிக்கும்போது திடீரென காலமானார். அதன்பிறகு, அம்மா தான் எங்கள் குடும்பத்தை நன்கு பார்த்துக் கொண்டார்.

நான் படிப்பு, வேலை, திருமணம் என அமெரிக்காவிலேயே இருந்ததால், சில காலம் எங்களுடன் அவர் அங்கிருந்தார். ஆனால் தொடர்ந்து அவரால் எங்களுடன் அங்கு வசிக்க முடியவில்லை.

75 வயதானாலும் அம்மா சுறுசுறுப்பாகத்தான் இயங்கி வந்தார். எனவே, அவருடன் இருப்பதற்காக நான் என் குடும்பத்துடன் 2014ம் ஆண்டு இந்தியாவுக்கே திரும்பி வந்து விட்டேன். யாரும் எதிர்பாராத நேரத்தில் திடீரென அம்மாவிற்கு ஸ்ட்ரோக் வந்தது. அதனைத் தொடர்ந்து ஒரு சர்ஜரி செய்யப்பட்டபோது, சிகிச்சைப் பலனின்றி 2018ம் ஆண்டு அவர் உயிரிழந்தார். இது என்னை உணர்வுப்பூர்வமாக மன அழுத்தத்திற்கு ஆளாக்கியது, என்றுதான் சொல்ல வேண்டும்.

rewin

ரீவின் ஹெல்த் உருவான கதை

அம்மாவின் ஸ்ட்ரோக் மற்றும் அவரது மரணம்தான் தந்த தாக்கம்தான் என்னை வேறு சில தளங்களில் யோசிக்க வைத்தது. அதுவரை டெக்னிக்கல் பகுதிகளில் மட்டுமே பணியாற்றி வந்த நான், முதன்முறையாக உடல் நலம் இல்லாமல் மருத்துவமனைகளில் தங்கி சிகிச்சைப் பெறுபவர்கள், சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பியதும் எப்படியாக கவனிப்பிற்கு ஆளாகிறார்கள் என்பது பற்றி சிந்திக்க ஆரம்பித்தேன். அவர்களுக்கு முறையான உடற்பயிற்சி தரப்படுகிறதா? மீண்டும் அவர்களால் பழையபடி இயங்க முடிகிறதா எனப் பல்வேறு கேள்விகள் எனக்குள் எழுந்தன.

அந்தக் கேள்விகளுக்கு பதிலைத் தேடி, நான் ஆராய்ச்சி மேற்கொண்ட போது, பல அதிர்ச்சிகரமான தகவல்கள் தெரிய வந்தன. சிகிச்சை தருவதுடன் மருத்துவமனைகளின் பங்கு முடிந்து விடுவதும், பாதிக்கப்பட்ட நோயாளிகளில் பலர் பழையபடி இயங்க முடியாமல் வலியோடு வாழ்க்கையைக் கழிப்பதும் எனக்கு அதிர்ச்சி அளித்தது.

மருத்துவமனைகளுக்கும், நோயாளிகளுக்கும் இடையேயுள்ள இந்த மிகப்பெரிய இடைவெளியைக் குறைக்க நாம் ஏதாவது செய்ய வேண்டும் என நான் சிந்தித்ததன் பலனாக உருவானதுதான், எங்களது ‘ரீவின் ஹெல்த்’ நிறுவனம்’ என தனது வாழ்க்கையில் நடந்த திருப்புமுனையை விவரிக்கிறார் விஜய் கருணாகரன்.

rewin

பிசியோதெரபிஸ்ட்டுகளின் பற்றாக்குறை

சிகிச்சைக்குப் பின் நோயாளிகளின் நிலை எப்படி இருக்கிறது என சுமார் இரண்டு வருடம் இது தொடர்பாக ஆராய்ச்சி மேற்கொண்ட விஜய் கருணாகரன், இந்தியாவில் பிசியோதெரபிஸ்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதும், சிகிச்சைக்குப் பின் நோயாளிகளுக்கு உரிய பயிற்சி கிடைக்காமல் போவதற்கு முக்கியக் காரணம் என்பதைக் கண்டறிந்தார்.

மற்ற நாடுகளில் பத்து பேருக்கு 1.7 சதவீதம் தெரபிஸ்ட்கள் உள்ள நிலையில், இந்தியாவில் இது 0.6 சதவீதம் என்ற அளவில் மட்டுமே உள்ளது அவருக்குத் தெரிய வந்தது. குறிப்பாக 7 கோடி மக்கள் உள்ள தமிழ்நாட்டில் வெறும் இரண்டாயிரம் பேர் மட்டுமே பிசியோதெரபிஸ்டுகள் என்ற புள்ளிவிபரம் அவரை அதிர வைத்தது.

உடனடியாக இந்த எண்ணிக்கையை அதிகரிப்பது என்பது முடியாத காரியம் என்பதால், தொழில்நுட்ப உதவியுடன் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண முடிவு செய்தார். அதன் தொடர்ச்சியாக, விர்ச்சுவல் ரியாலிட்டி மூலம் நோயாளிகளுக்குத் தேவையான உடற்பயிற்சிகளை அளிப்பது என அவர் முடிவு செய்தார். ஆராய்ச்சியில் இருந்த தன் திட்டத்திற்கு முழு வடிவம் கொடுத்து, சுமார் ஒன்றரை வருடங்களுக்கு முன்பு அவர் ஆரம்பித்ததுதான் இந்த ஹெல்த்கேர் நிறுவனம்.

“ஸ்ட்ரோக் மாதிரியான நோய்த் தாக்கத்திற்கு ஆளாகி, சிகிச்சை முடிந்து வீடு திரும்பியவர்கள் மிகுந்த மன அழுத்தத்தில் இருப்பார்கள். மருத்துவக் கண்காணிப்பில் இருந்தது வரை முறைப்படி உடற்பயிற்சி செய்தவர்கள், வீட்டிற்கு திரும்பியதும் அதனை பெரும்பாலும் தொடர்வதில்லை.”
Physiotherapy for Lower Back Pain

வலியால் முடங்கும் புரொடக்டிவிட்டி

85% இந்திய நோயாளிகள் டிஸ்சார்ஜுக்குப் பிறகு மறுவாழ்வு இல்லாமல் வீட்டிலேயே முடங்கி விடுவதாக ஆய்வுகள் கூறுகின்றன. இதனால் வீட்டில் உள்ள மற்றவர்களும் பாதிக்கப்படுவதோடு, புரொடக்டிவிட்டியும் குறைகிறது. நம் நாட்டில் இப்படி வலியால் முடங்கிப் போவோர்களால் மட்டும் ஆண்டிற்கு ரூ.50 ஆயிரம் கோடி பணம் நஷ்டமடைகிறது. மீண்டும் அவர்கள் பழையபடி இயங்க உடற்பயிற்சிகள் மட்டுமே உதவியாக இருக்கும். அதோடு இன்னும் பத்து வருடத்தில் நம் நாட்டில் 60 வயதைத் தாண்டியவர்கள் 25 சதவீதமாகி விடுவாகள். எனவே, பிசியோதெரபி என்பது மிகவும் அவசியமான சேவை.

அதனால்தான் எங்களது ரீவின் ஹெல்த் மூலம் விர்ச்சுவல் ரியாலிட்டியில், ஆர்த்தோ, கேன்சர், நியூரோ என நோயாளிகளுக்குத் தேவையான உடற்பயிற்சிகளை அவர்களது மனதிற்கு பிடித்தபடி, அவர்கள் மகிழ்ச்சியாக செய்யும்படி விளையாட்டு மாடலில் வடிவமைத்துள்ளோம். உதாரணமாக பூஜை செய்வதில் அதிக விருப்பம் கொண்ட பெண் நோயாளி ஒருவருக்கு, அவர் பூஜை செய்வது மாதிரியே விர்ச்சுவல் முறையில் நாங்கள் உடற்பயிற்சிகளை டிசைன் செய்துள்ளோம்.

”இதுவரை சுமார் 1 லட்சத்து இருபதாயிரத்திற்கும் மேற்பட்ட VR சிகிச்சை அமர்வுகள் மூலம், 12,000க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெற்று, பயனடைந்துள்ளனர். ஒவ்வொரு நோயாளி குணமாகும்போது, என் அம்மாவுக்கே சரியானது போல் மனநிறைவு அடைகிறேன்,” என நெகிழ்ச்சியுடன் கூறுகிறார் விஜய் கருணாகரன்.
Physiotherapy

மறுவாழ்வு தரும் ரீவின்

நோயாளியின் வாழ்வில் புதிய தொடக்கத்தை ஏற்படுத்தி, மறுவாழ்வு அளிப்பதாலேயே தங்கள் நிறுவனத்திற்கு ’ரீவின்’ என விஜய் கருணாகரன் பெயர் வைத்துள்ளார். மருத்துவமனைகள் மூலமாக மட்டுமின்றி, நேரடியாகவும் கிளீனிக்குகள் அமைத்து சிகிச்சை அளித்து வருகிறது ரீவின் ஹெல்த்.

“தமிழகத்தில் சுமார் 75 மருத்துவமனைகளில் எங்களது ரீவின் ஹெல்த் மூலம் பயிற்சிகள் தரப்படுகின்றன. இதைத் தாண்டி, கர்நாடகா, கேரளா என மற்ற மாநிலங்களிலும், மொரிஷியஸ் என இந்தியா தாண்டியும் எங்களது விஆர் சேவை அளிக்கப்பட்டு வருகிறது. இது தவிர, சென்னை, சேலம், தஞ்சாவூர், விழுப்புரம், பாண்டிச்சேரி, என தமிழ்நாடு முழுவதும் பத்து கிளினிக்குகளையும் நேரடியாக நாங்கள் இயக்கி வருகிறோம்.”

எங்களது முக்கிய குறிக்கோளே குறைந்த கட்டணத்தில் தரமான சேவை வழங்குவதுதான். மருத்துவமனைகளோடு இணைந்து செயலாற்றும்போது அது குறைந்த அளவே சாத்தியம். ஏனென்றால், அங்கு கட்டணங்களை நாங்கள் நிர்ணயம் செய்ய முடியாது. அதனால்தான் தனியாக நாங்களே கிளினிக்குகளை ஆரம்பித்தோம். இது தவிர இணையம் வாயிலாகவும் செயல்பட்டு வருகிறோம், என்கிறார் விஜய் கருணாகரன்.

Physiotherapy

ரூ. 6 லட்சத்தில் மானியத்துடன் கிளினிக்

தங்களது இந்த மருத்துவ சேவையை ஆதிதிராவிட மக்களுக்கும் கொண்டு சேர்க்கும் வகையில் எதிர்காலத் திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது ரீவின். இதற்காக அரசுடன் கைகோர்த்துள்ள இவர்கள், டயர் 2 மற்றும் 3 நகரங்களில் 150 கிளினிக்குகளைத் திறக்க திட்டமிட்டுள்ளனர்.

“ரூ. 6 லட்சத்தில் இதற்கான கிளினிக் செட்டப்பை நாங்களே செய்து தருகிறோம். 35% மானியத்துடன் வங்கிக்கடன் வசதியும் செய்து தரப்படும். கிளினிக் ஆரம்பிக்க விரும்பும் பிசியோதெரபிஸ்டுகள் வெறும் 30 ஆயிரம் ரூபாய் மட்டும் முதலீடு செய்தால் போதுமானது. இதன் மூலம் புதிய வேலைவாய்ப்புகள் மற்றும் தொழில்முனைவோர்களை உருவாக்கும் முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறோம்.”

இது தவிர இன்னும் 2 ஆண்டுகளில் இந்தியா முழுவதும் ரீவின் ஹெல்த்தின் 250 கிளினிக்குகள் உருவாக்க வேண்டும், இந்தியாவைத் தாண்டி மற்ற நாடுகளிலும் எங்களது சேவையை மேலும் விரிவாக்கம் செய்ய வேண்டும், என இலக்கு நிர்ணயித்துள்ளோம். அதோடு நியூரோ, ஆர்த்தோ தாண்டி ஆட்டிசம் பாதித்த குழந்தைகளுக்கும் தேவையான பயிற்சிகளை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளோம்” என்கிறார் விஜய் கருணாகரன்.

ரூ.250 கோடி இலக்கு நிர்ணயம்

தெரபிஸ்ட்கள், டாக்டர்கள், ஹார்ட்வேர் டெவலப்பர்கள், என சுமார் 150க்கும் மேற்பட்டோர் ரீவின் ஹெல்த்தில் வேலை பார்த்து வருகின்றனர். தற்போது ஆண்டிற்கு ரூ.5 கோடி டர்ன் ஓவர் செய்து வரும் ரீவின் ஹெல்த், இன்னும் மூன்று ஆண்டுகளில் இதை ரூ. 250 கோடியாக மாற்ற வேண்டும், என இலக்கு நிர்ணயித்துள்ளனர்.

சென்னையில் மட்டும் மருத்துவமனைகள், கிளினிக்குகள், முதியோர் மையங்கள் மற்றும் பல்கலைக்கழகங்கள் என 58 பார்ட்னர்கள் ரீவின் சேவையைப் பயன்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

facebook twitter