அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா, கடந்த 2012ம் ஆண்டு முதல் நாசா இன்டர்நேஷனல் ஸ்பேஸ் ஆப்ஸ் சேலஞ்ச் (NASA International Space Apps Challenge) என்ற ஹேக்கத்தானை நடத்தி வருகிறது. உலகளாவிய சவால்களைத் தீர்க்கும் வகையிலும், புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கும் வகையிலும், சர்வதேச அளவில் இந்த ஹேக்கத்தான் நடத்தப்பட்டு வருகிறது. இது STEM (அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம்) கண்டுபிடிப்புகளுக்கான உலகின் மிகப்பெரிய போட்டிகளில் ஒன்றாகும்.
அதன்படி, கடந்தாண்டு நடத்தப்பட்ட நாசா இன்டர்நேஷனல் ஸ்பேஸ் ஆப்ஸ் சேலஞ்ச் 2025ல், 167 நாடுகளைச் சேர்ந்த, சுமார் 18,860 குழுக்கள் கலந்து கொண்டன. இந்தப் போட்டியில் இந்தியாவில் இருந்தும் பல்வேறு மாணவக் குழுக்கள் கலந்து கொண்டன. அவற்றுள், சென்னை ராமாபுரத்தில் உள்ள ஈஸ்வரி பொறியியல் கல்லூரி, மாணவர்களும், 'போட்டானிக்ஸ் ஒடிஸி' (Photonics Odyssey) என்ற பெயரில் குழுவாகக் கலந்து கொண்டனர்.
இந்த மாணவர்கள் குழு, தொலைதூர மற்றும் இணைய வசதி குறைவாக உள்ள பகுதிகளுக்கு அதிவேக இணைய இணைப்பை விரிவுபடுத்தும் வகையில் 'செயற்கைக்கோள் அடிப்படையிலான இணைய உள்கட்டமைப்பு' (Satellite-based internet infrastructure) மாதிரியை இந்தப் போட்டிக்காக உருவாக்கினர்.
நாசா மற்றும் இஸ்ரோ (ISRO), ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் (ESA) உள்ளிட்ட 14 சர்வதேச விண்வெளி ஏஜென்சிகளின் மூத்த தலைவர்களைக் கொண்ட செயற்குழு, இந்த மாதிரியை, அதன் புதுமை, தொழில்நுட்ப வலிமை மற்றும் சமூக நலனுக்காக நாசா நடுவர் குழு அங்கீகரித்தது.
சாட்டிலைட் மூலம் இணையவசதி
நாசா இன்டர்நேஷனல் ஸ்பேஸ் ஆப்ஸ் சேலஞ்ச் 2025 போட்டியில் வெற்றி பெற்ற மாணவர் குழுவில், இசிஇ இரண்டாம் ஆண்டு மாணவர்களான ராஜலிங்கம் என், பிரசாந்த் கோபாலகிருஷ்ணன், ராஷி மேனன் மற்றும் சக்தி சஞ்சீவ்குமார் ஆகியோருடன், ஏஐ மற்றும் எம் எல் துறையில் மூன்றாம் ஆண்டு படித்து வரும், தீரஜ்குமார் மற்றும் மனீஷ்வர்மா டி ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.
இந்த போட்டியில் கலந்து கொண்ட அனுபவம் குறித்து மாணவர் பிரசாந்த் கோபாலகிருஷ்ணன் கூறுகையில்,
“பூமிக்கு 500 கிமீ ரேஞ்சில் உள்ள ஆர்பிட் வைத்து, இணையவசதி இல்லாத கிராமப்புறங்கள் மற்றும் ராணுவ வீரர்கள் உள்ள பகுதிக்கு, எப்படி தடையில்லாத இணையவசதியை ஏற்படுத்தித் தருவது, என நாங்கள் ஒரு திட்ட மாதிரியை உருவாக்கியுள்ளோம். பைபர் கேபிள் வசதி இல்லாமல் எப்படி சாட்டிலைட் மூலம் இந்த இணையவசதியை ஏற்படுத்தித்தர இயலும் என்பதுதான் எங்களது புராஜெக்ட்."
இதனை தொழில்நுட்ப ரீதியாக மட்டும் அணுகாமல், புதிய தொழில்முனைவுக்கான வாய்ப்புகளாகவும் நாங்கள் உருவாக்கியுள்ளோம். எங்களது இந்த ஐடியாவைத் சிறந்ததாகத் தேர்வு செய்த நாசா தேர்வுக் குழுவினர், எங்களை குளோபல் வின்னர்களாக அறிவித்துள்ளனர்.
கடந்தாண்டு அக்டோபர் மாதம்தான் இந்தப் போட்டிக்கான முதல் சுற்றுத்தேர்வு நடைபெற்றது. அதில் வெற்றிப் பெற்றதைத் தொடர்ந்து, இரண்டாம் மற்றும் மூன்றாம் தேர்வுகள் நாசா தேர்வுக் குழுவினருடன் ஆன்லைன் வாயிலாக நடைபெற்றது.
"இந்தப் போட்டிக்கான அனைத்து தயாரிப்புகளையும் இரண்டே நாட்களில் தயார் செய்தோம். நான் தான் இந்த குழுவின் தலைவர். இந்தத் திட்டத்திற்கு ஹார்ட்வேர் மட்டுமின்றி சாப்ட்வேர் துறையிலும் ஆட்கள் தேவைப்பட்டதால், எனது சீனியர்களையும் குழுவில் இணைத்துக் கொண்டேன். கல்லூரியிலும் எங்களுக்குப் பெரிதும் ஆதரவு தந்தார்கள்,” எனத் தெரிவித்துள்ளார்.
பேட்டன்ட் வாங்க தீவிரம்
சாட்டிலைட் மூலம் இணையவசதி என்ற தங்களது இந்த திட்டத்திற்கான பேட்டன்ட் வாங்குவது தொடர்பான வேலைகளில் தற்போது இந்த மாணவர்கள் குழு ஈடுபட்டுள்ளது.
இது தொடர்பாக அரசு அலுவலர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறும் பிரசாந்த்,
“நாசா ஹேக்கத்தானில் வெற்றி பெற்ற எங்களைப் பாராட்டும் விதமாக, எங்களது கல்லூரி எங்களுக்கு ரூ.5 லட்சம் பரிசுத்தொகை வழங்கியுள்ளது. எங்களது இந்த வெற்றிக் குறித்துக் கேள்விப்பட்ட தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், எங்களை நேரில் அழைத்துப் பாராட்டினார்.”
சமீபத்தில் சென்னை வர்த்தக மையத்தில், தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் சார்பில் நடைபெற்ற 'UmagineTN- 2026' மாநாட்டிலும் நாங்கள் நான்கு ஸ்டால்கள் போட்டோம். அதன் மூலம், நிறைய திட்டங்கள் பற்றித் தெரிந்து கொண்டோம்.
”2ஜி கூட வராத பகுதிகளிலும் எங்களது மோடம் மூலம் இணையவசதியை ஏற்படுத்தித்தர வேண்டும். அதற்கான அடுத்தகட்ட வேலைகளில் தற்போது தீவிரமாக ஈடுபட்டு வருகிறோம்,” எனத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அக்கல்லூரியின் பிரின்சிபல் தெய்வ சுந்தரி கூறுகையில்,
“எங்களது ஆசிரியர்கள் இந்த மாணவர்கள் குழுவை தொடர்ந்து வழிநடத்தினர். கல்லூரி சார்பில் அவர்களுக்குத் தேவையான வழிகாட்டுதல் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் செய்து தரப்பட்டன. எங்களது இந்த முழுமையான ஆதரவு, அவர்களை நம்பிக்கையுடன் செயல்பட வைத்து, இந்தப் போட்டியில் வெற்றி பெற வைத்துள்ளது,” என்கிறார்.
தொழில்நுட்பம், புதுமை மற்றும் விண்வெளி ஆராய்ச்சித் துறையில் இந்தியா வளர்ந்து வருவதன் மற்றொரு சான்றாக, ஈஸ்வரி பொறியியல் கல்லூரி மாணவர்களின் இந்த திட்டம் அமைந்துள்ளது. அதோடு, உலகின் மிக உயர்ந்த தளங்களில் இந்திய மாணவர்கள் போட்டியிட்டு வெற்றி பெறுவதையும் இது வெளிப்படுத்துகிறது.