ஏர்பஸ் நிறுவனத்துடன் சென்னை ‘கருடா ஏரோஸ்பேஸ்’ ஒப்பந்தம்!

12:16 PM Mar 12, 2026 | cyber simman

ட்ரோன் தொழில்நுட்பம் மற்றும் சேவைகளில் உலகளவில் முன்னணியில் விளங்கும் ‘கருடா ஏரோஸ்பேஸ்’ 18 ‘பிலக்ஸ்ரோடர்’ (Flexrotor) ஆளில்லா ஏரியல் அமைப்புகளை (UAS) வாங்குவதற்காக ஏர்பஸ் ஹெலிகாப்டர் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.

உலக அளவில் ஆளில்லா விமான அமைப்புகள் மற்றும் சேவைகளை விரிவாக்கும் நிறுவன திட்டத்தில் இது முக்கிய படியாக அமைந்துள்ளது. இதன் மூலம் நிறுவனத்தால் சர்வதேச சந்தையில் அதிக மதிப்பிலான வான்வழி உளவு மற்றும் கண்காணிப்பு சேவைகளை வழங்க முடியும், என இது தொடர்பான நிறுவன செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

’பிலக்ஸ்ரோடார்’ அமைப்புகள் கருடாவின் உலக சேவையில் ஒருங்கிணைக்கப்பட்டு, வாடிக்கையாளர்களுக்கு இருவித குத்தகை முறையில் வழங்கப்படும். இந்த மேடை உள்கட்டமைப்பு ஆய்வு, எண்ணெய் குழாய்கள் கண்காணிப்பு, சட்ட செயலாக்கம், தேடல் உள்ளிட்ட சிவில் மற்றும் தொழில் துறை பயன்பாடுகளில் ஈடுபடுத்தப்படும்.

”எங்கள் உலக குத்தகை மேடையில் Flexrotor ஒருங்கிணைப்பதற்கான ஏர்பஸ் ஹெலிகாப்டர் கூட்டு, எங்கள் சர்வதேச விரிவாக்கம் மற்றும் முதலீடு உத்தியில் முக்கிய செயல்பாடாக அமைகிறது,” என்று கருடா ஏரோஸ்பேஸ் நிறுவனர் மற்றும் சி.இ.ஓ. அக்னீஸ்வர் ஜெயபிரகாஷ் கூறியுள்ளார்.

”5,000 ட்ரோன்களுக்கு மேல் தயாரித்து விற்பனை செய்துள்ள நிலையில், சர்வதேச அளவில் 500க்கும் மேலான நிறுவனம் மற்றும் அரசுத்துறை வாடிக்கையாளர்களை பெற்றுள்ள நிலையில் உலக அளவில் எங்கள் செயல்பாட்டை விரிவாக்க சேவைகளை மேம்படுத்தி வலுவாக்கி வருகிறோம்,” என கூறியுள்ளார்.

கருடா நிறுவனத்துடன் இணைந்து செயல்படுவது மகிழ்ச்சி அளிப்பதாக ஏர்பஸ் ஹெலிகாப்டர் நிறுவனத்தின் உலக வர்த்தக செயல் துணைத்தலைவர் ஆலிவர் மிக்கோலன் கூறியுள்ளார்.


Edited by Induja Raghunathan