இந்தியாவின் முன்னணி ஸ்பேஸ்டெக் ஸ்டார்ட்அப் ஆக உருவெடுத்துள்ள 'அக்னிகுல் காஸ்மாஸ்' (Agnikul Cosmos), தற்போது சென்னை நகரில் மிகப் பெரிய அளவிலான 3D அடிட்டிவ் உற்பத்தி மையத்தை திறந்து வைத்துள்ளது. இது இந்தியாவில் முதல் முறையாக 1 மீட்டர் உயரமுள்ள ஏரோஸ்பேஸ் மற்றும் ராக்கெட் பாகங்களை 3D பிரிண்ட் செய்யும் வசதியை கொண்டதாகும்.
இந்த புதிய உற்பத்தி மையம், வடிவமைப்பு, சிமுலேஷன், பிரிண்டிங், போஸ்ட்-பிராசசிங் மற்றும் ஃபினிஷிங் என அனைத்து கட்டங்களையும் ஒரே இடத்தில் ஒருங்கிணைத்துள்ளது. இதன் மூலம், உற்பத்தி செலவு 50% வரை குறையும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.
"இந்த வசதியின் மூலம், ஒரு மீட்டர் அளவிலான இன்ஜின்களை பிரிண்ட் செய்து, முந்தைய வடிவமைப்புகளுக்கு காட்டிலும் ஏழு மடங்கு அதிக தள்ளும் சக்தியை (thrust) பெற்ற இன்ஜின்களை உருவாக்க முடிகிறது. இனி எங்களைப் போல ஸ்டார்ட்அப்'கள் சில நாட்களுக்குள் முழுமையாக தயாரான பாகங்களை உற்பத்தி செய்து விண்வெளிக்குப் பயன்படுத்த முடியும்," என அக்னிகுல் காஸ்மாஸ் நிறுவனத்தின் இயக்குனர் மற்றும் கூட்டுத்தொடராளரான ஸ்ரீநாத் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
மேலும், பாகங்களின் தரத்தை உறுதி செய்யும் வகையில், நிறுவனம் தானாகவே வடிவமைத்து தயாரித்துள்ள “De-powdering machine” என்பதன் மூலமாக flawless surface finish மற்றும் space-grade quality-ஐ உறுதி செய்ய முடிகிறது. இதுவும் இந்தியாவில் முதன்முறையாக உள்ள உள்நாட்டு சுயஉற்பத்தி சாதனமாகும்.
"விண்வெளிக்கான அணுகலை உத்தரவாதமாக மாற்றியும் குறைந்த செலவில் செய்யக்கூடியதாகவும் மாற்றுவதே எங்களது இலக்கு. இந்தப் புதிய மையம், நமது ராக்கெட் ஏவல் (launch readiness) வாய்ப்புகளை முன்னேற்றி, இந்திய விண்வெளித் துறையைத் தன்னிறைவு கொண்டதாகவும், உலகளாவிய போட்டியில் தனித்தடம் அமைக்கும் வகையில் மேம்படுத்துவதாகவும் அமையும்," என நிறுவனர் மற்றும் COO மொயீன் கூறினார்.
ஐஐடி மெட்ராஸ் தொழில்நுட்பக் கழகத்தின் இன்குபேஷனில் உருவான அக்னிகுல் காஸ்மாஸ் தற்போது ‘அக்னிபான்’ (Agnibaan) எனப்படும் சிறிய ராக்கெட் ஏவனைகளை (launch vehicles) உருவாக்கி வருகிறது. கடந்த ஆண்டில் நிறுவனம் தனது தனியார் லாஞ்ச் பேடிலிருந்து முதல் வெற்றிகரமான செலுத்துதல் முயற்சியை மேற்கொண்டது.