
இந்தியாவின் மக்கள்தொகை ஆதிக்கம் என்றென்றும் நீடிக்காது. ஆகவே, அடுத்த 20 ஆண்டுகளில் நாம் என்ன உருவாக்குகிறோமோ, அதுவே அடுத்த 100 ஆண்டுகளுக்கான இந்தியாவாக இருக்கும் என்று ஜோஹோ கார்ப்பரேஷன் நிறுவனர் மற்றும் தலைமை விஞ்ஞானி ஸ்ரீதர் வேம்பு தெரிவித்தார்.
YourStory நிறுவனர் மற்றும் CEO ஷ்ரத்தா சர்மாவுடன் நடந்த உரையாடலில் அவர் கூறியது,
“இந்தியர்கள் குறைந்த எண்ணிக்கையிலேயே குழந்தைகளை பெறத் தொடங்கியுள்ளனர். குறிப்பாக தமிழ்நாடு போன்ற மாநிலங்களில், ஆண்டுக்கு பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை வேகமாக குறைந்து வருவதால், நாம் கிட்டத்தட்ட ஒரு நெருக்கடியை நோக்கிச் செல்கிறோம். ஆகவே, இன்றைக்கு இளையவர்களாக இருக்கும் மக்கள்மீதே இந்த நாட்டை வடிவமைக்கும் பொறுப்பு உள்ளது. அதே நேரத்தில், இந்தியா இப்போது உலகிலேயே அதிக மக்கள்தொகையுள்ள நாடாக அதிகாரபூர்வமாக மாறியுள்ளது என்பதும் உண்மை.”
மக்கள்தொகையின் அடர்த்தி மூலமாகவே உலகில் நமக்கு ஒரு தனித்துவமான பங்கு இருக்கிறது,” என்றார் அவர்.

அதனால், 'இந்தியா முதலில்' (Bharat-first) அணுகுமுறையையும், உலகளாவிய பார்வையையும் நாம் கொண்டிருக்க வேண்டும், என்றார்.
இந்தியாவின் (இந்து தத்துவத்தின்) சாரம் என்பது திருப்தியும் பணிவும். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நம் சன்னியாசிகளும் தத்துவஞானிகளும் இதையே போதித்துள்ளனர். அனைவரையும் ஒரு உள்ளடக்க வேண்டும் (inclusive) என்னும் மனப்பான்மை இன்றைய தொழில்நுட்ப உலகில் காணாமல் போயுள்ளது. பெரிய டெக் நிறுவனங்கள் (Big Tech) உண்மையில் ஏகாதிபத்திய அணுகுமுறையைக் (monopolies) கைகொள்கின்றன.
உதாரணத்திற்கு சென்னையில் உள்ள ரெயில் பெட்டி உற்பத்தி தொழிற்சாலையை (Integral Coach Factory) எடுத்துக்கொள்ளுங்கள். அது 1950-களில் சுவிஸ் உதவியுடன் கட்டப்பட்டது. அப்போது அவர்கள் சர்வாதியபத்தியத்தை உருவாக்கி, ‘இதற்காக வரி கட்ட வேண்டும்’ என்று சொல்லவில்லை. அவர்கள் மகிழ்ச்சியுடன் தொழில்நுட்பத்தை பகிர்ந்துகொண்டார்கள்.” ஆனால் அந்த மனப்பான்மை இப்போது முற்றிலும் அழிந்துவிட்டது..
இன்றைய ‘கிழக்கிந்திய கம்பெனி’ (East India Company) போன்ற வாழ்வுமுறையை எதிர்க்கக்கூடிய ஒரே நாடு இந்தியாதான். இது முதலாளித்துவம் (capitalism) அல்லது சோஷலிசம் (socialism) பற்றிய விஷயம் அல்ல. இது மனிதநேயத்தை (humanism) பற்றியது.
”நாங்கள் தென்காசியில் இருப்பது, இங்கே எங்கள் தயாரிப்புகளை விற்க வேண்டும் என்பதற்காக அல்ல. இங்குள்ள மக்களை உற்பத்தித் திறன் கொண்டவர்களாக மாற்றி, அவர்கள் சம்பாதித்து, உலக பொருளாதாரத்தில் பங்கேற்கச் செய்வதற்காகவே,” என்றார் ஸ்ரீதர் வேம்பு.
மயிலின் ஓசைகள்:
தொழில்நுட்பம் முக்கிய பங்கு வகிக்கிறது என்பதை வேம்பு ஒப்புக்கொண்டாலும், அதை உருவாக்கும் பெயரில், இங்குள்ள மண்ணையும், நீரையும் அழித்து, அனைத்தையும் மாசுபடுத்த முடியாது. அதனால், உள்ளது போதும் என்னும் திருப்தி (contentment) என்பதே நம் அடித்தளக் கொள்கையாக இருக்க வேண்டும்.
”தினமும் காலை 3.30 முதல் 4.30 மணிக்குள் அலாரம் இல்லாமலேயே விழிக்கிறேன். அந்த நேரத்தில் என் மூளை மிகச் சுறுசுறுப்பாக இருக்கும். அதுதான் நான் அதிகமாக வேலை முடிக்கும் இரண்டு மணி நேரம். யோசனைகளை குறித்துக்கொள்வதும், ஆராய்ச்சி கட்டுரைகளை வாசிப்பதும், அவற்றை பொறியாளர்களுக்கு அனுப்புவதும் அந்த நேரத்தில் நடக்கும்,” என்றார்.
அவர் பெரும்பாலான நாட்களில் 40 நிமிடங்கள் யோகா செய்கிறார். பிறகு ஒரு கல் அல்லது ஓடையின் அருகில் 10–15 நிமிடங்கள் அமைதியாக அமர்ந்திருப்பார். கைப்பேசியை குறைந்தது இரண்டு முதல் மூன்று மணி நேரம் தொடமாட்டார். பிற்பகலில் சிறிய தூக்கம், இரவு 9 முதல் 9.30 மணிக்குள் உறக்கம் – இதுவே அவரது தினசரி நடைமுறை.
“நான் வாழ்க்கையையே ரசிக்கிறேன்...” என்றார் வேம்பு. அவ்வப்போது நீச்சலுக்கும் செல்வார். அரிதாகவே திரைப்படங்கள் பார்ப்பார். தற்போதைய IPL சாம்பியன் யார் என்பதே தெரியாது; அதைப் பற்றி அவர் “மங்கோலியாவின் ஜனாதிபதி யார் என்று தெரியாதது போல...” என்று நகைச்சுவையாக சொன்னார்.
தென்காசியில் இருப்பதற்கு கூடுதல் பலன்களும் உள்ளன. வாழ்க்கைச் செலவு குறைவு. “நான் தினமும் மயிலோசையைக் கேட்டு தான் எழுகிறேன்,” இங்கே நான் செல்லும் இடமெல்லாம் உடனடி அடையாளம் கிடைக்கிறது. அதை பணத்தால் வாங்க முடியாது.
அதனால் கிராம வாழ்க்கையில் பிரச்சினைகளே இல்லை என்பதில்லை. தொலைதூர கிராமங்களைப் பாருங்கள்; போக்குவரத்து ஒரு பெரிய பிரச்சினை. நாங்கள் எப்படிப் சிறந்த போக்குவரத்தை உருவாக்கப் போகிறோம்? மலிவான போக்குவரத்தை? சுகாதார வசதிகளை?
இந்த பிரச்சினைகளைத் தீர்க்க தொழில்நுட்பம் தேவைதான். ஆனால், வாழ்க்கை என்ற பெரிய தயாரிப்பு கட்டமைப்பில், தொழில்நுட்பத்தை அதன் இடத்தில் வைத்தே பயன்படுத்த வேண்டும். இந்த சவால்களை ’உறுதியான தொழில் முனைவோர்’ தீர்க்க முடியும் என்று வேம்பு நம்புகிறார்.
“எளிமையாகச் சொன்னால், நாட்டில் 832 மாவட்டங்கள் தான். ஒவ்வொரு மாவட்டத்தையும் 20 மண்டலங்களாகப் பிரித்தால், 16,000 முதல் 20,000 பகுதிகள் தான். அவற்றில் ஒவ்வொன்றிலும் வேரூன்றக்கூடிய 20,000 உறுதியான மனிதர்கள் நமக்கில்லையா?” என்று கேட்கிறார்.
பஞ்சாயத்து நிலைக்கு வந்தால், நாட்டில் சுமார் 6.5 லட்சம் கிராமங்கள் தான். ஒவ்வொரு கிராமத்திற்கும் ஒருவராவது – 6.5 லட்சம் பேர் – நமக்கில்லையா? நம் நாட்டின் அளவோடு ஒப்பிட்டால், இந்த எண்ணிக்கை பெரிதல்ல.
இது கணினி அறிவியலில் சொல்லப்படும் ‘divide-and-conquer’ அணுகுமுறை போலதான்.
ஒரு பெரிய பிரச்சினையை சிறிய துணைப் பிரச்சினைகளாகப் பிரியுங்கள். பிறகு அவற்றைத் தீருங்கள்.
இந்த நாட்டின் அளவை நீங்கள் டெல்லி பார்வையிலிருந்தோ, அல்லது கர்நாடகத்தை பெங்களூரு பார்வையிலிருந்தோ மட்டும் பார்க்க முடியாது. இங்கே, கடைசி கிராமம் மாதிரியான இடத்தில் இருந்து பார்த்தால், வாழ்க்கையே வேறு மாதிரி தெரிகிறது. அந்த இடத்திலிருந்து பார்த்தால், மற்ற எல்லா இடங்களும் எனக்கு தொலைதூரமாகத் தான் தெரிகின்றன.

நான் உலகத்தோடு இணைந்தவன்தான். ஆனால் சிலிகான் வாலியில் உருவாகும் ஒருவிதமான மூடுண்ட தன்மைப் பற்றிப் படிக்கும்போது, அது எனக்கு தொலைவிலுள்ள, சூட்சம விஷயமாகத் தான் தெரிகிறது. நான் அந்த மூடுண்ட அமைப்புக்குள் வாழவில்லை. அதனால் அதை அமைதியாக ஆராய முடிகிறது.
இங்கே எனது டிராபிக் ஜாம் என்றால், மாலை நேரத்தில் சாலையை கடக்கும் எருமை மந்தை தான், என்றார் அவர் சிரித்துக்கொண்டு.
ஆர்வமும் தத்துவமும்!
இப்போது தன்னிடம் ஆழமான தொழில்நுட்பப் பணிக்கான நேரம் கிடைப்பதில் அவர் மகிழ்ச்சியடைகிறார். ஆனால் ஏன் இதை செய்கிறார்?
“பணம் காரணம் அல்ல – அதில் எனக்கு கொஞ்சம் கூட ஆர்வம் இல்லை. இவை அனைத்தும் ஆர்வத்தால் (curiosity) இயக்கப்படும் அறிவியல் திட்டங்கள். அதோடு, என் பெற்றோரிடமிருந்து வந்த தத்துவ பார்வையும் பணிவும், நம் ஆன்மீக மரபும் இதற்குக் காரணம்,” என்றார்.
எந்த விஷயமாக இருந்தாலும், அது எப்படி வேலை செய்கிறது என்பதை அறியவேண்டும் என்ற ஆர்வம் தனக்கு எப்போதும் இருந்ததாக அவர் கூறினார். மென்பொருளை மேம்படுத்துவதிலிருந்து, கல்வியை மறுபடியும் சிந்திப்பது வரை – குறிப்பாக பள்ளி விலகல்களைத் தடுப்பது வரை – அவர் அதையே பயன்படுத்துகிறார்.
“இந்த புத்தகக் கல்வியில் உங்களுக்கு ஆர்வம் இல்லை என்றால், அதை நான் மதிக்கிறேன். ‘படி, படி’ என்று சொல்லாமல், நீங்கள் கற்றுக்கொள்ளும் வழியை எப்படி உருவாக்கலாம் என்று யோசிப்போம்,” என்றார் அவர்.
வேம்பு படித்த பள்ளி, ஜெய்கோபால் கரோடியா என்ற தொண்டரால் நிதியளிக்கப்பட்டது. அது இலவச கல்வி. அப்போது என்னைப் போல ஆயிரக்கணக்கான குழந்தைகளுக்கு அவர் உதவினார். அந்த நன்றியை திருப்பிச் செலுத்தவே நான் இப்போது இதை செய்கிறேன், என்றார் அவர்.
ஆங்கில நேர்காணல்லிருந்து தமிழில் முத்துகுமார்.