'Divorce Camp' - விவாகரத்தான பெண்களின் மகிழ்ச்சியை மீட்டெடுக்க உதவும் கேரளப் பெண்!

04:04 PM Aug 14, 2025 | YS TEAM TAMIL

திருமண உறவின் முறிவான விவாகரத்து என்பது பெரும்பாலும், ஒரு நீண்ட வழிப்பாதையின் முடிவாகக் கருதப்படுகிறது. அதிலும், இந்தியா போன்ற சமூகத்தில் தடைச்செய்யப்பட்ட ஒன்றாகக் கருதப்படுகிறது. நாட்டில் பரவலாக நிலவிவரும் இக்கருத்தை எளிமையாக, அழகாக மாற்றியமைத்துள்ளார் கேரளாவைச் சேர்ந்த ரஃபியா அஃபி.

விவாகரத்து பெற்ற பெண்களின் மனவலிமையை போக்குவதற்காகவும், அவர்களுக்கே அவர்களுக்கான ஒரு மகிழ்ச்சியான ஸ்பேஸை உருவாக்கவும், 'பிரேக் ஃப்ரீ ஸ்டோரிஸ்' என்ற பெயரில் கேம்ப்பை நடத்தி வரவேற்பை பெற்றுள்ளார்.

திருமணப்பந்தத்திலிருந்து வெளியேறியவர்கள் மற்றவர்களுடன் இணைவதற்கும், அவர்களின் கதைகளைப் பகிர்ந்து கொள்வதற்கும், மகிழ்ச்சியை மீண்டும் கண்டுபிடிப்பதற்கும் உதவுவதே இம்முயற்சியின் நோக்கமாகும். இன்ஸ்டாகிராமில் வெளியிடப்பட்ட கேம்ப்-இன் வீடியோவில், பெண்கள் நடனமாடுவது, பாடுவது, சிரிப்பது மற்றும் புதிய பிணைப்புகளை உருவாக்குவது போன்றவை காட்சிப்படுத்தப்பட்டு இணையத்தில் ஆதரவை பெற்றது. அதிலும், அப்பதிவின் கேப்ஷனில்,

"நாங்கள் குழந்தைகளைப் போல சிரித்தோம். நாங்கள் போர்வீரர்களைப் போல அழுதோம். நாங்கள் மலைகளுக்குள் கத்தினோம். நட்சத்திரங்களின் கீழ் நடனமாடினோம். வேறு யாருக்கும் புரியாத கதைகளைப் பகிர்ந்து கொண்டோம். அந்நியர்கள் சோல் சிஸ்டர்ஸ்களாக மாறினர். நெருப்பு மற்றும் முன்னேற்றங்களுக்கு இடையில் எங்கோ... நாங்கள் விடுபட்டோம்," என்று கேம்பின் உணர்வை அழகாக விவரித்திருந்தனர்.

கேரளாவின் முதல் விவாகரத்து கேம்ப்!

கேரளாவின் மலப்புரத்தைச் சேர்ந்த தொழில்முனைவோரும், சோஷியல் மீடியா கன்டன்ட் கிரியேட்டருமான ரஃபியா அஃபி, 9 மாதங்களுக்கு முன்பு விவகாரத்து பெற்றார். ஒரு உறவின் முறிவு ஏற்படுத்தும் வலியிலிருந்து மீள்வதற்கு, அவரது சுற்றத்தார்கள் ரஃபியாவின் முடிவை மதித்து ஏற்றுக்கொண்டது உதவியாக இருந்துள்ளது. அவரது திருமணப் பந்தம் முடிவு பெற்றது கடினமாக இருந்த போதிலும், அவரை திணறடித்த போதிலும், அதை ஒருபோதும் தனியாக எதிர்கொள்ளவில்லை. அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் ஆதரவு, கடினமான நாட்களைக் கூட கடந்து செல்ல உதவி உள்ளது. அவர்களின் ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மை ரஃபியாவிற்கு ஒரு புதிய உலகத்தைக் காண்பித்தது.

"விவாகரத்து, சிங்கிள் பேரன்டிங், மற்றும் நான் என்ன உணர்கிறேன் என்பது பற்றிய கருத்துகளை இன்ஸ்டாகிராமில் பதிவிடத் தொடங்கினேன். நான் சொல்லும் கருத்துகளுடன் பலரால் அவர்களை கனெக்ட் செய்து கொள்ள முடிந்தது. பல பெண்கள் அவர்களது அனுபவங்களை டிஎம்-ல் பகிர்ந்தனர். ஒரு உறவின் முடிவு வலிக்கு வழிவகுக்கிறது என்பதை உணர்ந்தேன். அதையும், பெரும்பாலான பெண்கள் தனியாக எதிர்கொள்கிறார்கள்."

சமீப நாட்களில் அதிகரித்து வரும், திருமண முரண்பாடு மற்றும் வரதட்சணை கோரிக்கைகள் காரணமாக பெண்கள் தற்கொலை செய்து கொள்ளும் செய்திகள், துஷ்பிரயோக உறவுகளில் நிலைத்திருப்பதற்கு பதிலாக விவாகரத்தைத் தேர்ந்தெடுக்க பெண்களுக்கு ஆதரவு இல்லாததை சுட்டிக்காட்டுகின்றன.

"பெண்கள் இன்னும் விவாகரத்து என்றால் பயப்படுகிறார்கள். மேலும், இந்த பயம் சில நேரங்களில் அவர்களை தீவிரமான முடிவுகளை எடுக்கத் தள்ளுகின்றன. திருமணமான பெண்கள் தற்கொலை செய்து கொள்ளும் துயரங்கள் நிகழும்போது, நிறைய விவாதங்களுக்கு வழிவகுக்கின்றன. ஆனால் உண்மையில் எதுவும் மாறுவதில்லை," என்று அழுத்தமாக தெரிவித்தார் ரஃபியா.

ரஃபியா அஃபி


விவாகரத்து பெற்றவர்களின் வலியை போக்கும் கேம்ப்!

விவகாரத்து பற்றிய ரஃபியாவின் உணர்தலும், அவரது சொந்தப் பயணமும், விவாகரத்து பெற்றவர்கள், விதவைகள் மற்றும் திருமண உறிவிலிருந்து பிரிந்தவர்களுக்கான சிகிச்சை முகாம்களை நடத்த வழிவகுத்தது. அதன் முயற்சியாக, கடந்த மே 24ம் தேதியன்று "பிரேக் ஃப்ரீ ஸ்டோரிஸ்" (Break free stories) என்ற பெயரில் கேரளாவில் உள்ள வாகமனில் உள்ள ஓய்வு விடுதி ஒன்றில் பெண்களுக்கான இரண்டு நாள் கேம்ப்-ஐ நடத்தினார்.

"விவாகரத்து கோருவது வெட்கக்கேடானது அல்ல என்பதை உலகிற்குச் சொல்ல விரும்பினேன். எல்லாவற்றையும் தாண்டி, உங்களைத் தேர்ந்தெடுப்பது என்பது நீங்கள் பெருமைப்பட வேண்டிய ஒன்று. ஒரு உறவின் முடிவு என்பது ஒரு முற்றுப்புள்ளி என்று மக்கள் நினைக்கிறார்கள். அது இல்லை, நீங்கள் அங்கு ஒரு காற்புள்ளியை வைக்கலாம் என்று நாங்கள் அவர்களிடம் சொல்ல விரும்புகிறோம்," என்கிறார்.

இந்த முகாம் ஆனது 21 முதல் 50 வயதுக்குட்பட்ட 20 பெண்களை நடனம், இசை, ஊடாடும் அமர்வுகள் மற்றும் விளையாட்டுகளால் நிரப்பப்பட்ட பாதுகாப்பான, தீர்ப்பு இல்லாத இடத்தில் ஒன்றிணைத்தது. ரஃபியாவின் பிரேக் ஃப்ரீ முயற்சிக்கு மக்கள், அபரிவிதமான ஆதரவை அளித்தனர்.

"எல்லோரும் மிகவும் உற்சாகமாக இருந்தனர். பெரும்பாலான நேரங்களில், விவாகரத்து செய்ய முடிவு செய்த பிறகு, நீங்கள் தனியாக உணர்கிறீர்கள். ஆனால் அதே நிலையைக் கடந்து செல்லும் மக்களை நீங்கள் சந்திக்கும் போது, நீங்கள் தனியாகயில்லை என்ற உணர்வு ஏற்பட்டு அதுவே பலமாக மாறும். ஒருவொருக்கொருவர் அவர்களது மனக்கஷ்டங்களை பகிர்ந்து கொள்வதால் அவர்களது உள் வலிமையைக் கண்டறிய உதவும் என்று நம்புகிறேன்," என்றார்.


"விவகாரத்து என்பது திருமணத்தை போலவே அழகானது...."

"பெண்கள் அவர்கள் விரும்பியதைப் பேசவும், சிரிக்கவும், அழவும் ஒரு பாதுகாப்பான மற்றும் ஜட்ஜ் செய்யாத ஒரு இடத்தை நான் வழங்க விரும்பினேன். ஆனால், பேசாமல் இருப்பதும் பரவாயில்லை!" என்கிறார்.

இதுவரை நான்கு முகாம்களை ஏற்பாடு செய்துள்ளார். மேலும், பயனுள்ள இணைப்பு மற்றும் பங்கேற்பை உறுதி செய்வதற்காக பங்கேற்பாளர்களின் எண்ணிக்கையை 20 ஆகக் கட்டுப்படுத்துகிறார். அவர் தேர்ந்தெடுக்கும் இடத்தின் அடிப்படையில் கட்டணத்தை நிர்ணயிக்கிறார். சமீபத்தில் துபாயிலும் அவரது முதல் முகாமையும் ஏற்பாடு செய்தார்.

"நான் ஒவ்வொரு வார இறுதியில் ஒரு முகாமை ஏற்பாடு செய்ய விரும்புகிறேன். ஆனால் நான் ஒரு சிங்கிள் மதர், குடும்பத் தொழிலில் என் தந்தைக்கு உதவுகிறேன். மேலும் ஒரு சமூக கால்பந்து கிளப்பையும் நடத்துகிறேன். இத்தனைக்கு மத்தியில் வாரஇறுதி முகாமை ஏற்படுத்துவது கடினம் என்றாலும் சாத்தியமற்றது அல்ல," என்று கூறினார்.

பிரேக் ஃப்ரீக் முயற்சியை தொடங்கியதிலிருந்து, ஏதேனும் பின்னடைவைச் சந்தித்தாரா என்று கேட்டபோது,

"நீங்கள் ஒரு புதிய இயக்கத்தைத் தொடங்கும்போது, முழு உலகமும் உங்களை ஆதரிக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. மாற்றம் ஒரே இரவில் நடக்காது. நீங்கள் தொடர்ந்து அதில் நிலைத்திருக்க வேண்டும். நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதை மீண்டும் மீண்டும் சொல்ல வேண்டும்," என்று அவர் கேரளாவில் உள்ள பெண்கள் அவர்களுக்காகவும், அவரது முயற்சிக்கு ஆதரவு அளிப்பதற்காகவும், அவர் நன்றி தெரிவித்தார்.

இன்ஸ்டாகிராமில் ரஃபியா தொடர்ந்து அவரது தந்தையுடன் இணைந்து உள்ளடக்கத்தை இடுகையிடுகிறார். இது, விவாகரத்து பெற்றவர்களுக்கு அவர்களது பெற்றோரின் ஆதரவு எவ்வளவு அவசியமானது என்பதை எடுத்துக்காட்டுகிறது. அவரது முதல் பிரேக் ஃப்ரீ முகாமில் ஒரு பகுதியாக, ஒளிப்பரப்பப்பட்ட வீடியோ ஒன்றில், அவரது தந்தை விவாகரத்து குறித்த அவரது கண்ணோட்டத்தை பகிர்ந்து கொண்டுள்ளார். பெற்றோர்கள் அவர்களது குழந்தைகளைக் கட்டுப்படுத்தாமல், அவர்களது முடிவுகளை மதித்து அவர்களை பறக்க விடுவது முக்கியம் என்று எடுத்துரைந்திருந்தார்.

" திருமணம் என்பது அழகானது என்று நான் எல்லோரிடமும் சொல்கிறேன். இது இரண்டு பேர் ஒருவரையொருவர் புரிந்துகொண்டு வாழ்நாள் முழுவதும் ஒரு இடத்தைப் பகிர்ந்து கொள்வதைப் பற்றியது. ஆனால் ஒரு கட்டத்தில், அதில் அமைதி இல்லை என்றால், அதை இழுத்தடிப்பதற்குப் பதிலாக அதை முடிவுக்குக் கொண்டுவருவதும் அழகாக இருக்கும்."

விவாகரத்து என்பது திருமணத்தைப் போலவே அழகாக இருக்கிறது. எனவே, அடுத்த முறை ஒருவரின் விவாகரத்தைக் கேட்கும்போது, 'காரணம் என்ன? என்ன நடந்தது?' என்று கேட்பதற்குப் பதிலாக, 'சரி, நல்லது. அவர்கள் தங்களைத் தேர்ந்தெடுத்தார்கள்' என்று சொல்லுங்கள்" என்று ஆழமான கருத்துகளை பகிர்ந்தார் ரஃபியா.

தமிழில்: ஜெயஸ்ரீ