+

உங்கள் ஹெல்த்துக்கு ‘சிபில் ஸ்கோர்’ இருந்தால்..? - 10 ஆண்டு முயற்சியில் அசத்தும் ஸ்டார்ட்அப்!

10 ஆண்டுகளுக்குப் பிறகு, 500 நகரங்களில் 1,200-க்கும் மேற்பட்ட நிறுவன வாடிக்கையாளர்களுடனும், கடந்த நான்கு ஆண்டுகளில் 40-45% வருடாந்திர வளர்ச்சி விகிதத்துடனும், ஹைதராபாத்தைச் சேர்ந்த இந்த ஹெல்த்-டெக் ஸ்டார்ட்அப் தனது இலக்கை எட்டியுள்ளது.

நீங்கள் வீட்டுக் கடன் வாங்கச் செல்லும்போது, உங்களின் எதிர்காலத்தைத் தீர்மானிப்பது மூன்று இலக்கங்களைக் கொண்ட உங்களது சிபில் ஸ்கோர்தான். பல ஆண்டு கால உங்களது கடன் திருப்பிச் செலுத்தும் முறை மற்றும் நிதி சார்ந்த நடத்தையை வைத்து, உங்களது நிதி ஆரோக்கியத்தை வங்கிகளுக்கு இந்த ஒரு எண் அப்பட்டமாக தெரிவித்துவிடும். இப்போது கற்பனை செய்து பாருங்கள், இதே போன்ற ஒரு மதிப்பீடு உங்கள் ஆரோக்கியத்திற்கும் இருந்தால் எப்படியிருக்கும்?

இந்த ஓர் எளிய, ஆனால் ஆழமான சிந்தனையோடுதான் கிரண் கலகண்ட்லா, ஸ்ரீகாந்த் சமுத்ராலா மற்றும் டாக்டர் நோயல் குடின்கோ ஆகியோருடன் இணைந்து 2014-ஆம் ஆண்டு ‘இ-கின்கேர்’ (eKincare) நிறுவனத்தைத் தொடங்கினார்.

இது மற்ற டிஜிட்டல் ஹெல்த் செயலிகளைப் போல டெலிமெடிசின் அல்லது அவசர மருத்துவ ஆலோசனைகளை வழங்கும் ஒரு தளம் அல்ல.

“ஒரு மனிதனின் உடல்நலத்தை நீண்ட கால அடிப்படையில் ஒரு நுண்ணறிவுத் தரவாக எப்படிக் கட்டமைக்க முடியும்?” என்ற ஒற்றைக் கேள்விக்கான பதிலை தேடும் ஒரு தீவிர முயற்சி இது.

பத்து ஆண்டுகளுக்குப் பிறகு, 500 நகரங்களில் 1,200-க்கும் மேற்பட்ட நிறுவன வாடிக்கையாளர்களுடனும், கடந்த நான்கு ஆண்டுகளில் 40-45% வருடாந்திர வளர்ச்சி விகிதத்துடனும், ஹைதராபாத்தைச் சேர்ந்த இந்த ஹெல்த்-டெக் ஸ்டார்ட்அப் தனது இலக்கை எட்டியுள்ளது.

அடித்தளம் அமைத்தது எப்படி?

‘இ-கின்கேர்’ நிறுவனம் தனது தொடக்கப் புள்ளியாக ‘கார்ப்பரேட் ஹெல்த்’ துறையைத் தேர்ந்தெடுத்தது தற்செயலானது அல்ல. இந்தியாவின் நிறுவனங்களால் வழங்கப்படுபடும் சுகாதாரச் சூழல் மிகப் பெரியது. 50 கோடிக்கும் அதிகமான தொழிலாளர்கள் ஏதோ ஒரு வகையில் நிறுவனத்தால் வழங்கப்பட்ட ஆண்டு ஆரோக்கியப் பரிசோதனைத் திட்டத்தில் உள்ளனர். காகிதத்தில் பார்க்கும்போது இது ஒரு மாபெரும் தரவுச் சுரங்கம் போலத் தெரிந்தாலும், நடைமுறையில் இது ஒரு குப்பை மேடாகவே இருந்து வந்தது.

வழக்கமான கார்ப்பரேட் ஹெல்த் செக்-அப் என்பது இப்படித்தான் நடக்கும். அதாவது, ஒரு நிறுவனம் ஏதேனும் ஓர் ஆய்வுக் கூடத்துடன் ஒப்பந்தம் செய்யும், ஊழியர்கள் அருகில் இருக்கும் லேப்-களுக்குச் சென்று பரிசோதனை செய்வார்கள், அந்த அறிக்கைகள் மின்னஞ்சலில் பிடிஎஃப் கோப்பாக வரும், அதை மனிதவள மேம்பாட்டுத் துறை கோப்புக்குள் போட்டு மூடிவிடும்.

அடுத்த ஆண்டு வரை எதுவும் நடக்காது. ஒப்பீடுகள் இருக்காது, தொடர் கண்காணிப்பு இருக்காது. நிறுவனம் பரிசோதனைக்காகப் பணம் செலுத்துகிறது, ஆனால் ஊழியர்களின் ஆரோக்கியம் மேம்படுகிறதா அல்லது சீர்கெடுகிறதா என்பது யாருக்கும் தெரியாது. ஊழியர்களுக்கோ அந்த அறிக்கையில் உள்ள விவரங்கள் புரியாது, அதை விளக்க யாரும் இருக்க மாட்டார்கள்.

இந்த இடைவெளியைத் தான் ‘இ-கின்கேர்’ நிரப்பியது. நிறுவனங்களுக்கும் ஊழியர்களுக்கும் இடையே ஒரு சுகாதாரப் பலன் அடுக்காகத் தன்னை நிலைநிறுத்திக் கொண்ட இந்நிறுவனம், ஆண்டுப் பரிசோதனைகள் முதல் மனநல மேம்பாடு வரை அனைத்தையும் நிர்வகிக்கத் தொடங்கியது.

“தரவை முறைப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்ட முதல் நிறுவனம் நாங்கள்தான். இது ஏதோ கல்வி சார்ந்த நோக்கத்திற்காக அல்ல, மாறாகத் தரவு சரியாக இருந்தால் மட்டுமே எங்களது தயாரிப்பு வேலை செய்யும் என்பதால் இதைச் செய்தோம்” என்கிறது நிறுவனம்.

இன்று, நூற்றுக்கணக்கான ஆய்வுக்கூடங்களில் இருந்து வரும் பல்வேறு வடிவங்களில் உள்ள மருத்துவ அறிக்கைகளைப் பெற்று, அவற்றைத் தூய்மைப்படுத்தி, ஒவ்வொரு ஊழியருக்கும் ஒரு தெளிவான, ஒப்பிடக்கூடிய ‘ஆரோக்கியக் காலவரிசை’யாக இந்நிறுவனம் மாற்றுகிறது. இதன் மூலம் ஊழியர்களுக்குத் தொடர்ச்சியான கண்காணிப்பும், நிறுவனங்களுக்குத் தங்கள் ஊழியர்களின் ஆரோக்கியம் குறித்த உண்மையான படமும் கிடைக்கிறது.

யாரும் தீர்க்க விரும்பாத அடிப்படைச் சிக்கல்

இந்தத் தரவுத் தொடர்ச்சியை உருவாக்குவது அவ்வளவு எளிதல்ல. வெவ்வேறு ஆய்வகங்கள் ஒரே சோதனைக்கு வெவ்வேறு மாதிரியான அறிக்கைகளை வழங்குகின்றன. வடிவமைப்பிலோ அல்லது குறிப்பு வரம்புகளிலோ எந்தத் தரநிலையும் இல்லை. ஒரு மருத்துவருக்கு இது சிறிய அசவுகரியமாக இருக்கலாம். ஆனால், ஐந்து ஆண்டு கால ஆரோக்கியத்தைத் தானியங்கி முறையில் கண்காணிக்க நினைக்கும் ஒரு அல்காரிதத்திற்கு இது ஒரு பெரும் சுவர்.

“தரவு வெவ்வேறு விதமாகப் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்டால், அல்காரிதங்களால் தகவல்களின் தொடர்ச்சியைப் புரிந்துகொள்ள முடியாது. நாங்கள் முதலில் மருத்துவப் பதிவுகளில் இருந்து தரவைப் பிரித்தெடுத்து, பின்னர் அதைச் சுத்தம் செய்து, கட்டமைத்து, தரப்படுத்த வேண்டியிருந்தது. அப்போதுதான் நீங்கள் எங்குப் பரிசோதனை செய்திருந்தாலும் அவற்றைச் சரியாக ஒப்பிட முடியும்” என்று கலகண்ட்லா விளக்குகிறார்.

eKincare

இந்திய சுகாதாரத் துறையில் செயற்கை நுண்ணறிவு வெற்றி பெறுவது இதனால்தான் கடினமாக உள்ளது. முன்கூட்டியே கண்டறிதல், தனிப்பயனாக்கப்பட்ட சிகிச்சை என அனைவரும் பேசினாலும், அதன் அடிப்படை மிகவும் பலவீனமாக உள்ளது. நாட்டில் தரப்படுத்தப்பட்ட மருத்துவத் தரவுக் கட்டமைப்பு இல்லை. ஆனால், இ-கின்கேர் இந்தச் சிக்கலை அடிமட்டத்திலிருந்து தீர்க்கத் தொடங்கியது.

நிறுவனர் கலகண்ட்லா தனது 2 கோடி ரூபாய் ஆரம்ப மூலதனத்தை வைத்து, அந்த நேரத்தில் முதலீட்டாளர்கள் அபத்தமானது என்று கருதிய ஒரு காரியத்தைச் செய்தார். மருத்துவப் பதிவுகளைச் சேகரிப்பதற்காக அவர் நேரடியாக வாடிக்கையாளர்களை அணுகினார். அவர் தரவுகளைச் சேகரிக்க விரும்பினார். அந்த அடித்தளத்திலிருந்து, நிறுவனம் 2018-இல் தனது முக்கிய அல்காரிதங்களை உருவாக்கி காப்புரிமை பெற்றது. அந்த ஆண்டைத்தான் கலகண்ட்லா உண்மையான நிறுவனத் தொடக்க ஆண்டாகக் கருதுகிறார்.

அதைத் தொடர்ந்து ஏற்பட்ட மாற்றம் மிகத் தெளிவானது. ஆண்டுப் பரிசோதனைகள் மற்றும் இன்சூரன்ஸ் மூலம் ஆயிரக்கணக்கான தரவுகளைக் கொண்டிருந்த பெரிய நிறுவனங்களிடம் தரவு இருந்தது, ஆனால் அதன் மூலம் கிடைக்கும் நுண்ணறிவு இல்லை.

“எங்கள் ஊழியர்கள் எவ்வளவு ஆரோக்கியமாக இருக்கிறார்கள்? ஆபத்து எங்கே அதிகமாக உள்ளது? நாங்கள் எதற்காகச் செலவிடுகிறோம்?” போன்ற அடிப்படைக் கேள்விகளுக்கு அவர்களிடம் பதில் இல்லை.

இ-கின்கேர் அங்கே நுழைந்தது. மருத்துவமனையையோ அல்லது காப்பீட்டு நிறுவனத்தையோ மையமாக வைக்காமல், தனிநபரை மையமாக வைத்துத் தரவுகளைக் கட்டமைத்தது.

“ஐந்து அல்லது ஆறு ஆண்டுகளாக எங்கள் தளத்தில் இருக்கும் நிறுவனங்களுக்கு, அவர்களின் ஊழியர்கள் எப்படி ஆரோக்கியமற்ற நிலையில் இருந்து ஆரோக்கியமான நிலைக்கு நகர்ந்துள்ளார்கள் என்பதை எங்களால் ஆதாரத்துடன் காட்ட முடியும்” என்கிறார் கலகண்ட்லா.

இங்குதான் சிபில் ஸ்கோர் ஒப்பீடு மிகச் சரியாகப் பொருந்துகிறது.

சிபில் ஸ்கோர் = ஹெல்த் ஸ்கோர்

இ-கின்கேர் ‘ஹெல்த் ஸ்கோர்’ என்ற ஒரு மாறும் தன்மையுள்ள குறியீட்டை உருவாக்கியுள்ளது. இது ஒருவரின் லேப் அறிக்கைகள், தினசரி நடைப்பயிற்சி எண்ணிக்கை, குடும்ப வரலாறு, உணவுப் பழக்கவழக்கங்கள் மற்றும் அந்தத் தளத்தின் மூலம் அவர் மேற்கொள்ளும் ஒவ்வொரு ஆரோக்கியச் செயல்பாட்டையும் அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்படுகிறது.

‘மூன்று ஆண்டுகளுக்கு முன்பு உங்கள் கொலஸ்ட்ரால் இவ்வளவு இருந்தது. அது முன்னேறவில்லை. நீங்கள் ஒரு நாளைக்கு 5,000 படிகள் மட்டுமே நடக்கிறீர்கள். உங்களுக்கு இதய நோய் பாதிப்பு ஏற்படும் அபாயம் அதிகமாக உள்ளது. எனவே நீங்கள் ஏ, பி மற்றும் சி ஆகியவற்றைச் செய்ய வேண்டும்’ என்று அது துல்லியமாக எச்சரிக்கும்.

ஒரு சிபில் ஸ்கோர் எப்படித் தொடர்ச்சியானதாகவும், தரப்படுத்தப்பட்டதாகவும், செயல்படத் தூண்டுவதாகவும் உள்ளதோ, அதே குணாதிசயங்களைக் கொண்டது இந்த ஹெல்த் ஸ்கோர். இதன் மூலம் ஒரு நிறுவனத்தின் மனிதவள மேலாளர் தனது 10,000 ஊழியர்களில் யாருக்கு ஆரோக்கியப் பாதிப்பு ஏற்படும் அபாயம் அதிகம் உள்ளது என்பதை ஊகம் செய்யாமல், தரவுகளின் அடிப்படையில் புரிந்துகொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க முடியும்.

இந்தத் தரவு நுண்ணறிவுக்குப் பின்னால் ஒரு மிகப் பெரிய விஷயம் உள்ளது: அதுதான் அதன் சேவை விநியோக வலைப்பின்னல்.

இ-கின்கேர் 500 நகரங்களில் பரிசோதனைகள், மருத்துவர் ஆலோசனைகள், பல் மருத்துவம், கண் பரிசோதனை உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட சேவைகளைத் தடையின்றி வழங்குகிறது.

ஆய்வகங்களுக்குத் தேவையான வாடிக்கையாளர்களை இ-கின்கேர் முன்கூட்டியே வழங்கியதால், அது தனது நிபந்தனைகளை விதிக்க முடிந்தது. அதாவது, இ-கின்கேர் மூலம் வாடிக்கையாளர்களைப் பெற விரும்பும் ஆய்வகங்கள், மருத்துவத் தரவுகளை இ-கின்கேர் கேட்கும் அதே கட்டமைக்கப்பட்ட வடிவத்தில் திருப்பி வழங்க வேண்டும். தேவை விநியோகத்தை உருவாக்கியது, விநியோகம் தரவை உருவாக்கியது, தரவு தயாரிப்பை மேம்படுத்தியது.

குர்கானில் இ-கின்கேர் மூலம் பரிசோதனை செய்யும் ஒருவருக்கும், ஒரு சிறிய நகரத்தில் பரிசோதனை செய்யும் ஒருவருக்கும் ஒரே மாதிரியான தரம் மற்றும் அனுபவம் கிடைப்பதை உறுதி செய்வது ஒரு மிகப்பெரிய சவாலாகும். சுமார் 1,00,000 ஆய்வுக்கூடங்கள் மற்றும் கிளினிக்குகளைச் சொந்தமாக வைத்திருக்காமல், அதேசமயம் அவற்றில் ஒரு சீரான தரத்தை உருவாக்குவது என்பது ஒரு இமாலயப் பணி. அதை இ-கின்கேர் ஏற்கனவே சாதித்துவிட்டது.

ஒரு பெரிய மருந்து நிறுவனம், இந்தியாவில் ஹேமோபிலியா (Haemophilia) பாதிப்பு எந்த அளவுக்கு உள்ளது என்பதைப் புரிந்துகொள்ள முயன்றது. பாரம்பரிய முறையில் ஒவ்வொரு நகரமாகச் சென்று மருத்துவர்களைச் சந்தித்து ஆய்வு செய்யப் பல மாதங்கள் ஆகும். ஆனால், அவர்கள் இ-கின்கேரை அணுகியபோது, வெறும் 24 மணி நேரத்திற்குள் வயது, பாலினம், இணை நோய்கள் மற்றும் பிராந்திய வாரியாக அந்த நோய் பாதிப்பு குறித்த முழுமையான தரவுகளை இ-கின்ஃகேர் வழங்கியது.

“இது அந்த மருந்திற்கான விலையைச் சரியாக நிர்ணயிக்க அவர்களுக்கு உதவியது” என்கிறார் கலகண்ட்லா.

இதுதான் ‘மக்கள் சுகாதார நுண்ணறிவு’. இந்தியாவின் மிகப் பெரிய, தூய்மையான மற்றும் நீண்டகாலத் தரவுத் தொகுப்புகளில் ஒன்றை இ-கின்கேர் அமைதியாகக் கொண்டுள்ளது. இதன்மூலம் மருந்து ஆராய்ச்சி, காப்பீட்டுத் துறையின் மதிப்பீடு மற்றும் பொதுச் சுகாதாரக் கொள்கைகளில் மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்த முடியும்.

“அரசாங்கத்தின் ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் மிஷன் தேசிய அளவில் எதைச் செய்ய முயல்கிறதோ, அதை நாங்கள் ஏற்கெனவே ஒரு தனியார் சூழலில் கட்டமைத்து விட்டோம்” என்கிறார் கிரண் கலகண்ட்லா.

இந்தியக் கடன் சந்தையின் கண்ணுக்குத் தெரியாத முதுகெலும்பாக மாற ஒரு சிபில் ஸ்கோருக்குப் பல ஆண்டுகள் ஆனது. அதன் ஆரோக்கியத்திற்கு இணையான, நம்பகமான, தொடர்ச்சியான ஒரு மதிப்பீட்டு முறை இப்போது ஹைதராபாத்தில் அமைதியாக உருவாகிக் கொண்டிருக்கிறது.

மூலம்: அனுஜ் சுவர்ணா


Edited by Induja Raghunathan

facebook twitter