ஒரு மனிதன் வாழ்ந்த வாழ்வின் வெற்றி என்பது எந்த சமரசமும் இல்லாமல் அவன் அகம் உணர்ந்த உள்ளொளியின் மீது நம்பிக்கை வைத்து, மிகுந்த வைராக்கியத்துடன் அதன்படி தான் வாழ்ந்து காட்டி, தன்னை சார்ந்தவர்களின் வாழ்வையும் மேம்படுத்த சேவைப்புரியும் ஒவ்வொரு மனிதரும் இந்த மானூடத்தின் சாட்சியர்களாக மாறுகிறார்கள்..!
இதன்படி, தமிழ்நாட்டிலுள்ள 50-க்கும் மேற்பட்ட பழங்குடியின கிராமங்களை தத்தெடுத்து, எத்தனையோ இடர்களையும் கடந்து அந்த பழங்குடியின மக்களுக்கு தேவையான கல்வி, வீடு, மருத்துவம் மற்றும் வேலை வாய்ப்புகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை அமைத்துத் தந்துள்ளனர் ‘வில்லேஜ் பெல்ஸ்’ (Village Bells) அறக்கட்டளையின் நிறுவனர் நிவேதா வெங்கடேசன் மற்றும் கௌதம் கண்ணன்.
இக்கட்டுரையில், இவர்களின் நம்பிக்கையூட்டும் பயணத்தைப் பற்றி விரிவாகக் காணலாம் – இது வெறும் சேவை அல்ல, இது ஒரு சமூக மாற்றத்தின் தொடக்கக் கதை.
திண்டுக்கல் மாவட்ட மண்ணில், பசுமை சுவாசிக்கிற ஒரு சிறிய கிராமம்- ஆயக்குடி. அங்கே ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர் தான் கௌதம் கண்ணன். சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிப்பை முடித்த பின்பு, நல்ல வேலை கை நிறைய சம்பளம் என நகர வாழ்கையை தொடங்கினாலும், இயற்கைக்கு மாறான நகர வாழ்வு, அவரை அழுத்தியது. நகரத்தின் சிமெண்ட் கட்டிடங்களில் அடைப்பட்டு இருக்க விரும்பவில்லை.
அதனால், கௌதம் மீண்டும் தங்கள் மண்ணாகிய ஆயக்குடிக்கே திரும்பி, இயற்கை விவசாயம் செய்யத் தொடங்கினார், நிலத்தோடு வாழ்க்கையை பிணைத்துக்கொண்டு, ஓர் இயற்கை விவசாயியாக தனக்கே உரிய ஒர் அடையாளத்தை ஊரில் அமைத்துக்கொண்டார். அந்த பயணத்தில்தான் நிவேதா என்பவரை காதலித்து திருமணம் செய்தும் கொண்டார் கௌதம் கண்ணன்.
‘வில்லேஜ் பெல்ஸ்’ அறக்கட்டளை நிறுவனர்- நிவேதா வெங்கடேசன் & கௌதம் கண்ணன்.
வாழ்க்கை நன்றாக ஓடிக்கொண்டிருந்த போது ஒருநாள், எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட அதீத தலைவலிக்குப் பிறகு நடந்த மருத்துவ பரிசோதனையில், கௌதமுக்கு ‘மூளையில் கேன்சர் கட்டி’ இருப்பது தெரியவந்தது.
"எங்கள் குடும்பத்தின் அமைதி அந்த ஒரே வார்த்தையில் சிதறியது. அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் இருந்த எனக்கு உறுதுணையாக இருந்தவர் எனது மனைவியே..." என்கிறார் கௌதம் கண்ணன்.
வாழ்க்கை முறையை மாற்றுவதே கேன்சர் என்னும் கொடிய நோயிலிருந்து மீள்வதற்கான ஒரே வழி என்பதை உணர்ந்த கௌதம், தனது உணவு முறைகளையும், பழக்க வழக்கங்களையும் மாற்றிக் கொண்டார். "இயற்கைதான் மருந்து" என்கிற உண்மையை உணர்ந்து கௌதமும் அவரது மனைவி நிவேதாவும் பாராம்பரிய உணவுகளை பற்றி ஆராய்ந்து அதை தங்களது வாழ்வில் பின்பற்றத் தொடங்கினர். அதன் பலனாக கேன்சர் கட்டி கொஞ்சம் கொஞ்சமாக கட்டுக்குள் வரத்தொடங்கியது.
"இந்த கடினமான காலமே எனக்கு ஒரு பாடம் கற்றுத்தந்தது. கடவுள் கொடுத்த இந்த இரண்டாவது வாய்ப்பை நானெப்படி பயன்படுத்தப்போகிறேன்? அதற்கான பதில்தான் என் வாழ்க்கையே..." என்றார் கௌதம் கண்ணன்.
சேவையே பெருந்தொழில்
மற்றவர்களுக்கு சேவைபுரிவது என்பது எனக்கு மிகவும் பிடித்த இயல்பாக வரக்கூடியது. ஆக வறியவர்களுக்கு கொடுப்பதையே வாழ்வாக மாற்றினாள் எப்படி இருக்கும்? என்கிற யோசனையிலிருந்து தான் 'வில்லேஜ் பெல்ஸ்' பிறந்தது.
வலிமை குன்றியவர்களை வலிமையாக்குவதே எங்களது பணி’ என்று ஏழை எளியோர்களின் வாழ்வை மேம்படுத்த கௌதம் கண்ணன் மற்றும் நிவேதா வெங்கடேசன் ஆகியோரால் 2018-ம் ஆண்டு வில்லெஜ் பெல்ஸ் தொடங்கப்பட்டது.
Village Bells Initiatives
முதலில் மனநலம் குன்றிய சாலையோர முதியவர்களுக்கு உணவளிக்கத் தொடங்கினோம். அவர்களுக்கான அனைத்து உணவுகளும் நாங்களே சமைத்து அவர்களுக்கு வழங்கினோம். இது எங்களுக்கு ஒருவித மனத்திருப்தியை ஏற்படுத்தியது.
“நாம வாழ்ற வாழ்க்கை... ஒருத்தருக்காவது பயனுள்ளதா இருந்ததே, என்கிற இந்த மனநிறைவை ஒவ்வொரு நாளும் பெற நாங்கள் உணவு சமைத்தோம் — மனநலம் குன்றியவர்களுக்கும், ஆதரவற்றவர்களுக்கும் எங்களால் முடிந்த சிறந்த உணவுகளைச் மனமார வழங்கினோம். நாங்கள் உணவளித்தோம்... ஆனால் உண்மையில், அவர்கள் தான் எங்களின் உள்ளவெறுமையை நிரப்பினார்கள்," என்று நெகிழ்ச்சியுடன் கூறினார் நிவேதா.
வில்லேஜ் பெல்ஸும் பழங்குடியினரின் முன்னேற்றமும்:
பல்லாயிரக்கணக்கான அற்புத தருணங்களை கொண்டது ஒரு அசாதாரணமான வாழ்வு என்பதற்கிணங்க அமைந்தது தான் கௌதமின் வாழ்வும்.
கொரோனாவின் கடின காலம்; எல்லோருடைய வாழ்வையும் புரட்டிப்போட்டது. அந்த நாள்களில், 'குட்டி கருடு' என்ற பழங்குடியின கிராமம், தொற்றுநோய் மற்றும் ஊரடங்கு காரணமாக ஏழு நாட்கள் தேநீர் மட்டுமே உண்டு உயிர் பிழைத்து வருகிறார்கள் என்கிற செய்தி தெரியவர, அரசாங்க அனுமதியுடன் கௌதம் மற்றும் நிவேதா இருவரும் அந்த கிராமத்துக்கு சென்றபோது, தலைக்கு மேல் ஒரு கூரையோ அல்லது உடலை மறைக்க சரியான ஆடைகளோ, மின்சார வசதிகளோ, சரியான உணவு கூட இல்லாத வாழ்க்கையை மக்கள் வாழ்வதைக் கண்டு திகைத்துப் போனார்கள்.
Village Bells- Gowtham Kannan
ஆரம்பத்தில் அங்குள்ள பழங்குடியின மக்கள் ஒருவித பயத்தோடு தான் எங்களை அணுகினர். பழங்குடி சமூகங்கள் பல நூற்றாண்டுகளாக சமூக, பொருளாதார மற்றும் புவியியல் ரீதியாக ஒதுக்கி வைக்கப்பட்டதன் விளைவுதான் இந்த பயத்திற்கான காரணம் என்பதை நாங்கள் புரிந்து கொண்டோம். இன்றும் அங்கு குழந்தை திருமண முறைகளும், மூட நம்பிக்கைகளும், பெண்ணிய அடக்குமுறைகளும் நிலவுவதை பார்த்தோம். இதற்கெல்லாம் ஒரே தீர்வு கல்வி. கல்வி மூலம் மட்டுமே இந்த பழங்குடியின மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த முடியும் என்பதை நாங்கள் உணர்ந்தோம், என்றார் கௌதம்.
இதன்படி, 'வில்லேஜ் பெல்ஸ்' குறிப்பிட்ட பழங்குடியின கிராமங்களை தத்தெடுத்து, அங்கு வாழும் பழங்குடியின மக்களுக்கு தேவையான கல்வி, வீடு, மருத்துவம் மற்றும் வேலை வாய்ப்புகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை அமைத்துக் கொடுக்க முடிவு செய்தனர். இந்த பெரும் செயலுக்கு உறுதுணையாக கௌதமின் நண்பர்களும் உடன் நின்றனர்.
ஒருமித்த கருத்து கொண்டோர் ஒன்றிணையும் போது ஒரு ஆகப்பெரும் செயல் தொடங்கும், என்பதுபோல, கௌதமின் இந்த முயற்சிக்கு பல நல்லுள்ளங்கள் உதவ முன்வந்தனர். கௌதமின் நேர்மையும், வெளிபடையான பேச்சும் அமெரிக்கா, துபாய் போன்ற பல்வேறு நாடுகளில் இருந்தும் அவரது நண்பர்கள் நிதி உதவிகளை வழங்கினர்.
ஆனால், பழங்குடியினரை நெருங்குவது என்பது அவ்வளவு எளிதல்ல. ஆரம்பத்தில் கௌதமை பார்த்தாலே அங்குள்ள மக்கள் ஓடிப்போய் ஒழிந்து கொள்ளும் நிலைதான் அங்கு இருந்தது. அவர்களின் வாழ்வியலை புரிந்து கொள்வதற்கும், அவர்கள் எங்கள் மீது நம்பிக்கை கொண்டு பயமில்லாமல் பழகுவதற்கும் சிறிது காலம் எடுத்துக் கொண்டது. பிறகு கொஞ்சம் கொஞ்சமாக அவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளான உணவு, உடை, இருப்பிடத்தை வழங்கி அவர்களின் நம்பிக்கையை பெற்றோம், என்றார் நிவேதா.
இதுவரை திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 50-க்கும் மேற்பட்ட பழங்குடியின கிராமங்களை தத்தெடுத்து 1000-க்கும் மேற்பட்ட பழங்குடியின குடும்பங்களுக்கு அடிப்படை வசதிகளை அமைத்து கொடுத்து அவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்திருக்கின்றனர்.
Village Bells- Gowtham Kannan
இதன் தொடர்ச்சியாக, "சமூகத்தில் நல்மாற்றத்தை நிகழ்த்துவதற்கான ஆயுதமற்ற புரட்சியே கல்வி" - அப்பெரும் கல்வி அனைத்து பழங்குடியின மாணவர்களுக்கும் கிடைக்க `வில்லெஜ் பெல்ஸ் ஸ்காலர்ஷிப் பிரோகிராம்` (Village Bells Scholarship Program) மூலம் இதுவரை 100-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு இலவசமாக கல்லூரி படிப்பை வழங்கியுள்ளனர்.
அன்று வறுமையின் கோரப்பிடியில் சிக்கியிருந்த ஸ்ரீவட்சன் என்கிற மாணவன், வில்லெஜ் பெல்ஸ் ஸ்காலர்ஷிப் மூலம் நன்கு படித்து இன்று பத்து மாடி கட்டிடத்தில் பிரபல கார்ப்பரேட் நிறுவனத்தில், மென்பொருள் ஊழியராக ஓர் பறவை போல சிறகடித்து பறந்து கொண்டிருக்கிறான், என்று மன நிறைவுடன் விவரித்தார் கௌதம் கண்ணன்.
"1947-ஆம் ஆண்டில் இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு கூட, இத்தனை ஆண்டுகளில் பளியர் பழங்குடியின சமூகத்தைச் சார்ந்த ஒருவரும் அரசு வேலையில் அமரவில்லை"— என மதுரை LAAS அமைப்பின் ஆய்வு தெரிவிக்கிறது.
ஆனால், இன்று அதே ‘பளியர் சமூகத்தை’ சேர்ந்த மாணவி வில்லெஜ் பெல்ஸ் ஸ்காலர்ஷிப் மூலம் பன்னாட்டு நிறுவனத்தில் வேலை பார்க்கிறாள். அதுமட்டுமின்றி, மற்றொரு மாணவி 12-ம் வகுப்பில் இந்த வருடம் 511 மதிப்பெண்கள் பெற்று அசத்தியிருக்கிறார். கூடிய விரைவில் அரசு வேலையிலும் அமர்வார்கள், என மகிழ்ச்சியுடன் தெரிவித்தார் கௌதம்.
அதுமட்டுமின்றி, ஏழை மாணாக்கர்களுக்கு இலவச உயர்கல்வியை வழங்கியதோடு மட்டும் நில்லாது, Guvi, Freshworks, JusPay போன்ற நிறுவனங்களுடன் இணைந்து மாணாக்கர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சியும் கொடுத்து வருகிறது வில்லெஜ் பெல்ஸ் அறக்கட்டளை.
Village Bells
"ஒரு மாணவரின் வாழ்க்கையை மாற்றுவது என்பது ஒரு சமுதாயத்தின் வரலாற்றையே மாற்றுவது...” என்ற உண்மையை, ஒவ்வொரு மாணாக்கரின் கதையிலும் வில்லெஜ் பெல்ஸ் அறக்கட்டளை நிரூபித்துவருக்கிறது.
இப்பெரும் செயலுக்கு பின்னால் இருக்கக்கூடிய இடர்களை எப்படி சமாளிக்கிறீர்கள் என்று கேட்டப்போது,
"ஒவ்வொரு முறையும் உடல் தொந்தரவு, நிதி நெருக்கடி போன்ற இடர்களை நேர்கொள்ளும்போது ஏதோ ஒரு சக்தி கூட இருந்து மேலேற்றிவிடுகிறது. நாங்கள் சென்று கொண்டிருக்கும் பாதை சரியானது, இன்னும் செயல் தீவிரம் கொண்டு செய்படு என்று சொல்வதை போலவே உணருகிறேன்," என்று தன்னடக்கத்துடன் கூறினார் கௌதம் கண்ணன்.
எங்களின் சேவைகளை பாராட்டி பல விருதுகள் கொடுத்திருந்தாலும், பழங்குடியினரின் வாழ்வை மேம்படுத்துவதில் எங்களது பணி தொடக்க நிலையில்தான் உள்ளது என்பதை நாங்கள் நன்கு அறிவோம். தமிழ்நாடு அரசு ஆதிவாசி சமூகத்தின் நலனுக்காக பல திட்டங்களை செயலில் வைத்துள்ளது. இருப்பினும், அவர்களுக்குத் தேவையானது இன்னும் போய் சேர வேண்டியது நிறைய இருக்கிறது. அர்த்தமுள்ள தாக்கத்தை ஏற்படுத்த இன்னும் நீண்டகால அர்ப்பணிப்புடன் இந்தப் பணியை அணுக விரும்புகிறோம், என்று ஜோடியாக சொல்கிறார்கள் கெளதமும், நிவேதிதாவும்.
ஒரு ஏழை பழங்குடியின குடும்பத்தின் வாழ்க்கையை மாற்றும் இந்த பயணத்தில், நீங்களும் பங்கேற்க விரும்புகிறீர்களா? அப்படியானால், உடனே வில்லெஜ் பெல்ஸ் அறக்கட்டளையை தொடர்புகொள்ளுங்கள். ஒன்றிணைந்து மாற்றத்தை உருவாக்குவோம்!
மேலும் தொடர்புக்கு: கௌதம் கண்ணன் - 70106 65099