இந்தியாவின் முன்னணி பால் பொருள் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான 'மில்கி மிஸ்ட்' பால் பொருள் உற்பத்தி நிறுவனம் (Milky Mist Dairy Food Ltd) தனது முதல் பொது பங்கு (IPO) வெளியீட்டுக்கு முன் நிதி திரட்டும் முயற்சியாக சுமார் ரூ.482 கோடியை பெற்றுள்ளது. இந்த முதலீட்டை Jongsong Investments நிறுவனம் செய்துள்ளது. இது Temasek Holdings நிறுவனத்தின் மறைமுக துணை நிறுவனம் ஆகும்.
இந்த நிதி திரட்டலில் ரூ.357 கோடி புதிய முதலீடாகவும், ரூ.125 கோடி இரண்டாம் நிலை பங்குகள் விற்பனையாகவும் இடம்பெற்றுள்ளது. நிறுவனத்தின் முதன்மை வெளியீட்டின் கீழ், ரூ.139.76 என்ற விலையில் 5,43,789 ஈக்விட்டி பங்குகள் வழங்கப்பட்டு ரூ.7.6 கோடி திரட்டப்பட்டது. மேலும், அதே விலையில் 25 லட்சம் கட்டாய மாற்றக்கூடிய முன்னுரிமை பங்குகள் (CCPS) வெளியிட்டு ரூ.349.4 கோடி திரட்டப்பட்டுள்ளது. இப்பங்குகள் IPO-க்கு முன் 1:1 விகிதத்தில் ஈக்விட்டி பங்குகளாக மாற்றப்படும்.
இந்த முதலீட்டை முழுமையாக Jongsong Investments மேற்கொண்டது, Temasek நிறுவனத்தின் முக்கிய ஆதரவை இது வெளிப்படுத்துகிறது. அதேசமயம், நிறுவனத்தின் நிறுவனர் பங்குதாரர்களான சதீஷ் குமார் மற்றும் அனிதா ஆகியோர் தங்களின் 89,43,903 பங்குகளை ரூ.139.76 என்ற விலையில் விற்று ரூ.125 கோடி பெற்றுள்ளனர்.
IPOக்கு முன் இந்த நிதி திரட்டல் இடம்பெற்றுள்ளது. ஏற்கனவே, கடந்த ஜூலை மாதத்தில் Milky Mist நிறுவனம் தனது IPO-க்கு தேவையான ஆரம்ப ஆவணங்களை செபியிடம் (Securities and Exchange Board of India)தாக்கல் செய்துள்ளது.
IPO மூலம் திரட்டப்படும் நிதி கடன் திருப்பிச் செலுத்துதல், விரிவாக்கம் மற்றும் பெருந்துறை உற்பத்தி நிலையத்தின் மேம்படுத்தல் உள்ளிட்ட பணிகளுக்கு பயன்படுத்தப்படும். குறிப்பாக whey protein concentrate, yoghurt மற்றும் cream cheese தயாரிப்பு நிலையங்களை அமைப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் visi coolers, ice cream freezers, chocolate coolers போன்ற வசதிகளை நிறுவவும், பொது நிறுவன தேவைகளுக்கும் நிதி ஒதுக்கப்படும்.
தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டத்தில் தொடங்கப்பட்ட Milky Mist நிறுவனம், பன்னீர், சீஸ், யோகர்ட், ஐஸ் கிரீம், வெண்ணெய், நெய் உள்ளிட்ட உயர்தர மதிப்பு கூட்டப்பட்ட பால் பொருட்களில் கவனம் செலுத்தும் முன்னணி பிராண்டாக திகழ்கிறது.