+

‘ஃபிளிப்கார்ட்டின் 13 நிமிட டெலிவரி சேவை’ - வால்மார்ட் தலைவர் வியப்பு

2018-ஆம் ஆண்டு, 16 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான ஒப்பந்தத்தின் மூலம் ஃப்ளிப்கார்ட்டில் 77 சதவீத பங்குகளை கையகப்படுத்தியது வால்மார்ட். தற்போது அந்த பங்கு 80 சதவீதத்தை கடந்துள்ளது.

இந்திய இ-காமர்ஸ் நிறுவனமான ஃபிளிப்கார்ட் வழங்கி வரும் 13 நிமிட டெலிவரி சேவை மிகவும் ஆச்சரியமளிப்பதாக வால்மார்ட் நிறுவனத்தின் தலைவரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான ஜான் ஃபர்னர் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.

வேகமான டெலிவரி, புதுமையான தொழில்நுட்ப பயன்பாடு மற்றும் சப்ளை செயின் திறன் ஆகியவற்றில் ஃப்ளிப்கார்ட் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

2018-ஆம் ஆண்டு, 16 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான ஒப்பந்தத்தின் மூலம் ஃப்ளிப்கார்ட்டில் 77 சதவீத பங்குகளை வால்மார்ட் கையகப்படுத்தியது. தற்போது அந்த பங்கு 80 சதவீதத்தை கடந்துள்ளது.

2027 நிதியாண்டின் முதலாம் காலாண்டு வருமான அறிக்கையின்போது பேசிய ஜான் ஃபர்னர், “சர்வதேச சந்தைகளில், குறிப்பாக இந்தியாவில் மக்கள் பொருட்களை விநியோகிக்கும் வேகம் மற்றும் புதிய முயற்சிகளை செயல்படுத்தும் திறன் மிகவும் சிறப்பாக உள்ளது. சராசரியாக 13 நிமிடங்களில் பொருட்களை டெலிவரி செய்வது உண்மையிலேயே பிரமிப்பூட்டுகிறது” என்றார்.

வால்மார்ட் நிதியாண்டு பிப்ரவரி 1 முதல் அடுத்த ஆண்டு ஜனவரி 31 வரை நடைபெறுகிறது. 2027 நிதியாண்டின் முதல் காலாண்டில் வால்மார்ட்டின் மொத்த வருவாய் 7.3 சதவீதம் உயர்ந்து 177.8 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்தது.

இந்தியாவில் ஃபிளிப்கார்ட் தற்போது 800-க்கும் மேற்பட்ட மைக்ரோ ஃபுல்ஃபில்மென்ட் மையங்களை இயக்கி வருகிறது. இவை ‘ஃபிளிப்கார்ட் மினிட்ஸ்’ என்ற விரைவு டெலிவரி சேவைக்காக பயன்படுத்தப்படுகின்றன.

இந்தியாவின் 30-க்கும் மேற்பட்ட நகரங்களில் சராசரியாக 13 நிமிடங்களுக்குள் பொருட்கள் வாடிக்கையாளர்களிடம் சேர்க்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

சமீபத்தில் இந்தியா வந்திருந்த ஜான் ஃபர்னர், பிரதமர் மோடியைச் சந்தித்தார். அப்போது, ஃபிளிப்கார்ட் மற்றும் ஃபோன்பே நிறுவனங்களில் வால்மார்ட் தனது முதலீட்டை தொடர்ந்து அதிகரிக்கும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

மேலும், “அமெரிக்கா மட்டுமல்லாமல் இந்தியா மற்றும் சீனா போன்ற நாடுகளிலும் எங்கள் சப்ளை செயின் அமைப்பு மிகச் சிறப்பாக செயல்படுகிறது. தொழில்நுட்பம் மற்றும் புதுமைகளை ஏற்றுக்கொள்ளும் அணுகுமுறையே இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணம்” என்றும் அவர் கூறினார்.

john furner

அமெரிக்காவில் உள்ள சாம்ஸ் கிளப் டெலிவரி சேவை 90 சதவீதத்திற்கும் அதிகமாக வளர்ச்சி கண்டுள்ளதாகவும், சீனாவில் மட்டும் முதல் காலாண்டில் 50 கோடிக்கும் மேற்பட்ட பொருட்கள் டெலிவரி செய்யப்பட்டதாகவும், அவற்றில் சுமார் 75 சதவீதம் ஒரு மணி நேரத்திற்குள் வாடிக்கையாளர்களிடம் சென்றடைந்ததாகவும் வால்மார்ட் தெரிவித்துள்ளது.

வால்மார்ட் நிர்வாக துணைத் தலைவர் மற்றும் நிதி அதிகாரியான ஜான் டேவிட் ரெய்னி கூறுகையில், சீனாவில் இ-காமர்ஸ் வளர்ச்சி 30 சதவீதத்தை கடந்துள்ளதாகவும், இந்தியாவில் ஃபிளிப்கார்ட் வேகமான டெலிவரி சேவையின் மூலம் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.

2027 நிதியாண்டின் முதல் காலாண்டில் வால்மார்டின் சர்வதேச பிரிவு செயல்பாட்டு வருமானம் 23.9 சதவீதம் உயர்ந்து 1.6 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்துள்ளது. இந்த வளர்ச்சிக்கு சீனா மற்றும் ஃப்ளிப்கார்ட் முக்கிய காரணமாக இருந்ததாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதே நேரத்தில், வால்மார்ட் சர்வதேச இ-காமர்ஸ் விற்பனை 27 சதவீதம் உயர்ந்துள்ளது. கடை அடிப்படையிலான பிக்கப் சேவைகள், டெலிவரி மற்றும் மார்க்கெட்பிளேஸ் வணிக வளர்ச்சி இதற்கு காரணமாக இருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

மேலும், வால்மார்ட்டின் சர்வதேச விளம்பர வணிகம் 32 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளதாகவும், அதற்கு ஃபிளிப்கார்ட் நிறுவனத்தின் தொடர்ச்சியான வளர்ச்சி முக்கிய பங்காற்றியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Edited by Induja Raghunathan

facebook twitter