+

'உலகம் உங்கள் கையில்' - 20 லட்சம் மாணவர்களுக்கு இலவச லேப்டாப் திட்டம் தொடக்கம்!

‘உலகம் உங்கள் கையில்’ என்ற திட்டத்தின் கீழ், சுமார் 20 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டத்தை, சென்னை நந்தம்பாக்கத்திலுள்ள வர்த்தக மையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார்.

சுமார் 20 லட்சம் மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கும் திட்டமான, உலகம் உங்கள் கையில் என்ற திட்டத்தை நேற்று தொடங்கி வைத்தார் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின். அதில் பேசிய முதலமைச்சர்,

“உலகத்தோடு போட்டி போடுங்கள்... அதற்கான கருவிதான் இன்று உங்கள் கைகளில் தரப்பட்டுள்ளது. வெற்றி உங்களுக்காக காத்திருக்கிறது,” எனத் தெரிவித்துள்ளார்.
ulagam ungal kaiyil

உலகம் உங்கள் கையில் திட்டம்

உலகையே உள்ளங்கைக்குள் அடக்கும் அளவிற்கு தொழில்நுட்பம் நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து வருகிறது. இந்தத் தொழில்நுட்ப உலகில் போட்டி போட வேண்டுமென்றால், வளரும் தலைமுறைக்கு கணினி அறிவு கட்டாயமாகி விட்டது. பொருளாதாரத்தில் முன்னேறிய, நகர்ப்புறங்களில் வசிக்கும் மாணவர்களுக்கு, இந்தத் தொழில்நுட்ப உயரங்களை எட்டிப் பிடிக்கும் வாய்ப்புகள் அதிகம். ஆனால், கிராமப்புறங்கள் மற்றும் பொருளாதாரத்தில் பின் தங்கிய குடும்பங்களில் இருக்கும் மாணவர்களுக்கு இது எட்டாக்கனியாகத்தான் உள்ளது.

கல்வி எனும் விளக்குத்தான் அவர்களுக்கு எதிர்காலத்திற்கான சிறப்பான ஒளி என்பதைக் கருத்தில் கொண்டு, இந்த ஏற்றத்தாழ்வுகளைக் களையும் வண்ணம், தமிழ்நாடு அரசு மாணவர்களுக்கு பல்வேறு திட்டங்களையும், வசதிகளையும் செய்து கொடுத்து வருகிறது. அவைகளில் முக்கியமான ஒன்றுதான் இலவச மடிக்கணினி வழங்கும் திட்டம்.

‘உலகம் உங்கள் கையில்’ என்ற பெயரில் இந்தத் திட்டத்தை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது. இந்தத் திட்டத்தின் முதல் கட்டமாக, 10 மாணவர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கப்பட உள்ளன. இந்த திட்டத்தின் துவக்கவிழா நேற்று சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் நடைபெற்றது.
ulagam ungal kaiyil

வெற்றி உங்களுக்காக காத்திருக்கிறது!

மாணவர்களின் கல்வி மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியை ஒருங்கிணைக்கும் நோக்கத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்தத் திட்டத்தை, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், முக்கிய அமைச்சர்கள், முன்னாள் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியம், இஸ்ரோ முன்னாள் தலைவர் மயில்சாமி அண்ணாதுரை மற்றும் நடிகர் விஜய்சேதுபதி  உள்பட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,

“இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி உச்சத்தைத் தொட வேண்டியதுதான் உங்கள் வேலை. இந்த மடிக்கணினியை படம் பார்க்க, கேம்ஸ் விளையாட பயன்படுத்தப் போகிறீர்களா? அல்லது உங்கள் எதிர்காலத்திற்கான அடித்தளமாக பயன்படுத்தப் போகிறீர்களா? இதுதான் நாங்கள் உங்கள் முன் நான் வைக்கும் கேள்வி.”
எல்லோருக்குமே நல்லது, கெட்டது என இரண்டு பக்கங்கள் உண்டு. அதில் நீங்கள் எந்தப் பக்கத்தை தேர்வு செய்கிறீர்களோ, அதைப் பொறுத்துத்தான் உங்கள் வெற்றி உங்கள் பக்கம் வந்து சேரும். உங்கள் துறை எதுவாக இருந்தாலும், அதில் நீங்கள்தான் உயர்ந்த இடத்தில் இருக்க வேண்டும்.

சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மைய வளாகத்தில் உயர்கல்வித் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கல்லூரி மாணவர்களின் திறன் வளர்ச்சி மற்றும் டிஜிட்டல் முன்னேற்றத்திற்காக "உலகம் உங்கள் கையில்" என்னும் மாபெரும் திட்டத்தில் 20 இலட்சம் மடிக்கணினிகள் வழங்கும் திட்டத்தின் முதற்கட்டமாக 10… pic.twitter.com/9tq0gTi1hi

— CMOTamilNadu (@CMOTamilnadu) January 5, 2026 " data-type="tweet" align="center">
”வேறு ஏதாவது சந்தர்ப்பத்தில் நாம் சந்திக்க வாய்ப்பு கிடைக்கும்போது, உங்கள் வெற்றியைச் சொல்லி நீங்கள் மகிழ்ச்சி அடைய வேண்டும். அதைப் பார்த்து நான் பெருமைப்படுவேன். உலகத்தோடு போட்டி போடுங்கள், அதற்கான கருவிதான் இன்று உங்கள் கைகளில் தரப்பட்டுள்ளது. வெற்றி உங்களுக்காக காத்திருக்கிறது,” என இவ்வாறு அவர் பேசினார்.

மேலும், இந்த நிகழ்ச்சியில் பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்,

“உலகம் உங்கள் கையில் என்ற இந்தத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் மடிக்கணினியை மாணவர்கள் சரியான முறையில் பயன்படுத்த வேண்டும். இது உங்களது வாழ்க்கையில் முக்கிய திருப்புமுனையாக அமையும்.”

உலகின் பல பகுதிகளில், தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் இன்று பல்வேறு துறைகளில் சாதித்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக, அரசுப் பள்ளியில் பயின்ற மாணவர்கள் பலர் கூகுள், மைக்ரோசாஃப்ட் போன்ற உலகின் பல முன்னணி நிறுவனங்களில், மிக உயர்ந்த பொறுப்புகளில் இருப்பது தமிழ்நாட்டின் கல்வி தரத்திற்கான சான்று. கல்வி என்றால் தமிழ்நாடு, தமிழ்நாடு என்றால் கல்வி என்ற நிலை தற்போது உருவாகி இருக்கிறது,” என்றார்.
ulagam ungal kaiyil

சீனாவுக்கு இணையான மாநிலம்

தமிழ்நாட்டைச் சேர்ந்த புகழ்பெற்ற பொருளாதார நிபுணரும் மற்றும் முன்னாள் இந்திய அரசின் முதன்மைப் பொருளாதார ஆலோசகருமான அரவிந்த் சுப்பிரமணியம் பேசுகையில்,

“சீனா அளவிற்கு பொருளாதாரத்தில் இந்தியா வளரவில்லை என்ற போதிலும், இந்தியாவில் சீனா அளவிற்கு ஒரு மாநிலம் வளர்ந்துள்ளது என்றால் அதுதான் தமிழ்நாடு.”

உற்பத்தித் துறையில் AI பல பாதிப்புகளை ஏற்படுத்தும் எனக் கூறப்பட்டாலும், சீனாவைப் போல தமிழ்நாடும் தொடர்ந்து உற்பத்தி நிலையில் முன்னிலை வகித்து வருகிறது,” எனப் பாராட்டி பேசினார்.

இதேபோல், ஐஐடி மெட்ராஸ் இயக்குநர் காமகோடியின் உரையில்,

“மடிக்கணினி என்பது வெற்றிக்கான ஒரு கதவு. பார்வையற்றோரும் பயனடையும் வகையில், நவீன தொழில்நுட்பங்களுடன் இன்று இந்த மடிக்கணினி உங்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. நான் முதல்வன் திட்டத்தோடு, ஐஐடி மெட்ராஸ் இணைந்து ஆன்லைன் கோர்ஸ்களை நடத்தி வருகிறது. இதுபோன்ற ஆன்லைன் வகுப்புகளுக்கு இந்த மடிக்கணினியை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். அதோடு கூடுதலாக நீங்களே ஒரு ஆப் ஆரம்பித்து, தொழில்முனைவோராகவும் மாறலாம்,” எனப் பேசினார்.

இந்த விழாவில் பேசிய நடிகர் விஜய்சேதுபதி,

“ஒருவரது வளர்ச்சிக்கு கல்வி பெரும்பங்கு வகிக்கிறது. வேறெதையும் கொடுப்பதைவிட அடுத்த தலைமுறைக்கு கல்வியைக் கொடுப்பது எவ்வளவு அவசியம். ஒருவருக்கு கல்வி கிடைப்பதன் மூலம் அந்தக் குடும்பம் மற்றும் அடுத்த தலைமுறையே அடுத்த கட்டத்திற்கு நகர்ந்து செல்கிறது,” என்றார்.  
vijay sethupathi

20 லட்சம் மாணவர்கள் பலனடைவார்கள்

மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் இந்தத் தி ட்டம் இரு கட்டங்களாக செயல்படுத்தப்பட உள்ளது. அதன் முதல் கட்டத்தில் அரசு உயர்கல்வி நிறுவஙளில் பயின்று வரும் 10 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்பட உள்ளது. இரண்டாம் கட்டமாக மீதமுள்ள 10 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினிகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், அரசு பொறியியல் கல்லூரிகள், மருத்துவக் கல்லூரிகள், சட்டக் கல்லூரிகள், வேளாண்மை பல்கலைக்கழகங்கள், பாலிடெக்னிக் கல்லூரிகள் மற்றும் தொழிற்பயிற்சி நிறுவனங்கள், என பல துறைகளில் பயிலும் 20 லட்சம் மாணவர்கள், இந்தத் திட்டத்தின் கீழ் பயனடைய உள்ளனர்.

 

அரசு மற்றும் தனியார் கல்லூரி மாணவர்களுக்கிடையேயான டிஜிட்டல் வசதி இடைவெளியைக் குறைப்பதே இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கம். இந்தத் திட்டத்தின் கீழ், மாணவர்களின் கல்வித் தரத்தோடு, அவர்களின் தொழில்நுட்ப அறிவும் மேம்படும், என தமிழ்நாடு அரசு நம்பிக்கைத் தெரிவித்துள்ளது.

கல்வி மட்டுமில்லாமல், வேலைவாய்ப்பு துறைகளும் எதிர்காலத்தில் தொழில்நுட்பத்தையே அதிகமாக சார்ந்திருக்கும், என எதிர்பார்க்கப்படும் நிலையில், வேலைவாய்ப்பிலும் சம வாய்ப்புகளை உருவாக்கும் முயற்சியாக இந்தத் திட்டம் இருக்கும் என அரசு தெரிவித்துள்ளது.

இந்தத் திட்டத்தின்கீழ், தகவல் தொழில்நுட்பம், மென்பொருள் சார்ந்த, சாப்ட்வேர் டெவலப்மென்ட், டிஜிட்டல் மார்கெட்டிங், டேட்டா என்ட்ரி, கிராபிக் டிசைன், ஏஐ, கோடிங், வெப் டிசைன் உள்ளிட்ட பல துறைகளில் மாணவர்கள் திறன்பட மிளிர முடியும். இதன் மூலம் அவர்கள் வேலைவாய்ப்புகளை பெறுவதோடு மட்டுமின்றி, சுயமாக தொழில் வாய்ப்புகளையும் உருவாக்க முடியும் என தமிழ்நாடு அரசு கருதுகிறது.
ulagam ungal kaiyil

அதிநவீன வசதிகளுடன் மடிக்கணினி

உலகம் உங்கள் கையில் என்ற இந்தத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் மடிக்கணினிகளில், இண்டெல் ஐ3 அல்லது ஏ.எம்.டி ரைஸென் 3 பிராசசர், 8 ஜிபி ரேம், 256 ஜிபி எஸ்.எஸ்.டி சேமிப்பு வசதி, விண்டோஸ் 11 மற்றும் பாஸ் லினக்ஸ் இயங்குதளங்கள், எம்.எஸ் ஆபிஸ் 365 போன்ற வசதிகள் இடம்பெற்றுள்ளன.

மேலும், இந்த லேப்டாப்-ல் 6 மாதத்திற்கான Perplexity Pro ஏஐ கருவிக்கான சப்ஸ்கிரிப்ஷன் வழங்கப்பட உள்ளது.

facebook twitter