ரூ.5,000 முதலீட்டில் தொடங்கி, ஷார்க் டேன்கில் ரூ.1 கோடி முதலீடு பெற்ற கேக் பிராண்ட்டின் மெகா காதை!

06:49 PM Apr 16, 2026 | YS TEAM TAMIL

பெரிய கனவுகள் காண்பதற்குப் பெரிய முதலீடுகள் தேவையில்லை; சரியான பார்வையும் கடின உழைப்பும் இருந்தால் போதும் என்பதற்கு மேகா சராயன் ஒரு சிறந்த உதாரணமாகத் திகழ்கிறார்.

கொல்கத்தாவில் உள்ள ஸ்காட்டிஷ் சர்ச் கல்லூரியில் தனது பொருளாதார ஹானர்ஸ் படிப்பின் இரண்டாம் ஆண்டில், மேகா சராயன் ஒரு சீனியர் நடத்திய பேக்கிங் பயிலரங்கில் கலந்து கொண்டார். அவருக்கு சமையலில் உண்மையில் ஆர்வம் இல்லை. ஆனால், புதிய விஷயங்களை முயற்சிப்பதில் மிகவும் ஆர்வமாக இருந்தார்.

பயிற்சிக்குப் பிறகு, அவர் தனது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்குக் கேக்குகளைத் தயாரித்து வழங்கினார். அவர்கள் வழங்கிய பாராட்டுகள் உண்மையானவை அல்ல; மாறாக ஒரு முயற்சியைப் பாராட்டுவதற்காகச் சொல்லப்படும் ‘போலிப் புகழ்ச்சிகள்’ என்பதை மேகா உணர்ந்திருந்தார்.

இருப்பினும், ஒரு ஆர்வத்தில் அப்போதுதான் கொல்கத்தாவில் கால் பதிக்கத் தொடங்கியிருந்த ஜொமேட்டோ தளத்தில் தனது பேக்கரியைப் பட்டியலிட்டார். சில நாட்களிலேயே அவருக்கு சாக்லேட் ட்ரஃபிள் கேக் செய்வதற்கான முதல் ஆர்டர் வந்தது. அதுதான் அவரது மிகப் பெரிய பயணத்தின் தொடக்கப்புள்ளியாக அமைந்தது.

நிறுவனம் உருவான கதை

ஆன்லைன் பேக்கரி விநியோகத் துறையில் ஒரு பெரிய இடைவெளி இருப்பதையும், அதை யாரும் சரியாகக் கையாளவில்லை என்பதையும் ஒரு மாதத்திற்குள்ளேயே மேகா கண்டறிந்தார். ஸ்காட்லாந்து பொதுவாக கேக்குகளின் தேசம் என்று அழைக்கப்படுவதால், தனது கல்லூரிப் பெயரின் நினைவாகத் தனது நிறுவனத்திற்கு ‘லேண்ட் ஆஃப் கேக்ஸ்’ என்று பெயரிட்டார்.

ஆகஸ்ட் 2018-ல், தான் சேமித்து வைத்திருந்த ரூ.5,000-ஐ முதலீடாகக் கொண்டு, தான் வசித்த கட்டிடத்திலேயே 150 சதுர அடி இடத்தை வாடகைக்கு எடுத்தார். சில பணியாளர்களை நியமித்துத் தொழிலைத் தொடங்கிய சில மாதங்களிலேயே, ஒரு நாளைக்கு சராசரியாக 7 முதல் 8 ஆர்டர்கள் வரத் தொடங்கின. கோவிட் பெருந்தொற்று ஏற்படுவதற்கு முன்பு, இந்த எண்ணிக்கை ஒரு நாளைக்கு 20 ஆக உயர்ந்தது.

“பெருந்தொற்று காலத்தில், ஆர்டர் எடுப்பது முதல் பேக்கிங் செய்வது மற்றும் சுத்தம் செய்வது வரை அனைத்தையும் நான் ஒருத்தியாகவே செய்ய வேண்டியிருந்தது. கடைகள் அனைத்தும் மூடப்பட்டிருந்ததால், எனக்கு அதிக ஆர்டர்கள் வரத் தொடங்கின. அதே நேரத்தில், நான் CAT தேர்வுக்கும் தயாராகி வந்தேன். தினமும் 25 முதல் 40 கேக்குகளைத் தயாரிக்க ஆறு மணி நேரத்திற்கும் மேலாகச் செலவிடுவேன். மீதமுள்ள நேரத்தில் படிக்க வேண்டும்,” என்று அந்தச் சவாலான நாட்களை அவர் நினைவுகூர்கிறார்.

ஐஐஎம் கொல்கத்தாவில் இடம் கிடைத்தால் மட்டுமே மேலாண்மைப் படிப்பைத் தொடர வேண்டும் என்று மேகா முடிவெடுத்திருந்தார். அப்போதுதான் தொழிலையும் படிப்பையும் ஒரே இடத்தில் இருந்து கவனிக்க முடியும் என்று அவர் கருதினார். ஆனால், அவருக்கு ஐஐஎம் கோழிக்கோடில் இடம் கிடைத்தது. தனது தொழிலை விட்டுவிட்டுப் படிக்கச் செல்ல அவர் விரும்பவில்லை.

மோட்ஜ் உருவானது எப்படி?

“அப்போதுதான் எனது தொழிலை எதற்காகவும் விட்டுக்கொடுக்கக் கூடாது என்பதை உணர்ந்தேன். 2021 முதல் முழு நேரமாகத் தொழிலை வளர்க்கத் தொடங்கினேன்,” என்கிறார் மேகா.

அன்றிலிருந்து, அவர் கொல்கத்தாவில் நான்கு கிளவுட் கிச்சன்களையும் ஹைதராபாத்தில் ஒன்றையும் திறந்துள்ளார். அவரது முதல் நேரடி விற்பனை நிலையம் கொல்கத்தாவின் கார்ப்பரேட் மையமான செக்டார் 5-ல் திறக்கப்பட்டது. கடந்த ஆண்டு, தனது நிறுவனத்தின் பெயரை ‘மோட்ஜ்’ (Modge) என மாற்றிய அவர், ஜனவரி மாதம் ஏஞ்சல் முதலீட்டாளர்களிடமிருந்து ரூ.72 லட்சத்தைத் திரட்டினார்.

“நாங்கள் ஒரு கஃபே மாதிரியை உருவாக்கி வந்ததால், கேக் அல்லது பேக்கர் என்பதை மட்டும் பிரதிபலிக்காத ஒரு பெயரை நாங்கள் விரும்பினோம். மக்கள் இங்கே நேரத்தைச் செலவிட வருகிறார்கள்,” என்று அவர் குறிப்பிடுகிறார்.

மேகா சராயன் ஆரம்ப மற்றும் வளர்ச்சி நிலையில் உள்ள நிறுவனர்களுக்கான பிடபிள்யூ ஸ்டார்ட்அப் பள்ளியின் வழிகாட்டுதல் திட்டமான ஆரம்ப் 6.0-ன் முன்னாள் மாணவர் ஆவார். இந்தத் திட்டம் அவரது வணிகக் கட்டமைப்பு மற்றும் முதலீட்டாளர் தயார்நிலையைச் கூர்மைப்படுத்தியது, மேலும், மார்க்கெட்டிங் தொடர்புகள் மற்றும் பிட்ச் வாய்ப்புகளை அவருக்கு அறிமுகப்படுத்தியது, இது அடுத்த கட்டத்திற்கான களத்தை அமைத்தது என்று அவர் கூறுகிறார்.

'Mood' மற்றும் 'Indulge' ஆகிய இரண்டு சொற்களை இணைத்தே ‘மோட்ஜ்’ என்ற பெயர் உருவாக்கப்பட்டது. இது வெறும் பேக்கரி பிராண்டாக இல்லாமல், ஒருவரின் மனநிலைக்கு ஏற்ப இனிப்புகளை வழங்கும் தீர்வாகத் தன்னை அடையாளப்படுத்திக் கொள்கிறது.

‘கேக்’கும் மனமும்

“ஒரு குறிப்பிட்ட மனநிலையில் இருக்கும்போது நமக்கு ஏற்படும் உணவு சார்ந்த ஏக்கங்களை பூர்த்தி செய்வதே எங்கள் நோக்கம். மாதவிடாய்க்கு முந்தைய மனநிலை, நள்ளிரவு பசி, கர்ப்ப கால ஏக்கங்கள் அல்லது மன அழுத்தத்தைப் போக்கும் இனிப்புகள் என ஒவ்வொரு மனநிலைக்கும் ஏற்றவாறு நாங்கள் தயாரிப்புகளை வழங்குகிறோம்,” என்று மேகா விளக்குகிறார்.

இதற்காக 'Me Time' மற்றும் 'Glow Up' போன்ற பெயர்களில் தனித்தனித் தயாரிப்புகள் உள்ளன. தற்போது இவர்களிடம் 70 வகையான தயாரிப்புகள் உள்ளன. இதில் 30 பானங்கள், மற்றவை பேக்கரி மற்றும் இனிப்பு வகைகள் அடங்கும்.

“மக்கள் தங்கள் பிறந்தநாள் அல்லது திருமண நாட்களைக் கொண்டாட விரும்புவதால் மட்டுமே ஆர்டர் செய்வதில்லை. சில ஏக்கங்கள் அல்லது மனநிலைகள் காரணமாக அவர்கள் ஆர்டர் செய்கிறார்கள். எங்கள் தயாரிப்புகளை மனநிலைகளுடன் இணைக்க நாங்கள் முயற்சிக்கிறோம்,” என்று அவர் மேலும் கூறுகிறார்.

இவர்களது கேக்குகள் ரூ.600-ல் தொடங்குகின்றன. சீஸ்கேக் துண்டு ரூ. 150-க்கும், பிரவுனிகள் தலா ரூ.50-க்கும் விற்பனை செய்யப்படுகின்றன. பேரீச்சை-வால்நட் கேக் இவர்களது 'பெஸ்ட் செல்லர்' ஆகும். கடையின் அனைத்து உணவுகளும் சைவ முறையிலானவை.

ஷார்க் டேங்க் இந்தியா சீசன் 5-ல், மேகா மோட்ஜ் குறித்துப் பேசினார். ஷார்க்ஸ்களில் ஒருவரான அனுபம் மிட்டலிடமிருந்து 9% சமப்பங்கு அடிப்படையில் ரூ.1 கோடி நிதியைப் பெற்றார்.

“உண்மையைச் சொல்வதானால், அன்று எனக்கு உடல்நிலை சரியில்லை. நான் எனது சிறந்த பங்களிப்பைக் கொடுக்கவில்லை என்று நினைத்தேன். என்னால் இன்னும் சிறப்பாகச் செய்திருக்க முடியும் என்று நினைத்தேன். ஆனால் அது ஒளிபரப்பப்பட்டபோது, நான் எதிர்பார்த்ததை விட மிகவும் சிறப்பாக வந்தது. இரண்டு முதல் மூன்று மாதங்களில் நிதி வரும் என்று எதிர்பார்க்கிறோம்,” என்று அவர் கூறுகிறார்.

“அனுபம் மிட்டல் ஒரு அனுபவம் வாய்ந்த தொழில்முனைவோர், அவரது ஆலோசனைகள் நிதி விஷயத்தில் எங்களுக்கு உதவும் என்று நம்புகிறேன்,” என்று அவர் குறிப்பிடுகிறார்.

முதலீட்டைத் தாண்டி, அக்ரிகேட்டர் பிளாட்ஃபார்ம்களுடன் சிறந்த விதிமுறைகளை உருவாக்கவும், முக்கியமான கட்டங்களில் தெளிவான உத்திகளைக் கொண்டு வரவும் மிட்டல் உதவுவார் என்று மேகா சராயன் எதிர்பார்க்கிறார்.

லாபம் எப்படி?

ஜனவரி 2026 நிலவரப்படி, மோட்ஜ் நிறுவனம் 2% EBITDA லாபத்தில் இயங்கி வருகிறது. 26 வயதேயான மேகா, தற்போது 35 பேர் கொண்ட குழுவை வழிநடத்துகிறார். அவரது சகோதரர் செயல்பாடுகளைக் கவனிக்க, மேகா பிராண்ட் வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்கிறார். அவர் பணத்தைத் திரட்டியுள்ளார், ஒரு தொழிலை விரிவுபடுத்தியுள்ளார், மேலும் தேசியத் தொலைக்காட்சியில் தனது திட்டத்தைப் பேசியுள்ளார்.

இருப்பினும், ஒரு பெண் தொழில்முனைவோராக அவர் எதிர்கொள்ளும் சவால்கள் இன்னும் குறையவில்லை.

“முதலீட்டாளர்கள் என்னிடம் கேட்கும் பொதுவான கேள்வி: ‘நீங்கள் திருமணம் செய்து கொண்டால் உங்கள் தொழில் என்னவாகும்?’. எனது நண்பர்களிடம் திருமணம் முடிந்த பிறகு குழந்தைகள் பற்றி இதுபோன்ற கேள்விகள் கேட்கப்படுகின்றன,” என்று அவர் வேதனையுடன் கூறுகிறார்.

"வங்கிகளில் கடன் விண்ணப்பிக்கும்போது கூட, தந்தை அல்லது கணவர் போன்ற ஒரு 'ஆண்' துணை விண்ணப்பதாரராக இருக்க வேண்டும் என்று கேட்கப்படுவதாகவும், ஆண் தொழில்முனைவோருக்குக் கிடைக்கும் எளிதான நிதி வசதி பெண்களுக்கு இன்னும் எட்டாக்கனியாக இருப்பதாகவும்," அவர் சுட்டிக்காட்டுகிறார்.

அடுத்த இரண்டு ஆண்டுகளில், கொல்கத்தா மற்றும் ஹைதராபாத்தில் தனது பிராண்டை இன்னும் வலுப்படுத்த மேகா திட்டமிட்டுள்ளார். மேலும், தரம் வாய்ந்த பேக்கரி பிராண்டுகள் இல்லாத தென்னிந்தியா மற்றும் கிழக்கு இந்தியாவின் இரண்டாம் நிலை நகரங்களுக்குத் தனது தொழிலை விரிவாக்கம் செய்வதே அவரது இலக்காகும்.

மூலம்: ரேகா பாலகிருஷ்ணன், தமிழில்: ஜெய்


Edited by Induja Raghunathan