தேவைகள் தான் கண்டுபிடிப்புகளுக்கு காரணமாகின்றன என்ற வார்த்தைகள் எவ்வளவு உண்மையோ, அதே மாதிரிதான், தான் கடந்து வந்த கஷ்டங்களும், அனுபவங்களும்தான் ஒவ்வொரு தொழில்முனைவோரும் தங்கள் தொழிலில் ஜெயிக்க முக்கியக் காரணமாக இருக்கின்றன.
இப்படிக்கூட யோசிக்க முடியுமா என பலரும் ஆச்சர்யப்படும் இடங்களில், யோசிப்பதோடு செயலிலும் இறங்கி, ஜெயித்துக் காட்டிய தொழில்முனைவோர்கள் பலர். அப்படி நம்மை வியக்க வைப்பவர்களில் ஒருவர்தான் மில்கி மிஸ்ட் சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கிய சதீஷ்குமார்.
சதீஷ்குமார், தனது 16 வயதில் குடும்ப சூழலால் பள்ளிப் படிப்பை பாதியில் கைவிட்டு விட்டு, தொழிலில் இறங்க வேண்டிய கட்டாயம். குடும்பத்தின் பொருளாதாரத்தை உயர்த்த வேண்டும் என்பதை மட்டும் யோசிக்காமல், இதுதான் தனது எதிர்காலம், எனவே அதில் எப்படி உயர்வது என மாற்றி யோசித்ததன் பலனே, இன்று 25க்கும் மேற்பட்ட பாலில் தயாரிக்கப்பட்ட மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்களை விற்பனை செய்யும் ‘மில்கி மிஸ்ட்’ என்ற பெரிய தொழில் சாம்ராஜ்ஜியம் உருவாகக் காரணம்.
சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக பால் பொருட்களுக்கு பேர் போனதாக சந்தையில் தனது இடத்தை உறுதி செய்து வரும் இந்நிறுவனம், தற்போது ரூ.1,553 கோடி மதிப்பிலான ஆரம்பப் பொதுப் பங்கு வெளியீட்டின் (IPO) மூலம் பங்குச் சந்தையிலும் காலடி எடுத்து வைத்துள்ளது. இதன் விலை வரம்பின் உச்சபட்ச விலையின் அடிப்படையில், வெளியீட்டிற்குப் பிந்தைய நிறுவனத்தின் மதிப்பு சுமார் ரூ. 10,778 கோடியாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
பெரிய தொழிற்சாலையோ, மிகப்பெரிய முதலீடுகளோ இல்லாமல், மாற்றி யோசித்த ஒரு 16 வயது சிறுவனின் கனவு எப்படி ரூ.10 ஆயிரம் கோடி சாம்ராஜ்ஜியமாக வளர்ந்தது என்ற சுவாரஸ்யமான கதையை விரிவாகத் தெரிந்து கொள்ளலாம்...
மில்கி மிஸ்ட் நிறுவனர் சதீஷ்குமார்
பாதியில் விடப்பட்ட பள்ளிப் படிப்பு
ஈரோடு அருகேயுள்ள தயிர்பாளயம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர்தான் சதீஷ்குமார். 1980-ளின் தொடக்கத்தில் அவரது தந்தையும், சித்தப்பாவும் இணைந்து சிறிய அளவில் நடத்தி வந்த விசைத்தறிக்கூடம் லாபத்தை தராததால், அந்தத் தொழிலில் இருந்து வெளியேறி பால் வணிகத்திற்குள் நுழைந்தனர்.
உள்ளூர் பால்காரர்களிடம் இருந்து பாலை வாங்கி, தினமும் சுமார் 3 ஆயிரம் லிட்டர் பாலை பெங்களூருவுக்கு கேன்களில் அனுப்பும் வேலையை அவர்கள் செய்து வந்தனர். ஆனால், அதுவும் அவர்கள் எதிர்பார்த்த லாபத்தைத் தரவில்லை. எனவே, 1990ம் ஆண்டு அந்தத் தொழிலில் இருந்து சதீஷ்குமாரின் சித்தப்பா வெளியேறினார். தொடர்ந்து லாபமற்ற அந்தத் தொழிலை செய்ய விரும்பாத அவரின் தந்தையும் 1992ம் ஆண்டு அதில் இருந்து வெளியேற முடிவு செய்தார்.
அந்த சமயத்தில் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த சதீஷ்குமாருக்கு, தங்களது தொழிலை அடுத்த கட்டத்திற்கு லாபகரமானதாக மாற்றுவதற்கு என்ன செய்வது என சிந்திக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. தொழிலா அல்லது படிப்பா என்ற நிலை ஏற்பட்டபோது, தவிர்க்கவே இயலாமல் தொழிலையே கையில் எடுக்க வேண்டிய நிர்ப்பந்தம்.
ஏற்கனவே, அப்பாவும், சித்தப்பாவும் நஷ்டமடைந்த தொழில் என்பதால், அதே தவறை தானும் செய்ய விரும்பவில்லை சதீஷ்குமார். ஏற்கனவே இருந்த அனுபவத்தில் புதிதாக எதையாவது மாற்றி யோசித்து வெற்றி பெற நினைத்தார். அப்போது அவரது சிந்தனையில் உதித்ததுதான் பாலை பனீராக மாற்றி விற்பனை செய்வது.
பாலை பனீராக்கிய வித்தை
பாலை பனீராக்கும், அவரது இந்த யோசனைக்கு காரணம் அவர்களது வாடிக்கையாளர் ஒருவர்தான். பெங்களூருவில் இருந்த அந்த வாடிக்கையாளர் சதீஷ்குமார் குடும்பத்திடம் இருந்து பாலை வாங்கி, அதனை பனீராக மாற்றி, பெங்களூருவில் உள்ள ஹோட்டல்களுக்கு விற்பனை செய்து வந்தார். இந்த யோசனை நிச்சயம் லாபகரமானதாக இருக்கும், என சதீஷ்குமார் நம்பினார்.
அதோடு கூடவே, லாபமும் குறைவாக போட்டி நிறைந்த அந்தத் தொழிலில், பாலை தினமும் பெங்களூருக்கு அனுப்புவதில் இருந்த சிரமங்களையும் சதீஷ்குமார் நன்றாகவே அறிந்திருந்தார். திரவ நிலையில் பாலை அனுப்பும்போது, அது சமயத்தில் கெட்டுப் போய் விடும் பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டி இருந்தது. எனவே, பாலை மதிப்புக்கூட்டப்பட்ட பொருளாக பனீராக மாற்றி, விற்பனை செய்வது நல்ல யோசனையாக அவருக்குத் தோன்றியது.
ஆனால், பாலை அப்படி பனீராக மாற்றுவது அவ்வளவு எளிதாக இருக்கவில்லை. கூகுளோ, யூடியூப்போ கற்றுக் கொடுக்க இல்லாத அந்தக் காலகட்டத்தில், தானே திரும்பத் திரும்பச் செய்து, பல தவறுகளுக்குப் பிறகு , தான் விரும்பிய பதத்தில், தரமான பனீரை உருவாக்கினார் சதீஷ்குமார்.
முதல்கட்டமாக தானே வீட்டில் தயாரித்த 10 கிலோ பனீருடன், 1993ம் ஆண்டு பெங்களூருவுக்கு புறப்பட்டார். அங்கு டீலர்கள் மூலம் தானே நேரடியாக தனது பனீரை ஹோட்டல்களுக்கு மொத்த விலைக்கு விற்பனை செய்தார்.
அந்த முதல் 10 கிலோ பனீர்தான், இன்று ரூ.10 ஆயிரம் கோடி மில்கி மிஸ்ட் என்ற சாம்ராஜ்ஜியம் உருவாக போடப்பட்ட விதை என்று கூறினால், அது மிகையில்லை.
நிறுவன ஊழியர்களுடன் சதீஷ்குமார்
மில்கி மிஸ்ட் வளர்ந்த கதை
சதீஷ்குமார் எதிர்பார்த்ததைப் போலவே, பால் வியாபாரத்தைவிட, இந்த பனீர் வியாபாரம் நன்றாகவே இருந்தது. வெறும் 10 கிலோ பனீருடன் ஆரம்பிக்கப்பட்ட வியாபாரம், இரண்டே ஆண்டுகளில், தினமும் 50 முதல் 100 கிலோ வரை விற்பனை ஆகும் அளவிற்கு உயர்ந்தது.
வெறும் பால் சந்தையில் மட்டும் போட்டியிடுவதற்குப் பதிலாக, மதிப்பு கூட்டப்பட்ட பால் பொருட்களின் வரிசையை உருவாக்குவதே சந்தையில் வெற்றி பெறுவதற்கான உத்தி என்பதைப் புரிந்து கொண்டார் சதீஷ்குமார். இந்த உத்தி, வெறும் பால் விநியோக நிறுவனமாக மட்டுமன்றி, ஒரு பிராண்டட் உணவு வணிக நிறுவனமாகவும் உருவெடுக்க இந்நிறுவனத்திற்கு உதவியது.
1990-களின் பிற்பகுதியில், 'மில்கி மிஸ்ட்' (Milky Mist) பனீர் சென்னை, பெங்களூரு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய நகரங்களில் உள்ள கடைகளைச் சென்றடைந்தது. அதன் வெற்றியைத் தொடர்ந்து, பனீர் தவிர, தயிர், வெண்ணெய், நெய், சீஸ், யோகர்ட், ஐஸ்கிரீம் என பாலில் இருந்து தயாரிக்கக்கூடிய மற்ற சில பொருட்களையும் தயாரித்து, தனது வணிகத்தை அவர் விரிவு படுத்தினார். இன்று 'மில்கி மிஸ்ட்' (Milky Mist) நிறுவனம் SmartChef, Capella மற்றும் Misty Lite போன்ற பிராண்டுகளையும் நிர்வகித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
பிராண்ட் உருவாகக் காரணம்
பனீர் விற்பனை நன்றாக சென்று கொண்டிருந்த அந்த சமயத்தில், 1997ம் ஆண்டு மொத்த விற்பனை மட்டுமின்றி, சில்லறை விற்பனைச் சந்தையிலும் காலடி எடுத்து வைப்பது என முடிவு செய்தார் சதீஷ்குமார். அப்போதுதான், தங்கள் பக்கம் ஏதோ ஒன்று குறைகிறதே என அவர் யோசித்தார். அதுதான் தனது நிறுவனத்திற்கான பெயர்.
மொத்த விற்பனையில் இருந்தவரை பிராண்ட் பெயர் என எதுவும் வைக்காத நிலையில், சில்லறை விற்பனையில் நுழைய முடிவு செய்ததும், தனது நிறுவனத்திற்கு ’மில்கி மிஸ்ட்’ என்ற பெயரை அவர் முடிவு செய்தார். . உச்சரிக்கவும் நினைவில் கொள்ளவும் எளிதாக இருந்ததாலும், குறிப்பிட்ட பிராந்திய அல்லது மத ரீதியான அடையாளங்கள் ஏதுமற்ற பெயராக இருந்ததாலும் இப்பெயர் தேர்வு செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.
பாலில் மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்களின் விற்பனையோடு, திரவ பால் விற்பனையையும் இடையில் மில்கி மிஸ்ட் தொடங்கியது. ஆனால், திரவ பால் விற்பனையால், அதன் மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிப்புக்கான பால் தட்டுப்பாடு ஏற்படவே, அந்த திட்டத்தை அது பாதியில் நிறுத்தியது. அதற்குப் பதிலாக நெய், பால்கோவா போன்ற தயாரிப்புகளில் கவனம் செலுத்தத் தொடங்கியது.
தனது உற்பத்தி மற்றும் விநியோகத் திறன்களை வலுப்படுத்திக்கொண்டே, தயிர், சீஸ், வெண்ணெய் மற்றும் யோகர்ட் ஆகிய தயாரிப்புகளிலும் மில்கி மிஸ்ட் நுழைந்தது. 2008ம் ஆண்டில் தென்னிந்தியாவில் தனது குளிர்பதனக் கிடங்கு, தளவாடங்கள் மற்றும் விநியோக வலையமைப்பை வலுப்படுத்தத் தொடங்கிய அந்நிறுவனம், 2009ம் ஆண்டில் கூடுதல் மதிப்புக்கூட்டப்பட்ட பால் பொருட்களை அறிமுகப்படுத்தியதாகவும் அந்நிறுவனம் கூறுகிறது.
உள்கட்டமைப்பில் முதலீடு செய்த மில்கி மிஸ்ட்
குளிரூட்டப்பட்ட வாகனங்கள், குளிர்பதன சேமிப்புக் கிடங்குகள் மற்றும் சில்லறை விற்பனை நிலையங்களில் உள்ள குளிரூட்டும் உபகரணங்கள் உள்ளிட்ட குளிர் விநியோகச் சங்கிலி உள்கட்டமைப்பில் மில்கி மிஸ்ட் பெருமளவில் முதலீடு செய்தது.
குளிரூட்டலுக்காக சில்லறை விற்பனையாளர்களை முழுமையாகச் சார்ந்திருப்பதற்குப் பதிலாக, மில்கி மிஸ்ட் தனது தயாரிப்புகளைக் குளிர்ச்சியாக வைத்திருக்கத் தேவையான உள்கட்டமைப்பில் தானே முதலீடு செய்யத் தொடங்கியது. இந்த அணுகுமுறை, உற்பத்தியிலிருந்து சில்லறை விற்பனை அலமாரி வரையிலான பயணத்தின் பெரும்பகுதியைக் கட்டுப்படுத்த அந்த நிறுவனத்திற்கு உதவியது.
வாய் வழி விளம்பரம் மூலமாக மட்டுமே மக்கள் மத்தியில் பிரபலமடைந்திருந்த மில்கி மிஸ்ட், 2010ம் ஆண்டு தனது முதல் தொலைக்காட்சி விளம்பரத்தை வெளியிட்டது. பனீர் தொடர்பான அந்த விளம்பரம், அதன் பிராண்ட் வளர்ச்சியில் முக்கிய மைல்கல்லாக அமைந்தது என்றே கூறலாம்.
தென்னிந்தியா முழுவதும் உள்ள இல்லங்களுக்கு மில்கி மிஸ்ட் பிராண்டைக் கொண்டு சேர்த்ததில் இந்த விளம்பரத்திற்கும் முக்கியப் பங்குண்டு.
புதிய அறிமுகங்களோடு, அடுத்தடுத்த மைல்கற்கள்
பனீர் தான் மில்கி மிஸ்ட்டின் அடையாளமாக இருந்த அந்த காலகட்டத்தில், தனது நிறுவனத்தை ஒரு விரிவான பால் பொருட்கள் சார்ந்த பிராண்டாக வளர்த்தெடுப்பதே சதீஷ்குமாரின் கனவாக இருந்தது.
எனவே, தரம் மற்றும் விநியோகத்தின் மீது அக்கறையோடே, ஒரு தயாரிப்பில் இருந்து பல வகையிலான பால் பொருட்கள் சார்ந்த தயாரிப்புகளை ஒவ்வொன்றாக சந்தையில் அறிமுகப்படுத்தியது. அதோடு, தானியக்கமாக்கல் (automation) மற்றும் பெருமளவிலான உற்பத்தி ஆகியவற்றில் முதலீம்டு செய்தது.
2018ல் ரோபோ தொழில்நுட்பம் சார்ந்த தானியங்கி பனீர் மற்றும் தயிர் பதப்படுத்துதல் மற்றும் பேக்கேஜிங் பிரிவு, மற்றும் 2019ல் தானியங்கி சீஸ் (cheese) தயாரிப்பு ஆலை ஆகியவை இந்நிறுவனத்தின் வளர்ச்சியில் அடுத்தடுத்த முக்கிய மைல்கற்களாக அமைந்தன.
பங்குசந்தையில் களமிறங்கிய மில்கி மிஸ்ட்
மில்கி மிஸ்ட் நிறுவனத்தின் நிதி நிலையைப் பொறுத்தவரை, 2024ம் ஆண்டில் ரூ.1,826.86 கோடி வருவாயைப் பதிவு செய்தது. இந்த வருவாய் 2025ல் ரூ.2,354.79 கோடியாகவும், 2026-ல் ரூ.3,145.01 கோடியாகவும் அதிகரித்தது.
இக்காலகட்டத்தில் வரிக்குப் பிந்தைய லாபமும் (PAT) கணிசமாக அதிகரித்தது. வரிக்குப் பிந்தைய லாபம் 2024ல் ரூ.19.44 கோடியாக இருந்த நிலையில், 2025ல் ரூ.46.07 கோடியாகவும், 2026-ல் ரூ.127.01 கோடியாகவும் உயர்ந்தது.
தற்போது, 'மில்கி மிஸ்ட்' (Milky Mist) நிறுவனம் பங்குச் சந்தையிலும் களமிறங்கி விட்டது. இந்நிறுவனம் தனது ரூ. 1,553 கோடி மதிப்பிலான பொதுப் பங்கு வெளியீட்டை (IPO), ஆகஸ்ட் 11-ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 13ம் தேதி நிறைவடைந்தது. இந்த வெளியீட்டில் ரூ.1,428 கோடி மதிப்பிலான புதிய பங்குகளின் வெளியீடும், ரூ.125 கோடி மதிப்பிலான விற்பனைக்கான பங்குச் சலுகையும் (OFS) அடங்கும்.
IPO விலை வரம்பின் உச்சபட்ச விலையின் அடிப்படையில் கணக்கிடும்போது, பங்கு வெளியீட்டிற்குப் பிந்தைய இந்நிறுவனத்தின் சந்தை மதிப்பு சுமார் ரூ.10,778 கோடியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மாற்றி யோசித்தால் வெற்றி நிச்சயம்
பள்ளிப் படிப்பை முடிக்க முடியாமல், எவ்வித முன் அனுபவமும் இல்லாமல், தோல்வியில் சென்று கொண்டிருந்த தந்தையின் பால் தொழிலை கையில் எடுத்து, பெரிய முதலீடுகளோ, தொழிற்சாலை கட்டமைப்புகளோ இல்லாமல், 10 கிலோ பனீரில் ஆரம்பித்து, இன்று ரூ.10 ஆயிரம் கோடி சாம்ராஜ்ஜியத்தை நிறுவியுள்ள சதீஷ்குமாரின் திறமையை நிச்சயம் பாராட்டியே ஆக வேண்டும்.
புதிய தொழிலில் முன் அனுபவம் இல்லாமல் தங்களால் ஜெயிக்க முடியுமா என்ற தயக்கத்தில் இருக்கும் கோடிக்கணக்கான மக்களுக்கு, சதீஷ்குமாரின் மில்கி மிஸ்ட் சொல்லும் தன்னம்பிக்கை வார்த்தைகள், ‘மாற்றி யோசித்தால் எத்தொழிலிலும் ஜெயிக்கலாம்’ என்பதுதான்.