முதலீட்டாளர் மதுசூதன் கேலா மூலம் ரூ.75 கோடி நிதி திரட்டிய Wow! Momo

01:56 PM Dec 27, 2025 | YS TEAM TAMIL

இந்தியாவின் முன்னணி துரித சேவை உணவுவிடுதிச் (QSR) சங்கிலிகளில் ஒன்றான Wow! Momo Foods நிறுவனம், புதிய நிதியாக ரூ.75 கோடி திரட்டியுள்ளது. இந்த முதலீட்டு சுற்றை, சிங்குலாரிட்டி ஏஎம்சியின் ஐசி தலைவர் மற்றும் மூத்த முதலீட்டாளரான மதுசூதன் கேலா தலைமையேற்று நடத்தினார்.

நிறுவனத்தின் அடுத்த கட்ட வளர்ச்சிக்காக இந்த முதலீடுபயன்படுத்தப்படவுள்ளதாகவும், குறிப்பாக புதிய நகரங்களில் விரிவாக்கம், தயாரிப்பு புதுமை மற்றும் லாபகரமான செயல்பாடுகளை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்தப்படவுள்ளதாகவும் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்த முதலீடு, Wow! Momo நிறுவனத்தின் தொடர்ச்சியான பிரிட்ஜ் ரவுண்ட் நிதி திரட்டலின் ஒரு பகுதியாகும். இதற்கு முன், மலேசியாவின் அரசின் செல்வ நிதியான Khazanah Nasional Berhad, 360One மற்றும் ஹல்திராம் குழுமத்தைச் சேர்ந்த கமல் அகர்வால் ஆகியோர் இந்த சுற்றில் முதலீடு செய்திருந்தனர்.

Tracxn தரவுகளின்படி, Wow! Momo நிறுவனம் இதுவரை 14 நிதி திரட்டல் சுற்றுகளில் மொத்தம் 152 மில்லியன் அமெரிக்க டாலர் முதலீட்டை பெற்றுள்ளது.

2008 ஆம் ஆண்டு சாகர் தர்யானி மற்றும் பினோத் ஹோமாகி ஆகியோரால் தொடங்கப்பட்ட Wow! Momo, தற்போது Wow! Momo, Wow! China, Wow! Chicken, Wow! Kulfi, என்ற நான்கு பிராண்டுகளை இயக்கி வருகிறது. இந்தியா முழுவதும் 80-க்கும் மேற்பட்ட நகரங்களில் 800-க்கும் அதிகமான கிளைகள் தற்போது செயல்பட்டு வருகின்றன. அடுத்த இரண்டு ஆண்டுகளில் 100-க்கும் மேற்பட்ட நகரங்களில் 1,500 கடைகள் தொடங்குவதே நிறுவனத்தின் இலக்காக உள்ளது.

இந்த முதலீடு குறித்து நிறுவனர் குழு கூறுகையில்,

“இந்த முதலீடு, இந்தியாவில் இருந்து ஒரு பெரிய, நீடித்த QSR நிறுவனத்தை உருவாக்க வேண்டும், என்ற எங்களின் நீண்டகால பார்வைக்கு கிடைத்த வலுவான அங்கீகாரம். மதுசூதன் கேலாவின் நம்பிக்கை, எங்களை இன்னும் வேகமாக வளரவும், ஆழமான புதுமைகளை கொண்டுவரவும் உற்சாகப்படுத்துகிறது,” என தெரிவித்துள்ளனர்.

மேலும், அடுத்த ஆண்டில் நடைபெறவுள்ள பெரிய நிதி திரட்டலுக்காக Avendus நிறுவனத்தை வங்கி ஆலோசகர்களாக Wow! Momo நியமித்துள்ளது.

2025 நிதியாண்டில், Wow! Momo நிறுவனம் சுமார் ரூ.640 கோடி வருவாயை பதிவு செய்துள்ளது. இது கடந்த ஆண்டை விட 30 சதவீதத்திற்கும் அதிகமான வளர்ச்சியாகும் 2026-ல் ரூ.850 கோடியை கடந்த வருவாயை எட்டுவது நிறுவனத்தின் இலக்காகும்.

இந்த புதிய நிதி திரட்டல், இந்திய QSR துறையில் Wow! Momo நிறுவனத்தின் முக்கியத்துவத்தையும், அதன் வணிக மாதிரி மற்றும் வளர்ச்சி வாய்ப்புகள் மீது முதலீட்டாளர்களுக்கு உள்ள நம்பிக்கையையும் பிரதிபலிப்பதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

தமிழில்: முத்துகுமார்