+

மகத்தான மாற்றம் அடையும் இந்தியாவின் உலகளாவிய திறன் மேம்பாட்டு மையங்கள்!

இந்தத் துறை அடைந்துள்ள முதிர்ச்சியின் காரணமாக, வரும் ஆண்டுகளில் மேலும் 200-க்கும் மேற்பட்ட ஜிசிசி-கள் இந்த மெகா பிரிவில் இணையவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவில் பிரம்மாண்டமாக உருவெடுக்கும் மெகா திறன் உருவாக்க மையங்கள் தலைமையகத்திற்கு இணையான உயர்தர பணிகளை முன்னெடுக்கும் புதிய அத்தியாயம் படைத்து வருகிறது.

இந்தியாவில் செயல்பட்டு வரும் உலகளாவிய திறன் உருவாக்க மையங்கள் (Global Capability Centres - GCCs) தற்போது ஒரு புதிய பரிணாமத்தை எட்டியுள்ளன. இவை 5,000-க்கும் மேற்பட்ட பணியாளர்களைக் கொண்ட 'மெகா ஜிசிசி'களாக (Mega GCCs) உருவெடுத்து, தங்கள் சர்வதேச தலைமையகங்களுக்கு இணையான உயர்தர பணிகளை இங்கிருந்தே மேற்கொண்டு வருகின்றன.

தற்போது இந்தியாவில் 1,700-க்கும் மேற்பட்ட ஜிசிசி-கள் செயல்பட்டு வருகின்றன. இதில் சுமார் 5 சதவீதம் மட்டுமே 5,000-க்கும் அதிகமான பணியாளர்களைக் கொண்ட 'மெகா ஜிசிசி' பிரிவின் கீழ் வருகின்றன. ஆனால், இந்தத் துறை அடைந்துள்ள முதிர்ச்சியின் காரணமாக, வரும் ஆண்டுகளில் மேலும் 200-க்கும் மேற்பட்ட ஜிசிசி-கள் இந்த மெகா பிரிவில் இணையவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்து ஜின்னோவ் (Zinnov) ஆலோசனை நிறுவனம் வெளியிட்டுள்ள 'அன்லாக்கிங் தி மெகா ஜிசிசி அட்வான்டேஜ்' (Unlocking the mega GCC advantage) என்ற அறிக்கையில், அடுத்த ஐந்து ஆண்டுகளில் மென்பொருள், இணையம், சில்லறை வர்த்தகம் மற்றும் சுகாதாரம் ஆகிய துறைகளைச் சேர்ந்த 230-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மெகா ஜிசிசி-களாக மாறும் பாதையில் உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

"அளவை (Scale) ஒரு தகுதி காரணியாகக் கொண்டிருந்தாலும், அதுவே இந்தியாவிற்குக் கூடுதல் உயர்தர பணிகளைக் கொண்டுவருவதற்கும் உதவியுள்ளது," என ஜின்னோவ் நிறுவனத்தின் பார்ட்னர் நமீதா அடாவி தெரிவித்துள்ளார்.

தொழில்நுட்பத் திறன் மட்டுமின்றி, தகவல் தொழில்நுட்பம், நிதி, மனித வளம் மற்றும் விற்பனை போன்ற துறைகளிலும் திறமையான நிபுணர்கள் இங்கு அதிகம் உள்ளனர்.

இன்று இந்தியாவில் உள்ள மொத்த ஜிசிசி பணியாளர்களில் 50 சதவீதத்தினர் இந்த மெகா ஜிசிசி-களிலேயே பணிபுரிகின்றனர். செலவுக் குறைப்பு என்பதைத் தாண்டி, தற்போது புத்தாக்கம் (Innovation) மற்றும் வாடிக்கையாளர் அனுபவ மேம்பாடு ஆகியவற்றின் மூலமே இந்த மையங்களின் வெற்றி அளவிடப்படுகிறது. இதன் விளைவாக, இந்தியாவின் முக்கியத் தலைமைப் பதவிகளில் 25-30 சதவீதம் இந்த மெகா ஜிசிசி-கள் வசம் உள்ளன.

பெரும்பாலான மெகா ஜிசிசி-கள் செயற்கை நுண்ணறிவு (AI), இயந்திர கற்றல் (Machine Learning), இன்டர்நெட் ஆஃப் திங்ஸ் (IoT) மற்றும் சைபர் பாதுகாப்பு போன்ற அதிநவீன தொழில்நுட்பங்களுக்கான சிறப்பு மையங்களை (CoEs) நிறுவியுள்ளன.

குறிப்பாக செயற்கை நுண்ணறிவுத் துறையில் அதிக கவனம் செலுத்தப்பட்டு வருவதாக நமீதா அடாவி சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த மாற்றமானது எதிர்காலத் தலைவர்களை உருவாக்குவதிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது. இங்கிருந்து உருவாகும் தலைவர்கள், இந்திய செயல்பாடுகளை நிர்வகிப்பதோடு மட்டுமல்லாமல், தங்கள் நிறுவனங்களின் சர்வதேச வணிகப் பிரிவுகளையும் வழிநடத்தி வருகின்றனர்.

வழக்கமாக ஒரு நிறுவனம் மெகா ஜிசிசி-யாக மாற 20ஆண்டுகள் வரை ஆகும் நிலை இருந்தது. ஆனால், தற்போதுள்ள தெளிவான வழிமுறைகளால் (Playbook) மற்ற நிறுவனங்கள் மிக விரைவாகத் தங்களை விரிவுபடுத்திக்கொள்ள முடிகிறது.

2030-ஆம் ஆண்டிற்குள் இந்தியாவின் ஜிசிசி சூழல் மேலும் விரிவடைந்து 2,400 மையங்களைத் தாண்டும் என்றும், இதன்மூலம் 100 பில்லியன் டாலருக்கும் அதிகமான வருவாய் ஈட்டப்படும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

facebook twitter