இந்திய அரசு, ஆன்லைன் கேமிங் துறைக்கு தெளிவும் கட்டுப்பாடும் அளிக்கும் புதிய விதிகளை அறிவித்துள்ளது. ‘Promotion and Regulation of Online Gaming Rules, 2026’ எனப் பெயரிடப்பட்ட இந்த விதிகள் மே 1 முதல் அமலுக்கு வரும். இவ்விதிகள், பணம் சம்பந்தப்பட்ட ஆன்லைன் கேம்களைத் தடைசெய்யும் நிலைப்பாட்டைத் தொடர்ந்தாலும், பணமில்லாத சமூக விளையாட்டுகள் மற்றும் இ-ஸ்போர்ட்ஸ் துறைக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த அறிவிப்பின் மூலம், எந்த விளையாட்டு 'ஆன்லைன் பணம் விளையாட்டு' (money game) என்றும், எவை அனுமதிக்கப்படும் 'சமூக விளையாட்டு' அல்லது 'இ-ஸ்போர்ட்ஸ்' என்றும் தெளிவாக பிரித்தறியும் முறை கொண்டு வரப்படுகிறது. இதன் மூலம், இந்தியா உலகளாவிய கேமிங் மற்றும் புதுமை மையமாக மாறுவதோடு, மோசடி மற்றும் பாதகமான பண விளையாட்டுகளால் ஏற்படும் சமூக, உளவியல், நிதி பாதிப்புகளிலிருந்து மக்களை பாதுகாக்கும் நோக்கமும் கொண்டுள்ளது.
மேலும், 'Online Gaming Authority of India' என்ற ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு அமைப்பை உருவாக்கி, இ-ஸ்போர்ட்ஸ் மற்றும் சமூக கேம்களுக்கு கட்டாய பதிவு முறையும் அறிமுகப்படுத்தப்படுகிறது.
துறையைச் சேர்ந்த நிபுணர்கள் இந்த நடவடிக்கையை வரவேற்றுள்ளனர். LVL Zero Incubator நிறுவனத்தின் இன்க்யூபேஷன் தலைவரான சாகர் நாயர் கூறுகையில்,
“இ-ஸ்போர்ட்ஸ் மற்றும் பணமில்லா கேமிங்கை தெளிவாகப் பிரித்தது, டெவலப்பர்கள் உயர்தரமான, உலகளாவிய அளவில் போட்டியிடக்கூடிய விளையாட்டுகளை உருவாக்குவதற்கு நிலையான சூழலை உருவாக்குகிறது,” என்றார்.
CyberPowerPC இந்தியாவின் COO விஷால் பாரேக் கூறுகையில்,
“இ-ஸ்போர்ட்ஸ் உலகளவில் முக்கியமான விளையாட்டுத் துறையாக வளர்ந்து வருகிறது. இந்த நடவடிக்கை, இந்தியாவின் போட்டித் திறனை மேலும் வலுப்படுத்தி, திறமைகள் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு புதிய வாய்ப்புகளைத் திறக்கும்,” என்றார்.
NODWIN Gaming நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் மேலாண்மை இயக்குநர் அக்ஷத் ரத்தீ கூறுகையில்,
“இளைஞர்கள் அதிகம், க்ரியேட்டர் எகோசிஸ்டம் வலுவாக உள்ளது, போட்டித்திறன் உயர்ந்து வருகிறது – இந்த அடிப்படை அம்சங்கள் இந்தியாவை உலகளாவிய இ-ஸ்போர்ட்ஸ் சக்தியாக மாற்ற முடியும். இப்போது தெளிவு கிடைத்ததால், துறையை நிலையான முறையில் வளர்க்க முடியும்,” என்றார்.
இந்த விதிகள் பயனர் பாதுகாப்பு அம்சங்கள், குறைகள் தீர்க்கும் அமைப்பு, மற்றும் வெளிப்படைத்தன்மை போன்றவற்றையும் கட்டாயமாக்குகின்றன. மேலும், விதிமுறைகளை மீறினால் விசாரணை மற்றும் அபராதம் விதிக்கும் நடைமுறைகளும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.