ஏஐ நுட்பம் மூலம் ஹேக்கர்கள், ஸ்டேட் வங்கி, ரயில்வே, ஜெப்டோ போன்ற முன்னணி நிறுவனங்களின் போலி இணைய வடிவங்களை எளிதாக உருவாக்கி பிஷிங் (Phising) மோசடியில் ஈடுபட்டு வருவது தெரிய வந்துள்ளது.
இந்தியாவில் மேற்கொள்ளப்படும் பிஷிங் மோசடிகளில் பெரும்பாலானவை ஏஐ துணையோடு மேற்கொள்ளப்படுவதும், இதன் பாதிப்பை தடுக்க ஏஐ துணையோடு பாதுகாப்பு சேவை உருவாக்கப்பட்டுள்ளது என சைபர்செக் 360 தெரிவிக்கிறது. பிஷிங் மூலம் நடைபெறும் 10-இல் 8 தாக்குதல்கள் ஏஐ துணையுடன் மேற்கொள்ளப்படுவதாக தெரிந்துள்ளது.
கடந்த 2024 ம் ஆண்டு இந்தியாவில் சைபர் குற்றங்கள் தொடர்பாக 19.18 லட்சம் புகார்கள் பெறப்பட்டதாக சைபர்கிரைம் இணையதளம் தெரிவிக்கிறது. இதனால் ரூ.22,812 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.
சைபர் தாக்குதல் அதிகரித்திருப்பதற்கு ஏஐ நுட்பம் ஒரு காரணமாக அமைந்துள்ளது, என சைபர்செக் 360 சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.
மேலும், இந்தியாவில் கடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட சைபர் தாக்குதல்கள்; மெஷின் லேர்னிங் கொண்டு உருவாக்கப்பட்டவை, என ஏஐ மூலமான சைபர் கிரைம் அறிக்கையை மேற்கோள் காட்டி குறிப்பிட்டுள்ளது. இந்த போலி இணையதளங்கள் வழக்கமான மோசடி தளங்கள் போல் அல்லாமல் நேர்த்தியான வடிவமைப்பு மற்றும் இலக்கண வாசகங்களுடன் அமைந்துள்ளன. எனவே இவற்றை கண்டறிவது கடினமாக உள்ளது.
பெரும்பாலான வைரஸ் தடுப்பு மென்பொருள்கள், பழைய மோசடி தளங்கள் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளதால், ஹேக்கர்கள் புதிய மோசடி தளங்களை எளிதாக உருவாக்கி ஏமாற்ற முற்படுகின்றனர்.
புதிதாக பதிவு செய்யப்பட்ட டொமைன் முகவரிகளில் 70 சதவீதம் சந்தேகத்திற்கு உரிய நோக்கம் கொண்டுள்ளதாக பாலோ ஆல்டோ நெட்வொர்க்ஸ் யூனிட் 42 தெரிவிக்கிறது. மேலும், இவை துவங்கப்பட்ட 14 நாட்களிலேயே தவறாக பயன்படுத்தப்படுவதும் தெரிய வந்துள்ளது.
இந்தியாவில் பாதிப்பு
இந்தியாவில் சைபர் குற்றவார்களில், நம்பகமான நிறுவனங்கள் போல தோற்றம் தரும் மோசடி தளங்களை உருவாக்கி வலை விரிக்கின்றனர். ஸ்டேட் வங்கி உள்ளிட்ட வங்கிகளின் தோற்றத்திலான போலி தளங்கள் முக்கிய தகவல்களை திருட பயன்படுத்தப்பட்டுள்ளன.
மேலும், ரயில்வேயின் ஐஆர்சிடிசி தோற்றத்திலும் போலி இணைய பக்கங்கள் உருவாக்கப்பட்டு தகவல்கள் திருடப்பட்டுள்ளன. அரசு தளங்கள் போலவும் மோசடி தளங்கள் உருவாக்கப்படுகின்றன.
இந்த பின்னணியில், ஏஐ துணை கொண்டு நடத்தப்படும் பிஷிங் மோசடிகளை கண்டறிந்து தடுக்க உதவும் வகையில், சைபர்செக் 360 சேவை அமைந்துள்ளதாக நிறுவன செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது. இதன் லிங்க் இன்ஸ்பெக்டர் பிரவுசர் நீட்டிப்பு சேவை மூன்று அடுக்குகளில் பிஷிங் மோசடிகளை கண்டறிவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிகழ் நேரத்தில் தகவல்களை கண்காணித்து இந்த சேவை பாதுகாப்பு அளிப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மோசடி இணைப்பு என கண்டறியப்பட்ட உடன் முக்கிய தகவல்கள் பகிரப்படுவதை இது தடுக்கிறது. புதிய மோசடி தள முகவரியை கண்டறிந்ததும் எச்சரிக்கை செய்கிறது.
சைபர்செக்360 இணையதளத்தில் மேற்கொண்டு விவரங்களை அறியலாம், என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Edited by Induja Raghunathan