+

SheSparks - நிதி சுதந்திரத்தின் பாதையில் முன்னேறிய மூன்று பெண் டிரைவர்களின் உணர்ப்பூர்வமான உரையாடல்!

ஷிஸ்பார்க்ஸ் 2026 நிகழ்ச்சியில் ஒரு அமர்வு தனித்து அமைந்தது. மூன்று பெண்கள் மேடையேறி தங்கள் வாழ்க்கையை கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்ட அனுபவத்தை பகிர்ந்து கொண்டனர்.

SheSparks 2026 நிகழ்ச்சியில் யுவர்ஸ்டோரி நிறுவனர் மற்றும் சி.இ.ஓ. ஷரத்தா சர்மா, டிரைவர்களாக இருந்து பயிற்றுனர்களாக மாறிய ஹசிரா, சசி மற்றும் தொழில்முறை டிரைவர் குமாரி ஆர்த்தி ஆகியோரின் பயணம், போக்குவரத்து மற்றும் நிதி சுதந்திரத்தை அறிந்து கொள்ள அவர்களுடன் உரையாடினார்.

குறைந்த வருமானம் கொண்ட சமூகத்தில் உள்ள பெண்களுக்கு பயிற்சி அளித்து நல்ல வேலை பெற்றுத்தரும், அசாத் பவுண்டேஷனின் ’விமன் வித் வீல்ஸ்’ (Women with Wheels) திட்டத்தின் கீழ் இந்த மூவரும் பயிற்சி பெற்றவர்கள்.

ஒன்பது ஆண்டுகளுக்கு முன் சசி; வாகனம் ஓட்ட கற்றுக்கொள்ள தீர்மானித்த போது, அவரது குடும்பம் ஆதரித்தது. ஆனால் அவரது பயணம் எளிதாக இல்லை. அவருக்கு இரவு ஷிப்ட் வேலை இருந்த போது, தந்தை கவலையோடு கண் விழித்திருந்தார். அவர் வீடு திரும்பும் வரை நள்ளிரவில் அவர் போனில் அழைத்து பேசுவார்.

She Sparks

தந்தை கவலை அவருக்கு புரிந்தது. இரவு நேர தில்லி பாதுகாப்பானது இல்லை, குறிப்பாக பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பதை உணர்ந்திருந்தார். ஆனால் அவர் ஒரு வழியையும் அறிந்திருந்தார்.

அவரது அத்தை வாகனம் ஓட்டுபவராக பல ஆண்டுகள் பணியாற்றி வருபவர், சசிக்கு வாகனம் ஓட்ட கற்றுக்கொடுத்தவர், இந்த துறையில் பெண்களுக்கான உதாரணமாக இருந்தார்.

“எனது அத்தையால் பத்து ஆண்டுகள் முடியும் என்றால் என்னால் ஏன் முடியாது என அவர் கேட்டார். அதற்கு சம்மதமும் கிடைத்தது.”

இப்போது, மூன்று ஆண்டுகள் பணிக்கு பிறகு அவர் பல பெண்களுக்கு பயிற்சி அளிக்கிறார்.

ஹசிராவை பொருத்தவரை இதற்கு முன் அவரது உலகம் சின்னதாக இருந்தது. அவர் வீட்டை விட்டு வெளியே செல்ல கடைத்தெருவுக்கு செல்லக் கூட அனுமதிக்கப்படவில்லை. அந்த நிலையில் இருந்து வாகனம் ஓட்ட பயிற்சி அளிப்பவராக வருவது என்பது பெரும் சாதனை தான்.

இந்த மாற்றம் பற்றி கேட்ட போது, அவரது பதில் எளிமையாக அமைந்தது:

“இது தான் சுதந்திரம்...” என பதில் அளித்தார்.

குமாரி ஆர்த்தியின் சூழலும் கடினமாக இருந்தது. அவரது மகள் 2.5 மாதங்கள் மட்டுமே இருந்த போது கணவர் அவரை விட்டுச்சென்றார். இரண்டு ஆண்டுகளக்குப் பிறகு கணவர் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார். வருமானம் இல்லாத நிலையில் அவர் வேலை செய்ய தீர்மானித்தார். எல்லா வகை கூலி வேலைகளும் செய்தவர், பின்னர் இந்த அமைப்பிடம் வந்து சேர்ந்தார்.

இன்று அவர் ஆறு மாத பயிற்சி முடித்து வாகன ஓட்டும் உரிமமும் வேலையும் பெற்றிருக்கிறார். அவர் வேலையில் சேர்ந்த அன்று கணவர் திரும்பி வந்தார். வீட்டில் இருந்தவர்களும் தேடி வந்தனர்.

“இதற்கு முன் என்னை மதிக்க மாட்டார்கள். இப்போது என் கணவர் பெயரைவிட என் பெயர் தான் பலருக்கும் தெரியும்,” என்கிறார்.

ஆனால், இந்த இடத்திற்கு வருவது எளிதாக இருக்கவில்லை. டிரைவர் பயிற்சி துவங்கிய பிறகும் கடினமாக இருந்தது. வாடகை செலுத்த முடியாமல் அவர் பயிற்சியை தவறவிட்டார். அப்போது தான் பயிற்சியாளர் சசி அவரது வகுப்புகளை மற்றி அமைத்து வேலைக்கு செல்ல வழிவகுத்தார்.

இது பற்றி கேட்ட போது, சசி

‘நாங்கள் பரஸ்பரம் ஒருவருக்கு ஒருவர் தேவை,” என சாதாரணமாக சொல்கிறார்.

வழிகாட்டும் பெண்கள்

இந்த திட்டம் மாற்றத்திற்கான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. சசி தனது அத்தையால் ஊக்கம் பெற்றார். சசி மற்றும் ஹசிராவால் ஆர்த்தி பயிற்சி அளிக்கப்பட்டார். இப்போது அவர்கள் புதிய பெண்களுக்கு பயிற்சி அளிக்க தயாராக உள்ளனர். இது தான் மாதிரியாக உள்ளது. ஒரு பெண் முன்னுக்கு வரும் போது அவர் மற்றவர்களுக்கு உதாரணமாகிறார்.

முன்னாள் மாணவர் ஒருவர் தான் கார் வாங்கி இருப்பதை கூறிய தருணத்தை சசி குறிப்பிடுகிறார்.

“யாருக்கோ என்னால் பெரிதாக செய்ய முடிந்திருக்கிறது...” என்கிறார்.

இந்த திட்டம் வாகனம் ஓட்ட கற்றுத்தருவதோடு, பெண்களுக்கு சாலையில் எதிர்கொள்ளும் எல்லாவற்றுக்கும் தயார் செய்கிறது. பெண்களுக்கு தற்காப்பு பயிற்சி அளிக்கப்படுவதோடு, பயணிகளை கையாளவும் கற்றுத்தரப்படுகிறது. நீண்ட பணி நாட்களில் கழிவறை வசதி கேட்கவும் கற்றுத்தரப்படுகிறது. இந்த அமைப்பின் கார்கள், மிளகு ஸ்பிரே, அவசர கால பட்டன்கள் கொண்டுள்ளன.

“நாங்கள் ஒவ்வொருவருக்கு ஒருவர் உதவியாக இருக்கிறோம். எனவே வேறு யார் உதவியும் தேவையில்லை,” என்கிறார்.

இந்த திட்டம் பெண்களுக்கு நிதி சுதந்திரம் அளிக்கிறது. சொந்தமாக பணம் இருப்பதன் அவசியத்தை புரிய வைக்கிறது. யாரையும் கேட்காமல் செலவு செய்ய வழி செய்கிறது.

இந்த திட்டம் இதுவரை 6,000 பெண்களுக்கு பயிற்சி அளித்து, 4,500 பேருக்கு வேலை வாங்கித்தந்துள்ளது. குடும்பங்களின் வருமானம் 200% அதிகரித்துள்ளது.

Women with Wheels: Driving towards independence

SheSparks 2026: Women drivers share journeys of resilience and independence.

பெரிய வெற்றி

இந்த மூவரின் வெற்றி அவர்களின் மன உறுதி மற்றும் விடாமுயற்சிக்கு உதாரணமாக அமைகிறது. ஒரு முறை ஆண் டிரைவர் ஒருவர் குர்கோனில் தனது பெரிய வண்டியை குறுகலான தெருவில் கொண்டு செல்ல முடியாமல் அவதிப்படுவதை பார்த்து ஆர்த்தி உதவி செய்வதாகக் கூறினார். தன்னால் முடியாதது இவரால் எப்படி முடியும், என அவர் புரியாமல் பார்த்த போது ஆர்த்தி ஒரே முயற்சியில் காரை செலுத்திக்காட்டினார்.

இது சிறிய தருணமாக தோன்றலாம். ஆனால் பெண்கள் திறனை சந்தேகத்தோடு பார்க்கும் துறையில் இது பெரிய சாதனை தான்.

“நான் வீட்டிலேயே உட்கார்ந்திருந்தால் கணவர் திரும்பி வருவார், பணம் தருவார் என்று காத்துக் கொண்டிருந்து இருப்பேன், ஆனால் இன்று நான் யாரையும் சார்ந்திருக்கவில்லை. வீட்டிலேயே இருப்பதால் எதுவும் நடக்காது. நாம் தான் முதல் அடியை எடுத்து வைக்க வேண்டும்,” என்கிறார் ஆர்த்தி.

தொகுப்பு: சைபர் சிம்மன்


Edited by Induja Raghunathan

facebook twitter